சென்னை ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ தூரத்தில் ‘கோயில் பதாகை’ என்கிற ஊர் இருக்கிறது. இந்த ஊர்க் கோயிலின் விசேஷம், ஒரே கோயிலில் இரு பெருமாள்கள் அருள் புரிய, இரு கருடன்களும் இருக்கின்றன. ஒன்று நின்ற நிலையிலும், மற்றொன்று அமர்ந்த நிலையிலும் மிக அழகாகத் தோற்றமளிக்கின்றன.
கருடன் இருக்கும் காரணத்தினால் தோஷ நிவர்த்தி என்று பலர் இங்கு வருகின்றனர். வியாழக்கிழமையன்று கருடனுக்குத் திருமஞ்சனமும் அர்ச்சனையும் செய்யப்படுகின்றன. அந்தச் சமயம் கருடனுக்குப் பச்சை நிற வஸ்திரம் சார்த்தப்படுகிறது.
இந்தக் கோயில் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். இங்கு இருக்கும் பெருமாள்களில் ஒருவர் வைகுண்டநாதனாகவும் மற்றொருவர் சுந்தரராஜனாகவும் அருள் பாலிக்கிறார்கள். இரண்டு மூர்த்தங்களும் வெவ்வேறு திருவடிவம் பெற்று வித்தியாசமாக இருக்கின்றன. பார்க்கப் பார்க்க தெய்வீக அலை அடிப்பதை உணர முடிகிறது.
கொடி மரம் கிழக்கே பார்த்து இருக்கிறது. அந்த இடத்தில் பலிபீடமும் கருடனும் இருக்க, பிருகு மகரிஷி ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜர் சன்னிதியைப் பார்த்துக் கைகூப்பித் தொழுது நிற்கிறார். சுந்தரராஜர் பெயருக்கேற்றபடி அழகோ அழகு! அவரது வலப் பக்கத்தில் தேவி சுந்தரவல்லி அமர்ந்திருக்கிறார்.
மேற்குப் பகுதியில் வைகுண்டப் பெருமாள் அமர்ந்திருக்கிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்து அருள் புரிகின்றனர். பெருமாள் கையில் சக்கரமும் உள்ளது. அருகே, உப்பிலியப்பன் கோயில் போல் மார்க்கேண்டய மகரிஷி வணங்கிய நிலையில் உள்ளார். எதிரில் கருடனும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இந்தக் கோயிலில் பிருகு மகரிஷியும் மார்க்கண்டேய ரிஷியும் இருக்கும் காரணம் என்ன?
ஒரு சமயம் இந்த இரு ரிஷிகளும் தங்களுக்கு சாயுஜ்ய பதவி வேண்டித் திருமாலை நோக்கி தவமிருந்தனர். அவர்கள் தவமிருந்த இடம் ஸ்வேத வனம் – அதாவது முல்லைக்காடு. அங்கு மிக அழகான ஐரமத புஷ்கரணி ஓடிக் கொண்டிருக்க, பிருகு மகரிஷி நதியின் கிழக்குப் புறமும் மார்க்கண்டேய மகரிஷி மேற்குப் புறமும் அமர்ந்து தவம் புரிந்தனர். முதலில், காலை பிரும்மமுகூர்த்த நேரத்தில் மார்க்கண்டேயருக்குத் திருமால் வைகுண்டநாதனாக ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் சக்கரத்துடன் காட்சியளித்தார்.
மாலை நேரம் பிரதோஷ வேளையில் பிருகு முனிவருக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜப் பெருமாளாகக் காட்சி கொடுத்தார். முனிவர்களுக்கு மிகுந்த பூரிப்பு! அவர்கள் விஸ்வகர்மாவை சோமச்சந்த விமானத்துடன் கூடிய ஒரு கோயிலை அமைக்கும்படி வேண்டினார்கள். அதன்படி அமைந்தது இந்த ஆலயம். ஆனால், இத்தனை பழமை வாய்ந்த ஆலயத்தில் ஆழ்வார்கள் வந்து ஒரு பாசுரமும் பாட வாய்ப்புக் கிடைக்கவில்லை போலிருக்கிறது!
இந்தக் கோயில் பல்லவர் காலத்தில் தொண்டைமானால் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. ஆனாலும் சோழர் காலத்தில் பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்திருக்கின்றனர். இரு ரிஷிகளுக்கும் சாயுஜ்ஜய பதம் கிடைத்ததால் இந்த இடத்திற்குப் ‘பதாகை’ என்கிற பெயர் வந்ததாம்.
இங்கு வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்குத் திருமஞ்சனம் விசேஷமாக நடக்கிறது.
பௌர்ணமியிலும் விசேஷப் பூஜை நடத்தப்படுகிறது. அமாவாசையன்று பெருமாள்கள் இருவரையும் வழிபட்டால் வேண்டியது நடந்துவிடுமாம். தொடர்ந்து 4 அல்லது 6 அமாவாசை வந்து மக்கள் வழிபடுகிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 61 – பி எண்ணுள்ள பேருந்து ‘கோயில் பதாகை’ வழியே சென்று கோயிலுக்கு அருகாமையிலேயே கொண்டு விடுகிறது. தவிர, ஷேர் ஆட்டோக்களும் ஓடுகின்றன. சென்னைக்கு வருபவர்கள் இந்த அதிசயக் கோயிலைப் பார்த்து அருள் பெற்றுச் செல்லலாம்!