நிழல் போலிருந்தது. அசையவும் செய்தது. நீளநீளமான கைகளை ஆட்டிக் கொண்டு இவளிடம் ஏதோ செய்தி சொல்ல வருவது போல இருந்தது. பேரச்சம் சூழ ஜன்னலிலிருந்து பார்வையைத் திருப்பினாள். சுவரில் ரவி வர்மாவின் பெரிய பெரிய படங்கள். நிறம் மங்கிப்போய் பரிதாபமாகத் தெரிந்தன. தாத்தா பாட்டி அப்பா அம்மா எல்லோருமே ராஜா ரவிவர்மாவின் மேல் அபார மோகம் கொண்டவர்கள். ஓவியங்கள் பூஜிக்கத்தக்கவையென பெரியப்பா அந்த மகாலட்சுமி படத்தை பூமாலை சாத்தி பொட்டிட்டு சாம்பிராணி காட்டி மந்திரமெல்லாம் சொல்வது வேடிக்கையாக இருக்கும். ஒரு வான்காவோ, டாவின்சியோ நம்ம ஆதிமூலமோ என்னவெல்லாம் பண்ணியிருக்கிறார்கள்? சொல்ல முடியுமோ வார்த்தைகளால். இதைச் சொல்ல முடியுமோ இவர்களிடம். கேட்கும் செவிகள் இவர்களிடமில்லை. ஒவ்வோர் புள்ளியிலும் உயிர் இருப்பதை விளக்க முடியுமோ. பார்வை தாண்டியும் ஓவியம் என்பதைப் புரிய வைக்க முடியுமோ.
"என்னடீ இது விபரீதமா இருக்கு. கோடுகோடாய் புள்ளி புள்ளியாய் பட்டை பட்டையாய் இளித்துக் கொண்டு. இதெல்லாம் படமாடீ. ஆம்பிளைத் தலையோட ஒரு பொம்மனாட்டி முண்டமா நிக்கறா. வரைய கை கூசாதோடீ. இந்த வக்கிரம் புடிச்ச சித்திரக்காரனெல்லாம் எந்த தேசத்துக்காரா. இவாதான் உனக்கு குருசாமிகளா. கஷ்டகாலம்…" நீளமாய் பிடித்துக் கொள்ளும் பாட்டிக்கு பதிலில்லை.
லேசாக மனநிலை பிறழ்ந்துவிட்டதோ. அவ்வாறு நினைக்க நிறைய காரணங்கள் இருந்தன. என் உசரம் பெரிது. அண்ணாந்து பார்த்தாலும் பறந்து பார்த்தாலும் எட்ட முடியாது. கலையை ஆராதிக்கும் குடும்பம்டி நீ போற இடம். உனக்குத் தோதா இருக்கும் கொடுத்து வச்சவ." போன்ற அர்த்தமற்ற பேச்சுக்கள் இன்னும் வதைத்தன. நிழல் கதவைத் தட்டுவது போலிருந்தது. என் மேல் யுத்தமா, பிரேமையா, எதானாலும், நேரில் பேசிடலாம். இதென்ன மாயவித்தை. தெரிந்தும் மறைந்துமாய். அல்லது இப்படி இருக்குமோ. மதுரம் என்னை வரைந்து பார். உன் பிரதான கருப்பொருள் நானாய் இருக்கலாம். நீ தேடிக் கொண்டிருப்பதும் நான்தான். என் அடிக்கடியான வருகை இதன் பொருட்டே என்றறிவிக்கிறதோ.
"என்னாச்சு உனக்கு. சதா யோசனை. இப்படியே போனா துணியைக் கிழிச்சுண்டு தெருத்தெருவா அலைய வேண்டியதுதான். மஞ்சள் பெயிண்ட் கேட்டியே வாங்கி வந்திருக்கேன்." குணா நல்லவன். வரிசையாக தினம் வரும் அம்புகளை என் மேல் படாமல் காத்து நிற்கும் சத்புருஷன். மதுரம் பெரிய சாதனைக்காகக் காத்திருக்கிறாள் என்பது புரிந்தவன்.
தலையைக் கோதி இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள் "என் செல்லம்…"
அந்த நிழல் பிரம்மாண்டமான ஆலமரம் போலிருந்தது. அப்படியே கான்வாசில் வரைந்துவிட மனசு துடித்தது. அதன் கீழ் புள்ளியாய் மனிதர்கள் – அந்தப் புள்ளிகளின் நிறத்தைக்கூட – மனசைக் கூடக் கொண்டு வந்துவிட முடியும் இந்த சதுர சட்டத்திற்குள். பிரஷ்ஷை நனைத்து எடுத்தபோது நாலாபக்கமும் வர்ணங்கள் சிதறின. அற்புதமான ஓவியம் ஒன்றை வரையும் ஆரம்ப வேகம் புறப்பட்டபோது நிழல் காணாமல் போயிருந்தது.
அதிகாலை – என்ன அவசரமோ என்ன விவகாரமோ இரண்டு நபர்கள் சப்தம் போட்டு பேசிக் கொண்டு போவது புரிந்தது. இருட்டு கிழிபட்டிருக்கும். யோசித்தால் எல்லாமே புதிராகத்தான் இருக்கின்றன. இன்னும் ஆழமாய் யோசித்தால் திரை விலகி எல்லாமே வெளிச்சமாயிடும். மதுரம் இந்த அனுபவம் உனக்குமட்டுமா எல்லோருக்குமா…?
தாத்தா கத்திக் கொண்டிருந்தார். வருவாய்த் துறையில் பெரிய அதிகாரியாய் இருந்தவர். வெளியே வந்த பிறகும் உத்யோக மிடுக்கு போகவில்லை. தினமும் பத்து பேர் தன்முன் கைகட்டி தெண்டனிட்டு நிற்க வேண்டுமென்ற திமிர். வீட்டை ஆபீஸ் மாதிரி ஆட்டுவிக்க வேண்டும். வைத்தது வைத்த இடத்தில் இருந்தாக வேண்டும். சரியாக இல்லையென்றால் ஆகாசத்திற்கும் பூமிக்குமாய் குதிப்பார். வீடா இது ஒரு டிசிப்ளின் வேண்டாம். ஒரு ஒழுங்கு வேண்டாம். சர்க்கார் ஆபீசையே தூசு தும்பட்டை இல்லாம வச்சிருந்தவன். நான் அந்த காலத்து பி.ஏ. கிராஜுவேட்டாக்கும். கும்மோணம் காலேஜ் என்று இடையிடையே தன் பிரதாபத்தை நுழைப்பார்.
ரசனையற்ற கிழம். முரண்களில் அழகு தேட வேண்டாமோ. வைத்தது வைத்த இடத்தில் இருந்தால் அந்த இடத்திற்கு வீடெனப் பெயரிடலாமோ. அங்கே இயக்கமில்லை. அசைவில்லை. ஏதோ குறையிருக்கிறது. சிதறிக் கிடக்கும் சருகுகளும் வளைந்து வளைந்து ஒழுங்கற்று நீளும் கிளைகளும், பறவைகளின் எச்சங்களும் யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் குறுக்கே ஓடும் அணில்களும் மாங்காய் திருடவரும் சிறுவர்களை ஈர்க்காத கனத்த சுவர்கள் சூழ இருக்கும் இடத்திற்கு தோட்டம் எனப் பெயரிடலாமோ. அபத்தமன்றோ! மனசு அலையாமல் அமர்ந்திருக்கும் யோகத்தினால் என்ன பயன். நாலாபக்கமும் சிதறவிடு. சௌந்தர்யத்தின் முழுப் பொருளையும் காண்பாய்.
வரையறதுதான் வரையறே. நாங்க குறுக்கே நிக்கலே. ஒரு லட்சுமி ஒரு சரஸ்வதி ஒரு புள்ளையார் பார்வதி பரமேஸ்வராள் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யசாமின்னு போடலாமே. ராமர் பட்டாபிஷேகம், அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிண்டு பறக்கறது இப்படிப் பண்ணமாட்டாயோ. என்னமோ இப்படி ஒரு கோடு அப்படி ஒரு கோடு… முகம் இருக்கிற இடத்தில முழி, தலை இருக்கிற இடத்திலே கால், வாய் இருக்கற இடத்தில் மூக்கு… சகிக்கலே மதுரம்…."
புரியாதவைகள் புதிரல்ல – மர்மங்களல்ல. புரிந்தவைகள் நிஜங்களல்ல. வாழ்க்கை நேராய் இல்லை என்பதைச் சொல்லனும். வக்கிரமாய் அசூயை கொண்டதாய் உன்னதங்களை பொய்மை விழுங்கி ஏப்பம் விடுகிறதுதான் அவசரமாய் நடக்கிறது. ஒவ்வொரு கோடுகளின் பின்னாலும் ஒரு செய்தி. அதை வாசிக்க அதனருகில் நெருக்கமாய்ச் செல்ல வேண்டும். கலக்க வேண்டும் முத்தமிட்டுக் கரைய வேண்டும். இது இயற்கை. உற்றுப்பார் குணா வண்ணக் கோடுகளில் ஓர் அமைதி ஒழுங்கு நேர்மை இருப்பதை.
"புரிலே."
இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை. தன்னை நகலெடுப்பதை விரும்புவதில்லை. அதன் மனசு விசாலமானது. வண்ணங்களின் மூலம் நான் புரிய வைக்க முயல்வது இதைத்தான். இயற்கையின்பாலான நேசம் வெகு தூரத்திலிருக்கிறது. அந்த தூரத்தைக் குறைத்து இணைக்க விரும்புகிறேன். இது கடினமான வேலை என்று புரிந்தும் எனக்குத் தெரிந்த கலையின் வடிவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்திப் பார்க்கிறேன். என் மொழி பொதுமொழி. என்னால் அதைக் கையாள முடியும். இப்போதிருக்கிற குழப்பம் இது என் முயற்சியின் ஆரம்பம் என்பதுதான். போதுமான தீவிரம் இன்மை என் குறை. இயற்கையின் அங்கமாகவே நான் ஆவேன். ஜனத்திரள் பெருவெள்ளமாய்க் கூடும் என்னைச் சுற்றி.
"இப்படி வரைஞ்சு வரைஞ்சு மூலையிலே அடுக்கி வச்சிருக்கியே என்ன பண்ணப் போறே? இப்படிக் கேட்கும் பாட்டிக்கு என்ன பதில் சொல்ல?"
"வெளிநாட்டில் கோடிக்கணக்கிலே விலை போகுமாமே…"
சூரிய ஒளிக்கற்றைகள் என் மனசிற்கிசைவாய் வர மறுத்து ஜாலம் காட்டுகின்றன. "என்னடி மதுரம் சூரிய பகவானுக்கு கண்ணெல்லாம் வச்சிருக்கே பெரிசு பெரிசாய்…"
பகலின் களைப்பு இரவிலும் தொடர்ந்தது. குணா வேறு மேலே பரவியிருந்தான். கைகளை அள்ளித் தோளில் போட்டுக் கொண்டு மதுரம் என்றான். முகத்தைத் தடவி தலையைக் கோதி என்னவென்னவோ செய்தான். வியர்வையின் கசகசப்பு அருவெறுப்பாய் இருந்தது. குணா என்ன தேடறே. இது நானில்லே. மதுரம் இல்லே. என்னை ரணப்படுத்தாதே. உன் உடம்பின் தகிப்பு என்னை ஒன்றும் செய்யாது. உன் நகக்கீறல்கள் என்னுள் எந்த ரசாயனத்தையும் ஏற்படுத்தாது. நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நேற்றைக்கு பாதியில் விட்ட கொலாச் பற்றி – முப்பரிமாணம் பற்றி –
விடிந்தது.
"ஒரு பொண் என்றால் வீடு பெருக்க வேண்டாமோ. சமைக்க வேண்டாமோ குளித்து மடி கட்டிக்கொண்டு ஒரு லலிதா சகஸ்ரநாமம் சொல்ல வேண்டாமோ. அதிசயமாத்தான் இருக்கா. ஆசாரக்குடும்பம். தினமும் இவ தாத்தா வாஜபேய யாகம் பண்ணுவாராம்."
முழங்கையில் ஒட்டிக் கொண்ட வெள்ளை வர்ணத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது அந்த நிழல் ஒளிந்து கொண்டாற் போலிருந்தது. உனது உச்ச ஓவியம் குறித்து பேச வந்தேன் என்று சொல்லுமோ. அதைக் கண்டடையும் வழியைச் சொல்லுமோ. போக முடியாத பாதை என ஒன்றில்லை அடைய முடியாத புள்ளி ஏதுமில்லை. எனக்கான சித்திரம் சிக்காமலா போய்விடும். அந்த ஞானம் சித்திக்காமலா போய்விடும். எந்தச் சாயலுமற்ற எந்தக் கூறுகளுமற்ற ஒன்று என்னில் இருக்கிறது. க்ஷணத்தில் புதுவெள்ளமாய் அருவியின் சலசலப்பாய் சந்திரனின் இதமான ஒளிப்பாய்ச்சலாய் வந்துவிடும். ஆராதிக்கும் எதுவும் சித்திக்கும்.
"காலா காலத்திலே எதெது நடக்கனுமோ அதது நடந்தாத்தான் சந்தோஷம். ஒரு பேரனையோ பேத்தியையோ தூக்கிக் கொஞ்ச வேண்டாமோ. டாக்டரிடம் போவோமா. பரிகாரஸ்தலம் போய்ப் பிரார்த்தனை பண்ணுவமா. மதுரம் வரவர பேச்சே கொறஞ்சு போச்சு. பிரஷ், கிண்ணங்கிண்ணமாய் சாயங்கள் என வச்சுண்டு என்னடி இது சகிக்கலே…" புரியாததெல்லாம் இல்லையென்ற உலகில் என் தேடல் அர்த்தமற்றதாகாது. இடைவிடாத இந்தத் தாக்குதல் எங்கும் உள்ளதுதான்.
வண்ணத் தேடல்கள் சுவாரசியமானவை. வலி நிறைந்த சுகமான பயணங்கள். மனித வாழ்விற்கு அர்த்தம் தரும் யாத்திரைகள். என் இயக்கம் சத்தியத்தைத் தேடியே நகர்கிறது. புரிந்து கொள்வதார்?
அந்த வெண்மையான பரப்பு பெருவெளியாய் விரிந்தது. வெறுமையென ஏதுமில்லை. இயற்கையின் நேசம் எல்லையற்றது. அதன் வருகையின் எதிர் திசையில் போய்க் கொண்டிருக்கும்போது தூரம் அகலமாகும். நான் பிடித்து நிறுத்துவேன். அது இரக்கம் மிகக் கொண்டது. சுற்றி வந்து எதிர் கொண்டு வாரியணைத்துக் கொள்ளும்.
மனித முயற்சி தேவைப்படாத சாதனைகளும் இருக்கவே செய்கின்றன. அதற்காக நிற்குமோ காலம். நானும் நிற்பேனோ. காலத்தின் இன்னொரு உருவம் நான். வெள்ளைத்தாள்கள் காற்றில் படபடத்தன.
மூன்று நாட்கள் பழியாய்க் கிடந்தாள். பசிதாகம் தூக்கம் மறந்து – அதைக் கான்வாசில் கொண்டு வரும் அசுர முயற்சி. காலம் நழுவிச் சென்று கொண்டே இருந்தது. என்ன புதிர். அனைத்திற்கும் முன்னால் அது சென்றுவிட்டதால் அடைவது சாத்தியமில்லை என்று காதோரம் கிசுகிசுப்பதார்? அந்த நிழல் கைகளை ஆட்டி ஏதோ சைகை செய்தது. வண்ணங்கள் தாறுமாறாய்ச் சிந்தி தரையில் பிசுபிசுத்தன.
"மதுரம் இன்னிக்கு சுதர்சன கான சபாவில் கச்சேரி. போயிட்டு வருவோம். அஞ்சு மணிக்கு வந்திடறேன். தயாராய் இரு." கிணற்றுக்குள்ளிருந்து யாரோ சேதி சொல்வது போலிருந்தது. பரந்த ஆகாயத்தில் மேகங்கள் திட்டுதிட்டாய்ச் சிதறி மிதமான வண்ணங்களில் – அங்கும் ஓர் ஓவியன் ஏதோ பண்ணிக் கொண்டிருக்கிறானோ. கலைத்துக் கலைத்து திருப்தியுறாமல் மீண்டும் மீண்டும் கலைத்து – அலுப்பில்லாமல் – அலுப்பிற்கும் சலிப்பிற்கும் அப்பாற்பட்டு நிற்பது பெரும் தவம். அதன் அடையாளம் தெரிந்தது. எங்கோ இருக்கும் என் சக தோழனே. உன் கலை ரகசியத்தை என்னிடம் சொல். நாம் பரிமாறிக் கொள்வோம். வேறொன்றும் பூடகமில்லை. மெய்மையின் வாசல் பொன்மயமான ஒளிப்ரவாகத்தினால் மறைக்கப்பட்டுள்ளது. காணாது திரும்புவோமா நாம்.
"படம் வரையறா. கோடுதான் தெரியறது. என்னடீ மதுரம்னா முகம் செவேல்னு ஆயிடறது. சிலதை மூலையிலே விட்டெறியறாள். எதுக்கு இந்தப் பாடுன்னு புரியலே." ருத்ரகாளியின் ஆவேசத்தைத் தாங்க முடியுமோ…
பனிக்கற்றை ஜன்னல் வழியாக வந்து எதோ சேதி சொல்வது மாதிரி இருந்தது. சிறுவர்கள் தூரத்தில் ‘ஆழி மழைக் கண்ணா’ பாடுவது கேட்டது. மார்கழி பஜனை ஏகப்பட்ட பிசிர்க் குரல்கள். ஒரு தடவை அந்த நிழல் வந்தது. க்ஷணத்தில் தோன்றி க்ஷணத்தில் மறையும் அதனோடு உரையாடல் சாத்தியமில்லை. வேர்கள் இல்லாமல் கிளைகளையே கொண்டிருக்கிறேனோ. அல்லது ஒளியைத் தேடி அதற்குள் அய்க்கியமாகி கரைந்து போய்விட்டேனோ.
பிகாசோவின் கலைந்த தலையைப் போலிருந்தது. அந்த நிழல் கண்ணாம்பூச்சி விளையாடியது. மரித்தவர் எழுந்து வருவதுபோல் ஒரு கோட்டோவியம் செய். கலவையாய் எண்ணத்து உணர்வுகள் அதற்குள் அமிழ்ந்து அவ்வப்போது வெளியே தெரியலாம். நீ விரும்பிய ஓவியமாகக் கூட அது இருக்கலாம். எண்ணற்ற புதிர்களை அதுவிடுவிக்கும். மனித குல விடுதலை சாத்தியமாகும். வரிசையாய் இருந்த தூரிகைகளும் வண்ணக் குப்பிகளும் ‘மதுரம்’ என்று கூப்பிட்டன.
"ஒரு வாய் சாப்பிட்டுப் போ… அப்புறம் ஏதாவது கிறுக்கிக் கொண்டிரு." மாமியாரின் அழைப்பில் கவலை தெரிந்தது. அவள் நியாயம் அவளுக்கு – வண்ணங்களின் சேர்க்கை கோடுகளின் சந்திப்பு அது தரும் ஆழம் விஸ்தாரம். மேலும் மேலும் கூடும் அழகு. ரொம்பவும் உற்றுப் பார்த்தால் சராசரியாய் நிற்கும் அவலம். எங்கே தொலைத்திருக்கிறேன். எந்தக் கோட்டில் எந்த வர்ணத்தில் எந்த இழையில் உயிரை விலக்கி வெறுமையாய் ஆக்கியிருக்கிறேன். என் நளினத்தை எங்கே சிந்தவிட்டிருக்கிறேன். அசந்து போய்விடுவேனோ? மேலும் மேலும் உயிரோட்டம். காற்றே வா வந்து எனக்குள்ளிருக்கும் அற்புதத்தை வெளியே எடுத்து வா. சொல் – சொல்லில் அடங்கியிருக்கும் ரகசியம் புரிந்து வேகம் பெறுவேன். ஆகாயம் தொடுவேன். மருடும் நிழலைத் துரத்துவேன்.
புலர்காலை. தெருக்குளிரைப் பனி துரத்தும் மெல்லிய யுத்தம். ஊர் அடங்கியிருந்தது அழகுகளைப் பார்க்க மறுத்து – ‘மதுரம்’ யார் அழைப்பது. எதற்காக அழைப்பு. எங்கிருந்து. எனக்கானது தானா? ‘ஆம்’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது பெயர் தெரியாத புள்.
தூக்கம் தொலைத்த இரவு – கண்களின் சோர்வு மனசின் சஞ்சலம். எல்லாம் நிமிஷத்தில் விலகியோட காற்றில் மிதப்பது மாதிரி இதென்ன விந்தை மதுரம். கான்வாசை இழுத்துக் கட்டினாள். மனசின் வேகம் கைகளில் – வண்ணங்களை வரிசையாக அடுக்கி கைகளை உதறிக் கொண்டது பயத்தைத் தந்தது. இதுவரை இல்லாத உத்வேகம். தேடியது சிக்கிக் கொண்டதோ?
மஞ்சளை அழுத்தமாக இழுத்தாள். நீலமும் பச்சையுமாய் இன்னும் தடித்த கோடுகள்… வரிசை வரிசையாய்… குறுக்காய்… மேலும் கீழுமாய்… வேகம் மாறாது. மின்விசிறியின் சீரான சப்தம் தவிர வேறில்லை. வியர்வை ஆறாய் வழிந்தது. புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். கணிசமான இடைவெளிவிட்டு நின்று பார்த்தாள். நிழல் மறைந்து போயிருந்தது.
கான்வாசின் அகன்ற பரப்பில் என்ன அற்புதம்…! கோடுகள் வண்ணங்கள் லேசான வெளிச்சம்… அதனினும் லேசான இருள்… நளினமான வளைவுகள். என்ன இது….! கான்வாசில் கோட்டுருவமாய் – பூடகமாய் – சிரித்தாள் மதுரம். நிழலுக்குள் புகுந்திருக்கும் அவளுடைய மனசும் கூட வெளிச்சமாய்த் தெரிந்தது.