கொடூரம்

திருவல்லிக்கேணியில் ஏதோ ஓர் அழுக்குச் சந்துக்குள், வெட்கப்பட்டுக் கொண்டு நுழைந்தது அந்தப் புதிய மாருதி. ஒரு கார் மட்டுமே போகத்தக்க, அகலம் குறைந்த அந்தச் சந்தில் ஒரு மாடு ரொம்பச் சுதந்திரமாகப் படுத்துக் கிடந்தது.

ஹாரனைத் தொடர்ந்து அலற வைத்துத்தான் மாட்டை எழுப்ப முடிந்ததுடிரைவரால். மாடு அலட்சியமாக வண்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தது. ஏன் தான் இந்த மாமா, இந்தச் சந்தை விட்டுக் கிளம்ப மறுக்கிறாரோ என்று தோன்றியது கணேசனுக்கு. பிறந்து வளர்ந்த இடம் என்கிறார். வண்டி ஒரு வீட்டின் முன் நிற்கிறது. டிரைவர் இறங்கி வந்து கதவைத் திறந்து விட்டான். தெருவில் கால் வைக்கக் கூசியது கணேசனுக்கு. திட்டாக சகதி, மாட்டுச் சாணமும் மூத்திரமும் சேர்ந்த சகதி. சகித்துக் கொண்டு இறங்கினான். கூடத்தில், அவரை காட்டிலும் வயசான ஓர் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார் மாமா.

"அடடே… கணேசா?… வாடா…" என்று வரவேற்றார். உள் அறைப்பக்கம் திரும்பி, "ஹேய்… யார் வந்திருக்க பாரு… உன் மருமவன்," என்றார்.

அத்தை உள்ளிருந்து வந்தது, "வாப்பா" என்றது. அத்தையுடன் சமையல் கட்டு வாசனையும் வரும். காலம் காலமாக அவளிடம் ஊறிப்போன வாசனை அது. "செளக்யமா… ரொம்ப இளைச்சுப் போயிட்டியே…"

"சும்மா இந்த்ப் பக்கம் ஒரு வேலை. உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்…" என்றான் கணேஷ்.

அத்தை உள்ளே போயிற்று, காப்பி போடத்தான் போகும். வேண்டாம் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொன்னால் அது கோபித்துக் கொள்ளும். வருத்தப்படும்…

"மல்லிகா கோயிலுக்குப் போயிருக்கா… வந்துடுவா… வர்ற நேரம்தான்" என்றார் மாமா.

மல்லிகாவைப் பார்க்கத் தான் வரவில்லை என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தான். சொல்லக் கூடாது. சொன்னால், மாமாவும் அத்தையும் சேர்ந்து கட்டி வைத்திருக்கும் கோட்டை சரிந்துவிடும்.

ஆபீஸ் பற்றி விசாரித்தார் மாமா. "ஒரு முக்கிய வேலையா நாளைக்கு டில்லிக்குப் போறேன் மாமா… சாயங்காலம் திரும்பி விடுவேன்…" என்றான்.

அத்தை காப்பி கொண்டு வந்தாள். தவிர்க்க முடியாத தண்டனை அது… காப்பிப்பொடியும் சர்க்கரையும் சேர்ந்து அப்படி ஒரு கஷாயத்தை அவளால் மட்டுமே செய்ய முடிகிறது. மாமாவுக்கு அது மட்டுமே காப்பி. ‘தானும் இருபது வருஷமாக அந்தக் காப்பியைத்தான் குடித்து வந்தோம். அப்போது மட்டும் அது நன்றாக இருந்தது எப்படி?’ என்று தோன்றியது கணேசுக்கு. இந்த வீட்டிலிருந்து வெளியேறி வாழ்ந்த இந்த இரண்டு வருஷ காலத்துக்குள், பெரிய ஓட்டல்களும், நண்பர்கள் வீடுகளும் நல்ல காப்பி எது என்று அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தன. மாமாவுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

டம்ளரை வாய்க்குக் கொண்டு போகும்போதே குமட்டியது. மருந்து குடிப்பது மாதிரி மடக் மடக்கென்று குடித்து முடித்தான். சூடான காப்பி உள்ளே போனதும் வியர்த்தது. வாயால் சட்டைக்குள் ஊதிக்கொண்டான். அலுவலகத்திலும், வீட்டிலும், காரிலும் ஏ.சி.யிலேயே இருக்க நேர்ந்த உடம்பு அப்படியே பழகிப் போய் விடுகிறது.

"புழுங்குதா… ஃபேன் போட்டுடறேன்… கல்யாணம் ஆவட்டும்னு இருக்கேன். அப்புறம் மாப்பிள்ளைக்குத் தேவையான வசதியெல்லாம் பண்ணிடறேன்" என்றார் மாமா சிரித்துக்கொண்டு.

இதுவே கிளம்ப வேண்டிய நேரம் என்று பட்டது அவனுக்கு. "நான் கிளம்பறேன் மாமா…" என்று எழுந்தான்.

"இருப்பா… மல்லிகா வர்ற நேரம்தான். வந்துடுவா… இவ்வளவு தூரம் எங்களையா பார்க்க வந்திருப்பே…" என்றுவிட்டுக் கண் அடித்தார், மாமா வேடிக்கையான மனிதர்.

ஆனால் அது கணேசுக்கு ரசிக்கவில்லை. "இன்னொரு நாளைக்கு அவளை வந்து பார்க்கிறேன் மாமா. இப்போ ஏர்போர்ட் வரைக்கும் போக வேண்டியிருக்கு…" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அத்தை வாசல் வரை வந்தது. காரில் ஏறுவதற்கு முன், அத்தை மெல்லிய குரலில் சொல்லிற்று, "மல்லிகாவுக்கு வயசாயிட்டிருக்குப்பா… நீயும் தனியாத்தான் இருக்கே. இந்தத் தையில் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு மாமா முடிவு பண்ணிக்கிட்டிருக்கார்… உனக்கும் அப்பா அம்மா பெரியவங்க இல்லே… நாங்கதானே பார்த்துச் செய்ய வேண்டியிருக்கு… ஒரு நாள் சாவகாசமா வா. பேசி நாள் வச்சுடுவோம்."

"வர்றேன் அத்தை," என்றுவிட்டுக் காருக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டான். வண்டி நகர்ந்தது. ‘அப்பாடா’ என்றிருந்தது கணேசனுக்கு. காரின் ஏ.சி. தீவிரமாகக் குளிர்ச்சியைத் தெளித்தது.

மல்லிகாவைப் பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் கணேசன். அவள் வரும் வரை காத்திருக்கலாம். தலை போகிற அவசரம் ஒன்றும் இல்லை. மாமாவிடம் பொய் தான் சொன்னான். பாவம் மல்லிகா, அவனையே தன் கணவனாக, சினேகிதனாக, எல்லாமாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். நினைவு தெரிந்த நாளில் இருந்து ஏற்பட்ட முடிவு அது.

இரண்டு வயதில் அப்பாவையும், ஆறு வயசில் அம்மாவையும் இழந்த கணேசனைச் சென்னைக்கு அழைத்து வந்து, பள்ளியில் சேர்த்து, கல்லூரிக்கு அனுப்பி, பட்டதாரியாக்கி வைத்தவர் மாமா. தன் ஒரே பெண்ணோடு அவனையும் தன் குடுப்பத்தில் இணைத்துக்கொண்டார்.

மல்லிகாவும் அவனும் ஒன்றாகத்தான் சேர்ந்து வளர்ந்தார்கள். அத்தை, மகளைக் காட்டிலும் அவன் மேலேதான் அன்பைப் பொழிந்தாள்.

மல்லிகா எதிலும் தீவிரமானவள். அன்பு செய்வதிலும் கோபம் கொள்வதிலும். "கணேஷ்… உனக்கு இனிப்பு சேவு ரொம்பப் பிடிக்குமில்லே? இந்தா, என் பங்கையும் நீயே தின்னு" என்று கொடுக்கவும் செய்வாள். "டேய், நானும் என் ஃபிரண்டும் சினிமாவுக்குப் போனதை அப்பாகிட்டே சொல்லிட்டேயில்லையா? இன்னும் மூணு மாசத்துக்கு உன்னோடு நான் பேச மாட்டேன் போ" என்று சொல்லிவிட்டுப் பேசாமலும் இருப்பாள். ஒரே வீட்டில், மூன்று மாச காலம் பேசாமலும் இருந்தவள் அவள்.

சௌத்ரிக்குக் கணேசனைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. ‘இந்த ஏழையின் பால் கருணை கூர்ந்து, என் குடிசைக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி’ என்றார் ஆங்கிலத்தில். மன்னர்களுக்கு முன்னால் குனிந்து சலாம் செய்யும் பாவனையில் வணங்கவும் செய்தார்.

மிஸஸ் செளத்திரி சிரித்துக் கொண்டு வரவேற்றாள். கோடு போட்ட சில்க் கைலியும், பனியனும் அணிந்திருந்தாள். அழகாக, வசதியாக இருந்தது அவள் ஆடை. வாங்கி அணைத்துக் கொள்ளும் சோபாவில் அமர்ந்தான் கணேஷ். "இந்த மாலை நேரம் வீணாகாமல் இருக்க நல்ல கம்பெனி வராதா என்று ஏங்கிக் கிடந்தேன்" என்றார்.

"மிஸஸ் செளத்திரியை விட ஒரு நல்ல ‘கம்பெனி’ உங்களுக்குக் கிடைக்குமா, சார்?"

"மிஸ்டர் கணேஷ். வருஷக் கணக்காகப் பார்த்துச் சலித்துப் போன முகம்தானே என்னுடையது. மிஸ்டர் செளத்திரி ஒரு புதுமுகத்தைத் தேடுகிறார்."

"அப்படியா சார்!…"

"சேச்சே. நெவர்… ஸ்டில், ஐ லவ் ஹெர்…" என்றார் செளத்திரி.

மிஸஸ் செளத்திரியின் சிரிப்பு மிகவும் அழகாய இருக்கும். அந்நியோன்யமான, உனக்காகத்தான் என்பது மாதிரியான தனிப்பட்ட சிரிப்பு அது.

"நீங்கள் என்னை நேசிப்பது உண்மையானால் என்க்கொரு வரம் தர வேண்டும்…" என்றாள் மிஸஸ் செளத்திரி கணவனைப் பார்த்துக் கொண்டு.

"என்ன?"

"ஜெனரல் மானேஜரும், மானேஜரும் ஆபீஸ் விஷயங்களிப் பேசி இந்த மாலையை வீணாக்கிவிடக் கூடாது…"

"துரோகி… எங்கள் கம்பெனி அவ்வளவு கிண்டலாகப் போய் விட்டதா உனக்கு..?" என்று தன் மனைவியை அடிப்பது போலக் கையை ஓங்கினார். தப்பிப்பது போல எழுந்து ஓடினாள் அவள்.

கணேசன் அந்தத் தம்பதியரின் நெருக்கத்தை, விளையாட்டை, அன்பை ரசித்தான்.

செளத்திரி தன் மனைவியைப் பார்த்துச் சொன்னார், "உனக்குத் தெரியுமோ? கணேஷ் நமக்கெல்லாம் முதலாளி ஆகப் போறார்…"

மிஸஸ் செளத்திரி புரியாமல் விழித்தாள்.

"நம்ம ஷா கம்பெனி உரிமையாளர் மகளை நம்ம கணேஷ் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போறார். கணேஷோட சுறுசுறுப்பு, திறமை, புத்திசாலித்தனத்துக்குக் கிடைச்ச வெகுமதி… டெல்லி, பம்பாய், பெங்களூர்னு கொத்துக் கொத்தா முளைச்சிருக்கிற எல்லா ஆலமரங்களுக்கும் எதிர்கால உரிமையாளரே இந்த கணேஷ்தான்."

"ரியலி?" என்றாள் மிஸஸ் செளத்திரி.

மகிழ்ச்சி வெளிப்படையாகப் பூத்திருந்தது அவள் முகத்தில். "என் வாழ்த்துக்கள்!" என்றாள்.

ஷாவின் ஒற்றை மகள் நினைவில் வந்து புன்னகைத்தாள் அவனைப் பார்த்து.

உறக்கம் வர மறுத்தது. மல்லிகாதான் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தாள் மனதில். அவளை மனைவியாக ஏற்று, ஒரு மூத்திரச் சந்தில், கொசு பிடுங்க ஒண்டுக் குடித்தனம் பண்ண இப்போது உடம்பிலும் வலு இல்லை. மூளை, மனம் இரண்டும் ஒத்துழைக்காது. கொஞ்ச காலமேனும்., வசதி பழகிவிட்டிருந்தது. ஷாவின் ஒற்றை மகள், மிகப் பெரும் அந்தஸ்து. கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யும் ஒரு கம்பெனியின் மானேஜிங் டைரக்டர். நினைப்பே சுகம் தந்தது. அதே சமயம் மனசில் ஒரு மூலை வலிக்கவும் செய்தது, சின்ன வயசு முதல் அர்ப்பணத்தோடு சினேகித்த மல்லிகாவை நினைக்கும் போது.

படுத்திருந்த நுரைக்கட்டில், ஒரு கூட்டமே நடத்த வசதியான அந்தப் பெரிய படுக்கை அறை, அங்குல அங்குலமாகக் கரன்சியை அரைத்துப் பூசியிருக்கிற நிறுவனம் கொடுத்திருக்கிற கார்… எதையும் இழப்பதற்கில்லை.

கணேசன் ஒரு முடிவுக்கு வந்தான். லெட்டர் ஹெட்டை எடுத்து எழுதத் தொடங்கினான். மறு நாள் காலை விமான நிலையத்தில் கடிதத்தை டிரைவரிடம் கொடுத்து மாமாவிடம் சேர்ப்பிக்கச் சொன்னான். டில்லி பறந்தான், நிம்மதியான மனதோடு.

டிரைவர் உடனே தன் கடமையை நிறைவேற்றினான். மாமா வழக்கம்போல ஊஞ்சலில் இருந்தார். கடிதத்தை வாங்கினார், படித்தார்.

‘அன்புள்ள மாமா, வணக்கம். இக்கடிதம் தங்களுக்கு வருத்தம் தரலாம். தரும். வேறு வழி இல்லை. நான் மல்லிகாவைக் கல்யாணம் செய்து கொள்வதற்கில்லை. எங்கள் நிறுவன உரிமையாளரின் மகளையே திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து விட்டேன். ஒரு நிரந்தரமான, செளகர்யமான வாழ்க்கை எனக்குத் தேவைப்படுகிறது.

அனாதையாக இருந்தவன் நான். எனக்குச் சோறு போட்டு, படிக்க வைத்து இந்த நிலைக்கு ஆளாக்கியவர் தாங்கள். நன்றி கெட்டவன் என்று நீங்கள் சொல்லலாம். எதுவானாலும், மல்லிகா என்னை விரும்பலாம். நான் அவளை விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள்.

மல்லிகா திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்…"

"என்னப்பா லெட்டர்?" என்று வந்த மல்லிகாவிடம் கடிதத்தை நீட்டினார்.

விமானத்திலிருந்து இறங்கி, சடங்குகளை முடித்துக் கொண்டு வெளிவந்தவன் டிரைவரைத் தேடினான். அவன் கண்களில் மல்லிகா தட்டுப் பட்டாள். ஆச்சரியம். கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது.

(மீதி அடுத்த வாரம்)

About The Author