ஸ்தல புராணங்களின்படி கிருஷ்ண பகவான் தன் அவதாரம் முடிந்து வைகுண்டத்துக்குச் செல்லும்போது இந்த சிலை அவரது உற்ற தோழரான உத்தவரிடம் கொடுக்கப்பட்டது. அந்தச் சிலை உத்தவரால் தேவகுருவான பிரஹஸ்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தேவகுருவும் வாயு பகவானும் பரசுராமரின் உதவியுடன் இதைப் பிரதிஷ்டை செய்ய ஏற்ற இடம் என்று கண்டுபிடித்த இடத்தில் ஏற்கெனவே சிவபெருமான் கொலு இருந்தார். கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்ய இதுவே பொருத்தமான இடம் என்று ஒப்புக்கொண்ட சிவபெருமான் ஒரு கிமீ தொலைவில் உள்ள மம்மியூர் என்ற இடத்திற்குச் செல்ல சம்மதித்தார். இதனால் மம்மியூர் மஹாதேவனை தரிசிக்காமல் குருவாயூர் யாத்திரை பூர்த்தி ஆகாது என்பது ஐதீகம்.
குருவாயூரிலிருந்து நேராக திருசூரிலுள்ள திருவம்பாடி கிருஷ்ணன் கோவிலை அடைந்தோம்.1000 வருடங்கள் பழமையான இந்தக் கோவில் கேரளாவில் உள்ள பிரபலமான கிருஷ்ணன் கோவில்களில் ஒன்றாகும்.
கேரளாவின் மிகப்பிரசித்தியான வருடாந்தர திருவிழாவான திருசூர் பூரத்தில் பங்கு பெறும் முக்கியமான கோவில்களில் இது ஒன்றாகும். இத்திருவிழாவின்போது வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட யானைகள் ராக்ஷசக் குடைகளுடனும், வாண வேடிக்கைகளுடனும் ஊர்வலமாக வடக்குநாதன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்தை மடத்தில் வரவு என்று அழைக்கிறார்கள்.
இதற்குப் பின் நாங்கள் சென்றது கேரளத்தின் மிகப் பெரிய சிவன் கோவில்களில் ஒன்றான வடக்குநாதன் கோவில். இக்கோவில் தென்கைலாசம் என்றும் ரிஷபாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் கம்பீரமாக ஒரு உயரமான HILLOCKஇல் நிற்கிறது. பரசுராமரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஆலயத்தில்தான் திருசூர் பூரம் திருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இங்குள்ள MURAL ஓவியங்கள் பெயர் பெற்றவை. இதனால் இக்கோவில் தேசிய monument ஆக அறிவிக்கப்பட்டு Archaeological Survey of India வால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
திருசூரில் உள்ள மற்றொரு புகழ் வாய்ந்த கோவில் பாரமேக்காவு பகவதி கோவில் ஆகும். திருசூர் பூரம் திருவிழாவில் ராக்ஷசக்குடைகளுடன் கூடிய யானைகள் ஊர்வலத்தில் பங்கு பெறும் மற்றொரு புகழ் பெற்ற கோவில் ஆகும். பலச்சொட்டில் மேளம் என்ற வாத்தியம் இக்கோவிலில் புகழ் வாய்ந்தது.
அன்று மாலை நாங்கள் முதலில் சென்றது குருவாயூர்-கொடுங்கள்ளூர்-எர்ணாகுளம் NH17 இல் உள்ள Zamorins காலத்தில் கட்டப்பட்ட பிரபலமான த்ரிப்ரயார் ராமர் கோவில். இதனுடன் இணைத்துப் பேசப்படும் கோவில்கள் திருமூழிக்களம், லக்ஷ்மணன் கோவில், கூடல்மாணிக்கம் பரதர் கோவில், பயம்மல் சத்ருக்னன் கோவில் ஆகியவை ஆகும். நான்கு ராமாயண சகோதரர்களின் சிலைகள் நதிக்கரை ஓரத்தில் ஒதுங்கியதாகவும், அவற்றை வர்கீ கைமல் என்ற தளபதி இக்கோவில்களில் நிறுவியதாகவும் வரலாறு. இவை எல்லாமே விஷ்ணுவின் சிலைகள்தான் என்றாலும் ராமாயண சகோதரர்கள் பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இங்கு காட்சி அளிப்பது இருபுறமும் ஸ்ரீதேவி பூதேவி சகிதம் சங்கு, சக்கரம், வில், மாலைகளைக் கையிலேந்திய சதுர்புஜ விஷ்ணு. இது சிவனுடைய சில அம்சங்களையும் கொண்டிருப்பதாகவும், கையிலுள்ள மாலை பிரம்மாவைக் குறிப்பதாகவும், எனவே இக்கோவில் திருமூர்த்திகளின் உறைவிடம் என்றும் கூறுவர்.
நாங்கள் அடுத்துச் சென்றது இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்கம் பரதன் கோவில் ஆகும். இந்தத் திரு உருவம் சங்கமேசன் என்றும் அழைக்கப்படுகிறது. வட்ட வடிவமான கர்பக்ரஹமும் அழகான mural ஓவியங்களும் marvel in architectural beauty ஆகும். வனவாசத்திலிருந்து ராமபிரான் திரும்பி வருவதை அறிந்து மகிழ்ச்சியுடன் காணப்படும் பரதனாக இவ்வுருவம் காணப்படுகிறது.
தலிப்பரம்பாவிலிருந்து ஒரு முனிவர் எல்லாக் கோவில்களுடைய புனிதங்களையும் தன் கமண்டலத்தில் அடைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்ததாகவும் இங்கு வந்தபோது கமண்டலம் உடைந்து எல்லா சக்திகளும் இங்குள்ள திரு உருவத்தில் சங்கமித்து விட்டதாகவும் அதனாலேயே இங்குள்ள உருவம் சங்கமேசன் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். எனவே இங்கு வேறு சன்னதிகள் எதுவும் இல்லை. எல்லாக் கோவில்களிலும் காணப்படும் கணபதி சன்னதி கூட இங்கு இல்லை. அங்கிருந்து பயம்மல் சத்ருக்னன் ஆலயத்தைப் பார்த்துவிட்டு திருசூர் திரும்பினோம். வரும் வழியில் நடவரம்பு என்ற இடத்தில் உள்ள ஹனுமான் கோவிலையும் தரிசித்தோம்.
மஹாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிச்சிக்கொடு என்ற ஸ்தலத்துடன் மறுநாள் யாத்திரையைத் துவக்கினோம். ஷோரனூர்-கோழிக்கோடு ரயில் மார்க்கத்தில் பட்டம்பி ஸ்டேஷனிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. உய்யவந்த பெருமாள் என்பது இங்குள்ள பெருமாளின் திருநாமம். இந்த மூர்த்தி அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிப்பிரஹாரத்தில் யுதிஷ்டிரர், நகுல-சஹாதேவர்கள், பீமன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்ணு சன்னதிகள் உள்ளன. குலசேகர ஆழ்வார் இந்தப் பெருமாளைப் பற்றி 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.
அடுத்து நாங்கள் சென்றது திருசூருக்கு வடக்கே மலைப்பிரதேசத்தில் உள்ள திருவில்வாமலா என்கிற திருத்தலமாகும். ராமபத்ரஸ்வாமி, லக்ஷ்மணர் ஆகியோர் இங்கு முக்கிய தெய்வங்கள். இங்குள்ள ராமர் வில்வாத்ரி நாதன் என்றும் அழைக்கப்படுகிறார். பரசுராமர் இங்குள்ள ராமரை பிரதிஷ்டை செய்து முதல் பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது. கைலாசத்தில் சிவபெருமானால் வழிபடப்பட்ட மூர்த்தி இது என்றும் சொல்கிறார்கள். கர்ப்பருஹத்தின் அடியில் ஒரு குகையும் வில்வமரமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
மாலையில் கொடுங்களூருக்கு அருகில் உள்ள திருவஞ்சிக்களம் எனப்படுகிற மிகப் புராதனமான சிவன் கோவிலை தரிசித்தோம். இது சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலின் கர்பக்ரஹம் தேர் வடிவில் அமைந்துள்ளது. எல்லாக் கோவில்களிலும் தெற்கு நோக்கி வீற்றிருக்கும் தக்ஷிணாமூர்த்தி இங்கு கிழக்கு திசை பார்த்து அமர்ந்திருக்கிறார். சுவர்களில் எல்லாம் அழகான mural ஓவியங்கள் காணப்படுகின்றன.
அங்கிருந்து கொடுங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி கோவிலுக்குச் சென்றோம். காளி, கொற்றவை அல்லது துர்க்கையின் அவதாரமாகக் கருதப்படும் கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எழுப்பிய கோவிலாகும். முதலில் இது சிவன் கோவிலாக இருந்ததாகவும், அதனால் தேவியை வழிபடுவதற்கு முன்பு சிவன் சன்னதியில் வழிபடவேண்டும் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள பகவதி உருவம் பலாமரத்தினால் செய்யப்பட்டு, முகம் ஒரு முகமூடியால் மறைக்கப்பட்டுள்ளது. திருசூரிலிருந்து திருநாவாய் செல்லும் வழியில் திருக்கண்ணபுரம் என்ற இடத்தில் மஹாவிஷ்ணு கோவில் என்ற ஒரு பெயர்ப்பலகையைக் கண்டோம். அங்கு சென்று பார்த்தபோது அது லக்ஷ்மிநரசிம்மர் ஆலயம் என்று அறிந்தோம். ஆலயம் மூடப்பட்டிருந்தாலும் அங்குள்ள பாதுகாவலர் மூலம் அது 5000 வருடம் பழமையான கோவில் என்று அறிந்தோம்.
இந்தக் கோவில்களுக்கெல்லாம் சென்றபோது கேரளக்கோவில்களுக்கே உரிய சில பொதுவான அம்சங்களை காண முடிந்தது.
1) பணம் வாங்கிக்கொண்டு சன்னதிக்கு நேராக அழைத்துச் செல்வதாகக் கூறி தொந்தரவு செய்யும் இடைத்தரகர்களை அங்கு காண முடியவவில்லை. எல்லோரும் வரிசையில் நின்றுதான் ஆண்டவனை தரிசிக்க முடியும். விஐபிக்களும் வரிசையில் ஒரு இடத்தில் சேர்த்து விடப்படுவார்களே அல்லாமல் நேராக தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் பழக்கம் இல்லை.
2) கட்டண தரிசனங்ககள் அங்கு கிடையாது. எல்லோருக்குமே தர்ம தரிசனம்தான்.
3) எல்லா சன்னதிகளிலும் தீபாராதனை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைபெறும். வரும் பக்தர்களின் பர்சின் பருமனைப் பார்த்து தீபாராதனை காண்பித்து தட்டை நீட்டும் வழக்கம் இல்லை.
4) கோவில்களும் பூஜா பாத்திரங்களும் மிகப் பளபளப்பாக அதற்காகவே நியமிக்கப்பட்ட மூதாட்டிகளால் தேய்த்து வைக்கப்படுகின்றன.
5) எல்லாக் கோவில்களிலும் பக்தர்கள் அணிந்து செல்லும் ஆடைகளுக்குக் கட்டுப்பாடு உண்டு. பேண்ட் ஷர்ட்டுக்கு அனுமதி இல்லை. வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்துதான் செல்ல வேண்டும்.
6) பொதுவாக கோவில்களுக்குள் யாரும் உரக்க ஊர்க்கதை பேசுவதில்லை. மௌனமும் கட்டுப்பாடும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
7) கோவில்கள் குறிப்பிட்ட நேரங்களில்தான் திறந்து மூடப்படுகின்றன. யாருக்காகவும் இதில் மாறுதல் கிடையாது.
இந்த காரணங்களால் கேரளக் கோவில்களுக்குள் ஒரு தூய்மையான பக்தியை உணர முடிகிறது.
நாங்கள் சென்ற வழியெல்லாம் இருபுறமும் பச்சைப்பசேலென்று செழுமையாகக் காணப்பட்டது. இங்கு காணப்படும் தூய்மையான பக்தியால்தான் பருவமழை தவறாமல் பெய்து கேரளா கடவுளின் சொந்த நாடு (GOD’S OWN COUNTRY) என்று அழைக்கப்படுகிறதோ?
ஒரு கொசுறுத் தகவல் : நாங்கள் திருசூரில் தங்கியிருந்த மூன்று நாட்களும் உணவருந்தியது Bharat Hotel என்ற அருமையான உணவகத்தில். Filter coffee பிரியர்களுக்கு அருமையான காஃபி கிடைக்கிறது. அருமையான இட்லியும் கிடைக்கிறது. ஆனால் காலையில் மட்டும்!
“