இந்த முறை ரஜினி படத் தலைப்புகளுடன் களம் இறங்குகிறார் இயக்குநர் பாண்டிராஜ். தனது முந்தைய பட நாயகர்களுடன் இணைந்திருப்பவர் இசைக்கு இந்த முறை யுவனைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். முன்னோட்டமாக, ஏற்கெனவே இதிலிருந்து ‘சரக்குப்’ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்தம் இதில் ஐந்து பாடல்கள்.
ஒரு பொறம்போக்கு
முதலில் சொன்ன சரக்குப் பாடல் இதுதான். புத்தாண்டுப் பிறப்பு ஒன்றில் நண்பர்கள் இருவர் குடியை விட முடிவு செய்கிறார்கள். அந்த உறுதிமொழிதான் இந்தப் பாடல். சரக்கின் வகைகளையும் இதில் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். இதை யுவனும், சிம்புவும் இணைந்து பாடியிருப்பது கூடுதல் துள்ளல்! நா.முத்துகுமார்தான் இந்தக் குடி மறுப்புப் பாடலுக்கு ஆசிரியர். ஜாலியாகக் குடி வரலாற்றையும் சொல்கிறது பாடல். வெற்றி உறுதியான பாடல்!
பல சரக்கு அடிச்சிருக்கோம்,
புத்திக் கெட்டுதான் அலைஞ்சிருக்கோம்,
நண்பா வா… இன்னையோட குடி NO! – காலத்திற்கு வேண்டிய பாடல்!
கொஞ்சும் கிளி
காதலியை வர்ணிக்கும் நாட்டுப்புறப் பாணிப் பாடல். சொற்களால் விளையாடி இருக்கிறார் யுகபாரதி! வேல்முருகனின் குரலால் அசல் கிராமத்து வாசனை பாடலில். இசையும் சீராக ஒலிக்கிறது. நாட்டுப்புறக் கருவிகளில் ஆரம்பித்து, நவீன வாத்தியங்களுக்குத் தடம் மாறி, பின்னர் இரண்டும் இணைந்தும் விருந்து படைக்கின்றன. யதார்த்த வார்த்தைகளும் அதைக் கோத்த விதமும் ரசிக்க வைக்கின்றன.
கத்திரி வெயிலு உச்சியில வீச
அப்படிக் குளிரும் அந்தப் புள்ள பேச!
சாராயத்தில் ஏது போத? அந்தப் புள்ள பாத்தா
சட்டுன்னுதான் மாறும் பாத – ரசனையின் பகிர்வு.
சுடச் சுடத் தூறல்
நரம்பின் மீட்டல்களுடன் தொடங்கி, விசில் ஒலியுடன் ஸ்ருதி சேர்கிறது பாடல். யுவனின் ஆல்பத்தில் அவருக்கென்று ஒரு தனிப்பாடல் இல்லாமலா? இதோ மெஸ்மரிசக் குரல் காதல் பாடுகிறது. பின்பாதியில் வரும் இடையிசை கவனம் ஈர்க்கிறது. தனக்கே உரிய பாணியில் யுவன் பாடியிருக்கிறார். ஆனால் ஏனோ, வழக்கமான வசீகரம் மிக மிக மெல்லிய அளவு குறைந்து காணப்படுகிறது குரலில்.
உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல்
அத்தனையும் நீ என நினைப்பதிலே
நாள் எல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம் – மெஸ்மரிச வரிகள்.
உள்ளதை நான் சொல்லப் போறேன்
பாரபட்சம் இல்லாமல் சமகால அரசியல் நிலையைச் சாடியிருக்கிறார் யுகபாரதி. சத்யனின் குரல் பாடலுக்கு வெகு பொருத்தம். இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. பல கட்சிகள் இதைத் தங்கள் தேர்தல் வாக்குறுதியாக வெளியிட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, தமிழக மக்கள் எச்சரிக்கை!
வீட்டுக்கே சரக்கு வரும் வேதனையும் வேண்டாங்க!
லைசன்சு காட்டச் சொல்லி நச்சரிக்க மாட்டோங்க!
வேணும்முன்னு நீங்க கேட்டால் லஞ்சத்தில் பங்கு தாறோங்க – வாக்குறுதி வரிகள்.
தெய்வங்கள் எல்லாம்
பியானோவின் மெல்லிய இசையில், விஜய் யேசுதாஸின் இதமான குரலில் அப்பா பாடல் ஒன்று! கேட்கும்போது அவரவர் அப்பா முகம் நிச்சயம் நினைவுக்கு வரும். எழுதிய நா.முத்துகுமாரை எப்படிப் பாராட்ட என்று தெரியவில்லை! நான் இந்த ஆல்பத்தில் முதலில் கேட்ட பாடலும் இதுதான். திரும்பத் திரும்பக் கேட்டும் நிறுத்த மனம் வரவில்லையே! நீங்களும் கேளுங்கள், நிச்சயம் உயிர் தொடும்!
கண்டிப்பிலும், தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்!
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம் – உண்மை வரிகள்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா – மனதைக் கொள்ளை அடிப்பார்கள்.