குழந்தை வளர்ப்பு (3)

III. உடலுக்கு :

பருமனான குழந்தைகளுக்குச் சில டிப்ஸ்:

1. உடற்பயிற்சி

குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவரவர் வயதுக்கேற்ற பிரத்யேக விளையாட்டுக்களும், உடற்பயிற்சிகளும் உள்ளன. அவர்களைத் தொலைக்காட்சி மற்றும் கணினிபோன்றவைகளைக் குறைவான நேரம் பயன்படுத்த அனுமதித்து விட்டு, இதர நேரங்களில் உடலுக்குப் பயிற்சியளிக்கும் விதமான விளையாட்டுக்களில் ஈடுபடத் தூண்டவேண்டும்.

2. நடைப்பயிற்சி

உங்கள் குழந்தைகள் நடைப்பயிற்சியை விரும்பவில்லையா? கவலைப்படாதீர்கள். பெற்றோர்களும் குழந்தைகளுமாகச் செலவிடக்கூடிய நேரத்தைக் கண்டறியுங்கள். குடும்பமாக பார்க் அல்லது பீச் போன்ற இடங்களுக்குச் செல்வதன் மூலம் நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும் இருக்கும், குடும்பமாக வெளியே சென்றதுபோலவும் இருக்கும்.

மேலும்

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், இவற்றை அதிக எடையுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் தங்களுடைய வாழ்க்கையில் தொடர்ச்சியாக செயல்படுத்தலாம். இதனால் அவர்களுடைய உடற்கூறில் மட்டுமல்லாமல் மனோரீதியாகவும் நல்ல விளைவுகளைக் கொடுக்கும்.

IV. மனதிற்கு :

குழந்தைகளின் வெற்றிகரமான, மகிழ்ச்சியான எதிர்காலம் நல்ல குடும்ப உறவுகளின் மூலமாகவே அமையும்.

1. தோல்வியைப் பழக்குங்கள்

குழந்தைகள் வருத்தமாக இருக்கும் போது அவர்களை மகிழ்விக்க முயலாதீர்கள். அவர்களுடைய உணர்வுகளை அறிய முயலுங்கள். தோல்வியடையும் போது அவர்களிடம் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்: "உன்னால் வெற்றி பெற முடியவில்லை. உன்னால் இயன்ற அளவு முயற்சி செய்தாய். உன்னுடைய வருத்தம் எனக்குப் புரிகிறது. வருத்தம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளைச் சமமாக ஏற்கப் பழகு".

2. மகிழ்ச்சியைத் தாருங்கள்

தினமும் ஒரு மணி நேரம் உங்கள் குழந்தைகளுடன் ‘முழுமையாக’ச் செலவிடுங்கள். குழந்தையுடன் விளையாடும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்துச் செய்தால் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்.

மேலும்

அன்பு அட்டவணை ஒன்றை ஏற்படுத்துங்கள். அதில் உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான 50 விஷயங்களை வரிசைப்படுத்துங்கள் (பிடித்த நிறம், திரைப்படம், உணவு போன்றவை). அவர்கள் தூங்கச் செல்லுமுன் நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்துங்கள். ஏனென்றால் அவைகளே அவர்களுக்கு நல்ல கனவுகள் அமைய வழி வகுக்கும்.

About The Author