குழந்தைகளின் அறிவுத் திறனைக் கூட்டுவது எப்படி?

குழந்தையின் மூளையைப் பிழியாதீர்கள்

போட்டி மிகுந்த உலகில் இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மூளையைப் பிழியும் நிலைமை வருத்தம் தரக் கூடியதாக இருக்கிறது. எதிலும் முதலாக வர வேண்டும் எல்லாவற்றையும் கற்று அறிந்து கொள்ள வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும் என்பதை இவர்கள் சற்றும் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமே!

கணிதம், ஆங்கிலம், ஸயின்ஸ் எல்லாவற்றிலும் முதல் மார்க் வாங்கினால்தான் எஞ்சினியரிங்கில் கணிணித் துறையில் நுழையலாம்; எல்லா கலைக்களஞ்சியங்களையும் கரைத்துக் குடித்தால் தான் க்விஸ் போட்டியில் பரிசு வாங்கலாம்; கிரிக்கெட்டில் சதம் அடித்தால் ஒரு டெண்டுல்கர் ஆகிவிடலாமே; கூடவே நாட்டியம், பாட்டு கற்றால் தொலைக்காட்சியில் புகழ் பெற்று விடலாம் என்று எண்ணி தங்களால் இளம் வயதில் சாதிக்க முடியாததை எல்லாம் இளம் குழந்தைகளிடம் தள்ளி விடும் இவர்களுக்கு மன்னிப்பு உண்டா என்ன?

நவீன தொழில்நுட்ப காலத்தின் புதிய பூதம்

இளம் வயதுக்கே உரித்தான நல்ல நல்ல விளையாட்டுக்களும் நண்பர்களுடன் அரட்டை, பாதகமில்லாத குறும்புகள் ஆகியவற்றையெல்லாம் இழந்த இந்தக் குழந்தைகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதை மீறி மிடில் கிளாஸ் தாய்மார்களுக்கு ஈடு கொடுத்து தங்கள் இளம் பருவத்தை காலை ஐந்து மணியிலிருந்து இரவு 12 மணி வரை படிப்பிற்குக் கொடுத்துக் கணினித் துறையில் நுழைந்தால் அங்கு புதிய பூதம் ஒன்று இவர்களைப் பிடித்துக் கொள்கிறது. அந்த நவீன பூதத்தின் பெயரை தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் நெவில் மையர்ஸ் இன்ஃபோ-ஸ்ட்ரெஸ் (Info- stress) என்று நாமகரணம் செய்து அதன் தீமைகளை ஆராய்ந்து வருகிறார்!

தேவைக்கு அதிகமான தகவல்களை மூளைக்கு அளித்து அதைக் கசக்கிப் பிழிந்தால் அதன் விளைவாக களைப்பும் வெறுப்பும் உடல் நல பாதிப்பும் அடைவதுதான் கிடைக்கும் பலன் என்கிறது மையர்ஸின் ஆய்வு!

தாரே ஜமீன் பர் -இஷான்

இதில் தாரே ஜமீன் பர் படத்தில் வரும் இஷான் போல குழந்தைகள் சில இருந்து விட்டால் ‘பிஸியான’ வாழ்க்கையில் ஈடுபடும் பெற்றோர் குழந்தைக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதைக் கூட அறியாமல் வாழும் நிலை இன்னும் பரிதாபகரமானது. தாரே ஜமீன் பர் படத்தை அமெரிக்காவில் இன்டர்நேஷனல் டிஸ்லெக்ஸியா அசோஷியேசனில் பிரத்யேகமாக திரையிட்ட போது அங்கே சென்ற அமீர்கான் தியேட்டருக்கு பதிலாக ஒரு மாநாட்டு அறையில் படம் திரையிடப்படுகிறதே, புரஜக்டருக்கு பதிலாக டி.வி,டி மூலம் காண்பிக்கப்படுகிறதே என்று பயந்தார். ஆனால் படம் முடிந்தவுடன் அங்கு குழுமியிருந்த 200க்கும் அதிகமானோர் எழுந்து நின்று விடாது நீண்ட கரகோஷத்தைச் செய்தனர். இந்தியாவில் எந்த வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு உலக நாடெங்கும் இந்த படத்திற்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம் தெரிவது என்னவெனில் நல்ல கருத்தை எங்கிருந்தாலும் மக்கள் வரவேற்பர் என்பதுதான்! இந்தப் படம் அறிவுறுத்தும் கருத்து வரவேற்கத்தக்கது! ஒரு குழந்தையை வளர்க்கும் போது ஒவ்வொரு குழந்தையும் ஒப்பற்ற தனித்தன்மை வாய்ந்தது என்ற நோக்கில் பெற்றோர் அதைப் பார்த்து வளர்க்க வேண்டும். அதிகமான "எதிர்பார்ப்பு அழுத்தத்தை" தந்து விடக் கூடாது.

ரிச்சர் நிஸ்பெட்டின் புதிய கண்டுபிடிப்பு

மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிச்சர்ட் நிஸ்பெட் அறிவுத்திறனை வளர்ப்பது பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் கூறுகின்ற ஒரு முக்கியமான கருத்தை அனைத்து பெற்றோர்களும் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவரை சொல்லப்பட்டு வந்த கருத்தான, "அறிவுத்திறன் முற்றிலும் நூறு சதவிகிதம் பரம்பரை பரம்பரையாக ஜீன் மூலம் வரும் ஒன்று" என்பதை இவர் ஆய்வு மறுக்கிறது. மாறாக உரிய திட்டத்தின் மூலமும் பயிற்சியின் மூலமும் அறிவுத் திறனை வளர்க்கலாம் என்பதே இவரது அறிவுரை!

அறிவுத் திறன் என்பதை எப்படி வரையறுத்து விளக்குவது? மனத்தின் திறமைகளுள் ஒன்றான அறிவுத் திறன் என்பது தர்க்கம், திட்டமிடுதல், பிரச்சினைகளைத் தீர்த்தல், நுட்பமாக சிந்தித்தல், சிக்கலான கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து கிரஹித்தல், சீக்கிரமாகக் கற்றல், அனுபவங்களின் மூலம் கற்றல் ஆகியவற்றைக் கொள்ளும் திறனையே குறிக்கிறது. வெறும் புத்தகப்படிப்பு இல்லை இது; பள்ளிப் படிப்பு மட்டுமல்ல இது; வெறும் தேர்வுக்கு அமர்வது மட்டுமல்ல இது; அறிவுத்திறன் என்பது இதை விட பரந்த ஆழமான ஒன்று!

என்ன செய்வது என்பதைக் கற்றுக் கொண்டு அதைச் செய்வதும், செய்வதில் அர்த்தம் இருக்கிறதா என்பதைப் பார்த்துச் செய்வதையும் உள்ளடக்கியது அறிவுத் திறன் என்பது.

வெஸ்ச்லர் சோதனைமுறைகள்

இதை இளங்குழந்தைகளிடம் அளக்க ஐக்யூ திறனை அளக்கும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் இதை விடச் சிறப்பாக ஆறு முதல் பதினாறு வயதுக் குழந்தைகளுக்காக வெஸ்ச்லர் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல் ஃபார் சில்ட்ரன் என்ற தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது(The Wechsler Intelligence Scale for Children -WISC)

வெஸ்ச்லர் முறையில் தகவல், வார்த்தைகளை அறியும் திறன், விஷயங்களை கிரஹித்தல், ஒற்றுமைகளைப் பார்த்து அறிதல், கணிதம், படத்தை பூர்த்தி செய்தல், ப்ளாக்குகளை வடிவமைத்தல், பொருள்களை இணைத்தல், படங்களை வரிசைப்படுத்தி குறித்தல் (tests on information, vocabulary, comprehension, similarities, arithmetic, picture completion, block design, object assembly, picture arrangement and coding) ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்படுகிறது.

குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கத் தாய்மார்கள் செய்ய வேண்டுவது

ஏராளமான தகவல்களை மூளையில் திணிக்கப்பட்டு தாய்மார்களின் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுத்து வளரும் குழந்தைகளுக்கு உதவும்படியான சில குறிப்புகளைக் கீழே பார்க்கலாம்.இவற்றை இளம் வயதிலிருந்தே இளம் தாய்மார்கள் கூட இருந்து குழந்தைக்கு உதவி செய்தால் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்!

முதலாவதாக வெஸ்ச்லர் முறையில் உள்ள மேலே கண்ட தேர்வுக்கான பொருள்களை கூட இருந்து சொல்லித் தருதல் வேண்டும்.

குழந்தைகளிடம் அதிகமாகப் பேச வேண்டும்.

அதிக சொற்களைப் பேசுதல் மிகவும் நல்லது. பெரியவர்கள் பேசும் போது குழந்தைகளையும் அருகில் இருக்கச் செய்தல் வேண்டும்.

குழந்தைகள் கூறும் முடிவைப் பாராட்டாமல் அதை அறிவிக்க அது எடுக்கும் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.

மார்க் லெப்பர் கூறும் ஐந்து ‘சி’க்களை குழந்தைகளுக்கு கூட இருந்து கற்பிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டும்.

ஐந்து ‘சி’ க்கள்:- control, challenge, confidence, curiosity, contextualize ஆகியவைதான்!

கண்ட்ரோல் என்பது எதிலும் கட்டுப்பாடுடன் தானே இருக்கக் குழந்தைகளைப் பழக்குவது.

சாலஞ்ஜ் என்பது சவாலைச் சமாளிக்க உங்கள் குழந்தையை அழைக்கும் விதமாக சவால் தரும் விஷயங்களை முன் வைப்பது

கான்பிடன்ஸ் என்பது எதிலும் ஒரு நம்பிக்கையை குழந்தையிடம் ஏற்படுத்துவது.

க்யூரியாசிடி என்பது எதையும் ஒரு ஆர்வத்துடன் கூர்ந்து ஆராயும் பழக்கத்தை மேற்கொள்ள வைப்பது.

கான்டெக்ஸ்டுவைலஸ் என்பது ஒரு விஷயத்தை நிஜ உலகுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையை சொல்லித் தருவது. திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சியில் வருவதற்கும் நிஜத்திற்கும் உள்ள சம்பந்தம் போன்றவற்றை சொல்லித் தந்தால் நிஜ உலகின் வாழ்க்கை பற்றிய நல்ல அணுகு முறை ஏற்படும்.

ஏழு விஷயங்களே குறுகிய கால நினவாற்றல் திறனில் இருக்கும்!

இறுதியாக ஒர்கிங் மெமரி அல்லது ஷார்ட் டெர்ம் மெமரி எனப்படும் குறுகிய கால நினைவாற்றலில் ஒரு சமயம் ஒருவர் ஏழு விஷயங்களுக்கு மேல் நினைவில் கொள்ள முடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏராளமான விஷயங்களை ஒரே சமயத்தில் திணிக்காமல் அறிவுத் திறனை அளவோடு வளர்ப்பதோடு, சீரான இடைவெளியில் நினைவுத் திறனைக் கூட்டும் பயிற்சியைத் தந்தால் எந்தக் குழந்தையும் நம்பர் ஒன் குழந்தைதான்!

*****************

About The Author

2 Comments

  1. z.a.raja

    நல்ல கட்டுரை பெரென்ட் கவனிக்கவும்

  2. kokilavaniperiyasamy

    respected doctor Nagarajan. i am the new guest user of nilacharal. i am much imppreesed and informaed with the articles published by you and other people. i am sharing the articles which are useful with my other friends as paditthathil pidithathu” in my blogs. i felt that i should inform u about this and ask your permission to do so. really it is useful and thank you sir.”

Comments are closed.