படத்தின் பெயர் விளக்கத்தோடு தொடங்குகிறது கதை. அதாங்க, காட்டு யானைகளை அடக்கும் யானை. ஆரம்பத்தில் வரும் மலையும் மலை சார்ந்த இடமும் ‘அட!’ என நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. காட்டு யானையாக வரும் கொம்பன், நாயகி லட்சுமி மேனனை (அல்லி) மட்டுமின்றி நம்மையும் சற்று மிரளத்தான் வைக்கிறது. அது நீருக்குள் நடக்கும் காட்சி அருமை! கணினி வேலைதான் எனினும் நன்றாக இருக்கிறது.
அப்புறம், வழக்கம்போல் நமது நாயகனின் அறிமுகக் காட்சிகள். தனது யானையுடன் எப்படி அவர் வாழ்க்கை நடத்துகிறார் எனக் காட்சிகள் விரிகின்றன. நாயகன் விக்ரம் பிரபுவின் (பொம்மன்) தாய் மாமாவாகத் தம்பி ராமையா நடிப்பிலும் உடல் மொழியிலும் அசத்தியிருக்கிறார். விக்ரம் பிரபுவின் நடிப்பு பரவாயில்லை. ஆனால் எதிர்பாராத வகையில், சிறு பெண்ணாகத் தோற்றமளிக்கும் லட்சுமி மேனன் சில இடங்களில் புருவம் உயர்த்த வைக்கிறார்! குறிப்பாக, அழும் காட்சிகளில். யானை மாணிக்கமும் படத்தின் ஒரு கதாப்பாத்திரமாகவே நன்றாக நடித்திருக்கிறது!
யானையிடம் சண்டை போட்டு விட்டுப் போகும்போதும், உரிமம் இல்லாததால் யானையைப் போலீசார் பிடித்துச் சென்ற பின்பும் வரும் காட்சிகள் யானைக்கும் நாயகனுக்குமான உறவைச் சொல்கின்றன.
நாயகியின் மலைக்கிராமத்தைக் கொம்பனிடமிருந்து காப்பாற்ற அரசாங்கம் முன்வராத நிலையில், அந்த மக்களுக்குக் கும்கி யானை ஒன்று தேவைப்படுகிறது. அது வரத் தாமதமான நிலையில், தன் சாதா யானையுடன் அங்கு இரண்டு நாள் மட்டும் -அதாவது கும்கி யானை வரும் வரை- தங்க முடிவு செய்கிறான் பொம்மன். ஆனால், அங்கு அல்லியைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு, அங்கேயே இருந்துவிட முடிவு செய்கிறான். அவள் மீது கொண்ட காதலால் தனது யானையைக் கும்கியாக மாற்றப் பல்வேறு முயற்சிகள் செய்கிறான். சில சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன, சில சிரிப்பை வரவழைக்கின்றன.
அநியாயத்துக்குப் படம் மெதுவாக நகர்கிறது. பொதுவாக, நான் திரைப்படத்துக்குப் போனால் கைப்பேசியை எடுக்கவே மாட்டேன். அண்மையில் பார்த்த படங்களிலேயே இதில்தான் ஐந்து முறை எடுத்து நேரம் பார்த்தேன்.
தம்பி ராமையாவின் மனக் குரல்களும் (mind voice), அவரைப் பெரிய பாகனாக நினைத்துக் கிராமத்து மக்கள் மரியாதை செலுத்துவதும் நகைச்சுவைக் கலாட்டா! விக்ரம் பிரவுக்கு வசனங்கள் மிகக் குறைவு. ஒரு வெள்ளைத்தாள் போதும், மொத்தத்தையும் எழுத. நாயகிக்கு இதை விடக் குறைவு. ஆனால், குறைவாக இருந்தாலும் நிறைவாக இருக்கின்றன என்பதுதான் சிறப்பு! பல இடங்களில் நறுக், சுருக் என இருக்கின்றன. சோகமோ, நகைச்சுவையோ, கோபமோ எல்லா இடங்களிலும் வசனங்கள் அருமை!
எடுத்துக்காட்டாக, அல்லி மீது கொண்ட காதலால் தன் உயிர், தான் உடன்பிறவாச் சகோதரனாக நேசிக்கும் மாணிக்கத்தின் உயிர், சொந்தமெனச் சொல்லிக் கொள்ளத் தனக்கு இருக்கும் ஒரே மாமன், நண்பன் ஆகியோரின் உயிர் என எல்லா உயிர்களையும் பணயம் வைத்துக் கொம்பனுடன் மோதத் தயாராகும் பொம்மன், கடைசியில் "உங்கப்பா என் மேல அவர் வெச்சிருக்கிற நம்பிக்கைய எம் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறார். அதைத் தாண்டி வர முடியல; வரவும் கூடாது!" என அந்தக் காதலைத் துறக்க ஒரே வரியில் காரணம் சொல்லும் அந்த வசனம் ஒரு பருக்கைப் பதம்!
ஒளிப்பதிவும் அபாரம்! குறிப்பாக, அகேலா மின்தூக்கி எனவும் நம்ப முடியாத, வானூர்தி எனவும் சொல்ல இயலாத வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் அந்த அருவிக் காட்சி மலைப்பூட்டுகிறது! பல காட்சியமைப்புகளும் கவித்துவமாக இருக்கின்றன. புருவத்தின் மேல் பட்டாம்பூச்சி நடந்து செல்வதால் ஏற்படும் பரவசக் குறுகுறுப்பு, யானையின் தந்தத்தைப் பிடித்துக் கொண்டே உடற்பயிற்சி செய்ய வைத்துப் பாகன்களின் கதாநாயகத்தனத்தைப் பதிய வைக்கும் காட்சி ஆகியவை போல.
ஆனால், இரண்டாம் பாதியை ஜவ்வ்வாக இழுத்திருக்கிறார் இயக்குநர். மேலும், ஒருவருக்கு மாற்றாக நாயகன் கதைக்களத்துக்குச் செல்வது, மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதால் அவர்களை ஏமாற்ற மனமில்லாமல் தன் காதலைத் தியாகம் செய்வது எனப் பல இடங்களில் படம் அவதார் படத்தின் கதையோடு ஒத்துப் போகிறது! அது மட்டுமின்றி, பொம்மனின் சிறு வயதுக் காட்சிகளில் ஆங்கிலப் படமான ஓங் பேக்கின் தாக்கம் (Ong Bak) தெரிகிறது. அதைத் தவிர்த்திருக்கலாம். கீரியையும் பாம்பையும் சண்டை போட வைக்கப் போவதாக வித்தைக்காரன் தொடக்கம் முதல் எதிர்பார்ப்பைக் கிளப்புவது போல், இரண்டு யானைகளும் மோதிக் கொள்ளப் போகும் காட்சியை எதிர்பார்க்க வைத்து விட்டுக் கடைசியில், அந்த உச்சக்கட்டக் காட்சியை கணினி வரைகலையில், அதுவும் இருட்டில் வைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. படத்தின் இறுதியில் வரும் சோகக் காட்சிகள் திணிக்கப்பட்ட உணர்வைத் தருகின்றன. மகிழ்ச்சியான முடிவையே தந்திருக்கலாம்.
கும்கி – சம்கி!