‘கும்கி’. ‘மைனா’விற்க்குப் பிறகு இமான் மற்றும் பிரபு சாலமன் கூட்டணி மீண்டும் இணையும் ஆல்பம்.
கதையின் நாயகன் நடிகர் பிரபுவின் மகன், சிவாஜியின் பேரன் என்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இனி பாடல்களைப் பற்றி…
எல்லா ஊரும்
யானைப் பாகர்களின் வாழ்க்கையை நேர்மறை எண்ணங்களுடன் வார்த்தையாக்கி இருக்கிறார் யுகபாரதி. அதற்கு இசையும் உயிர் ஊட்டுகிறது. பென்னி தயாளும் இமானும் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல் முதல் முறை கேட்கும்போதே மனதில் பதிகிறது.
கையளவு நெஞ்சம்
கிராமியப் பாடல் என்றாலும் இடையிடையே தற்கால இசைக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் பாடுபொருள் காதல். மகிழினி மணிமாறனின் குரல் பாடலுக்குக் கூடுதல் ஈர்ப்பு. கேட்கும்பொழுது அசல் கிராமத்துத் திருவிழாவுக்குள் நுழைந்து விட்ட உணர்வு!
சொல்லிட்டாளே அவ காதல!
இதன் பாடுபொருளும் காதல்தான். ரஞ்சித் மற்றும் ஷ்ரேயா கோஷல் குரலில் பாடலின் மெட்டு இமானின் பழைய பாடல்களை நினைவுபடுத்தினாலும் மனம் ரசிக்க மறுக்கவில்லை. மென்மையான காதல் மெலடியாக முணுமுணுக்க வைக்கும் பாடல். ஆல்பத்தில் இது ஒன்று மட்டும்தான் ஆண் – பெண் டூயட்.
ஆனந்தமே!
மகிழ்ச்சியின் விவரிப்புதான் இந்தப் பாடல். ஹரிசரணின் குரலில், கவனமாகப் பயன்படுத்தபட்ட வார்த்தைகளோடு கூடிய பாடல் மனதுடன் இழைளைகிறது. ஸ்ருதி சேர்க்க இறுதியில் இடம் பெறும் வயலின் வசீகரம்! "கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்லப் பிறந்தேன்!" ஈர்க்கும் வரிகள்!
ஒண்ணும் புரியல
நாயகியால் தன்னுள் ஏற்படும் மாற்றத்தை நாயகன் விவரிப்பதாக அமையும் இந்தப் பாடலுக்கு இமானே குரல் கொடுத்திருக்கிறார். "அவ என்ன பேசுவா அத எண்ணத் தோணுது" போன்ற வார்த்தைகள் வாழ்த்து அட்டை நீட்டுகின்றன. இன்ஸ்டண்ட் ஹிட்டாகும் வாய்ப்பு இதற்கு அதிகம்.
A Lady & the Violin
முதலில் வந்த ‘ஆனந்தமே!’ பாடல் இங்கே பெண்ணின் பார்வையில். குரல் அதிதி. இதில் வயலினின் ஆதிக்கம் அதிகம். அதை வாசித்திருப்பவர் கார்த்திக். "சொல்ல நினைப்பதைச் சொல்லி முடித்திட இல்லை இல்லை துணிச்சல்" போன்ற வரிகள் அதிதியின் குரலில் வசியம் செய்கின்றன.
இவை தவிர இன்னும் மூன்று இன்ஸ்ட்ரூமெண்டல் ட்ராக்குகள் ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கின்றன. மைனாவில் உயரப் பறந்த கூட்டணி கும்கியிலும் யானை நடை போட்டிருக்கிறது!
“