குப்பை (9)

இரண்டு நிமிடங்களிலேயே நபீஸா அவனை நோக்கி வந்தாள். அந்தப் பெண்மனியும் அதே குழந்தையைக் கேட்டு வந்தாராம். நபீஸாவிற்கு அவர் ஒரு போட்டியாகத் தோன்றினார்.

"ஆனா, அவங்க நம்மள மாதிரி இல்லைங்க. தனி ஆளாம், திருமணமே ஆகலையால். அதனால நமக்குத் தான் குழந்தை கிடைக்கும்," என்று நூறு சதவிகித நம்பிக்கையுடன் கூறினாள். அவளுடைய சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கையே அசாதிற்கு சிரிப்பைக் கொடுத்தது.

சில நிமிடங்களில் ‘சூலிங் லீ’ என்ற பெயர் கூப்பிடப்பட்டது. பெயரைக் கேட்டதுமே சீனமாது எழுந்து சென்றார். அசாத் ஆச்சரியத்தில் சில கணங்கள் வாய் பிளந்தபடியிருந்தான். அந்தப் பெண்மணி சூலிங்கா! உலகம் நிச்சயம் உருண்டை மட்டுமில்லாது மிகமிகச் சிறியதே. ஹாங்காங் சென்ற சூலிங் எப்போது சிங்கை திரும்பினாள். எங்கோ பார்த்த மாதிரி இருந்ததில் என்ன வியப்பு. நபீஸா அப்போது பேசிய எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. இயங்க மறந்து மூளை அப்படியே உறைந்தது.

சில வருடங்களாக இருபத்தைந்து வயது இளைஞர்கள் எவரைப் பார்த்தாலும் சூலிங்கின் சாயல்களைத் தேடித் தேடியலைந்திருந்தான். தன் தேடல்களில் இருந்த சூலிங்கின் முகம் இளமையானது. அதனால் தான் முதிர்ந்த முகத்தை அவனால் அடையாளம் காண முடியவில்லையா? ஆனால், இவள் ஏன் இங்கு இப்படித் தன்னந்தனியாக?

அந்த நாளில் அவள் தன் சொந்தக் குழந்தையைப் பார்க்கவில்லை. அப்போது அழுத அழுகை அவன் நினைவில் வந்தது. இன்று அவளுக்கு இந்த குழந்தையாவது விட்டுக் கொடுப்போம் என்று அவனுள் இரக்கம் சுரந்தது.

வீட்டுக்குப் போகலாவென்று மனைவியை அழைப்பதற்குள் திரு.அசாத் என்று தன் பெயர் அழைக்கப்பட வேறு வழியில்லாமல் அதிகாரியின் அறைக்குள் மனைவியுடன் சென்றான்.

அரை வாயிலில் வெளியேறிய சூலிங் தன்னை அடையாளங்கண்டு கொண்டதை அவளது பார்வையிலேயே அவன் அறிந்தான். இருவரும் ஒரு தலையசைப்பிலேயே முகமன் தெரிவித்துக் கொண்டனர். சூலிங்கின் கண்கள் குளமாவிட்டிருந்தன. ஏன்?
அறையினுள் அசாதிற்கு இன்னமும் பெரிய ஆச்சரியம் விடையாகக் காத்திருந்தது. இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அங்கு அமர்ந்திருந்தார். அவர் தன்னுடைய இளமையின் மறுபதிப்பாய் இருந்தது அசாதிற்கு விளங்க முடியாத அதிர்ச்சியாயிருந்தது.

"மன்னிக்கவும், உங்களுக்கும் கூட நான் ஏமாற்றமே தரப் போகிறேனென்று நினைக்கிறேன்," அதிரடியாய் ஆனால் மிககிமக் கனிவாக சிரித்தபடி சொன்னான்.

"உம்… நான் கூட இங்கு வளர்ந்தவன் தான் தெரியுமா, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டுவரப் பட்டேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா, ஒரு நல்லுள்ளம் படைத்தவர் தான் என்னை வளர்த்தார். என்னைப் போல சிறப்பாய் இந்த குழந்தையும் வளர வேண்டுமென்றால் குழந்தையின் அருமையறிந்த இளமையான தம்பதி தேவை."

சூலிங் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பாள். அவள் தேடல்களில் இருந்த இளமையான அசாத் அவளுக்கு அடையாளம் தெரிந்திருப்பாள்! அதனால் தானோ அவள் கண்களில் கலக்கம், பாவம்! ஆனால், நபீஸாவின் முகத்தில் புரிதலின் அடையாளம் துளியும் இல்லை.

"குழந்தையை வளர்க்க உங்களை விட நேற்று இங்கு வந்திருந்தவர்கள் சரியாக இருப்பார்கள். தாங்கள் பெற்ற குழந்தையை இரண்டு வருடங்களுக்கு முன்பு இழந்துவிட்டனர். மறுபடியும் ஒரு குழந்தை பெற முடியாத அவர்களால் தான் குழந்தையின் அருமையை நங்கு உணர முடியும் என்பது என் கருத்து. நிச்சயம் இதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்களென்றே நம்புகிறேன். இதை தீர்மானிக்க நானும் ஒரு குப்பைத் தொட்டிக் குழந்தை என்ற தகுதியையும் தாண்டி வேறு என்ன தகுதியோ பதவியோ வேண்டும்? மன்னிக்கவும். உங்கள் குழந்தை ஆசை சீக்கிரமே நிறைவேற என் வாழ்த்துக்கள்" என்றான் அழகாகச் சிரித்தபடி. கண்ணெதிரில் நிற்கும் உண்மை அவனுக்குத் தெரிய நியாயமில்லை. ஆமாம், சொந்த தாயையும் தகப்பனையும் பழி வாங்க அவனைத் தவிர வேறு யாருக்குண்டு தகுதி?

தூரத்தில் சாலையோரத்தில் சாயமிழந்து பல்லிளித்த ஒரு பச்சைக் குப்பைத் தொட்டி. அதன் மேலே பலகையொன்றில் சாலையில் குப்பை போடுபவருக்கு அபராதம் ஐநூறு வெள்ளி என்ற எச்சரிக்கை. சூலின் தன்னந்தனியே தளர்ச்சியுடன் நடந்து போனாள்.

(முடிந்தது)

(‘நியாயங்கள் பொதுவானவை‘ மின்னூலிலிருந்து)

To buy the EBook, Please click here

About The Author