குப்பை (8)

சாதாரண நிலைத்தேர்வின் முன்னோட்டத் தேர்வை பெயருக்கு எழுதியிருந்த சூலிங் டிசம்பர் மாதக்கடைசியில் வயிற்று பாரத்தை இறக்கியிருந்தாள். சாதாரண நிலைத் தேர்வை அவள் எழுதவேயில்லை. அவனோ எழுதியிருந்தும் திருப்தியாகச் செய்யவில்லை.
தன் உப்பிய வயிற்றை மறைக்க முயன்றதில் அவள் பாதி நாட்கள் பள்ளிக்கும் போகவில்லை. முன்னோட்டத் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணே வாங்கியிருந்தாள். பலமுறை ஆசிரியர்கள் எச்சரிக்கை கொடுத்துப் பார்த்தனர். அவளுடைய அம்மாவைத் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்று தோற்றனர்.

அதற்குப் பிறகு சூலிங்கின் போக்கே முற்றிலும் மாறிவிட்டது. அவனை அலட்சியப்படுத்தினாள். முகம் கொடுத்துப் பேசவே இல்லை. அவனுடைய அப்பாவின் துப்புரவாளர் பணியும் அவனது குடும்ப வறுமையும் அவளுக்கு திடீரென்று மட்டமாகத் தெரிய ஆரம்பித்தது. அவனுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக இருந்தது.

தான் இல்லவிட்டால் சூலிங் பைத்தியமாகி விடுவாள் என்று நினைத்த அவன் தான் உண்மையில் பெரிதும் தவித்தான். அவள் அவனைத் தவிர்ப்பது அவனுக்கு பெரும் வேதனையளித்தது. வேண்டாததைக் குப்பையில் போடுவதில் கெட்டிக்காரியாயிற்றே, அவனையும் ஒதுக்கியெறிந்தாள். வேண்டாத சாமானாய் குப்பைத் தொட்டியினுள் எறிந்தாள்.

ரவி தான், அவளை அவள் போக்கில் விட்டு விடச் சொன்னான். அவன் அப்படியே செய்வதென முடிவு செய்தான். புதுமுக வகுப்பில் சேர்ந்த நேரமாதலால் படிப்பில் கவனத்தைச் செலுத்தினான்.

ஆரம்பத்தில் நண்பனிடம் தன் கனவைப் பற்றிக் கூறியதுண்டு. ரவியோ வெகு இலகுவாக, அதெல்லாம் போகப் போக சரியாயிடும். கவலப்படாத லா. ரெண்டு பேரும் சுத்த ஆரம்பிச்சப்பவே நான் எவ்வளவோ எச்சரிச்சேன். நீ கேக்கல. சரி விடு லா. இப்படியெல்லாம் நடக்கும்னு யார் எதிர்பார்த்தோம் சொல்லு, ஏதோ துரதிருஷ்டம். அதையே நினைக்காம மறக்க முயற்சி பண்ணு, என்ன நீ இவ்வளவு பயந்தாங்கொள்ளியா இருக்க, என்று கேலி செய்தான். அதன் பிறகு, அவனிடமும் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தது நாளடைவில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் அவனுள்ளேயே நிரந்தரமாகத் தங்கி விட்டிருந்தது…

***********

தன் பெயரைக் கூப்பிடுவார்கள் என்று உட்கார்ந்திருந்த அசாத்திற்கு உட்கார்ந்து உட்கார்ந்து சலிப்புத் தட்டியது. நபீஸா வேறு இன்னமும் வரக் காணோம். போசாமல் உணவங்காடிக்குச் சென்று சூடாக ஒரு கோப்பை தேனீரப் பருகி வரலாமென்று கிளம்பினான். அவன் உணவங்காடியை நெருங்கும் போது அறையில் அமர்ந்திருந்த சீனப் பெண் எதிரில் வருவதைக் கண்டான். எங்கேயோ பார்த்த உணர்வு அவனுள் எழுந்தது. வேலையில் எத்தனையோப் பேரைச் சந்திக்கிறோம். அதில் இவரும் ஒருவராய் இருக்கலாம். யோசித்தபடியே தேனீரைப் பருகினான்.

மறுபடியும் வரவேற்பறைக்குத் திரும்பியவன் நபீஸா வந்திருப்பதைக் கண்டான். அவள் நெடுநாள் பழகிய தோழியிடம் பேசுவதைப் போல அந்தச் சீனப் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தாள். அசாத் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் தன் மனைவியை நோக்கிக் கையாட்டிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.

**************

பள்ளி சுற்றுலாவென்று சொல்லிவிட்டு தன் குருட்டுப் பாட்டியை நம்ப வைத்த அவளால் தன் உடல் சோர்வை மறைக்க முடியவில்லை. மேலும் மிகவும் நன்றாக மதிப்பெண் வாங்கக்கூடிய சூலிங்கின் மோசமான முன்னோட்டத் தேர்வு முடிவுகள் அவளுடைய அம்மாவின் கவனத்தை ஈர்த்தன.

தன் தொழிலை எதிர்காலத்தில் ஏற்கவிருக்கும் இளவரசி படிப்பில் பின் தங்கியதற்கான காரணத்தை ஒருவாறாக ஊகித்த போதிலும் மகள் கருக்கலைப்பு செய்திருப்பதாய்த் தான் அவர் நம்பினார்.

கேள்விக் கணைகளால் துளைத்தும் அவள் அவனது பெயரைச் சொல்லிக் காட்டிக் கொடுக்காமல் இருந்தாள். அவனுக்கு அவள் செய்த கடைசி நன்மையாக அது அமைந்தது.

மகள் சாதாரண நிலைத் தேர்வு எழுதவில்லை என்ற விவரம் குபீரென்று அவர் இரத்த அழுத்ததைக் கூட்டியது. அவளை உடனே ஹாங்காங்கிறகுக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்.
*************

(தொடரும்)

(‘நியாயங்கள் பொதுவானவை‘ மின்னூலிலிருந்து)

To buy the EBook, Please click here

About The Author