மருத்துவமனையில் மட்டுமில்லாது, இந்த உலகிலேயே அவர்களிருவரும் மட்டும் இருப்பதாய் நினைப்பு போலும். இல்லை, ஒரு வேளை, அத்தகைய செய்கை தான் இருப்பத்தியோராம் நூற்றாண்டின் உலகமயமான நாகரீகத்தின் வெளிப்பாடு என்ற நினைப்போ!
நிச்சயம் அவர்கள் இருபது வயதைக் கடந்தவர்களாய்த் தானிருப்பர். தன்னையும் மறந்து அவர்களிருவரையும் ஒரு பதின்ம வயதுப் பெண் ஆர்வமாய்க் கவனித்தாள். கண் முன்னே விரியும் அத்தகைய காட்சிகள் அவ்வயதில் தூண்டக் கூடிய ஆர்வம் சொல்லிலடங்காது. அவளின் சீற்றுக் கண்கள் அவளுள் எழுந்த ஆர்வத்தையும் ஈர்ப்பையும் அப்பட்டமாய் துளியும் அச்சமோ நாணமோ இல்லது உரைத்தன.
பொது இடங்களில் எப்படி நடப்பது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதைச் சொல்லிப் பழமைவாதி என்ற பட்டத்தை அசாத் பெற்றிருக்கிறான் பல முறை. இருவதினரைப் பார்த்துத் தானே பதின்மர் கற்றுக் கொள்ள ஆசைப்படுவர். ஆனால், இம்மாதிரி முன்மாதிரிகள் மலிந்து விட்டது தான் வேதனை.
சற்றுத் தொலைவிலிருந்து குழந்தையொன்றின் அழுகுரல்…
************
சூலிங்கின் நிர்பந்தம் அதற்கில்லை. வாய்விட்டுச் சுதந்திரமாய் அழுதது. சின்னப் புத்தம்புது உயிரின் அலறல் அவனின் சுயநினைவைக் கொணர்ந்தது. சூலிங் மயக்கத்தில் ஆழ்ந்தாள். அவளால் சுற்றுப்புறத்தை உணர முடியவில்லை. எல்லா நினைவுகளையும் மறைக்கும் பிரசவ வலியே அவளை சாட்டையடி அடித்து போட்டது. பெரிதாய் அலறி ஊரைக் கூட்டி விடிவாளோ என்று அவன் பயந்தான். ஆனால், வலியில் கூடக் கத்திவிடாமல் முக்கியும் முனகியும் சமாளித்தாள். சத்தம் கேட்டு யாரும் வந்துவிட்டாள் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாகி விடுமே!
அவனும் தன்னால் இயன்ற வரை உதவியாய் இருந்தான். ஆனால், வலியைப் பங்கு போட்டுக் கொள்ளவா முடிந்தது? ஏதோ கையைப் பிடிக்கவும் தலையை அழுத்தவும் செய்தான். வலியின் தீவிரத்தால் ஒரு முறை அவள் அவனுடைய கையை அழுத்தியதில் அவன் கிட்டத்தட்ட அலறியே விட்டான். ஒரு வாரத்திற்கு அவன் கையில் இரத்தம் கட்டி வீங்கியிருக்கிறது. வாயில் வந்த எல்லா வசவுகளையும் அவனை நோக்கி வீசினாள். பிள்ளை பிறந்ததுமே மயக்கமடைந்தாள்.
ஏற்கனவே பேசிய ஒப்பந்ததின்படி அவன் குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து அதனைத் தயாராக வைத்திருந்த துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு கிளம்பினான். சில தெருக்களைக் கடந்து பதுங்கிப் பதுங்கி நடந்தான். சின்ன இதயத்துடிப்பு அவனது நாடியின் லயத்துடன் தனியாவர்த்தனமாய் ஓடியது. ஈரமும் நிணமும் கூடிய இலேசான வெப்பத்துடன் அவனுடைய கையிலிருந்த குழந்தையின் மீதிருந்து இரத்த வாடை முகத்தில் அடித்தது. சொந்த இரத்தமே இத்தனை அந்நியமாய இருக்குமோ? இருந்தது. வேண்டாத குப்பையாக நினைத்த அந்த உயிர் அந்நியமாக இல்லாமல் தன் சொந்தச் சிசுவாகவா தோன்றும்?
குப்பைத் தொட்டியருகே பொதுமக்கள் வேண்டாமென்று தூக்கியெறிந்த சில பழைய உடைந்த நாற்காலிகளும் தட்டுமுட்டுச் சாமாங்களும் கிடந்தன. செய்வது தவறு என்ற அச்சத்தின் பிடியிலிருந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்த பச்சைக் குப்பைத் தொட்டியில் அதனை விட்டு விட்டு, வந்த வழியே விடுவிடுவென்று நடந்தான்.
செய்தது சரியாவென்று வழியில் ஒரு கணம் யோசித்து பின்னர் அவளே போட்டுக் கொடுத்த திட்டம் தானே என்று சமாதானமும் அடைந்தான்.
**************
நபீஸாவிடம் கூட தன் கனவின் அவஸ்தையைச் சொல்ல அவனால் முடியவில்லை. வெளியில் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் தவித்தான். குழந்தை ஆசை வரவர ஆரம்பத்திலிருந்து அவன் பட்ட கனவுத் தொல்லை அதிகமானது.
சென்ற வாரம், செய்தித் தாளில் மறுபடியும் ‘குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட குழந்தை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட’ செய்தியைப் படித்ததிலிருந்தே தன் மகனைப் பற்றிய நினைவு அதிகம் எழ ஆரம்பித்தது. இப்போது இருபத்தைந்து வயது வாலிபனாகியிருப்பான் என்ற நினைவு எள்முனையளவுக் கூச்சமும் இன்றி அவனுள் எழுந்தது.
‘மகன்’ என்ற பதமே சற்று வினோதமாக இருந்தது. குற்றமொன்று விபத்தாகிப் பின் மறக்க முடியாத சம்பவமாகியிருந்தது. அதன் விளைவாக ஓர் உயிர் இப்பூமியில் வீழ்ந்தது. அது தன் மகனாக முடியுமா என்ன? அப்படி நினைக்கக் கூடத் தனக்குத் தகுதியோ உரிமையோ உண்டா? நினைக்க நினைக்க ஆயாசமே மிஞ்சியது. குற்றவுணர்வோ விஸ்வரூபம் எடுத்தது. அது வளர வளர அவன் குறுகிக் குறுகிச் சிறுத்தான். அந்த செய்கைக்குப் பிராய்சித்தம் தேடவே தன் மனம் இத்தீர்மானத்தை எடுத்ததுவென்று அவன் சுய அலசலில் கண்டுபிடித்தான்.
(தொடரும்)
(‘நியாயங்கள் பொதுவானவை‘ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“