அவன் வாயைத் திறந்தாலே எரிந்து விழுந்தாள். முன்பு களிப்பளித்த அவன் தோற்றம் இப்போதெல்லாம் அவளுக்குக் கோபத்தையே வரவழைத்தது. புறக்கணிக்கவே தருணம் பார்த்திருந்தாள்.
இக்கட்டில் மாட்டிக் கொண்ட அவளுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. சீன மருந்து உட்கொண்டும் தன் கரு கலையாததால், வேறு வழியின்றி ஜோகூரில் சென்று ஆங்கில மருத்துவரைப் பார்த்துப் பேசினாள். அங்கும் அவர்கள் மாதம் கடந்து விட்டது, சூலிங்கின் உயிருக்கே ஆபத்து என்று பயமுறுத்தி அனுப்பி விட்டனர். பெற்றெடுப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவளுக்கு.
அம்மாவை நேரில் சந்திப்பதை முற்றிலும் தவிர்த்தாள். வியாபார நிமித்தம் தென்கிழக்காசியாவின் நகரங்களை நோக்கிப் பறந்தபடி இருந்த அவருக்கு மகளின் தொந்தரவு குறைந்ததில் ஏக மகிழ்ச்சி. தொலைபேசியிலேயே பேசிக் கொண்டனர் இருவரும் சக ஊழியர்கள் போல்.
இருவருமே பள்ளியையும் பாடங்களையும் புறக்கணித்தனர். அவனது வீடில் பள்ளி அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்கான காரணமே பெரிதாய் இருந்ததே தவிர அவனுடைய பிரச்சனை என்னவென்று உட்கார்ந்து பேச அவனது தாய்க்குப் பொறுமையோ தந்தைக்கு நேரமோ இருக்கவில்லை. மாதங்கள் உருண்டன.
சூலிங் மிகவும் சிரமப்பட்டுத் தன் வளரும் வயிற்றை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்க பல வழிகளில் பிரயத்தனப் பட்டாள். பள்ளிக்குப் போகும் நாட்கள் அரிதானது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் சூலிங் பள்ளிக்குப் போவதையே பிறகு முற்றிலும் நிறுத்தினாள்.
**************
மழை நின்றுவிட்டது. அசாத் மறுபடியும் அறையை நோட்டமிட்டான். தலையின் ரிப்பன் முதல் உயர் குதிங்கால் வைத்ட்ன காலணி வரை அடர்சிவப்பில் அணிந்த ஒரு நவ நாகரிக யுவதி அறையின் வெளியில் உல்லாசமாகச் செல்வது அவன் கவனத்தை ஈர்த்தது. சிவப்பு…
*************
இரத்தம், இரத்தம் ஒரே இரத்தம், தரை முழுவதும் சிவப்பு. உலகையே உலுக்கக் கூடிய அலறலைத் தன் அழுக்கு கைக் குட்டையை வாயில் அடைத்து அமுக்கியும் கட்டுபடுத்த முடியாது தவியாய்த் தவித்தாள் சூலிங். அவள் அலறல் தேய்ந்து "ச்சூமிங், ச்சூமிங்கா, ஆ," என்று உதவி கேட்கும் முனகலானது.
சரளமாக இல்லாவிட்டாலும் சூலிங்குடன் பழகியதில் அவன் ஓரளவிற்கு மாண்டரின் மொழி பேசவே செய்தான். புரிவது ஒன்றும் அவனுக்குச் சிரமமில்லை. இடையிடையே அவள் அவனைச் சொல்ல நாக்கூசும் வசைமொழிகளால் ஏசினாள். அவனுக்கிருந்த பதற்றத்தில் அவனது மூளை வசைவுகளைப் பதிவு செய்யவில்லை.
உலகில் இருந்த கோடானுகோடி உயர் திணைகள், அஃறிணைகள் மற்றும் அண்ட சராச்சரங்கள், தான் உள்பட அனைத்தையுமே முற்றிலும் மறந்திருந்த அவன் நினைவில் அக்கணம் சூலிங் மட்டுமே இருந்தாள். இரண்டு மணி நேரப் போரட்டம் இரண்டு யுகங்களாக அவனை வியர்வை வெள்ளத்தில் தள்ளியது. இறப்பின் வாயிலைத் தொடும் போது தான் பிறப்பு என்னும் அமானுஷ்ய உண்மை என்று புலப்பட்டது அவனுக்கு.
வயிறு பருத்து உடல் மெலிந்திருந்த அவளின் வேதனை கொடுமையாகத் தான் இருந்தது. ஆனால், செய்வதறியாது தவித்தான். அவன் உதவியாக எதைச் செய்தாலும் அவள் வலியிலும் கோபத்திலும் கத்தித் தீர்த்தாள். இரண்டே மணி நேரத்தில் இருபது வயது சோர்வு அவனிடம் வந்தடைந்தது.
அவள் அன்றிரவு வலியுடன் தன் வீட்டருகே வந்து அவனைத் தொலைப்பசியில் அழைத்து பிரசவ வலி எடுப்பதைப் பற்றிக் கூறியதும் அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
ரவியுடன் சென்று இரவு திரைப்படம் பார்க்கப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, அவளுடன் பேருந்தில் ஏறி சற்று தொலைவில் இருந்த நீசூன் வீடமைப்புப் பேட்டையின் ஒதுக்குப்புறத்தில் இருந்த பூங்காவில் ஊரடங்கக் காத்திருந்தான். அப்போது தான், நீசூன் வீடமைப்புப் பேட்டை உருவாக ஆரம்பித்திருந்த நேரம். இப்போது போல் அல்லாமல் அடுக்குமாடி வீடுகள் குறைவாகவே இருந்தன. வலி அதிகரித்தபடியிருந்தது. அவள் அழுதாள். இறந்து விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்டியது. குழப்பத்திலிருந்தவன் மேலும் பயந்தான்.
அறை வாயிலில் ஒரு பெண் தன் கணவனோ காதலனோ கழுத்தில் தொங்கியபடி நடந்து சென்றாள். அவளைத் தனியே பிரித்தால் அவளுக்கு நடக்கத் தெரியாதோ!
************
(தொடரும்)
(‘நியாயங்கள் பொதுவானவை‘ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“