சமீப காலமாகத் தான் அசாத்துக்கும் நபீஸாவிற்கும் தங்களுக்கு குழந்தையில்லாதது பெருங்குறையாகத் தெரிந்தது. இருவருக்கும் உடலில் ஒரு குறையும் இருக்கவில்லை. இருந்தாலும் பிள்ளை தரிக்கவே இல்லை. அந்தப் புதிருக்குத் தன் கனவே விடையோ என்று அசாத் பலமுறை புழுங்கியிருக்கிறான்.
ஓடி ஓடி உழைத்துச் சம்பாதித்த பொருளைக் கட்டியாள ஒரு வாரிசு வேண்டும் என்பது ஒரு புறமிருக்க அம்மா என்றும் அப்பா என்று கூப்பிட ஒரு குழந்தையில்லையே என்று இருவருமே கருதினர். மழலையின்பம் என்றால் என்னவென்று உணர்ந்தறிய தீவிரம் கொண்டனர். ஆனால், சிறு குழந்தையை வளர்க்கும் போது பார்ப்பவர் தங்களைத் தாத்தா பாட்டியென நினைத்து விடக்கூடிய சங்கடங்களையும் அவன் மனம் ஆராயத் தவறவில்லை. ஆயினும் வேறு வழியும் இருக்கவில்லை.
இருவரது உறவினர்களும் குழந்தைகளைத் தத்துக் கொடுக்க முன்வந்தனர் என்ற போதிலும் நபீஸாவிற்கு அதில் துளியும் உடன்பாடில்லை. வெளியிலிருந்து முடிந்தால் மலேசியாவிலிருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்கவே அவள் விரும்பினாள். பிறந்த குழந்தை தான் தன்னிடம் ஒட்டி வளரும் என்றும் அவள் தீவிரமாய் நம்பினாள்.
******************
சில வாரங்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ‘குப்பைத் தொட்டி’யில் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தை கே.கே.மருத்துவமனையில் தாதிகளிடம் வளர்வதைப் பற்றிப் படித்த அசாத் அந்தக் குழந்தையைப் பற்றியே வெகு நேரம் யோசித்தான்.
ஏன் அக்குழந்தையையே தத்தெடுத்து வளர்க்கக் கூடதென்று தோன்றியதால் நபீஸாவுடன் ஆலோசித்தான். அவளும் சம்மதிக்கவே மேலும் விவரங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்களை அறிய வேண்டி மருத்துவமனை அதிகாரிகளிடம் வேச நேரம் குறித்து முன்பே வாங்கியிருந்தனர்.
தத்தெடுப்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல என்பதை ஒரே வாரத்தில் அசாத் அறிந்தான். அதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள் ‘நுணுக்கங்கள்’ என்ற பெயரில் இருந்தன. இன்று இவ்விஷயத்தில் ஒருவருக்கு ஆலோசனை கூறும் அளவிற்குக் கற்றுக் கொண்டுள்ளான்.
குப்பைத் தொட்டியில் கிடைத்த அந்தக் குழந்தையை வளர்க்க ஏகப்பட்ட போட்டியாம். அதிகாரி தொலைபேசியில் கூறியிருந்தார். பலர் விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. இருந்தும் கடைசி வரை முயற்சி செய்து விடுவதெனத் தீர்மானித்தான்.
******************
எஸ்தர் என்ற வகுப்புத் தோழி கணிதத்தில் ஒரு நாள் சந்தேகம் கேட்டபோது, கணக்கை அவன் அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். சூலிங் அங்கு வந்ததை அவன் கவனிக்கவேயில்லை. அதுவே அவளை அதிக ஆத்திரம் கொள்ளச் செய்தது.
உடனே போட்டிக்குத் தானும் கணக்குப் புத்தகத்தை எடுத்தது மட்டுமில்லாது எஸ்தரைத் தரையில் கோபத்துடன் தள்ளியும் விட்டாள். சீற்றம் கொண்ட புலியாகச் சீறினாள் சூலிங். எஸ்தர் பயந்து ஓடியே விட்டாள்.
அவனுக்கு அவள் செய்கைகள் சில சமயங்களில் எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்தாலும் பல முறை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருந்து வந்தது. தான் இல்லாவிட்டால் சூலிங் நிலை என்ன, ஒரு வேளை பைத்தியமாகி விடுவாளோ என்று நினைக்கும் போதே அவனுள் ஒரு வித போதை எழுந்தது.
தன் வீட்டில் கிடைக்காத சுக போகமும் கவனமும் அவளிடம் கிடைத்ததால் சூலிங்கின் பிடிவாதத்தை பொருட்படுத்தாது இருக்க அவன் மெள்ளப் பழகினான்.
அவனுக்கு வேண்டிய அனைத்தையும் சூலிங் வாங்கிக் கொடுத்தாள். உல்லாசமாகக் கையைக் கோர்த்துக் கொண்டு அடிக்கடி உணவங்காடிக்கும் திரையரங்கத்திற்கும் வேறு அழைத்துப் போனாள். அவன் அவளின் கோபத்திற்கு ஆளாகி அச்சலுகைகளை இழக்க விரும்பவில்லை. பணத்திமிரில் வாங்கிய பொருள் புதிதாய் இருக்கும் போதே அவள் குப்பைத் தொட்டியில் எறிவது தான் அவனுக்கு முதலில் வருத்தமாயும் பிறகு பழகியும் விட்டது.
****************
(தொடரும்)
(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“
அம்மா என்றும் அப்பா என்று கூப்பிட ஒரு குழந்தையில்லையே என்று இருவருமே கருதினர்////
உம்மா வாப்பா என்று வரவேண்டும்.