கே.கே. தாய் சேய் மருத்துவமனையின் வரவேற்பறையில் காத்திருந்தான் அசாத். நினைத்து வந்த காரியம் நிறைவேறுமா என்று அவன் உள்ளம் சிறுபிள்ளைத் தனமாய் ஏங்கியது. நபீஸா வேறு, அலுவலகத்திலிருந்து நேராக வருகிறேனென்று சொல்லிவிட்டுத் தாமதிக்கிறாள். விடுப்பெடுக்க அவன் சொன்ன போதும் அதிக வேலையைக் காரணம் காட்டி மறுத்திருந்தாள். எப்படியும் சீக்கிரம் கிளம்பி விடுவதாகச் சொல்லியிருந்தாள்.
**************
சூலிங் அவனைத் தன் விரலிடுக்கில் வைத்திருக்க ஆசைப்பட்டாள். பணக்காரத் தாயிடம் அவளுக்குக் கிடைக்காத பாசத்தை அவனிடம் எதிர்பார்த்தாள். தன்னிடமில்லாத ஒரு நாய்க்குட்டியின் விசுவாசத்தையும் சேர்த்தே அவனிடம் எதிர்பார்த்தாள். பல சமயங்களில் அவளுடைய ஆளுமை அவனுக்கு தொந்தரவாக இருந்த போதிலும் அவளிடம் புழங்கிய ஏராளமான பணம் அவனுக்கு வேண்டியிருந்தது.
பெரிய குடும்பத்தில் பிறந்த அவனுக்குக் கைச்செலவிற்குப் போதுமான காசு எப்போதுமே இருந்ததில்லை. சாதாரணப் பணியில் இருந்த அவனது தந்தை தன் குடிப் பழக்கத்திற்குச் செலவிட்டது போக மீதிச் சொற்பத் தொகையை தாயிடம் கொடுத்தார். தாயோ நான்கு குழந்தைகளையும் வளர்த்தெடுக்க அந்தத் தொகையை இழுத்து இழுத்துத் தானும் உடன் இழுபட்டார்.
பகுதி நேர வேலைக்குப் போகவிருந்த அவனைத் தடுத்ததே சூலிங் தான். அவ்வேலையில் கிடைக்கக் கூடிய தொகையைத் தானே கொடுப்பதாகக் கூறி பள்ளி நேரம் தவிர மீதி நேரங்களில் அவளுடனேயே அவனை இருக்கச் செய்தாள். பாடம் தவிர வேறு எதையாவது செய்ய அவனை ஊக்குவித்தாள்.
தன்னுடைய நண்பன் ஒரு சாதாரண வேலையில் இருந்தால் தனக்கு இழுக்கு என்று நினைத்ததுடன், அவனிடமே சொல்லவும் செய்தாள். அவனையும் இழுத்துக் கொண்டு ஒவ்வொரு அங்காடிக் கடையையும் திரையரங்கையும் மணிக்கணக்கில் சுற்றினாள் சூலிங். கூட்டத்தில் இருந்த போது தாக்காத அந்நியர்களின் பார்வை அவர்களை கேள்விக் குறியுடன் தொடரவாரம்பித்தது.
பள்ளிப்பையில் மதியம் மாற்றிக் கொள்ள கவர்ச்சியான ஆடை ஒன்றை எப்போதும் வைத்திருந்தாள். அவனையும் கொண்டு வர வற்புறுத்தினாள். வழியில் இருந்த விரைவு ரயில் நிலையத்தில் இருந்த கழிவறையில் இருவரும் உடை மாற்றிக் கொள்வது வாடிக்கையானது.
தன்னைக் கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ள அவள் எடுத்த முயற்சிகளும் செய்த செலவுகளும் ஏராளம். இத்தனைக்கும் அவள் காண்பவரைக் கவரும் மஞ்சள் நிறமும் மெலிந்த சீரான உடலமைப்பும் கொண்டவள். அவனுடைய தோற்றமும் அவளுக்குக் கௌரவச் சின்னமானதால் அதில் பாதியளவிற்கு அவனுக்கும் செலவிட்டாள்.
அது மட்டுமில்லாது தான் கண்ட திரைக்காட்சிகளில் வந்த காதல் ஜோடிகளை சூலிங் மிகவும் விரும்பினாள். அந்த கதாப்பாத்திரமாகவே தன்னை கற்பனை செய்து கொண்டாள். ஆதலால், அந்த ஜோடிகளைப் போலவே தானும் அவனும் நடக்க வேண்டும் என்று ஆவல் கொண்டாள்.
****************
அசாத் தான் மட்டும் விடுப்பெடுத்துக் கொண்டு வெள்ளிக்கிழமைத் தொழுகையையும் முடித்துவிட்டு இரண்டு மணி நேரம் முன்பாகவே வந்து காத்திருந்தான். நபீஸா தான தாமதப்படுத்தினாள்.
சாளரத்தின் வழியாக பார்க்கப் பார்க்க அலுக்காத மழையையே பார்த்தபடியிருந்தான். ஆயிரமாயிரம் ஊசிகளாய் மழைச்சரங்கள் பூமியைக் குத்தின.
அன்றும் இதேப் போலத் தான் பலத்த மழை பெய்திருந்தது. பல வருடங்கள் ஓடி விட்ட போதிலும் மழையின் பின்பு அன்று நிலவிய குளுமையும் கண் முன்னே விரிந்து திகிலூட்டிய ரத்தத்தின் செம்மையும் இன்று நடந்ததைப் போலவே அவன் நினைவில் என்றும் அழியாது நின்றது.
வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைத் தன் பதினாறே வயதில் பெறுவது, அதுவும் இனிமை கடுகளவும் இல்லாமல் அச்சமும் குற்றவுணர்வும் மட்டுமே மிஞ்சுமென்றால் அத்தகைய நினைவுகள் கடைசி மூச்சு வரையில் விடாமல் நிச்சயம் துரத்தத் தானே செய்யும். அதைத் தான் அசாத்தும் அனுபவித்தான். நினைவுகள் பல சமயங்களில் அவனை நிலைகுலையச் செய்தன.
(தொடரும்)
(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“