இரத்தம், தரையெங்கும் ஒரே இரத்தம். அலறல், முனகல், முக்கல், அழுகை, தொடர்ந்து குபுக் குபுக் என்று வழியும் அடர்ந்த இரத்தம், மறுபடியும் அதே அலறல், அழுகை, முக்கல், முனகல்.
சுற்றிச் சுற்றி வந்த கருப்புப் பூனை ஒன்று உற்று உற்றுப் பார்த்தது. கூசும் ஒளியுடன் இருந்த அதன் பச்சைக் கண்களால் கோபமாக சீறிப் பார்த்தபடி துரத்தத் துரத்த மீண்டும் மீண்டும் அங்கேயே வட்டமிட்டது. அதன் வளாகத்தினுள் மற்றவர்களின் ஊடுருவலைத் தன் மொழியில் எதிர்த்தது.
அடுக்கு மாடிப்படியின் கீழ்ப்பகுதி, பலத்த மழை பெய்து ஓய்ந்திருந்த குளுமையான மார்கழி மாதத்துப் பின்னிரவு நேரம். மின் விளக்கின் உதவியால் அமாவாசை இருட்டில் முக்கால்வாசி விலக்கப்பட்டிருந்தது. அவரவர் சுவாசமே இரைச்சலாய்க் கேட்கும் அளவிற்கு ஜன நடமாட்டமற்ற நிசப்தம். வீசியெரியப்பட்ட சில அட்டைப் பெட்டிகள். கடைசிப் படியருகே கீழ்த்தளத்தில் குப்பைகள் அகற்றப்படாத ஒரு பச்சை நிறக் குப்பைத் தொட்டி அதனுள்…
இந்த கட்டத்தில் தான் அவன் பதறியடித்து ஓர் உலுக்கலுடன் எழுவது வழக்கம். பலமுறை கண்டும் கூட இப்பயங்கர கனவினால் அசாத்தின் தூக்கம் கலையாமல் இருந்த இரவுகள் சொற்பமே. ஒவ்வொரு முன்னிரவும் இதே கனவு மீண்டும் மீண்டும் வந்து வருடக்கணக்காகத் தொல்லைப் படுத்தியது.
பள்ளிக்கால நண்பர்கள் எல்லோருமே எங்கிருக்கின்றரோ?! பள்ளியில் சிலரும் புதுமுக வகுப்பில் சிலரும் பிரிந்து பின் தேசிய சேவைக்குச் சென்று விட்டதில் முற்றிலும் தொடர்பறுந்து போனது.
துள்ளித் திரிந்த நாட்கள் அவை. இருபாலாரும் படித்த உயர்நிலைப் பள்ளியில் அவனுக்குத் தோழர்களும் தோழிகளும் ஏராளம். பிரச்சனைகள் எதிலுமே மாட்டிக் கொள்ளாமல் முக்ச் சிறப்பாகப் படிக்கும் சில மாணவர்களுள் ரவியும் ஒருவன். படிப்பு மட்டுமா, நாட்டின் பதினாராவது தேசிய தின விழாவிற்கான தீவிரப் பயிற்சி வேறு.
சூலுங்கை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்ததே ரவி தான். அவள் அதே தோபாயோ வட்டாரத்தில் வேறு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். ஒரே வயதினரான அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ள ஏராளமான விழயங்கள் இருந்தன. திரைப்படம், பாட்டு என்று பேசப் பேச அவர்களுக்கு அலுக்காமல் அக்ஷ்ய பாத்திரமாய் விஷயங்கள் வந்தபடியிருந்தன. நேரம் போவதே தெரியாமல் மரத்தடியிலும் அடுக்குமாடிக் கீழ்த்தளத்திலும் பேசிப் பேசிப் பொழுது போக்கினர். உலக அறிவு தங்களுக்கு குறைவு என்பதை உதட்டளவிலோ மனத்தளவிலோ ஒப்புக் கொள்ளாத விடலைப் பருவம். அதனால, பெரியவரிகளாகிவிட்டதாய் மனதில் ஒரு நினைப்பு.
சூலிங் சாதாரணமாய்த் தன் பள்ளி மாணவிகளுடன் பழகியதில்லை. ரவி மூலமாய் அவளுக்குப் பல நண்பர்கள் கிடைத்தனர். அவளுக்கு உடன் பிறந்தவர் யாருமில்லாததால், அவள் நட்புக்கும் தோழமைக்கும் ஏங்கினாள். அவளின் அம்மா தன் வியாபாரத்தில் மூழ்கி முத்தெடுத்தபடி இருந்ததில் தன் மகளின் நினைவை மறந்திருந்தார். தொலைபேசியில் வியாபாரப் பேச்சாய் அமைந்தது தாய் மகள் உறவு. சூலிங் யாருமில்லாத வீட்டிற்குப் போவதை விட நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே தீவிரமாய் விரும்பினாள். தன் அம்மா தன்னையும் கோப்பாக நினைத்ததாய் அவள் குற்றம் சாட்டினாள்.
மற்றவர்களை விட அவனின் வசீகரிக்கும் கவர்ச்சியான உருவம் அவளை ஈர்த்தது. அவனையே சுற்றிச் சுற்றி வந்தாள். அவனது ஆஃகானிய தந்தை வழிச் சொத்தான பழுப்பு பூனைக் கண்ணும், ரோஜா நிறமும், கூர்மையான மூக்கும் அவளை மயக்கின. அகத்தை நோக்காது புறத்தை மட்டுமே நேசித்த உண்மையை அவன் ஆரம்பத்தில் அறிந்ததில்லை.
சூலிங் நாளடைவில் அவன் கூட்டத்திலிருந்து பிரித்துத் தனியே இழுத்துக் கொண்டு ஊர் சுற்ற நினைத்தாள். ஏனென்று கேள்வி கேட்டவனை பேச்சுச் சாதுர்யத்தால் தன் வழிக்குக் கொண்டு வந்தாள். அவன் மற்றவருடன் பேசினால் அவள் சட்டென்று எரிச்சலடைந்தாள்.
நண்பர் கூட்டத்திலிருந்து தனியே வர அவனுக்கு முதலில் விருப்பமில்லை. இருப்பினும், சூலிங் தான் இறுதியில் வென்றாள். கும்பலில் இருந்தவரை அவளிடமிருந்த அழகான கனிவும் பணிவும் இருந்த இடம் தெரியாது தொலைந்தது. நாளடைவில் சூலின் அவனைத் தன் தோழனாக மட்டுமின்றி கிட்டத்தட்ட ஓர் கொத்தடிமையாகவே நடத்த ஆரம்பித்தாள்.
(தொடரும்)
(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“