இல்ல, கண்டு சொல்லி ஒண்ணும் ஆகாதுன்னு தெரிஞ்சி சமரசமாயிட்டாரா?
அதற்குப் பிறகு எத்தனை வருடங்களாயிற்று? இதுவேவா தனது பிழைப்பு? இவளைக் கவனிக்கவென்றேவா இங்கு வந்தோம்?
"கிடக்குது கழுத…‚" எக்கேடும் கெட்டுப் போகட்டும்… யாருக்கென்ன…?
விட்டாயிற்று. வருடங்கள் பல உருண்டாயிற்று. பருவங்கள் பல மாறியாயிற்று.
"விஷயம் தெரியுமா உங்களுக்கு? சியாமளா வி.ஆர்.எஸ்.ல போயிட்டா?"
"அப்படியா?"
"என்னங்காணும்… ஒரே டிபார்ட்மென்ட்ல இருந்துக்கிட்டு இதுகூடத் தெரியாம இருக்கீர்?"
"ஆமாமா… இதானா எனக்கு வேலை? எனக்குக் கெடக்கு ஆயிரம் பிரச்சனை… அவளப் பார்த்தே பல வருஷமாயிச்சு… நானே மானேஜர் ப்ரமோஷன்ல வெளியூர் எல்லாம் சுத்தியடிச்சிட்டு இப்பத்தானே உள்ளூர்ருக்குள்ளயே காலடி வச்சிருக்கேன்…"
"அதானே? உம்ம ஆபீஸ்லதாங்காணும் வி.ஆர்.எஸ்.ல போனா? அப்படித்தான் எனக்கும் ஞாபகம். ரெக்கார்ட் எடுத்துப் பாரும்…"
அன்று அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த போது பழைய நண்பர் ஞானப்பிரகாசம் சொன்னது நினைவுக்கு வர…
"சார்… சியாமளா மேடத்துக்கிட்டேயிருந்து ஒரு லெட்டர் வந்திருக்கு பார்த்தீங்களா?" கணக்காளர் பர்வதவர்த்தினி கேட்ட போது, என்ன அந்த விண்ணப்பம் என்று எடுத்துப் பார்த்தேன். (மேடம் என்ன மேடம்? அவ்வளவு மரியாதைக்குரியவளா அவள்?)
அவளுக்கு வந்து சேர வேண்டிய சேமிப்புப் பணத்திற்கான அசலை, வட்டித் தொகையை விரைவில் அனுமதித்து வழங்கக்கோரி வேண்டியிருந்தாள்.
வேண்டியதெல்லாம் சரிதான். எப்படி வந்தது இது? தபாலிலா? நேரிலா?
"சார்… சப்டிவிஷனல் ஆபிஸர் முத்துச்சாமி தான் கொடுத்து அனுப்பியிருக்கார்…" சொல்லிவிட்டுத் தலயைக் குனிந்து கொண்டது பர்வதம். மேற்கொண்டு ஏதும் என்னிடம் கேட்க வேண்டாம் என்பது போல.
"அடப் பார்றா? இப்பவும் ஒரு ஆளா? எத்தனை பேர் தான் கைவசம் வச்சிருக்கா இவ? இவளுக்குன்னு காரியம் பார்க்க எத்தனை பேர் தான் காத்துக்கிடக்காங்க? ஆள், அம்பு, படை, சேனை… என்ன ஒரு ஆளுமை?"
"அலையறதுக்குப் பேரு ஆளுமையா? என்னங்க உளர்றீங்க? ஆளுமையாவது, கீளுமையாவது? கெழவியாகிப் போனா அவ? மூஞ்சியப் பார்க்கச் சகிக்கல…? என்னவோ பேசுறீங்களே…?"
நான் அதிர்ந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தேன். அவளைப் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் எனக்கு அதிர்ச்சி தானே‚
"பின்னே? ஒருத்தி எத்தனை பேரத்தான் வச்சிப்பா? சர்வீஸ்ல இருந்தவரைக்கும் காரியஞ் சாதிக்க எல்லாரையும் வளைச்சுப் போட்டா… அவளுக்கேத்த மாதிரி இவனுங்களும் போய் விழுந்தானுங்க… தேன் வடியறதா நினைச்சிக்கிட்டு… தேன் வடிஞ்சிதோ இல்ல என்ன வடிஞ்சிச்சோ யார் கண்டது? இல்லன்னா ஒரே ஊர்ல முப்பது வருஷம் சர்வீஸ் ஓட்ட முடியுமா ஒருத்தி? நாமெல்லாம் என்ன பாடுபட்டிருக்கோம்? பந்தடிச்ச மாதிரி எங்கெல்லாம் தூக்கியடிச்சாங்க? இவ ஒருத்திக்காக எவனெவனெல்லாம் பாதிக்கப்பட்டான்? அத்தனையும் சகிச்சிக்கிட்டுத் தானே சர்வீஸ் போட்டிருக்கோம்…"
கையில் அந்த விண்ணப்பத்தைப் பிடித்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன்.
அது சரி‚ இது அவள் கையொப்பம் தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? உள்ளூரில் தான் இருக்கிறாள் என்றால் நேரில் வரமாட்டாளா? அதுதானே முறை? அதென்ன மெசெஞ்சர்? அப்படியானால் தொகை வாங்கவும் நேரில் வரமாட்டாளோ?
இதோ அதற்காகத் தான் இன்று இங்கே வந்து நின்றிருக்கிறேன். எனக்கென்று உள்ள கௌரவத்தையெல்லாம் விட்டு, எனக்கு என் பொறுப்பிலான காரியம் தான் முக்கியம் என்று கருதி, நாளைக்கு எவனும் நாக்கு மேல் பல்லுப்போட்டு எந்தக் கேள்வியும் கேட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில்…
"யாரும் இல்லைபோல் தெரிகிறதே?"
சுற்றிலும் எந்தப் புழுக்கமும், சத்தமும் தெரியாத அங்கு மேலும் நிற்கத் தயங்கியவனாக வெளியேற எத்தனிக்கிறேன்.
"யார், வேணும் உங்களுக்கு?" – குரல் கேட்டுத் திரும்புகிறேன். ஜன்னல் வழி அந்த உருவம்.
"வாங்க, யார் நீங்க? என்ன வேணும்"
அடிப்பாவி, என்னைப் பார்த்து யார் நீங்க என்று கேட்கிறாயே?
போகட்டும். அதுபற்றிக் கவலையில்லை. வந்த காரியம் தான் எனக்கு இப்போது முக்கியம். பணம் பெற்றுக் கொண்டு நேரடிக் கையொப்பம் தேவை. அவ்வளவே‚
கையில் பதிவேட்டோடு உள்ளே நுழைகிறேன்.
"நான் டிவிஷனல் ஆபிஸ்லேர்ந்து வர்றேன். உங்களோட சேமிப்புத் தொகை அசலும், வட்டியும் கொண்டாந்திருக்கேன். இதில் ஒரு கையெழுத்துப் போட்டுட்டு வாங்கிக்குங்க…"
கையெழுத்திடுகிறாள். விண்ணபத்திலிருந்த அதே கையெழுத்து. மனம் சமாதானமடைகிறது.
"நன்றிங்க…" – மென்மையாக ஒற்றை வார்த்தையில் அவள் குரல்.
“சரி, நான் வர்றேன்…”
"இருங்க… ஒரு நிமிஷம்… ஏதாவது சாப்பிட்டிட்டுப் போங்க…"
"நோ… தாங்க்ஸ்… உடனே போகணும்…"
"சரி, கொஞ்சம் தண்ணியாவது குடிங்க…" சொல்லிவிட்டு உள்ளே போகிறாள்.
இவள் வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. மனசு இறுமாப்பு கொள்கிறது. கிளம்புகிறேன் நான். தற்செயலாய் பார்வை அங்கே செல்கிறது.
ஹாலில், ஓரத்தில், டி.வி.க்குப் பக்கத்து மேஜையில் அந்தப் படம்‚ மாலையோடு, சந்தனம் குங்குமமிட்டு…‚
அதிர்கிறேன் நான்.
அதே மென்மையான உதட்டோரச் சிரிப்பு‚ ஒரு பேராசிரியருக்குரிய கண்ணியமான, அடக்கமான அதே புன்னகை‚
அவள் திரும்பும் முன் வெளியேற வேண்டும்.
எழுந்து சத்தமின்றி மெதுவே நடக்கிறேன். வாசல் கதவைத் தாண்டும் போது அந்த இருமல் சத்தம். ஏற்கெனவே கேட்டுப் பழகிய சத்தம்.
உள்ளே புகை அடைத்து, அடைத்து – நெஞ்சு திணறத் திணற – திமிறி வெளியேறும் அதே பிளிறும் இறுமல்.
அப்பொழுது தான் கவனிக்கிறேன். அங்கே இன்னொரு அறை இருக்கிறதென்று…
பாதி திறந்த கதவு… அதிக வெளிச்சமில்லா ஒரு அறை. உள்ளே யாரோ…?
யாரோ என்ன யாரோ? அவன் தான் அது‚
அதே இருமல்… அதே குரலில்… அது அவனே தான்… சந்தேகமேயில்லை…
என் பார்வையைக் கண்டு தயங்கி, கையில் செம்பும், டம்ளருமாகத் தண்ணீரோடு அவள்…
மறைமுகமாக அவளும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.
வெளியேறுகிறேன்.
வாசலில்…
இன்னும் எடுக்கப்படா பெயர்ப் பலகை…
உள்ளே…
மாலையிட்ட அந்தப் படம்…
அறையினுள்…
அந்த இன்னொருவன்…
அட, ஈஸ்வரா‚ என்ன வாழ்க்கை இது…
(முடிந்தது)
(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“