யார் காரணம்?
அரசன் தன் அரண்மனையில் வீற்றிருந்தான். அப்போது வெளிநாட்டுத் தூதர் ஒருவர் கேட்டார். "இந்த ஆட்சி இவ்வளவு சிறப்பாக நடக்க யார் காரணம்?" என்று.
அரசன் ஒரு பானையை வரவழைத்தான். அதில் நீரை ஊற்றும்படிப் பணித்தான். பானை நிரம்பியதும் நிறுத்தச்சொல்லி "இந்தப் பானை எந்தத்துளி நீரால் நிறைந்தது என்று சொல்ல முடியுமா? அதைப் போலத்தான், என் நிர்வாகத்தில் ஒவ்வொருவரும் இன்றியமையாதவர்கள். அவர்கள் தங்கள் பணிகளைச் சரிவரச் செய்கின்றனர்" என்று விளக்கமளித்தான் மன்னன்.
முடியாட்சியாக இருந்தாலும் அங்கு குடியாட்சி நடக்கிறதென்பதைத் தூதர் உணர்ந்தார்.
பயம்
பயத்தினால்தான் பேராசை உண்டாகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று சீடன் குருவை இடைமறித்தான்.குரு சிரித்துக் கொண்டே இருந்தார்.
சீடர்கள் உணவருந்தும்போது சமையலாள்,"அரிசி திடீரெனத் தீர்ந்துவிட்டது. நாளை காலையில் யாருக்கும் உணவு கிடையாது. மதியம்தான் தானியங்கள் வாங்கிவர முடியும்" என்று அறிவித்தான். உணவருந்தி முடிந்தபின் குரு சீடர்களிடையே வந்தார்.
"நாளை காலை உணவு கிடைக்காது என்றவுடன் உங்களில் பலர் வழக்கமாய் உண்பதைக் காட்டிலும் அதிகமாய் உண்டிருக்கிறீர்கள். எப்பொழுதைக் காட்டிலும் உணவு இன்று அதிகமாய்ச் செலவாகி இருக்கிறது" என்றார்.
பயத்தைப் பற்றிக் கேட்டவன் தலையைக் குனிந்து கொண்டான்.
இரவல் சிந்தனை
ஒருவர் புதிதாய் ஊருக்குள் வந்தார்.அதிகமாய் யாரும் குடியேறாத ஒரு தெருவுக்கு வந்தபோது,ஓர் உயர்ந்த மாளிகையையும் அதன் அருகிலேயே ஒரு சிறிய வீட்டையும் கண்டார்.
"இந்த உயர்ந்த மாளிகை யாருடையது?" என்றுவிசாரித்தார்.
"இந்த ஊரிலேயே மிகச்சிறந்த பேச்சாளர் ஒருவருடையது. அவர் பேசிச் சம்பாதித்துக் கட்டிய வீடு இது" என்றார்கள்.
"அது சரி, அருகிலேயே இருக்கும் சிறிய வீடு யாருடையது?" என்று கேட்டார்.
"அதுவா?அந்தச் சிறிய வீட்டுக்காரர் எழுதியதைத்தான் அவர் பேசினார்" என்று பதில் வந்தது.
அப்பாவிகள்
அந்தஅறைக்குள் திடீரெனத் தவளை கத்தும் சப்தம் கேட்டது. திரும்பியபோது தவளையைக் கௌவிய பாம்பு தென்பட்டது.
வேலையாளைக் கூவி அழைத்தபோது அவன் பாம்பை விரட்டிவிட்டுத் தவளையை அடித்துச் சாகடித்தான்.
இப்படித்தான், ஆபத்தானவர்களுக்குப் பதிலாக எப்போதும் அப்பாவிகளே அடிபட்டுச் சாகிறார்கள்!
ஈகை
அவருக்கு மிகவும் இரக்க சுபாவம்.தன்னிடம் இருப்பதையெல்லாம் பிறருக்கு வாரி வழங்கி விடுவார். அவருக்கு அதில் ஒரு திருப்தி.
‘கேட்டால்தான் தர வேண்டுமா? கேட்காமல் தருவதுதானே ஈகை’ என்று ஒருமுறை நினைத்தார்,
விதம் விதமாகப் பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு கடை வீதியில் அமர்ந்து "பழம் வேண்டுமென்பவர்கள் வாருங்கள்! இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்" என்று உரக்கக்கூப்பிட்டார். ஆனால், ஒருவர்கூட வரவில்லை. "இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ? யாரேனும் இலவசமாகப் பழம் தருவார்களா – பழம் விற்கிற விலையில்!" என்றும், "இது விஷப் பழமாக இருக்குமோ" என்றெல்லாமும் கூடிக் கூடிப்பேசி விலகிச் சென்றனர்.
வெறுப்படைந்து, மாலையில் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தார் அவர். பலரும் பொறுக்கிக் கொண்டனர்.
(திரு.இறையன்பு அவர்களின் "சின்னச்சின்ன வெளிச்சங்கள்" என்ற நூலிலிருந்து நன்றியுடன்).
“
அருமை!