‘சந்திரமுகி’க்குப் பிறகு பி.வாசு மலையாளத்திலிருந்து கடன் வாங்கியிருக்கும் கதை. அந்தப் படத்திலேயே சில புலம்பல்கள், "நல்ல கதையை படு கமர்ஷியலாக்கி விட்டார்! சகிக்கவில்லை" என்று. அப்படி புலம்பியவர்கள் இத்திரைப்படத்தை தயவு செய்து பார்த்துவிடாதீர்கள்.
ரஜினி படம் என்று சொல்லியே மார்க்கெட் செய்துவிட்டது பெரிய சாதனை (நமக்கு சோதனை)! அதைவிட கொடுமை நயன்தாராவின் அந்தரங்களைக் காட்டியே படத்தை நகர்த்துவது. வடிவேலு, லிவிங்ஸ்டன், சந்தானம் எல்லாம் தேவையேயில்லை. "காமெடி" என்ற பெயரில் கொல்கிறார்கள். சிரிப்பு வரவில்லை.
சரி, படத்தில் நல்ல அம்சங்கள் ஏதேனும் உள்ளதா? கண்டிப்பாக! அருமையான கதைக் கரு. "கத பரயும்பொல்" ஸ்ரீனிவாசனின் கதையாயிற்றே. பாலு (எ) பாலகிருஷ்ணனும், ஸ்ரீதேவியும் ஊரை விட்டு வந்து காதல் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளில், பாலு தன் பால்ய நண்பர் அஷோக்குமாரை பிரிய நேரிடுகிறது. அவரோ சினிமாவில் சூப்பர் ஸ்டாராகி, முப்பது வருடங்கள் கழித்து ஒரு திரைப்படத்திற்காக பாலு வசிக்கும் மறையூர் கிராமத்திற்கு வருகிறார்.
பாலு முயற்சித்தும் அஷோக்கை சந்திக்க முடிவதில்லை. அவர் மனைவி ஸ்ரீதேவி சூப்பர்ஸ்டாரின் நண்பர் என்று தன் கணவனின் அருமை பெருமைகளையெல்லாம் சொல்லி மகிழ, பாலுவிற்கு புதிதாய் அந்தஸ்து வளர்கிறது. அவருக்கே அது பிடிக்கவில்லை. இவரால் சூப்பர்ஸ்டாரை பார்க்க இயலவில்லை என்று தெரிந்ததும், ஊர் மக்கள் அனைவரும், இவர் குழந்தைகள் உட்பட பாலுவை சந்தேகிக்கிறார்கள், சூப்பர்ஸ்டார் நிஜமாகவே அவர் நண்பர் தானா என்று!! பாலுவின் மனைவியே அந்தக் கேள்வியை கேட்கும்போது மனமுடைகிறார்.
கடைசியில், ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில், அஷோக்குமார் உரையாற்றும் பொழுது, நட்பின் மகத்துவத்தை, தன் ஆருயிர் நண்பன் பாலுவின் நினைவுகளை உதாரணமாகக் காட்டி விளக்குகிறார். மறையூரே கண்ணீரில் மிதக்க, பாலுவும் அவர் மனைவியும் வீடு திரும்புகிறார்கள். கடைசியில், (எப்படி என்று இயக்குனர் சொல்லவில்லை!) அஷோக்குமாரே இவர் வீட்டிற்கு வந்து பாலுவைத் தழுவுகிறார். சிறு வயதின் நினைவுகளோடு பாலு அஷோக்கிற்கு கடலை-மிட்டாய் ஊட்டி விடுவதோடு முடிகிறது படம்.
அஷோக்குமாராக ரஜினிகாந்த். அவரைவிட்டால் ‘சூப்பர் ஸ்டார்’ ரோல் செய்வது யார்!! ஆனால், அஷோக்குமார் கண்களுக்குத் தெரிவது கடைசி இருபது நிமிடங்கள் மட்டுமே. அதுவரை வலம் வருவது, அஷோக்குமார் அல்ல, ரஜினிதான்! வெள்ளித்திரையில் ரஜினி இப்படி அழுது பார்த்திருக்க மாட்டோம். தன் நண்பனின் பெருமைகளை சொல்லும் பொழுது, அவருடன் சேர்ந்து தியேட்டரே அழுகிறதோ என்று சுற்றி முற்றிப் பார்க்கும் நிலை. "கிருஷ்ணனாக நின்று, என் நண்பன் பாலு இந்த குசேலனை குபேரனாக்கி விட்டார்" என்று சொல்வது நெகிழ்ச்சியைத் தருகிறது.
ஸ்ரீதேவியாக மீனா. வறுமையை ரசிக்கும் அருமையான துணைவி. மூன்று குழந்தைகளின் தாய். மூன்று முறை இதே கதாபாத்திரத்தை செய்துவிட்டார். இருந்தும் சில ஆரம்ப காட்சிகளில் யதார்த்தம் கொஞ்சம் குறைவு. ஆனால், அதை விரைவில் சரிகட்டியும் விடுகிறார்.
பாலகிருஷ்ணனாக பசுபதி. படத்தின் முதற் காட்சி, யாரோ இவரை கீழே தள்ளி விடுகிறார்கள். "வெயில்" நினைவிற்கு வர, கதாபாத்திரத்தை தூக்கிச் சாப்பிடப் போகிறார் என்று முதற் காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது. ‘தூள்’ போன்ற திரைப்படங்களில் "ஏய் ஏய்" என்று கூப்பாடு போட்டவரா இவர்?!! இத்தனை யதார்த்தத்தையும் மனிதர் எங்கே ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார்? மஜா "ஷாஃபிக்கும்" "வெயில்" வசந்தபாலனுக்கும் கோடி நன்றி.
"நான் ஃப்ரெண்ட்னு சொன்னதுக்கே இந்த நிலைமைக்கு வந்துட்டேன். இதுல நான்தான் சூப்பர்ஸ்டாருக்கு நிறைய உதவி பண்ணிருக்கேன்னு சொல்லிருந்தா என் கதியென்னவாயிருக்கும்?" சபாஷ்!! தன் நண்பரை வீட்டு வாசலில் கண்டதும், என்ன செய்வதென்று தெரியாமல், அவர் பார்க்கும் பார்வை – மீண்டும் சபாஷ்! பசுபதி, தயவு செய்து மீண்டும் அரிவாள் தூக்க வேண்டாம்!!
இயக்குனர் வாசு மிகவும் குழம்பிப் போயிருக்கிறார் போல. மறையூரில் படமாகும் திரைப்படத்தின் பெயர் என்னவோ.. அண்ணாமலை இரண்டாம் பாகம் என்கிறார்கள், சந்திரமுகி இரண்டாம் பாகம் என்கிறார்கள், ஒன்றும் புரியவில்லை. "ஷூட்டிங்" ஸ்பாட்களிலெல்லாம் "குசேலன் திரைப்படக் குழு" என எழுதப்பட்டுள்ளது!! விளக்கம் தேவை ஐயா! லாஜிக் ரொம்ப இடிக்கிறது!! மற்றபடி, வாசுவைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
ஆனால், இன்னும் ஒரேயொரு கேள்வியோடு நிற்போம் "தேவையில்லாத காமெடி வைத்தீர், சரி. ஏதேதோ பாட்டுக்கள் வைத்தீர், சரி!! அய்யா, நல்ல கதைக்கு நயன்தாராவின் எக்கச்சக்க கவர்ச்சி கண்டிப்பாக தேவையா?"
பிண்ணனி இசை – ஜி.வி. பிரகாஷ் குமார். கடைசி காட்சிகளில் சோகம் உருக்க ரஜினி பாதி காரணம் என்றால், மீதி, இந்த இருபத்தோரு வயது இசையமைப்பாளர். நன்று!
சந்தானபாரதியைப் பார்த்தால் பாவமாக உள்ளது! இன்று இளைஞர்கள் ரசிக்கும் நிறைய கமல்ஹாசனின் காவியங்களுக்கு இயக்குனர் அவர் என்பதை அந்த இளைஞர்கள் அறிவார்களா என்பதே கேள்விக்குரிய ஒன்று!! அதிலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தேவையா?
குசேலன் மைனஸ் நயன்தாரா மைனஸ் வடிவேலு (& கோ) மைனஸ் லிவிங்ஸ்டன் (& கோ) மைனஸ் மீனாவின் மேக்கப் = நல்ல படமாக வந்திருக்கலாம். ஆனால், வரவில்லை!!
very good information
it is a nice review
gvrg