‘உருகுதே மருகுதே’ என்று மனதை உருக்கிய பிரகாஷ் குமாருக்கு கிடைத்த அற்புதமான ஒரு வாய்ப்பு – ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்திற்கு இசை! ஏ.ஆர். ரகுமானின் சொந்தக்காரராக இருந்தும், அவரின் சாயல் இல்லாது இசையமைப்பதற்கு ஒரு சபாஷ் போடலாம். இருபத்தோரு வயதில் சூப்பர்ஸ்டாரை தன் இசைக்கு ஆட வைத்திருக்கிறார். பெரிய விஷயம் தான்!
சினிமாவை வாழ்த்தி ஒரு பாடல். மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சி. ‘வெள்ளித்திரை’ போன்ற திரைப்படங்கள் சினிமாவைப்பற்றி சிந்திக்க வைத்திருந்தாலும், கவிஞர் வாலி ஐந்து நிமிடங்களில் சினிமாவையும், ‘தலைவரையும்’ புகழ்ந்து தள்ளிவிடுகிறார். "வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்" என்பதை "வந்தோரை வாழ வைக்கும் சினிமா" என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார். பிறகு ‘ரஜினியை’ பாராட்டி ஒரு சரணம். அத்துடன், மேற்கத்திய "கோரஸ்", ஐரோப்பிய வயலின்கள் என்று பிரகாஷும் கலக்கியிருக்கிறார். ரஜினி படத்தின் முதற்பாடல் இது. இம்முறை சங்கர் மஹாதேவன். ஆனால், இது "ரஜினி படமா" என்று படம் பார்த்தால் தான் தெரியும்!
ஹரிஹரனுக்கே உரிய குரலில், "க்கூ க்கூ" சத்தத்தில் கலந்து துவங்குகிறது "சொல்லம்மா" பாடல். பா.விஜய்யின் மறக்க முடியா எழுத்துக்களில் சேரும். "பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும், ஏழை வீட்டில் நிம்மதி இருக்கும்!" வரிகள் மறுக்க முடியாத உண்மை. "காசேதான் கடவுளடா" என்று சொல்லிய சினிமாவில், அதை ஒட்டுமொத்தமாக மறுத்து ஓர் அற்புதமான கவிதை. சுஜாதாவின் குரல் பாடலின் இனிமையைக் கூட்டுகிறது.
உதித் நாராயணன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், கே-கேவை தொடர்ந்து அடுத்த இறக்குமதி, வடக்கிலிருந்து. நல்லவேளையாக ஏதோ "ஓம் ஜார்ரே" என்று தமிழில் தொடங்கவில்லை, தலேர் மெஹந்தி. "வீரா" என்பது சாதனாவின் குரலில் "விரா" ஆகுவதைத் தாளமுடியவில்லை. இவர்களுக்கு நடுவில் யாரந்தக் குயில் என்று யோசிக்க… குயில் என்றால் சித்ராவைத் தவிர வேறு யார்!! ரஜினியின் பழைய படங்களின் பேர்களை வைத்தே பாட்டை முடித்துவிட்டார் வாலி. "படையப்பா"விற்கு "படையை"த்தவிர வேறு எதுகை-மோனை கிடைக்கவில்லை போலும். முதற் பாடலிலும் வருகிறது. பரவாயில்லை.. பொருத்தருள்வோம், நம் ‘வாலி’ தானே!
"மேகம் கருக்குது", "கொக்கு பர பர" வரிசையில், "சாரல், மழைத்தூரல்" பாடல். பரவாயில்லை, அவ்வப்போது ஷ்ரேயா கோஷல் தமிழில் பாடுகிறார். அற்புதமான "கிடார்" உபயோகிப்பு. வயலின் ரீங்காரம் வேறு. மனிதரிடம் திறமை இருக்கிறது என்று நிரூபித்துவிட்டார். எவ்வளவு தூரம் அதை எடுத்துச் செல்கிறார் என்று பார்க்கலாம். க்ருதயா, வளரும் கவிஞரின் வரிகள்.
யுகபாரதியின் வரிகளில், "வெயிலோட" விளையாடின அதே குரலில் சூப்பர்ஸ்டாரை புகழ்ந்துகொண்டே ஆரம்பிக்கிறது "பேரின்ப பேச்சுக்காரன்" பாடல். அந்தப் பாட்டைப் போலவே, ஒரு "டப்பாங்குத்து" சத்தம் பாட்டு முழுவதும் வருகிறது. "வேகமாக" இருக்கவேண்டும் என்ற பிரயத்தனை தெரிகிறது. இருந்தும், இசையமைப்பாளர் சிரத்தையெடுத்து பாடலின் தரத்தில் கவனம் செலுத்தி, இப்பாட்டையும் தேற்றிவிடுகிறார்!
குசேலன் – ரஜினியைப் புகழ மூன்று பாடல்கள். இயற்கையைப் பற்றி ஒரு பாடல். கருத்துச் சொல்ல ஒரு பாடல். அவ்வளவுதான். ஆனால், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இப்பாடல்கள் வளரும் திறமையான ஒரு இசையமைப்பாளரின் ஆரம்ப படிக்கட்டுகள். இன்னும் வளரட்டும். சினிமாவை உயர்த்தட்டும்.