இருபத்தஞ்சு வருஷங்களைத் தாண்டித் திரும்பவும் கி.பி.2033ஐ அடைந்த யாமினி, ஷிவ்வை லேசாய் உலுக்கினாள்.
"நீங்க எவ்ளோ அருமையான மனுஷன் ஷிவ். ஆனா, அந்த நேரத்ல ஏன் ஒங்களுக்கு புத்தி அப்டிக் கெட்டுப் போச்சு!"
"அந்த முஸ்லிம் கொழந்த மேல என்னமோ எனக்கொரு ஈடுபாடு ஏற்பட்டுப் போச்சு யாமினி. அது ஆண் கொழந்தைங்கறதுக்காக மட்டும் இல்ல. அழகான கொழந்தையாயும் இருந்தது."
"ஏன், நம்ம சாதனா மட்டும் அழகில்லியாக்கும்?"
"அழகு மட்டுமா? ஷி இஸ் ய ஜீனியஸ். அவள மிஸ் பண்ணவிருந்தத நெனச்சா இப்பக் கூட எனக்கு மனசு பதறுது யாமினி."
"விடுங்க. இதுவும் ஆண்டவனோட ஒரு திருவிளையாடல்ன்னு நெனச்சிக்க வேண்டியதுதான்."
"இந்த ரகசியம் சாதனாவுக்குத் தெரிஞ்சா துடிச்சிப் போயிருவா யாமினி."
"என்னிக்யோ ஒரு நாள் அவளுக்குத் தெரியாமப் போகாது ஷிவ். அவளாத் தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னால நாமளே பக்குவமா சொல்லிட்டா நல்லது. அந்த வேலைய நா பாத்துக்கறேன். நீங்க இந்த வேலையப் பாருங்க."
"எந்த வேலைய?"
"சாதனாவோட கல்யாண வேலைய."
"பாக்க வேண்டியது தான் யாமினி. ஆனா பையன் முஸ்லிம் பையனாயிருக்கானேன்னுதான் யோசனையா இருக்கு."
"திரும்பவும் முருங்க மரத்ல ஏர்றீங்களே ஷிவ்! இது என்ன வருஷம் தெரியுமா? ரெண்டாயிரத்தி முப்பத்தி மூணு. கலி முத்திப் போன காலம். ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கற காலம், பொம்பளையும் பொம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிற காலம். முப்பது முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால இலைமறைவு காய்மறைவா நடந்துட்டிருந்த இந்த அசிங்கம் ஒலகம் பூரா இப்ப பகிரங்கமா நடக்குது. சட்ட பூர்வமா நடக்குது. ஒலகத்ல பாதி நாடுகள்ள ஒரே ஸெக்ஸ் கல்யாணத்த அங்கீகரிச்சிட்டாங்க. இந்தியாலயும் அங்கீகரிக்கணும்னு ஒரு எம்ப்பி பார்லிமென்ட்ல பேசியிருக்கார். ஒங்கப் பொண்ணு இன்னொரு பொண்ணை லவ் பண்ணாம ஒரு பையன லவ் பண்றாளேன்னு சந்தோஷப்படுங்க ஷிவ்."
"நீ சொல்றதும் ஒரு நல்ல பாய்ன்ட்தான்."
"இன்னொரு பாய்ன்ட்டும் சொல்றேன் கேளுங்க. சாதனா பொறந்தப்பவே ஒரு முஸ்லிம் பையனுக்காக ஆசப்பட்டவர் நீங்க. இப்ப ஒரு முஸ்லிம் பையன் ஒங்க வீடு தேடி வர்றப்ப ஏன் கதவ மூடறிங்க! பையன் நல்ல அழகான பையனாம். இவளோட ஒர்க் பண்றவன். பையன் வீட்டுக்கு இவ போயிருக்கா. அவங்க அப்பா அம்மாவுக்கு சாதனாவ ரொம்பப் புடிச்சிப் போச்சாம். நீங்க ரைட் சொன்னாக் கல்யாணம்தான்."
"நீ?"
"நா ரைட் சொல்லியாச்சு."
"அப்ப எனக்கு டபுள் ரைட். ஸண்டே அன்னிக்கிப் பையனக் கூட்டிட்டு வரச் சொல்லு. மேல ஆக வேண்டியதப் பாப்போம்."
****
ஞாயிற்றுக்கிழமை வந்த பையன், தனியாக வரவில்லை. பெற்றோரோடு வந்தான்.
பையனுடைய அப்பா ஷிவ் குமாரை எதிர் கொண்டார். "சார், என்னத் தெரியுதுங்களா?"
ஷிவ் அவரை உற்றுப் பார்க்க, ஏதோ தெரிந்த மாதிரியிருந்தது. எங்கேயோ எப்போதோ பார்த்த முகம்.
எங்கே எப்போது என்று அவன் யோசித்தபோது அவரே புதிரை அவிழ்த்தார்.
"ஒங்க பேர் சிவக்குமார் – யாமினின்னு சொன்னப்பவே நா நெனச்சேன், அது நீங்களாத்தானிருக்கணும்ண்டு. இருவத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி நாமப் பிரசவ ஆஸ்பத்திரில மீட் பண்ணியிருக்கோம், நம்மக் கொழந்தைங்க பொறந்தப்ப. என்னோட பேர் அப்துல் ஜப்பார்."
இப்படியுங்கூட அற்புதங்கள் நிகழக்கூடுமா என்கிற பேராச்சர்யத்தில் ஷிவ் குமார் பேச்சிழந்து போனான்.
அங்கே மகளிரணியில், யாமினி தன்னுடைய வருங்கால சம்மந்தியம்மாவை அடையாளங் கண்டு கொண்டு, "ஆயிஷா, நீங்களா!" என்று கண்ணீரோடு கட்டி யணைத்தபடி, உவகையின் உச்சக்கட்டத்தையடைந்தாள்.
"ஷிவ், பாருங்க ஷிவ், என்ன நடந்திருக்குன்னு பாருங்க. நீங்க எந்தக் கொழந்த மேல ஆசப்பட்டீங்களோ, அதே கொழந்த இருவத்தஞ்சு வருஷம் கழிச்சி நம்ம வீட்டுக்கே, நம்மப் பொண்ணுக்கே மாப்பிள்ளையா வந்திருக்காம் பாருங்க, என்ன அதிசயம்ங்க இது!"
"ஆண்டவன் நெனச்சாண்டா, எல்லா அதிசயங்களையும் நடத்திக்காட்டுவாம்மா’ என்று நெகிழ்ந்தார் அப்துல் ஜப்பார்.
"ஒண்ணாப் பொறந்த நம்மக் கொழந்தைங்க ஒண்ணாவே வாழணும்ண்டு அவன் தீர்மானிச்சிருந்தா அதத்தடுக்க யாரால முடியும்!"
சிறிசுகள் ரெண்டுக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று விளங்கவில்லை.
"மம்மி, நீங்க என்ன பேசிக்கிறீங்கன்னே எங்களுக்குப் புரியல" என்று சிணுங்கிய சாதனாவை வாரியணைத்து உச்சி மோந்தாள் யாமினி.
"நீ கொழந்தடீ சாதனா, ஒனக்குப் புரியாது. நா பாக்கற ஸீரியல்கள்ள கூட இந்த மாதிரியொரு ட்விஸ்டோ, இந்த மாதிரியொரு படு மங்களமான முடிவோ வந்ததில்லடி. ஷிவ், என்ன சத்தத்தையே காணல, ஏதாவது பேசுங்க ஷிவ்!"
யாமினி முடுக்கிவிடவும், தன்னை மறந்த நிலையிலிருந்து மீண்டு ஷிவ் குமார் வாயைத் திறந்தான்.
"இருவத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி, பிரசவ ஆஸ்பத்திரில நடந்தது ஒண்ணும் திருவிளையாடல் இல்ல யாமினி. இதோ இப்ப இங்க நடந்துட்டிருக்கிறதுதான் கடவுளோட திருவிளையாடல்."
(நன்றி : கவிதை உறவு, அக்டோபர் 2009)
அது எப்படிங்க 2033-லயும் தானா?! இப்ப 6 மாதத்துக்கு ஒரு புது model சந்தையில விற்பனைக்கு வருது!