கி.பி. 2033 (1)

"அப்பா, என்னோட கார் ஸ்டார்ட் ஆகல. நீங்கதான் என்னை ஆஃபீஸ்ல டிராப் பண்ணனும், கெட் ரெடி டாடி" என்று சாதனா உத்திரவிட்டதும், ஷிவ் குமாருக்குப் பிரச்சனையாகி விட்டது.

"இப்பப் போய் சொல்றியேம்மா" என்று முகஞ்சுழித்தான்.

"நா இப்பத்தான் கோவிலுக்குக் கௌம்பிட்டிருக்கேன். திரும்பி வர வன் அவர் ஆகுமே."

"கோவிலுக்கு ஈவ்னிங் போலாமே அப்பா."

"ஈவ்னிங்கா? நோ வே. தினமும் நா காத்தால கோவிலுக்குப் போய்ட்டு வந்துதான் வெளிய கௌம்புவேன்னு ஒனக்குத் தெரியாதா சாதனா. திடீர்னு நீ போகாதன்னா எப்டி! நீ என்ன செய்ற, வன் அவர் லேட்டா வருவேன்னு ஒங்க ஆஃபீஸ்க்கு மெஸேஜ் குடுத்துர்ற. ஓக்கே?"

"போங்க டாடி, நீங்க ஒரு போர்." சிணுங்கியபடி சாதனா ஸோபாவில் சரியவும், கிச்சனிலிருந்து யாமினி குரல் கொடுத்தாள்.

"டீ சாதனா! ஒண்ணு.. அப்பான்னு கூப்புடு, இல்ல.. டாடின்னு கூப்புடு. ஏன் ரெண்டையும் போட்டுக் கொழப்பற."

"நீ கூப்புடற மாதிரி அவளும் ஷிவ்ன்னு பேரச் சொல்லிக் கூப்புடாம இருந்தா போறாதோ யாமினி! காலம் எப்டிக் கெட்டுக் கெடக்குன்னு நெனக்கிற, இப்ப மாடண் கொழந்தைங்கல்லாம் அப்பா அம்மாவப் பேரச் சொல்லித்தான் கூப்புடுதாம், தெரியுமா ஒனக்கு!"

சொல்லி விட்டு ஷிவ் குமார் மகளுடையவோ, மனைவியுடையவோ மறுமொழிக்குக் காத்திராமல் காரில் ஏறி கோவிலுக்குக் கிளம்பினான்.

கோவிலிலிருந்து திரும்பி வந்து, சாதனாவைப் பிக் அப் பண்ணிக்கொண்டு, பீக் அவர் நெரிசலில் காரில் திணறிக்கொண்டு போய்க் கொண்டிருந்தபோது, சாதனாவுக்குக் காருக்குள்ளே இருப்புக் கொள்ளவில்லை.

"இந்தச் சென்னை ட்ராஃபிக்ல டெய்லி போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருது அப்பா" என்று சலித்துக் கொண்டாள்.

"ஆமா டாடி, நாம எப்ப ஹெலிகாப்ட்டர் வாங்கப் போறோம்?"

"அது சரி! இந்தக் காருக்குப் பெட்ரோல் போட்டே கட்டுப்படியாகல. சாதனாக்குட்டி, நீ பொறந்த போது, 2008 ஆம் வருஷம் பெட்ரோல் லிட்டர் அம்பது ரூவாய்க்கிக் கெடச்சது. இப்ப 2033ல அதே பெட்ரோல் முன்னூறு ரூவா. கேட்டா, இன்ட்டர்நாஷனல் மார்க்கெட்ல பாரல் வெல ஏறிக்கிட்டேயிருக்குன்னு சொல்லுது இந்த கவர்ண்மென்ட். ரெண்டாயிரத்து எட்டுல இன்ஃப்லேஷன் பதினோரு சதவீதமாயிருந்தது. இப்ப இருவத்தொண்ணு. என்ன அநியாயம் பார்! அப்ப அண்ணா நகர்ல ஒரு கிரவுண்ட் ஒரு கோடி ரூபாய்க்கி சீப்பாக் கெடச்சது. அதே ப்ளாட் இப்பப் பத்து கோடி. அண்ணா நகர்ல தாக்குப் புடிக்க முடியாம, நாமெல்லாம் திருமுல்லைவாயில் தாண்டி அண்ணனூர்ல வந்து ஸெட்டிலாய்ட்டோம். அண்ணனூர்லயே இப்ப என்ன கஞ்ஜஷன் ஆய்ப் போச்சு! எதிர்காலத்த நெனச்சா பயம்மா இருக்கும்மா. நீ பொறந்த சமயம், இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால வாழ்க்கை எவ்ளோ ஈஸியா இருந்தது! ஹ்ம்ம், அது ஒரு பொற்காலம் சாதனா!"

"அது சரி டாடி, நா கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல."

"என்ன கேள்வி?"

"ஹெலிக்காப்ட்டர்."

"அட அதத் தானேம்மா சொல்லிட்டிருக்கேன். என்ன மாதிரி மிடில் க்லாஸ்ல்லாம் ஹெலிக்காப்ட்டர் கனவெல்லாம் காணக் கூடாது."

"போங்கப்பா. நாம என்ன மிடில் க்லாஸா?"

"நா என்னச் சொன்னேன் மகளே, நா புதுசா வேலக்கிச் சேந்தப்ப முதல் மாச சம்பளம் இருவதாயிரம் ரூவா வாங்கினேன். இப்ப ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ்ல நாலு லச்சம் வாங்கறேன். நீயோ ஸ்டார்ட்டிங்கே ஆறு லச்சம் வாங்கற. விர்ர்ர்ன்னு நீ மேலப் போயிருவ. நீ படு ஸ்மார்ட் சாதனா. ஐ’ம் ப்ரௌட் ஆஃப் யூ, மை டியர் சைல்ட்."

"போங்கப்பா, எல்லாம் நீங்க போட்ட பிச்ச தானேப்பா. டாடி, ஐ லவ் யூ டாடி!"

பாசப்பரிவர்த்தனைகளோடு அப்பாவும் மகளும் ரெண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின்னால் அடையார் போய்ச் சேர்ந்தார்கள்.

மகளை அவளுடைய அலுவலகத்தில் இறக்கி விட்டு, ஷிவ் மவுன்ட் ரோடில் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்தான்.

சாயங்காலம் போய் சாதனாவைக் காரில் ஏற்றிக் கொண்டு வருகிற போது, திரும்பவும் வாகன நெரிசல்.

****

எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு. அடையார் ட்டு அண்ணனூர் ஃப்ளை ஓவர் கட்டப்பட்ட பின்னால் ஹெலிக்காப்ட்டரில் பறக்கிற மாதிரி ஃப்ளை ஓவரில் பறந்து போய் விடலாம்!

"அந்தக் காலத்லயே ட்ராஃபிக் இப்டித்தானா டாடி?" என்று சாதனா கேட்டதற்கு ஷிவ் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினான். மலரும் நினைவுப் பெருமூச்சு.

"நீ பொறக்கறதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாலதான் நா வேலைல சேந்தேன். அதாவது 2006 ஆம் வருஷம். ராயபுரத்ல ஆஃபீஸ். அண்ணா நகர்லயிருந்து ராயபுரத்துக்கு பைக்ல முக்கால் அவர்ல போயிருவேன். 2025ல ராயபுரம் கடலுக்குள்ள போனப்புறம்தான் மவுன்ட் ரோடு ஆஃபீஸ்."

"ராயபுரம் கடலுக்குள்ள போனது பெரிய ட்ராஜடி இல்ல டாடி?"

"அதவிடப் பெரிய ட்ராஜடியெல்லாம் நடந்துருக்கு. தனுஷ்கோடி தனுஷ்கோடின்னு ஒரு ஊர் ராமேஸ்வரத்துக்குப் பக்கத்ல இருந்ததாம். 1965 ஆம் வருஷம், நானெல்லாம் பொறக்கறதுக்கு முந்தியே, தனுஷ்கோடி கடலுக்குள்ள போயிருச்சாம். நெறய்ய பேர் செத்துப் போய்ட்டாங்க. நல்ல வேள ராயபுரத்ல அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால காஷுவாலிட்டி எதுவும் இல்ல."

"டாடி, இஃப் யூ டோன்ட் மைண்ட், இந்த எஃப் எம் ச்சானலச் சேய்ஞ்ஜ் பண்ணட்டுமா?"

"இரும்மா இரும்மா. இது தசாவதாரம் பாட்டு. நா எட்டு வாட்டிப் பாத்த படம்."

"அது சரி அப்பா, நீங்க தனியாக் கார்ல போறப்ப இந்தப் பழைய பாட்டெல்லாம் போட்டுக் கேளுங்க. நா ஒங்கக் கார்ல வர்றப்ப புதுப் பாட்டுப் போடுங்க டாடி."

"ஒன் இஷ்டம் மகளே, எத்தன நாளக்கி நீ அப்பா கூடக் கார்ல வரப் போற? இன்னும் ஒரே வருஷத்ல நீ சொந்தமா ஹெலிக்காப்ட்டர் வாங்கிருவ. அப்பறம் நாந்தான் ஒன்ட்ட லிஃப்ட் கேக்கணும்."

"ஒங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும் அப்பா. யூ ஆர் ஸோ ஸ்வீட் டாடி, ஐ லவ் யூ டாடி."

ஹெலிகாப்ட்டர் கற்பனைகளோடு ஷிவ்வும் சாதனாவும் அண்ணனூர் வந்து சேர்ந்த போது நன்றாய் இருட்டி விட்டிருந்தது.

(தொடரும்)

About The Author