தற்கொலை செய்து கொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா, ஆண்டனியை இறுதியாக ஒருமுறை பார்க்க விரும்பினாள். ஆம்! அவன் நிரந்தர ஓய்வில் இருக்கும் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்த ஆசைப்பட்டாள்.
ஆக்டேவியனின் அனுமதியின் பேரில் ரோமானிய வீரர்களின் பாதுகாப்புடன் ஆண்டனியின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினாள்.
‘ஆண்டனி… உங்கள் பிரிவு என்னை நான் எதிர்பார்க்காத துயரத்தில் ஆழ்த்திவிட்டது. எவையெல்லாம் நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ, அவை எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் கூறியபடி அந்த ஆக்டேவியன் நல்லவனே இல்லை. என்னைப் பழி வாங்கத் துடிக்கிறான். வெற்றி மமதையில் மிதக்கும் அவனிடம் சிறைக் கைதியாக இருக்க எனக்கு மனமில்லை. அதனால் நானும் உங்களுடன் வரத் துணிந்து விட்டேன். ஆம்…! நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்…’ என்று மனதிற்குள் வருந்தியபடி அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள்.
அன்று அவள் தனது கடைசி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். விருந்துக்குத் தேவையான எல்லா உணவுகளும் தயாராகிவிட்ட நிலையில், அரண்மனைக்கு எகிப்தியன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவனது தலையில் கூடை ஒன்றை சுமந்து கொண்டிருந்தான்.
அவனைத் தடுத்து நிறுத்திய அரண்மனைக் காவலன் "யார் நீ? உனக்கு இங்கே என்ன வேலை? நீ சுமந்து வரும் கூடையில் என்ன இருக்கிறது?" என்று கேட்டான்.
"அய்யா… நான் எங்கள் அரசியைப் பார்க்க வந்திருக்கிறேன். அவர் கேட்ட அத்திப்பழங்கள்தான் இந்தக் கூடையில் உள்ளன" என்று பதில் சொன்னான் அந்த எகிப்தியன்.
அத்திப்பழம் வந்த விவரம் கிளியோபாட்ராவுக்குத் தெரிவிக்கப்பட, அவள் அந்த பழங்கள் நிறைந்த கூடையைத் தனது படுக்கையறையில் வைக்க உத்தரவிட்டாள். காவலனும் அவ்வாறே செய்துவிட்டு அகன்றான்.
தற்கொலை செய்வது என்ற முடிவை உறுதியாக எடுத்துவிட்ட கிளியோபாட்ரா, ஆக்டேவியனின் சிறைக்கைதியாக சாக விரும்பாமல், எகிப்து பேரரசியாகவே இறக்க விரும்பினாள்.
தனது உயிர்த் தோழி இராஸை அழைத்தாள். இராஸ்.. இங்கே வா. இந்த ஆக்டேவியனால் என் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம். அதனால், எனக்கு கடைசி ஆசை ஒன்று தோன்றுகிறது. இந்த நாட்டின் பேரரசிக்கான ஆடை அணிந்து, மணிமுடி தரித்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆக்டேவியனின் எகிப்து ஆக்கிரமிப்பும், ஆண்டனியின் மறைவும் என்னை சோகமாக்கி உள்ளன. அதில் இருந்து விடுபட விரும்புகிறேன். அதனால் என்னைப் பேரரசியாக நீ அலங்காரம் செய்ய வேண்டும். இந்தக் கிளியோபாட்ராவை வென்றவர்கள் யாரும் இல்லை என்று வரலாறு சொல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த அத்திப்பழங்களுக்குள் கொடிய விஷம் கொண்ட நச்சுப் பாம்பு உள்ளது. எனது கடைசி ஆசையை அந்தப் பாம்புதான் நிறைவேற்றப்போகிறது".
"அரசியாரே… கடைசி ஆசை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?"
"மரணம்!"
"என்ன சொல்கிறீர்கள் அரசியாரே…!! எகிப்தின் பேரரசியான நீங்கள் இப்படியொரு முடிவை ஏன் எடுக்க வேண்டும்-?"
"தயவு செய்து உனது அறிவுரை இப்போது எனக்கு வேண்டாம் இராஸ். நீ எனக்கு ஏதேனும் உதவுவதாக இருந்தால் என் உயிர் பிரியும் கடைசி நொடி வரை நான் இந்த நாட்டின் பேரரசியாகவே இருக்க உதவி செய். அது போதும்.".
"உங்கள் உத்தரவுக்கு கட்டுப்படுகிறேன்".
".." என்ற
சற்றுநேரத்தில் கிளியோபாட்ராவின் மற்றொரு தோழியான சார்மியான் அங்கே வந்தாள். "அரசியாரே… தங்களின் விருப்பப்படி உயரிய விருந்து தயாராகிவிட்டது. மதிய வேளையாகி விட்டதால் சாப்பிட வாருங்கள். பசிக்கு விடை கொடுப்போம்".
"நல்லது சார்மியான். நீ எல்லா உணவுகளையும் தயாராக வைத்திரு. நான் மணிமுடி தரித்து விருந்து உட்கொள்ள வருகிறேன்…" என்ற கிளியோபாட்ரா, அடுத்த நிமிடமே தனது அறையைச் சென்றடைந்தாள்.
அவளுக்கு இராஸும், சார்மியானும் பட்டாடை அணிவித்து மணிமுடியும் சூட்டினர். சில நாட்களாக கிளியோபாட்ராவிடம் கோபித்துக் கொண்டு போய் இருந்த மகிழ்ச்சி மறுபடியும் அவளிடம் வந்து ஒட்டிக் கொண்டது. சற்று நேரத்தில் தடபுடலாகத் தயாராகியிருந்த விருந்தில் கலந்து கொண்டாள்.
கிளியோபாட்ரா தனக்குரிய இருக்கையில் அமர்ந்து கொள்ள… அவளது தோழியர் இராஸ், சார்மியான் இருவரும் அவளுக்கு உணவு பரிமாறத் தயாரானார்கள்.
சட்டென எழுந்தாள் கிளியோபாட்ரா. "என்னருமை தோழியரே இராஸ், சார்மியான். இதுநாள் வரை நீங்கள்தான் எனக்கு உணவு பரிமாறி இருக்கிறீர்கள். இன்று நான் உங்களுக்கு உணவு பரிமாறப் போகிறேன்".
"இல்லை அரசியாரே… வழக்கமாக நீங்கள் உணவு உட்கொண்ட பிறகுதானே நாங்கள் உண்போம்?" இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.
"அது நேற்றுவரை. இன்று அந்த நிலைமை மாறுகிறது…" என்ற கிளியோபாட்ரா, கட்டாயப்படுத்தி இராஸையும், சார்மியானையும் அமர வைத்து உணவு பரிமாறினாள்.
அங்கே காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆக்டேவியனின் வீரர்கள் அதைக் கவனித்தனர். அந்தக் காட்சி அவர்களுக்கு வியப்பாகத் தெரிந்தது.
"அங்கே நடப்பதைப் பார்த்தாயா…? இந்த நாட்டுக்கே அரசியாக இருந்தும், தனது பணிப்பெண்களான தோழியருக்கு உதவி செய்யும் கிளியோபாட்ரா போன்ற பெண்ணை எந்த உலகத்திலும் பார்க்க முடியாது" என்று கூறி வியந்தனர்.
இராஸும், சார்மியானும் சாப்பிட்டு முடித்த பிறகு கிளியோபாட்ரா சாப்பிட அமர்ந்தாள். வழக்கத்தைவிட அன்று கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாள்.
சிறிது நேரத்தில் விருந்து முடிந்துவிட… நேராக தனது படுக்கையறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவளை பீதியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் இராஸ். அவளது கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வடிந்தது.
சார்மியானுக்கு ஒன்றும் புரியவில்லை.
"இராஸ் உனக்கு என்ன ஆயிற்று? ஏன் திடீரென்று அழுகிறாய்? நம் அரசி உணவு பரிமாறிய ஆனந்தத்தில் பரவசப்படுகிறாயா?"
"இல்லை சார்மியான். இப்போது நம் முன்பு நடமாடிய நம் அரசியார் இனி நடமாட மாட்டார்".
"என்ன சொல்கிறாய் இராஸ்? ஏதோ விபரீதம் நடக்க இருப்பது போல் பேசுகிறாயே…"
கிளியோபாட்ராவின் மரணமுடிவைப் பற்றிக் கூறினாள் இராஸ். அதைக் கேட்ட மாத்திரத்தில் அதிர்ந்து போனாள் சார்மியான்.
கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுத்துவிட கடைசிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டாள்.
(அடுத்த வாரம் நிறைவு பெறும்)
இது மெகவம் ந ல் ல மு ய ர் ச்