கிளியோபாட்ரா (52)

பீதியோடு விடிந்த அன்றைய தினத்தில் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்து பல சோகங்கள் காத்திருந்தன. அன்று அவள் உண்மையிலேயே ஆக்டேவியனின் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டாள்.

அலெக்ஸாண்டிரியாவில் உள்ள அரண்மனையில் கிளியோட்ரா கம்பீரமாக வீற்றிருக்க வேண்டிய சிம்மாசனத்தில் ஆக்டேவியன் அமர்ந்து கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

எகிப்து கொலைக்களக்கூடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த கிளியோபாட்ராவை அரண்மனைக்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்ட ஆக்டேவியன், அதே கொலைக்களக்கூடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த எகிப்து அரசுக்குச் சொந்தமான, விலை மதிக்க முடியாத நகைகளை ரோமுக்கு கொண்டு செல்லவும் ஆணையிட்டான்.

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கிளியோபாட்ராவை மரியாதையோடு கைது செய்து அழைத்து வந்த ரோமானிய வீரர்கள், அவளை ஆக்டேவியன் முன்பு நிறுத்தினர்.

கிளியோபாட்ரா இருக்க வேண்டிய சிம்மாசனத்தில் ஆக்டேவியன் ரோமாபுரியின் பேரரசனாக வீற்றிருந்தான். கைதியாக தலைகுனிந்தபடி அவனுக்கு முன்பு முதன் முறையாக வந்து நின்றாள் கிளியோபாட்ரா.

"வாருங்கள் எகிப்து அரசியாரே! நீங்கள் நலம்தானே? எமது வீரர்கள் உங்களைத் துன்புறுத்தவில்லையே…?"

மௌனமாக நின்றாள் கிளியோபாட்ரா.

"நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்க… நீங்களோ குற்றவாளியாக நிற்க… இந்தக் காட்சியை என்னாலேயே பார்க்க சகிக்க முடியவில்லையே… நீங்கள் மட்டும் அன்றே ஆண்டனியை விரட்டி விட்டிருந்தால்…"

அதற்குமேல் ஆக்டேவியனை பேச விடவில்லை கிளியோபாட்ரா.

"நிறுத்துங்கள்! என் ஆண்டனி பற்றி என்னிடமே தவறாக பேச வேண்டாம். அவர் மிகவும் நல்லவர். அவர் எனக்காகவே வாழ்ந்தார்".

"உங்களது பேரழகில் மயங்கித்தான் ஆண்டனி உங்களோடு சேர்ந்து வாழ்ந்தார் என்று…"

"உங்கள் பேச்சை சற்று திருத்திக் கொள்ளுங்கள். ஆண்டனி என் பேரழகை மட்டும் பார்க்கவில்லை. எனது தனிப்பட்ட குணநலன்களும் அவருக்குப் பிடித்துப்போய் இருந்தன".

"நான் உங்களையும் ஆண்டனியையும் தவறாக சித்தரிக்கவில்லை. ரோமாபுரியில் மக்கள் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்".

"அவர்கள் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். நீங்களாவது உண்மையைக் கண்டறிந்து பேசுங்கள்".

"பரவாயில்லையே… இந்த இளைய சீஸருக்கே கட்டளையிட ஆரம்பித்து விட்டீர்களே…"

"இது கட்டளை அல்ல; நான் சொல்வதுதான் உண்மை நிலை!"

"நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். இப்போது நான் பேச வந்தது கூட உங்கள் நன்மையைக் கருத்தில் கொண்டுதான்".

"எனது ஆண்டனியே இப்போது எனக்கு இல்லாமல் போய்விட்டார். அப்படியிருக்க, நீங்கள் மட்டும் எனக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறீர்கள்?"

"உங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாகப் புரிகிறது. உங்கள் நிலையில் நான் இருந்தாலும் கூட அப்படித்தான் பேசியிருப்பேன். அதெல்லாம் இருக்கட்டும்… உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் தைரியமாக கேளுங்கள். இப்போதும் நான் உங்களை எகிப்தின் பேரரசியாகவே பார்க்கிறேன்".

"நன்றி. நேரம் வரும்போது நானே அந்த உதவியைக் கேட்கிறேன்".

"அப்படியே ஆகட்டும். ஆமாம்… நான் வந்தது முதலே உங்களிடம் உங்களது தனிப்பட்ட விஷயம் ஒன்றைப் பற்றி கேட்க வேண்டும் என்று இருந்தேன். அதை கேட்கலாமா? உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?"

"அது, நீங்கள் கேட்கப் போகும் கேள்வியைப் பொறுத்து இருக்கிறது".

"தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். நீங்கள் மிகவும் பேரழகி என்று எல்லோரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்போதோ நீங்கள் மிகவும் சோர்ந்து போய் காணப்படுகிறீர்கள். உங்கள் முகத்தில் பிரகாசமே தெரியவில்லை. நன்றாக சாப்பிட்டு பல நாட்கள் ஆனது போல் உடல் மெலிந்து காணப்படுகிறீர்கள். அதுபற்றித்தான் கேட்கலாம் என்று நினைத்தேன்".

"உங்கள் கேள்வியில் தவறில்லை. தோல்வி மேல் தோல்வியை சந்தித்துவிட்ட என்னால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? மகிழ்ச்சிதானே உண்மையான பேரழகு?"

"உங்கள் மனவேதனை புரிகிறது. இது பற்றி மேலும் மேலும் கேட்டு உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இப்போது உங்களுக்கு நல்ல ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். முதலில் நன்றாக ஓய்வெடுங்கள். அதன்பிறகு உங்கள் உதவியைக் கேளுங்கள். என்னால் செய்ய முடியும் என்றால் நிச்சயமாகச் செய்கிறேன்…" என்ற ஆக்டேவியன், கிளியோபாட்ராவை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தான்.

சிறிது நேரத்தில் விதவிதமான பழங்கள், உணவு வகைகள் அவளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. துணைக்கு அவளது இரு தோழியரும் உடனிருக்க ஏற்பாடு செய்தான் ஆக்டேவியன்.

சில நாட்களாக தூக்கத்தைத் தொலைத்திருந்த கிளியோபாட்ரா அன்று தன்னையும் மறந்து நிம்மதியாக தூங்கினாள்.

மறுநாள் விடிந்த சிறிது நேரத்திலேயே அந்த அதிர்ச்சியான செய்தி கிளியோபாட்ராவின் காதுகளை வந்தடைந்தது.

கிளியோபாட்ராவின் வாரிசுகளுக்கு எகிப்து ஆட்சி உரிமை வழங்கப்பட மாட்டாது. இனி, எகிப்து ரோமப் பேரரசுக்கு உட்பட்ட பகுதியாகவே திகழும். வேறு யாரும் ஆட்சியுரிமை கோர முடியாது. அதே நேரம், சிறை வைக்கப்பட்டுள்ள கிளியோபாட்ரா தனது குழந்தைகளுடன் இன்னும் 3 தினங்களில் ரோமாபுரிக்குக் கைதியாக அழைத்துச் செல்லப்படுவார். இதுதான் அச்செய்தி!
.
ஆக்டேவியன் நல்லவனாக வேடம் போட்டு, தன்னைப் பழி வாங்கப் பார்க்கிறான் என்பதைக் கணித்து விட்டாள் கிளியோபாட்ரா. மீண்டும் ஆக்டேவியன் தன்னை நேரில் சந்திக்க வருவதை அறிந்த அவள், அவனைத் தன்வயப்படுத்த மறுபடியும் பேரழகியாக அவதாரம் எடுத்தாள்.

அழகான அந்தப் படுக்கையறையில் ஆக்டேவியனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அவன் வந்ததும் தன்னுடன் இருந்த தோழியரை வெளியில் அனுப்பிவிட்டாள். அப்போது ஆக்டேவியனும் அவளும் மாத்திரமே அந்த அறையில் இருந்தனர்.

ஆக்டேவியன் தன்னருகில் வந்ததும் சட்டென்று எழுந்து வளைந்து நெளிந்து நின்றாள். அவளது மேனியை மெல்லிய ஆடையொன்று மட்டுமே மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

ஆக்டேவியனின் பார்வை தன் மேனியை மோகிக்கும் என்று எதிர்பார்த்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போர்க்களத்தில் நிற்கும் மாவீரன் போல் விறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அடுத்த நொடியே சட்டென்று அவனது காலில் விழுந்து விட்டாள். அவள் விழுந்த வேகத்தில் அவளது மேலாடை சரிய… கிளியோபாட்ரா தன் காலில் விழுவாள் என்று எதிர்பார்க்காத ஆக்டேவியன், சட்டென்று குனிந்து அவளது அழகிய தோள்களைப் பிடித்துத் தூக்கினான். விலகிக் கிடந்த அவளது மேலாடையை எவ்வித சலனமுமின்றி சரி செய்தான்.
"எகிப்து பேரரசியாரே… எனது வளர்ப்புத் தந்தை ஜூலியஸ் சீஸரின் ஆசைக் காதலியாக இருந்தவர் நீங்கள். அவருக்குப் பிறகு ஆண்டனி உங்களுக்குப் பாதுகாப்பைத் தந்திருக்கலாம். இப்போது நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தவறானவை என்று கருதுகிறேன்".

"என்னிடம் அப்படியென்ன தவறைக் கண்டுபிடித்து விட்டீர்கள்?"

"தவறு செய்யத் துணிந்தவர்களுக்கு, அது என்ன தவறு என்று தெரியாமலா போய்விடும்?"

"நீங்கள் தவறு என்று சொல்வது உங்கள் பார்வையில்தான் இருக்கிறது. கண்களால் பார்க்கும் எதுவும் உண்மையாகி விடுவதில்லை".

"அது எனக்கும் தெரியும். ஆனால், இங்கு சற்று நேரத்திற்கு முன்பு நீங்கள் நடந்து கொண்டதைப் பார்த்தால்…"

"வேண்டாம்… இவளை கைது செய்துவிட்டபடியால் இவள் மீது என்ன வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம் என்று எண்ணாதீர்கள்".

"சரி… நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். என்னிடம் உதவி எதிர்பார்ப்பதாக நேற்றே கூறியிருந்தீர்கள். இன்னும் சில தினங்களில் நான் ரோமாபுரிக்குத் திரும்ப இருக்கிறேன். அதற்குள் உங்கள் வேண்டுகோளை என்னிடம் தெரிவித்தால், அதைச் செய்ய தயாராக இருக்கிறேன்".

"எகிப்தின் ஆட்சியுரிமை எனக்கு இல்லாவிட்டாலும்கூட, என் வாரிசுகளுக்காவது வழங்கப்பட வேண்டும். நானும் எகிப்திலேயே வாழ ஆசைப்படுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் என்னை நீங்கள் காட்சிப் பொருளாக பயன்படுத்தக்கூடாது".

"உங்கள் கோரிக்கைகள் நியாயமானவைதான். அதுபற்றி நானே முடிவு எடுத்துவிட முடியாது. ரோம் செனட் சபைதான் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்".

"அப்படியென்றால், என்னையும், கைதான எகிப்து வீரர்களையும் ரோமாபுரிக்குக் காட்சிப் பொருளாக அழைத்துச் சென்று, உங்கள் வெற்றி விழாவைக் கொண்டாட இருப்பதாக நான் அறிந்த தகவல் உண்மையா?"

"அது பற்றி நான் உங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம், நடக்க வேண்டியது தவறாமல் நடக்கும்".

"நீங்கள் உங்கள் முடிவில் உறுதியாக இருப்பது உங்களது உரிமை. அதே நேரம், எனது முடிவில் நானும் உறுதியாகத்தான் இருக்கிறேன்".

"அது உங்கள் இஷ்டம். அதில் எனக்கு கஷ்டம் இல்லை".

"நமது இந்தச் சந்திப்பு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்தேன். உங்களது பேச்சு எனக்கு ஏமாற்றத்தைத் தந்ததுதான் மிச்சம்".

"ஏமாற்றத்தைச் சந்திக்காதவர்கள் இந்த உலகில் இல்லையே…"

"உங்கள் தத்துவம் போதும். இப்போது நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லலாம்…" என்றாள் கிளியோபாட்ரா. அவளது பேச்சில் கோபம் தெறித்தது.

அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தை வேகமாக காலி செய்திருந்தான் ஆக்டேவியன். தனது லட்சியம் நிறைவேற அவன் தடையாக இருப்பான் என்று கணித்த கிளியோபாட்ரா, அந்த அதிரடியான முடிவுக்கு வந்தாள்.

உலக வரலாறே எதிர்பார்க்காத தற்கொலைதான் அந்த முடிவு!

(இன்னும் வருவாள்…)

About The Author