ஆக்டேவியனின் ரோமானியப்படை எகிப்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. இதை அறிந்த கிளியோபாட்ராவும், ஆண்டனியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்கள். ஆக்டேவியனின் கடற்படையை வெற்றி கொள்ள எகிப்து கடற்படை வீறுகொண்டு புறப்பட்டது.
நடுக்கடலில் ஆக்டேவியனின் படையும், கிளியோபாட்ரா மற்றும் ஆண்டனியின் கூட்டுப்படையும் மோதின. ஏற்கனவே கடற்போரில் தனித்திறன் பெற்றிருந்த ரோமானியப்படை, எகிப்து கூட்டுப்படையை சுலபமாய் எதிர்கொண்டது. ஆரம்பத்தில் கிளியோபாட்ரா மற்றும் ஆண்டனியின் கூட்டுப்படைக்கு வெற்றி கிடைப்பதுபோல் தோன்றினாலும், பின்னர் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
கிளியோபாட்ராவும், ஆண்டனியும் தனித்தனி கப்பல்களில் சென்று தாக்குதல் நடத்தினர். வேகமாக முன்னேறிச் சென்ற கிளியோபாட்ராவை ரோமானியப் படையினர் திடீரென்று சுற்றி வளைத்தனர். அதை எதிர்பார்த்திராத கிளியோபாட்ரா கப்பலை வேகமாக திரும்ப உத்தரவிட்டாள். அவள் பின்வாங்கியதைக் கவனித்த ஆண்டனி, கிளியோபாட்ராவுக்கு ஏதேனும் பிரச்சினையோ… என எண்ணியவாறு போர் புரிவதை விட்டுவிட்டு கிளியோபாட்ரா கப்பலை பின்தொடர்ந்தான்.
இருவரது கப்பல்களும் திடீரென்று பின்வாங்கியதால் எகிப்து கூட்டுப்படை சார்பில் போரிட்ட அறுபது போர்க் கப்பல்களும் செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்தன. ரோமானியப்படைய எதிர்கொள்ள இயலாமல் அவைகளும் பின்வாங்கின. வெற்றிக் களிப்பில் ஆனந்தக் கூத்தாடிய ரோமானியப்படை அலெக்ஸாண்டிரியாவுக்குள் நுழைந்தது.
உயிருக்கு பயந்து ஓடிய கிளியோபாட்ராவும், ஆண்டனியும் ஒருவரையொருவர் பார்க்கவே வெட்கப்பட்டனர். அதுவரை கிளியோபாட்ராவின் பேரழகு மேல் மையல் கொண்டிருந்த ஆண்டனி, திடீரென்று தனக்கு ஞானோதயம் ஏற்பட்டதுபோல் உணர்ந்தான். பெண்ணின் அழகே கதியென்று கிடந்ததால்தான் தனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டதாகக் கருதினான்.
தனது தோல்வி முகத்தைக் காண சகிக்காத ஆண்டனி பலவாறு உளறினான் என்று தனது நாடகத்தில் பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர். தனது படைவீரர்களில் சிலரைப் பார்த்து ஆண்டனி இவ்வாறு பேசுவதாக கூறுகிறார் அவர்.
"எல்லா வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய நானே இப்படி உயிருக்குப் பயந்து ஓடி வந்துவிட்டேனே! கிளியோபாட்ரா சொன்னதை எல்லாம் கேட்ட நான், இன்று அவளது முகத்தைப் பார்க்கவே வெட்கப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே! எனது தலை மயிரே இப்போது எனக்கு எதிராக கலகம் செய்கிறதே!
… உங்களுக்கு ஆணையிட எனக்கு அதிகாரம் இல்லை. இப்போதே நீங்கள் என்னை விட்டுச் சென்று விடுங்கள். நேராக துறைமுகத்திற்கு செல்லுங்கள். அங்கு தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட செல்வங்கள் ஏற்றிய கப்பல் தயாராக நிற்கும். அதில் உள்ள செல்வங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான். இப்போதே இங்கிருந்து சென்றுவிடுங்கள். உங்களை வாய்ப்பு இருந்தால் பிறகு சந்திக்கிறேன்…" என்று ஆண்டனி கூறுவதாகக் குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.
ரோமானியப் படையிடம் தோல்வியுற்ற பிறகு முதன் முதலாக எகிப்து அரண்மனையில் சந்தித்துக்கொண்ட கிளியோபாட்ராவும், ஆண்டனியும் பேச முடியாமல் மௌனத்தில் ஆழ்ந்தனர். சிறிதுநேரத்திற்குப் பிறகு ஆண்டனியே மௌனம் கலைத்தான்.
"உன்னால்தான் எனக்கு எழுச்சி கிடைத்தது. இப்போது எனக்கு கிடைத்துள்ள வீழ்ச்சியும் உன்னால் கிடைத்ததுதான்! உன்னைப் பார்க்கவே இப்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது".
"ஏன்.. இப்படியெல்லாம், எல்லாம் முடிந்துவிட்டதுபோல் பேசுகிறீர்கள்? நமது படையின் தோல்விக்காக நான் வருந்துகிறேன்.
நான்தான் போர்க்களத்தில் இருந்து பின்வாங்குகிறேன் என்றால் நீங்களுமா?"
"எல்லாம் உன் மீது நான் வைத்திருக்கும் காதல்தான்".
"போர்க்களத்திலும் அந்தக் காதல் உங்கள் கண்ணை மறைக்குமா என்ன?"
"சரி… இப்போது அது பற்றி பேசக் கூடிய நேரம் இல்லை. இதுவரை உன் பேச்சை நான் கேட்டேன். இப்போது நான் சொல்வதை நீ கேட்பாயா?"
"வேறு வழி எனக்குத் தெரியாததால் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுகிறேன்".
"ரோமானியப்படை எகிப்துக்குள் நுழைந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நம் மீது தாக்குதல் நடத்தலாம். அதனால் ராஜதந்திரத்தோடு செயல்படுவதுதான் நமக்கு நல்லது! நமது தோல்வியை மறைமுகமாக ஆக்டேவியனிடம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அவனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு போரைத் தவிர்த்துவிட்டால் அதன்பின் வெற்றிக்கனியை எளிதில் பறித்துவிடலாம்".
"நீங்கள் சொல்வதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அது நடைமுறைக்குச் சாத்தியமாகுமா?"
"இப்போதைக்கு என்னால் இப்படித்தான் யோசிக்க முடிகிறது. வேறு வழியே இல்லை. இப்போதே நாம் ஆக்டேவியனுக்கு தூது அனுப்ப வேண்டும். அப்போதுதான் நமது சுயகவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்…" என்ற ஆண்டனி, தன்
பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை ஆக்டேவியனிடம் தூது அனுப்பினான்.
அவர் ஆக்டேவியனிடம் ஆண்டனி சார்பாக பேசினார். "தங்களது வெற்றியை ஆண்டனி ஏற்றுக் கொள்கிறார். இப்போது அவர் உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறார். தான் எகிப்தில் வாழ வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஏதென்சில் தனி மனிதனாக உயிர் வாழ அனுமதி தருமாறும் வேண்டுகிறார். ஆண்டனியின் நிலைதான் எகிப்து அரசி கிளியோபாட்ராவுக்கும்! அவரும் தங்களது வெற்றியை ஏற்றுக்கொள்கிறார். இப்போதைய சூழ்நிலையில் எகிப்து உங்கள் வசம் ஆனாலும், அதன் அரசுரிமை தனது குழந்தைகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்…" என்று ஆண்டனி கூறிய கருத்தை ஆக்டேவியன் முன்பு பதிவு செய்தார் அந்த ஆசிரியர்."
ஆனால், வெற்றி மிதப்பில் இருந்த ஆக்டேவியன் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆண்டனியைப் பழி வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தான்.
"என்னைப் பொறுத்தவரை ஆண்டனி ஒரு மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகி. அதனால், அவனுக்கு எந்தப் பிச்சையும் அளிக்க நான் தயாராக இல்லை. அதேநேரம், கிளியோபாட்ரா இந்த நாட்டுக்கு அரசி என்பதால் அவளது வேண்டுகோளைப் பரிசீலிக்க தயாராக இருக்கிறேன். அவள் விருப்பப்பட்டால் என்னிடம் தனது வேண்டுகோளை நேரடியாக தெரிவிக்க வரலாம். அதேநேரம், அவளுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கிறேன். அவள் தன்னிடம் ஒட்டிக்கொண்டுள்ள மானம் கெட்ட ஆண்டனியை விரட்டிவிட வேண்டும். அல்லது, அவனைக் கொலை செய்ய வேண்டும். இதை கிளியோபாட்ரா செய்தால், அவளது வேண்டுகோளை பரிசீலனை செய்ய இந்த இளைய சீஸர் தயாராக இருக்கிறார் என்று சொல்…" என்று ஆண்டனி தூது அனுப்பிய ஆசிரியரிடம் சொல்லி அனுப்பினான் ஆக்டேவியன்.
அதேநேரம், ராஜதந்திரத்தோடு இன்னொரு முயற்சியையும் அவன் மேற்கொண்டான். அதுவும், ஆண்டனியை அழிக்க வேண்டும் என்பதற்காகவே! அதற்காக தனது நண்பன் தைரஸ் என்பவனை அழைத்தான்.
"தைரஸ்! நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் என்ன நினைத்து எகிப்து மீது போர் தொடுத்தேனோ அது நிறைவேறுவதற்கான காலம் நெருங்கிவிட்டது. ஆண்டனி தோல்வி பயத்தில் ஆடிப்போய் உள்ளான். இந்த நேரத்தில் கிளியோபாட்ராவின் மனதை மாற்றினால், ஆண்டனியை அவளிடம் இருந்து எளிதில் பிரித்துவிடலாம். அதற்காக நீ கிளியோபாட்ராவிடம் எனது சார்பில் செல். ஆண்டனியைத் தவிர அவள் என்னவெல்லாம் கேட்கிறாளோ, அவை எல்லாம் கிடைக்கும் என்று உறுதி கூறு. எனது உதவி தேவைப்படும் நிலையில் அவள் இருப்பதால் நிச்சயம் அவள் நம் பக்கம் சாய்ந்து விடுவாள். ஆண்டனி கதையை முடித்துவிடலாம்." என்ற ஆக்டேவியன் பலமாக சிரித்தான்.
(இன்னும் வருவாள்…)