தனது சகோதரி ஆக்டேவியாவைப் பிரிந்த ஆண்டனியை மீண்டும் அவளுடன் சேர்த்து வைக்க எண்ணி காய்களை நகர்த்தினான் ஆக்டேவியன். அது பற்றி ஒற்றர்களிடமும் கூறி ஆண்டனிக்கு அனுப்பியவன், ஆண்டனியை ரோமிற்கே வருமாறும் கேட்டுக் கொண்டான். ஆக்டேவியன் போட்ட இந்தக் கணக்கின் பின்னணியில் கிளியோபாட்ராவின் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற பெரும் திட்டமும் இருந்தது.
ஒருவேளை, ஆக்டேவியனின் விருப்பப்படி ஆண்டனி கிளியோபாட்ராவை விடுத்து மீண்டும் ஆக்டேவியாவுடன் இணைந்திருந்தால் ரோமாபுரியின் இன்றைய வரலாறு அப்படியே தலைகீழாக மாறியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்! ஆனால், கிளியோபாட்ராவை விட்டுப் பிரிய ஆண்டனிக்கு மனசு வரவில்லை. இதனால்தானோ என்னவோ, அவனது அழிவும் நெருங்க ஆரம்பித்தது.
அதேநேரம், ஆக்டேவியன் செய்த தந்திரம் கிளியோபாட்ராவுக்கும் தெரிந்துவிட்டது. அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஆண்டனி தன்னைப் பிரிந்து சென்றுவிடாமல் இருக்க அவன் மீது மேலும் அன்பைப் பொழிய ஆரம்பித்தாள்.
இதற்கிடையில், கி.மு.35 இறுதியில் கிளியோபாட்ரா மற்றும் ஆண்டனியின் படை ஆர்மீனியாவை முற்றுகையிட்டு வென்றது. அந்நாட்டின் மன்னன் கைது செய்யப்பட்டான். ஆர்மீனியா வெற்றியைப் பெரிய விழாவாகக் கொண்டாட முடிவெடுத்தாள் கிளியோபாட்ரா. கி.மு.34ல் அந்த விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஊர்வலமும் நடந்தது. கிளியோபாட்ரா, ஆண்டனி மற்றும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் ஊர்வலத்தில் தெய்வங்களுக்கு இணையாக அழைத்து வரப்பட்டனர்.
கிளியோபாட்ரா புதிய ஐஸிஸ் தெய்வமாகவும், ஆண்டனி புதிய டயோனிஸஸ் தெய்வமாகவும் எகிப்து மக்களால் போற்றப்பட்டனர். கிளியோபாட்ராவின் பேச்சைக் கிளிப் பிள்ளையாக கேட்கும் அவள் வழி வந்த சிறுவன் 15வது டாலமி, "மன்னர் மன்னன்" என்ற பட்டத்துடன் எகிப்து அரசனாக பதவியேற்றான். கிளியோபாட்ராவுக்கு "அரசர்களின் அரசி" என்ற பட்டம் சூட்டப்பட்டது.
இந்த வெற்றி விழாவில், கைது செய்யப்பட்ட ஆர்மீனியா நாட்டு மன்னன் கிளியோபாட்ரா முன்பு மண்டியிட பணிக்கப்பட்டான். (கிளியோபாட்ரா மட்டுமின்றி, அக்கால அரச பரம்பரையினர் எதிரிகளை இப்படித்தான் நடத்தினார்கள்) ஆனால், அவன் மண்டியிட மறுத்து சீறினான்.
அவனது சுயமரியாதையைப் புரிந்து ஏற்றுக்கொண்ட கிளியோபாட்ரா, அவனைக் கொல்ல நினைக்காமல் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அரசியல் கைதிகளாக சிறை வைக்க உத்தரவிட்டாள். கிளியோபாட்ராவின் இந்தப் பெருந்தன்மையான முடிவு வரலாற்று ஆய்வாளர்களால் வியப்பாகப் பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த ஆர்மீனிய வெற்றி விழாவின் தொடர்ச்சியாக, கிளியோபாட்ரா – ஆண்டனியின் தலைமைக்குக் கீழ் வந்த சில பகுதிகள் அவர்களது குடும்ப வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. கிளியோபாட்ராவுக்கும், ஆண்டனிக்கும் பிறந்த இரட்டையரான அலெக்ஸாண்டர் ஹீலியாசுக்கும், கிளியோபாட்ரா செலினுக்கும் ஆர்மீனியா, மெடியா மற்றும் யூபிரேட்ஸ் பகுதிகளை ஆளும் அரசுரிமை அளிக்கப்பட்டது. மேலும் அவர்களின் மற்றுமொரு வாரிசு, இரண்டே வயது ஆன டாலமி பிலடெல்பஸ் வடக்கு சிரியா மற்றும் சிலிசியா நாடுகளின் மன்னனாக முடிசூட்டப்பட்டான்.
ஆனால், கிளியோபாட்ராவுக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் பிறந்த டாலமி சீஸருக்கு ஆட்சிப் பகுதிகள் வழங்கப்படவில்லை. அவனை ரோமாபுரியின் மன்னனாக்க வேண்டும் என்பது கிளியோபாட்ராவின் நெடுநாள் கனவு. அதனால்தான், இந்த விழாவில் அவனுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
இந்த வெற்றி விழாவில் கிளியோபாட்ரா, ஆண்டனி இருவரது உருவமும் பதிக்கப்பட்ட நாணயங்களும் வெளியிடப்பட்டன. கிளியோபாட்ராவின் தலை வடிவம் இடம் பெற்ற நாணயத்தின் பகுதியில் "அரசர்களின் அரசி" என்ற குறிப்பும், ஆர்மீனியன் மணிமுடியைத் தரித்த ஆண்டனியின் தலைப்பகுதி இடம்பெற்ற அதே நாணயத்தின் பின்பக்கத்தில் "ஆர்மீனியா வெற்றி கொள்ளப்பட்டது" என்ற அடிக்குறிப்பு வாசகமும் இடம்பெற்றன.
எகிப்தில் நடைபெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை அறிந்த ஆக்டேவியன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ஆண்டனியை வெளிப்படையாக விமர்சனம் செய்யத் துவங்கினான். அவன் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிக் கிடந்து அவளுக்குச் சேவை செய்வதாக ரோமாபுரி முழுவதும் பரப்புரை செய்தான். இதன் தொடர்ச்சியாக கிளியோபாட்ரா, ஆண்டனி குறித்த உண்மைக்கும் புறம்பான பல தகவல்களை ரோமாபுரி மக்களிடையே பரப்பினான் ஜீலியஸ் சீஸரின் அரசியல் வாரிசான ஆக்டேவியன்.
இப்படியே விட்டால், ரோமாபுரியின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளையும் கூட தனக்கும் கிளியோபாட்ராவுக்கும் பிறந்த வாரிசுகளுக்கு ஆண்டனி எழுதி வைத்து விடுவான் என்றும் கூறி, ரோமாபுரி மக்களைத் தூண்டிவிட்டான்.
தனக்கு எதிராக ரோமாபுரியில் ஆக்டேவியன் பின்னும் சதி வலை பற்றி அறிந்த ஆண்டனி, அவனைக் கடிந்து ஒரு கடிதம் எழுதினான்.
"ஏன் நீ இப்படி மாறிவிட்டாய்? உன் மனநிலையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விட்டதா? கிளியோபாட்ரா எகிப்துக்கு அரசி மட்டுமல்ல; எனக்கு மனைவியும் கூட!……..
… எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு இன்றோ நேற்றோ பூத்ததல்ல; அது மலர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. என்னை விமர்சனம் செய்யும் நீ மட்டும் யோக்கியமானவனா?.." என்று நீள்கிறது அந்த கடிதம்.
ஆண்டனியின் இக்கடிதத்தைப் படித்த ஆக்டேவியன், அதைக் கிழித்து எறிந்ததோடு, தனது வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கும் ஆண்டனியை எப்படியேனும் அழித்தே தீருவது என்ற உறுதியான முடிவுக்கும் வந்தான்.
அதற்கு ஆயுதமாக அவன் கையில் எடுத்தது, ரோமாபுரியில் ஆண்டனி எழுதி வைத்துவிட்டுச் சென்ற அவனது உயிலை! ஒருவர் தன்னைப் பற்றி எழுதி வைத்துள்ள உயிலை, அவர் உயிரோடு இருக்கும்போதே கைப்பற்றுவதும், அதைப் பலர் அறியச் செய்வதும் பெரும் குற்றம். அதையெல்லாம் எண்ணாமல் ஆண்டனி எழுதி வைத்திருந்த உயிலின் ரகசியத்தைப் பலரும் அறியும் வகையில் வெளிப்படுத்தத் தயாரானான் ஆக்டேவியன்.
(இன்னும் வருவாள்…)