ஆண்டனிக்குத் தன் மீது மீண்டும் காதல் துளிர்த்துவிட்டது என்பதை அறிந்த கிளியோபாட்ரா பேரானந்தம் அடையவில்லை. தான் அவன் மீது அளவு கடந்த காதல் வைத்திருந்தும், அவன் அதை மறந்து ஆக்டேவியனின் விருப்பப்படி அவனது சகோதரி ஆக்டேவியாவைத் திருமணம் செய்து கொண்டது அவளுக்குப் பிடிக்கவில்லை.
ஆண்டனி எகிப்தில் தங்கியிருந்தபோது, அவன் கிளியோபாட்ராவுக்காக அளித்த உறுதிமொழிகள், காதல் பேச்சுக்கள், கனிவான பார்வைகள், ஆதரவானப் பேச்சுகள், அக்கறையான கவனிப்புகள்… என்று எல்லாமே அவளை வெகுவாக ஈர்த்திருந்தன. ஆண்டனி தன் மீது உயிரையே வைத்திருக்கிறான் என்று உறுதியாக நம்பி இருந்தாள்.. ஆனால், அவனது துரோகம் கிளியோபாட்ராவின் மனதை சற்று ஆழமாகவே பாதித்தது.
மீண்டும் ஆண்டனி தன்னைத் தேடி வருகிறான் என்பதை அறிந்ததும், அவள் தன் வேதனைகளை தன் ஆழ்மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டாள்.
கிளியோபாட்ராவின் இந்த முடிவுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஆண்டனியின் வலிமையையும் மீறி ரோமாபுரியில் ஆக்டேவியன் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்து கொண்ட அவள், அவனால் தனது ஆட்சிக்கு ஆபத்து நேரலாம் என்று சற்று அஞ்சினாள். அதனால், மீண்டும் தன்னைத் தேடி வரும் ஆண்டனி மீது வெறுப்பைக் கக்காமல், அவனை அரவணைத்துச் செல்வதுதான் சரி என்று எண்ணினாள்.
அதன் தொடர்ச்சியாக, எகிப்தின் அலெக்ஸாண்டிரியா நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆண்டனியை வரவேற்கத் தயாரானாள்.
கி.மு.37ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் ஆண்டனியும், கிளியோபாட்ராவும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டனர். ஆண்டனி, தனது சுயநலத்திற்காகத்தான் தன்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருந்த கிளியோபாட்ரா, அவனிடம் சற்று இடைவெளி விட்டே பழகினாள். அதேநேரம், தான் அவனை வெறுப்பது அவனுக்கு எந்தச் சூழ்நிலையிலும் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் எச்சரிக்கையாக இருந்தாள்.
ஆனால், ஆண்டனியின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. ரோமாபுரியில் ஆக்டேவியனின் கை பலமாக ஓங்கி வருவதால், அவனை அதிரடியாகச் சமாளிக்க கிளியோபாட்ராவின் படை மற்றும் பொருள் உதவி தனக்கு நிச்சயம் தேவை என்கிற நிலையில் இருந்தான். அதனால் அவன், கிளியோபாட்ரா என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான்.
ஆண்டனியின் பரிதாப நிலையைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் கிளியோபாட்ரா.
"ஆண்டனி… இப்போது உங்களிடம் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. புது மனைவி ஆக்டேவியா செய்த மாயம்தான் இதற்குக் காரணமா?"
"வந்ததுமே என்னைச் சீண்டிப் பார்க்கிறாயா? அவள் வேண்டாம் என்றுதானே நான் இப்போது இங்கே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்…"
"என்னைத் தேடி வந்திருப்பதில் தவறில்லை. நான், அதிகமான ஆசை வைத்தது உங்களிடம்தான். அப்படிப்பட்ட உங்களிடம் நான் ஏன் வேண்டா வெறுப்பாக பேச வேண்டும்? ஏன் உங்களைக் கோபத்திற்கு ஆளாக்க வேண்டும்?"
"நீ பேசும் பேச்சைக் கேட்டால் எனக்கு குழப்பம்தான் அதிகரிக்கிறது., தீர்வு கிடைப்பதுபோல் தெரியவில்லையே…"
"சரி… நடந்ததை விடுங்கள். இனி, நீங்கள் அந்த ஆக்டேவியாவைப் பற்றி நினைக்க வேண்டாம். ஆனால், எனக்காக நீங்கள் ஒன்றை செய்து ஆக வேண்டும்…"
"நான் இப்போது அவளமறந்தே போய்விட்டேன். நீதான் நான் வந்தது முதல் அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாய்…" என்ற ஆண்டனி, முகத்தில் லேசாக கோபத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பி நின்றான்.
அடுத்த நிமிடமே அவனது தோளில் கை வைத்தாள் கிளியோபாட்ரா. அவளது அந்த திடீர் ஸ்பரிசத்தில் சட்டென்று மனம் குளிர்ந்தான் ஆண்டனி. அடுத்தநொடியே கிளியோபாட்ரா பக்கம் திரும்பினான்.
"அன்பே கிளியோபாராட்ரா! நீ போர்த் திறத்தில் மிகப்பெரிய வீராங்கனை மட்டுமல்ல, மிகச்சிறந்த பெண்ணும்கூட! ஒரு ஆணின் முன்பு எந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும், எதை பேச வேண்டும், எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறாய். உனது இந்த நடவடிக்கைகள்தான் நான் இந்த உலகில் எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் உன்னை நோக்கி ஈர்க்க வைக்கின்றன".
"கோபம் எல்லாம் மறைந்துவிட்டதுபோல் தெரிகிறதே…" என்ற கிளியோபாட்ராவும், ஆண்டனியின் இரு தோள்களையும் தனது மென்மையான கரங்களால் பற்றினாள்.
"ஆமாம் கிளியோபாட்ரா. நான் இதுவரை எத்தனையோ ஆயிரம் பெண்களைப் பார்த்து இருக்கிறேன். உன்னைப் போன்ற அன்பு, அரவணைப்பு, புத்தி சாதுர்யம் கொண்ட பெண்ணை இதுவரையில் நான் பார்த்தது இல்லை".
"நீங்கள் உற்சாக மனநிலையில் இருப்பதால் இப்போதே அதை கேட்டு விடுகிறேன். நீங்கள் எனக்காக ஆக்டேவியாவை துறக்க வேண்டும். உங்கள் எதிரியாகிவிட்ட ஆக்டேவியனின் சகோதரி உங்களுக்கு வேண்டாம். அவளை முறைப்படி விவாகரத்து செய்து விடுங்கள். ஆக்டேவியாவை விவாகரத்து செய்யும் நீங்கள், அடுத்தகணமே என்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுநாள்வரை நான் உங்களது ஆசைக்காதலியாக இருந்ததும், இரு குழந்தைகள் பெற்றுக்கொண்டதும் போதும். இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்து எனது வரலாற்றைப் புரட்டினால், நான் யார் யாருக்கோ ஆசை நாயகியாக இருந்தேன் என்று தகவல் இருக்கக்கூடாது. ஜூலியஸ் சீஸரோடு வாழ்ந்தபோதுதான் எனது ஆசை நிறைவேறவில்லை. இனியாவது அந்த ஆசை நிறைவேற வேண்டும். அதுவும், கூடிய சீக்கிரமே அது நடைபெற வேண்டும்.
… இவை மட்டுமின்றி, ஆக்டேவியன் தோற்று, நாம் வெற்றி பெறும்போது டாலமி சீஸர் (கிளியோபாட்ராவுக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் பிறந்தவன்: கிளியோபாட்ராவின் முதல் மகன்) ரோமாபுரியின் பேரரசனாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், நமக்கு பிறந்த குழந்தைகளுக்கும் நாடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்…" என்ற கிளியோபாட்ராவின் பேச்சு, ஆண்டனிக்கு அவள் பிறப்பிக்கும் உத்தரவாகவே தோன்றியது.
கிளியோபாட்ராவின் உதவி வேண்டியே வந்த ஆண்டனி, அவள் கேட்ட அனைத்திற்கும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தான். ஆனால், ஆண்டனியை நம்பாத கிளியோபாட்ரா, தனது கோரிக்கைகளை ஒப்பந்தமாக்கி, அதில் ஆண்டனியின் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டாள். மேலும், கிளியோபாட்ராவின் விருப்பப்படி அவளை முறைப்படி திருமணமும் செய்து கொண்டான் ஆண்டனி.
ஆண்டனி மீண்டும் கிளியோபாட்ராவுடன் இணைந்து நாடு பிடிக்கும் வேலையில் இறங்கிவிட்டான் என்பதை அறிந்த ஆக்டேவியன், ஆண்டனிக்கு எதிராக போர் செய்ய மிகப்பெரும் படையைத் திரட்ட ஆரம்பித்திருந்தான்.
(இன்னும் வருவாள்…)