கிளியோபாட்ரா (39)

ஏதென்சில் இருந்து ரோமாபுரிக்கு வந்து சேர்ந்த ஆக்டேவியாவுக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது. அவளது சகோதரன் ஆக்டேவியன், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்காத குறையாகத்தான் வரவேற்றான். அருகில் தோழியர் இருந்ததால் வந்த கண்ணீரையும் கண்ணுக்குள் விழுங்கிக்கொண்டு பேசினாள்.

"என்னை வாய் நிறைய புன்னகை வார்த்தைகளோடு வரவேற்க மாட்டாயா?"

"… ஏன் திருட்டுத்தனமாக என்னைப் பார்க்க வந்து இருக்கிறாய் ஆக்டேவியா? நீ ஆண்டனியின் மனைவி என்றால் மாபெரும் படையுடன் அல்லவா என்னைப் பார்க்க வந்திருக்க வேண்டும்? நீ வரும் வழியில் திரண்டிருந்த மக்கள் எல்லோரும் முதுகு வளைந்து அல்லவா உன்னை வரவேற்றிருக்க வேண்டும்? அதற்கு முன்னதாக, அந்த மக்கள் எல்லோரும் உன் வருகையை எதிர்பார்த்து தவம் கிடந்திருக்க வேண்டுமே! ஆனால், அப்படி எதுவும் இங்கே நிகழவில்லையே… நீ ஒரு வேலைக்காரியைப் போல் அல்லவா இந்த ரோமுக்கு வந்திருக்கிறாய்? உன்னிடம் அன்பைப் பொழிய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால், அதற்கு இடமே இல்லாமல் செய்துவிட்டாயே…!"

"நீ என் மேல் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. நீ நினைப்பதுபோல் நான் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இங்கே வரவில்லை. இது என்னுடைய சொந்த விருப்பமே!"

"சொந்த விருப்பம் என்றால்…"

"அதுபற்றி தனியாகத்தான் நான் பேச முடியும்…"

"தாராளமாகப் பேசலாமே…" என்ற ஆக்டேவியன், ஆக்டேவியாவை தனி அறைக்கு அழைத்துச் சென்றான்.

சில நிமிட மவுனங்களுக்குப் பிறகு ஆக்டேவியனே வாய் திறந்தான். "சரி… வந்த விஷயத்தைச் சொல். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன…"

"எனக்கும் அப்படித்தான். வந்த விஷயத்தை உடனே சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன். எனது கணவர் ஆண்டனிக்கு எதிராக நீ போர் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாயாமே…?"

"உன் கணவருக்கு எதிராக நான் எந்த போர் முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. எனது எதிரிகளைத்தான் அழிக்கிறேன். அந்த எதிரிகள், உன் கணவருக்கு வேண்டியவர்களாக இருந்தால், அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது".

"அப்படியென்றால், நீ என் கணவருக்கு எதிராகவும் போர் தொடுப்பாய் அல்லவா?"

"ஏன் நீயே கற்பனை செய்து கொண்டு பேசுகிறாய்? இப்போது உன்னை ஆண்டனி இங்கே அனுப்பக் காரணம் இந்தப் பிரச்சினை அல்ல."

உன் கணவர், தனது ஆசைக் காதலி கிளியோபாட்ராவுடன் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவே இப்போது இங்கே உன்னை அனுப்பி வைத்து இருக்கிறார்.
"நிச்சயமாக இருக்க முடியாது. முன்பு வேண்டுமானால் அவருக்கு அந்த கிளியோபாட்ராவின் மீது மோகம் இருந்திருக்கலாம். ஆனால் என் கணவர் என் மீதுதான் இப்போது ஆசையாக இருக்கிறார். அதற்கு சாட்சி எனக்கும் அவருக்கும் பிறந்த பெண் குழந்தை மட்டுமின்றி, என் வயிற்றில் வளரும் அவரது இன்னொரு வாரிசும் கூட!"

"அவசரப்பட்டு என்னை சபித்து விடாதே சகோதரி. இப்போது அவர் எங்கே இருக்கிறார்?"

"ஏதென்சில்தான்!"

"இல்லை… அவர் ஏதென்சில் இருக்க வாய்ப்பே இல்லை. ஆண்டனிக்கும் கிளியோபாட்ராவுக்குமான தொடர்பு இப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆண்டனி, கிளியோபாட்ராவைத் தேடி சென்றுவிட்டார் என்றே நினைக்கிறேன்".

"ஏற்கெனவே அவர்கள் கீழ்த்திசை நாட்டு மன்னர்களின் உதவியைத் திரட்டி வருகிறார்கள். லிபியா, பாபலகோனியா, அரேபியா, லிகோனியா உள்ளிட்ட பல நாடுகளின் மன்னர்களை தனக்கு சாதகமாக மாற்றியிருக்கிறார் ஆண்டனி. அவர் வேறு ஏதோ திட்டம் தீட்டுகிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. எகிப்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய அரசை கிளியோபாட்ராவுடன் இணைந்து ஏற்படுத்த அவர் தயாராகி வருவதாக எனக்கு ஒற்றர்கள் வாயிலாக தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதை வைத்துத்தான், ஆண்டனி உன்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறுகிறேன்".

"அய்யோ! நான் என்ன செய்வேன்…? என் கணவர் உண்மையிலேயே நீ சொன்னபடி நடந்தால்… அய்யோ… அதை நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறதே…!" என்ற ஆக்டேவியாவின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வேகமாக பெருக்கெடுத்தன.

"சரி… நடந்ததை எல்லாம் மறந்துவிடு சகோதரி. இதுவரை நீ எழுதிய கடிதங்கள்தான் உன் கணவர் மீது என்னை போர் தொடுக்கவிடாமல் தடுத்தன. இனி, எல்லாம் விதிப்படிதான் நடக்கும். அதற்காக நீ தேவையின்றி கண்ணீர் விடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால், என் அரண்மனையில் நன்றாக ஓய்வெடு. நிச்சயம் உனக்கு நீதி கிடைக்கும்…" என்று கூறிய ஆக்டேவியன், அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

இதற்கிடையில்…

கிளியோபாட்ராவை சந்திக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான் ஆண்டனி. அவளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும், எகிப்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கீழ்திசை நாடுகளுக்கே அவளை பேரரசி ஆக்க வேண்டும், தானும் அந்த நாடுகளுக்கு பேரரசன் ஆக வேண்டும் என்று அவன் திட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

(இன்னும் வருவாள்…)

About The Author