ரோமாபுரியில் உள்ள ஆக்டேவியனின் அரண்மனையில் அன்றைய தினம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆம்… அன்றுதான், ஆக்டேவியனின் தாய் வழி சகோதரி ஆக்டேவியாவை கிளியோபாட்ராவின் மனம் கவர்ந்த ஆண்டனி மறுமணம் செய்து கொள்ளும் விழா எளிய முறையில் நடந்தது. ஆண்டனிக்கு மட்டுமின்றி ஆக்டேவியாவுக்கும் இது மறுமணம்தான். ஏற்கனவே அவளுக்கு முதல் கணவன் மூலம் 3 குழந்தைகள் இருந்தனர். அவளது கணவன் இறந்துபோய்விட்டதால், அவளை ஆண்டனிக்கு மறுமணம் செய்து வைத்தான் ஆக்டேவியன். அதில் அவனது சுயநலமும் கலந்திருந்தது.
இரவு வந்ததும் புதுமணத் தம்பதியரான ஆண்டனியும் ஆக்டேவியாவும் முதலிரவு அறையில் பளிச்சிட்ட விலை உயர்ந்த அலங்கார மஞ்சணையில் அமர்ந்திருந்தனர். அமைதியான சுபாவம் கொண்ட ஆக்டேவியா வழக்கம்போல் அமைதியாகவே இருந்தாள். ஆண்டனிதான் அவளிடம் முதலில் பேசினான்.
"அன்பே ஆக்டேவியா… என்னைப் பற்றி நீ பலவாறு கேள்விப்பட்டு இருப்பாய். நீ கேள்விப்பட்டவை அனைத்தும் உண்மையாகக்கூட இருக்கலாம். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதேநேரம், உன்னை, உனது விருப்பம் இல்லாமல் மணந்துகொண்டு விட்டேனா என்று சந்தேகிக்கிறேன்…"
அதுவரை அமைதியாக இருந்த ஆக்டேவியா மெல்ல பேசினாள்:
"அப்படியெல்லாம் தவறாக எதையும் நான் எண்ணவில்லை. மாவீரனான உங்களிடம் குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்".
"நல்லது ஆக்டேவியா. உனது பெருந்தன்மையை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது…" என்ற ஆண்டனி, அவளை இறுக்கமாக அணைத்தான். அவளுடன் இயல்பாக கலந்தான்.
மறுநாள் காலை ஆண்டனிக்கு முன்னதாகவே ஆக்டேவியா எழுந்து குளித்தும் முடித்திருந்தாள். அழகான மென்மையான ஆடை அவளது கட்டழகை மெல்லிய திரை போட்டு மறைத்திருந்தது.
ஆக்டேவியாவின் பேரழகில் மீண்டும் சிலிர்த்துப் போன ஆண்டனி, அவளது சிவப்பு கையை வேகமாக பிடித்து இழுத்தான்.
அப்போது ஆக்டேவியா "உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டவை எல்லாம் உண்மையாகத்தான் இருக்குமோ…" என்று இழுத்தாள்.
"அப்படி என்ன கேள்விப்பட்டாய்?"
"இல்லை… பெண்கள் விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் சபலம் என்றார்கள். நானும், எல்லா ரோமாபுரி ஆண்களிடமும் இருக்கக்கூடிய விஷயம்தானே என்று அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அந்த விஷயத்தில் நீங்கள் இந்த அளவுக்கு வேகமாக இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்ற ஆக்டேவியா, ஆண்டனியின் தலை முடியை வேகமாக கோதிவிட்டு அங்கிருந்து அப்போதைக்கு அகன்றாள்.
எகிப்தில் கிளியோபாட்ராவோ ஆண்டனியின் நினைவால் வாடிக் கொண்டிருந்தாள். ஆண்டனியின் காமக்களியாட்டத் தேவைகளுக்கு அவளும், எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவும் தேவைப்பட்டதால்தான், அங்கே அவன் மதி மயங்கிக் கிடந்தான் என்பது அவளுக்கு அதுவரை தெரியாமலேயே இருந்தது.
ஆண்டனியைக் காணாத கிளியோபாட்ராவின் தேகம் மெலிந்து போய் காணப்பட்டது. முகத்தில் எப்போதும் காணப்படும் மகிழ்ச்சி காணாமல் போய் இருந்தது. சோகமாய் உறைந்துபோய் இருந்த அவளை உசுப்பேற்றிவிட்டாள் சார்மியான்
"எகிப்து அரசியே! உங்கள் சோகத்திற்கான காரணம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். மாவீரர் ஆண்டனி தற்காலிகமாகத்தான் உங்களை விட்டு இப்போது பிரிந்திருக்கிறார். அவர் உங்களைத் தேடி விரைவில் இங்கு வருவார். அதனால் நீங்கள் எப்போதும்போல் சந்தோஷமாக இருங்கள்".
"நல்லது சொன்னாய் என் அருமைத் தோழி. உனது இந்தப் பேச்சு எனக்கு ஆறுதலைத் தருகிறது. உன்னுடன் விளையாட ஆசைப்படுகிறேன்".
"எனக்கும் ஆசைதான் அரசி. ஆனால் என் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், தங்களுடன் ஓடிப் பிடித்து விளையாடுவதில் சிரமம் ஏற்படும்."
"அப்படியென்றால், இப்போது என்னுடன் விளையாட யார்தான் துணைக்கு வருவார்?"
"இதோ… மார்டியான் வருகிறான். அவனோடு விளையாடுங்கள்…" என்று, எதிரே வந்து கொண்டிருந்த திருநங்கையான மார்டியானை சுட்டிக்காட்டினாள் சார்மியான்.
ஆனால், கிளியோபாட்ராவுக்கு ஓடியாடி விளையாட வேண்டும் என்கிற ஆசை வரவில்லை. ஆண்டனியுடன் மீன் பிடித்து பொழுது போக்கிய நாட்கள் நினைவுக்கு வர… "மீன் பிடிக்கச் செல்லலாம்" என்றாள்.
அப்போது வேகவேகமாக வந்தான் தூதுவன் ஒருவன். அவனைப் பரபரப்புடன் ஏறிட்டாள் கிளியோபாட்ரா.
"தூதுவனே… உன் வேகத்தைப் பார்த்தால் மகிழ்ச்சியான செய்தி ஏதேனும் கொண்டு வந்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். ஆண்டனி என்னைப் பார்க்க வந்து கொண்டு இருக்கிறாரா? அல்லது, நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டு, தூது அனுப்பி இருக்கிறாரா? உண்மையை வேகமாகச் சொல்…"
"நம் மாவீரர் ஆண்டனி அவர்களைப் பற்றிய செய்திதான் அரசி".
"அப்படியானால் வேகமாகச் சொல். தேனான செய்தி கொண்டு வந்திருக்கும் உன் பேச்சைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்".
"நான் கொண்டு வந்துள்ள செய்தியை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் அரசி"!
"சந்தோஷம் எந்த அளவுக்கு நம்மைப் பாதிக்கும் என்று நான் நன்கு அறிவேன். உன்னிடமும் அந்தப் பாதிப்புதான் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். விரைவாக அந்த நல்ல செய்தியைச் சொல்…"
"அரசியாரே… நான் கொண்டு வந்துள்ள செய்தி நல்ல செய்தி அல்ல…"
"அப்படியானால் கெட்ட செய்தியா? என் ஆண்டனி இறந்துவிட்டாரா?"
"அப்படி இல்லை அரசி…"
"என்ன சொல்ல வருகிறாய்? என்னை மேலும் குழப்பத்திற்கு ஆளாக்காமல் உண்மையை மறைக்காமல் சொல். நீ கொண்டு வந்துள்ள செய்தி என்ன?"
"நம் மாவீரர் ஆண்டனி, ஆக்டேவியா என்ற அழகான பெண் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கி இருக்கிறாராம்".
"வார்த்தையை அளந்து பேசு. ஆண்டனிக்கு அழகான காதலி நான் ஒருத்தி மட்டும்தான். இனியும் அந்தப் பெண்ணை அழகி என்று சொன்னால் நான் உன் நாக்கை அறுத்துவிடுவேன். சரி… அந்த ஆக்டேவியா யார்?"
"இளைய சீஸரான ஆக்டேவியனின் தாய் வழி சகோதரியாம்".
"அவளுக்கும், என் ஆண்டனிக்கும் என்ன முடிச்சு போடுகிறாய்?"
"நான் சொல்வதைக் கேட்டு வருத்தம் கொள்ள வேண்டாம் அரசியாரே… நான் சொல்லப் போவது முற்றிலும் உண்மையானதுதான்".
"உள்ளதை உடனடியாகச் சொல். என் பொறுமையை மேலும் சோதிக்காதே…"
"அரசி… நம் மாவீரர் ஆண்டனிக்கும், அந்த ஆக்டேவியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது…" என்று சொன்ன அந்தத் தூதுவன் மேற்கொண்டு எதையும் சொல்லாமல் வாய் பொத்தி அமைதியானான்.
அதே நேரம், கிளியோபாட்ரா கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். தகவல் சொன்ன தூதுவனின் இடது கன்னத்தில்
"பளார்" என்று ஒரு அறைவிட்டாள். அதைத் தாங்க முடியாத அவன் அங்கேயே சுருண்டு விழுந்தான்.
ஷேக்ஸ்பியரும் அவளது அந்த நேரத்திலான கோபத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துகிறார்.
ஆண்டனிக்கும், ஆக்டேவியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொன்ன தூதுவனுக்கு ‘மிக மோசமான தொற்றுநோய் தாக்கட்டும்’ என்று சாபமிடுகிறார் அவர்.
தூதுவன் உண்மையையே சொன்னாலும், ஆண்டனிக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் திருமணம் ஆகி இருக்காது என்றே நம்பினாள் கிளியோபாட்ரா. அவளது தோழி சார்மியான் கூறிய சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் உளற ஆரம்பித்தாள்.
"ஆண்டனிக்குத் திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தி பொய்யாக இருந்தால், எனது எகிப்தின் பாதிப் பகுதியை இழக்கக்கூட தயாராக இருக்கிறேன்…" என்று, அப்பாவியாய் புலம்பிய அவளைப் பார்க்கவே சார்மியானுக்குப் பரிதாபமாக இருந்தது.
அந்தநேரத்தில் கிளியோபாட்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், ஆண்டனிக்கு திருமணம் ஆன விஷயத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மயக்கமாகி சரிந்தாள்.
(இன்னும் வருவாள்…)