கிளியோபாட்ரா அளித்த விருந்தில் சொக்கிப் போனது ஆண்டனி மட்டுமல்ல; அந்த விருந்தில் பங்கேற்ற அவனது அத்தனை படைவீரர்களும்தான்! ஆம்… மிதக்கும் வசந்த மாளிகையில் தான் வைத்த விருந்தில் பங்கேற்ற ஆண்டனியின் ரோமாபுரி படைவீரர்களுக்கு அறுசுவை உணவுகளோடு, பலவித பரிசுகளையும் வாரி வாரி வழங்கினாள் கிளியோபாட்ரா. அதுவும், அவளே தன் கைப்பட அந்தப் பரிசுகளை வழங்கியதால் அத்தனை ரோமாபுரி வீரர்களும் உள்ளம் மட்டுமின்றி உடலும் குளிர்ந்து போனார்கள்.
ஆண்டனிக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு அரபுக் குதிரைகளும் மற்றும் சிலருக்கு ஆபரணக் கற்கள் பதிக்கப்பட்ட விருந்து மேஜைகளும், இன்னும் சிலருக்கு தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன தட்டுகளும் வழங்கப்பட்டன. இவற்றோடு நல்ல உடல் உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய, ஏராளமான எத்தியோப்பிய அடிமை இளைஞர்களும் ரோமாபுரி வீரர்களுக்குப் பரிசாக கிடைத்தனர்.
ஏழையாக வந்தவர்கள் எல்லாம் கிளியோபாட்ராவின் இந்த விருந்தின் மூலம் செல்வந்தர்கள் ஆனார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
கிளியோபாட்ராவின் இந்த மாபெரும் விருந்தைக் கனவிலும் எதிர்பார்க்காத ஆண்டனி, தான் ரோமாபுரியின் வருங்கால வேந்தன் என்பதை நிரூபிக்க பதில் விருந்துக்கு கிளியோபாட்ராவை அழைத்தான். எவ்வளவுதான் மெனக்கெட்டாலும கிளியோபாட்ராவின் தாராள மனதிற்கு முன்பு அவன் தோற்றுப்போனதுதான் உண்மை.
ஆண்டனியை மகிழ்விக்க இன்னொரு விருந்தையும் நடத்தினாள் கிளியோபாட்ரா. அந்த விருந்தும் வரலாற்றின் முக்கிய பக்கங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளது.
அந்த விருந்து நடைபெற்ற அறை முழுவதுமே இறக்குமதி செய்யப்பட்ட ரோஜாப் பூக்களால் நிரம்பி இருந்தது. ஆயிரக்கணக்கான ரோஜாப் பூக்கள் சுவராக எழுந்திருந்த அந்த அறை ஆண்டனியைப் பிரமிக்கச் செய்தது.
கிளியோபாட்ரா என்றால் ஆடம்பரம், ஆடம்பரம் என்றால் கிளியோபாட்ரா என்பதை உறுதி செய்தன கிளியோபாட்ராவின் இந்த புதுமை விருந்துகள்.
கிளியோபாட்ராவிடம் பேரழகும், செல்வச் செழிப்பும் மட்டுமின்றி, நாட்டை ஆள்பவருக்கான சமயோசிதத் திறனும், பலமொழித் திறமையும், எந்தவொரு மாவீரனுடனும் நேருக்கு நேர் அஞ்சாமல் விவாதம் செய்கிற சக்தியும் இருந்ததால் அவளை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான் ஆண்டனி. அதற்காக அவள் சொன்னதை எல்லாம் கேட்டான்.
அதன் தொடர்ச்சியாக, கிளியோபாட்ரா சொன்னபடி அவளது தங்கை அர்சினோவை கொலை செய்தான் ஆண்டனி. தான் சொல்லும் எதையும் செய்ய ஆண்டனி தயாராக இருக்கிறான் என்ற நிலை வந்ததும், அவன் மீது உண்மையாகவே அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டாள் கிளியோபாட்ரா. தனது இறுதிக்காலம் வரை அவன் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் பேராசைகொண்டாள்.
ஆனால், ஆண்டனியின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. மது, மாது, சூதாட்டம்… என்று தனது உல்லாசத் தேவைகளை நிறைவேற்றும் சிறந்த இடமாக அலெக்சாண்டிரியா திகழ்ந்ததால், பேரழகி கிளியோபாட்ராவைப் பிரியவும் முடியாமல், அலெக்சாண்டிரியாவை விட்டு அகலவும் முடியாமல் இன்பத் தவிப்புக்கு ஆளானான்.
ஒருநாள் ஆண்டனியும், கிளியோபாட்ராவும் மாரியோட்டிஸ் என்ற ஏரிக்கரைக்குப் பொழுதுபோக்குக்காகச் சென்றனர். அங்கே இருவரும் தூண்டில் மூலம் மீன் பிடித்து மகிழ்ந்தார்கள். கிளியோபாட்ரா பயன்படுத்திய தூண்டிலில் மட்டுமே மீன்கள் சிக்கின.
அப்போதுதான் ஆண்டனிக்கு அந்த யோசனை தோன்றியது. தனது பணியாளன் ஒருவனை அழைத்தவன், அவனது காதில் ஏதோ கிசுகிசுத்தான். சிறிது நேரத்தில் அவனது தூண்டிலில் வரிசையாக மீன்கள் சிக்க ஆரம்பித்தன.
எப்படி இந்த திடீர் மாற்றம் என்று யோசித்த கிளியோபாட்ரா, அருகில் தனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது என்று ரகசியமாக கண்காணித்தாள். ஆண்டனியின் பணியாளன், ஆண்டனி பிடித்த மீன்களைத் திரும்பத் திரும்ப நீருக்குள் மூழ்கி, அவன் உபயோகிக்கும் தூண்டிலில் அவற்றை செருகிவிட்டு வந்து கொண்டிருந்தான்.
இதுதான் அந்த ரகசியமா என்று மனதிற்குள் லேசாக சிரித்து வைத்த கிளியோபாட்ரா, தனது பணியாளன் ஒருவனை அருகில் அழைத்து அவன் காதில் ஏதோ சொன்னாள்.
அடுத்த சில நிமிடங்களில் ஆண்டனியின் தூண்டிலில் ஒரு மீன் துண்டு சிக்கியது. அதில் லேசாக மசாலா ஒட்டியிருந்தது. வறுப்பதற்கு தயாரான நிலையில் அதில் செதில்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்தும் பார்க்காததுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கிளியோபாட்ரா. ஆனால், ஆண்டனியின் முகத்தில்தான் அதிர்ச்சி.
"ஆச்சரியமாக இருக்கிறதே… மீனில் மசாலா வேறு தடவப்பட்டு இருக்கிறது. விட்டால்… வறுவல் மீன் கூட வரும் போல் இருக்கிறதே…" என்று அதிர்ச்சியானான்.
மசாலா தடவிய மீனை வேகவேகமாக தூண்டிலில் இருந்து கழற்றிவிட்டு, தூண்டிலை மீண்டும் ஏரிக்குள் போட்டான். அடுத்த சில நொடிகளிலும் மீண்டும் தண்ணீரில் கரைந்ததுபோக லேசாக மசாலா ஒட்டியிருந்த நிலையில் மீன் துண்டு தூண்டிலில் வந்தது.
இதைப் பார்த்துவிட்ட கிளியோபாட்ரா, மனதிற்குள் எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் கேட்டாள்.
"என்ன ஆண்டனி. ரோமாபுரியின் வருங்கால வேந்தர் என்பதற்காக உங்களது தூண்டிலில் மசாலாவோடு மீனே துண்டுகளாகி வருவது மிகவும் அதிகமாகத்தான் இருக்கிறது…" என்றவள், தன்னையும் மீறி சிரித்துவிட்டாள்.
ஆண்டனி கிளியோபாட்ராவுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான். கடைசியில் அவளே உண்மையைச் சொல்லிவிட லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்து வைத்தான் ஆண்டனி (கிளியோபாட்ரா அனுப்பிய பணியாளன்தான் ஆண்டனியின் தூண்டிலில் மசாலா தடவிய மீன் துண்டுகள் வரக் காரணம். அவன்தான், ஆண்டனியின் பணியாளனை ஓரம் கட்டிவிட்டு, அவனது தூண்டிலில் மசாலா தடவிய மீன் துண்டுகளைச் செருகிவிட்டான்).
மேற்படி சம்பவத்தில் வரலாற்றுக் கற்பனை இருந்தாலும், ஆண்டனியும் கிளியோபாட்ராவும் எந்த அளவுக்கு காதலன் காதலியாக, அன்யோன்யமாக இருந்தார்கள் என்பதனை இந்தக் காட்சி எடுத்துரைக்கிறது.
கிளியோபாட்ராவும், ஆண்டனியும் கொண்டிருந்த காதலை வரலாற்று ஆய்வாளர்கள் புகழ்ந்தே பேசுகிறார்கள். ஆரம்பத்தில், கிளியோபாட்ரா தன் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ள ஆண்டனியைத் தனது கைக்குள் போட்டுக்கொண்டாலும் நாளடைவில் ஆண்டனியை உயிருக்கு உயிராக நேசிக்கத் துவங்கிவிட்டாள். ஆண்டனியும், அவளது கவர்ச்சி வலையில் விழுந்தவன்தான் என்றாலும், அவள் தன்மீது காண்பித்த அபரிமிதமான அன்பால் அவள்பால் அவனும் கரைந்து போனான்.
ஷேக்ஸ்பியர்கூட இவர்களது காதலைப் புகழ்ந்தே சொல்கிறார்.
ஒருமுறை கிளியோபாட்ராவும், ஆண்டனியும் சந்தித்துக்கொண்டபோது நடந்த உரையாடல்:
"ஆண்டனி… என்னை நீங்கள் எந்த அளவுக்குக் காதலிக்கிறீர்கள்? அந்த அளவைக் குறிப்பிட முடியுமா?" கிளியோபாட்ரா கேட்டாள்.
"என்ன… அப்படி கேட்டுவிட்டாய் கிளியோபாட்ரா? நம் காதலை அளவிட அளவீடுகளே இல்லை".
"சும்மா கற்பனையை அவிழ்த்துவிட வேண்டாம். என்னை திருப்திப்படுத்துவதற்காவது சொல்லுங்கள். என் மீது உங்களுக்கு எவ்வளவு காதல் உள்ளது?"
"அன்பே… அளவிடக்கூடியது பிச்சைக்காரர் காதல். நம் காதலுக்கு அளவே இல்லை".
"மீண்டும் மீண்டும் என்னை சமாளிக்க வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்…"
"நான் உன் மீது கொண்டுள்ள காதலின் அளவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், புதிதாய் சொர்க்கம் ஒன்றையும், பூமி ஒன்றையும் அந்த இறைவன் படைக்க வேண்டும்" என்று கூறி, கிளியோபாட்ராவையே வியப்பில் ஆழ்த்தினான் ஆண்டனி.
இந்தச் சமயத்தில்தான், கிளியோபாட்ரா தனது கருவில் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்க ஆரம்பித்திருந்தாள். இதற்குக் காரணம், வேறு யாரும் அல்ல; மார்க் ஆண்டனியேதான்!
(இன்னும் வருவாள்…)
என்னது…தூண்டிலில் மசாலா தடவிய மீனா? உண்மையிலேயே கிளியோபாட்ரா பேரழகி மட்டுமல்ல, சிறந்த புத்திசாலியும்தான்