கிளியோபாட்ரா (26)

சதிகாரர்களை நண்பர்கள் என்று நம்பிக் கொண்டு அரண்மனையில் இருந்து செனட் சபைக்கு குதிரை வண்டியில் புறப்பட்டார் ஜூலியஸ் சீஸர். அவர், இன்று மணிமுடி தரிக்கப்போகிறார் என்ற தகவல் ரோமாபுரி முழுவதும் பரவி இருந்ததால் மக்களில் பலர் உற்சாகமாக இருந்தனர். சீஸரைக் காண வீதிகளில் திரண்டு நின்றனர். அவர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார் சீஸர்.

இதற்கிடையில், சீஸரை கொலை செய்ய சதிகாரர்கள் தீட்டிய திட்டம் ஆர்ட்டிமிடோரஸ் என்ற ஆசிரியருக்கு தெரிந்துவிட்டது அதை சீஸரிடம் தெரிவிக்க முடிவு செய்தவர், அதுபற்றி வாய்மொழியாக சொல்வதைவிட கடிதம் வழியாகத் தெரிவிப்பது உகந்ததாக இருக்கும் என்று முடிவெடுத்து, அதை எழுத ஆரம்பித்தார்.

"நண்பனாக உன்னை வலம் வரும் புரூட்டசை நம்பாதே. அவன் அருகில் உள்ள காஷியஸ், சின்னா, டிரெபோனியஸ், மெட்டலஸ் கிம்பர் ஆகியோரையும் நம்பாதே. அவர்கள் அனைவரும் உன்னைப் பழிவாங்க காத்திருக்கிறார்கள். நீ அழிவில்லாதவன் அல்ல. உனக்கு அவர்களால்தான் ஆபத்து வரப்போகிறது. அதனால், அவர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்…" என்று ஒரு தாளில் எழுதி, அதை சீஸரிடம் கொடுக்க தயாராக வைத்திருந்தார் ஆர்ட்டிமிடோரஸ்.
காலை 10 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. செனட் சபை முன்பு திரளான ரோமானியர்கள் கூடியிருந்தனர். அவர்களுடன் ஒருவராக நின்று கொண்டிருந்தார் ஆர்ட்டிமிடோரஸ். சீஸர் எப்போது வருவார் என்று அவர் வரும் பாதையையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்.

செனட் சபையை சீஸர் வந்தடைந்தபோது அங்கு திரண்டிருந்தவர்கள் எழுப்பிய சீஸர் வாழ்க கோஷம் அந்த விண்ணை முட்டியது. சீஸரை சூழ்ந்து கொண்டு வந்தனர் சதிகாரர்கள். ஆண்டனியும் சீஸரை நெருங்கியே வந்தான். இவர்கள் பொதுமக்கள் யாரும் சீஸரை நெருங்காமல் பார்த்துக்கொண்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீஸரை நெருங்கி, கடிதத்தைக் கொடுப்பது ஆர்ட்டிமிடோரசுக்கு ஒரு சவாலான காரியமாகவே தெரிந்தது. ஆனாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சீஸரை நோக்கி முன்னேறினார். ஒரு வழியாக சீஸரை நெருங்கிவிட்டார்.

சதிகாரர்கள் சீஸரை சுற்றி நின்றதால், அவர்களைப் பற்றி சீஸரிடம் கூறும் தைரியமும் அவருக்கு வரவில்லை. அதனால், சதித்திட்டம் குறித்து தான் எழுதிய கடிதத்தை சீஸரிடம் கொடுக்க முயன்றார்.

தான் வைத்திருந்த கடிதத்தை சீஸரை நோக்கி காண்பித்தவர், "மதிப்பிற்குரிய சீஸர், இந்த மனுவைத் தாங்கள் வாங்க வேண்டும்…" என்றார். சீஸரும் அதை வாங்கிக்கொண்டு, அதை படிக்காமல் நகர முயன்றார்.

"ஒரு நிமிடம் சீஸர். இந்த மனு தங்களோடு தனித்தொடர்பு கொண்டது. அதை இப்போதே படிப்பதுதான் உங்களுக்கு நல்லது".

"நான் செனட் சபைக்கு அவசரமாக சென்று கொண்டிருக்கிறேன். இப்போது இந்த மனுவைப் படிக்க எனக்கு நேரம் இல்லை. இன்னொருநாள் படித்துப் பார்த்து, தேவைப்பட்டால் தங்களையும் வரச் சொல்கிறேன்…"

"இல்லை சீஸர். சிரமம் பார்க்காமல் இப்போதே அதை படியுங்கள். உங்களுக்காகத்தான் அதைச் சொல்கிறேன்…" என்று ஆர்ட்டிமிடோரஸ் சொன்னபோது, சதிகாரர்கள் உஷாராகிவிட்டார்கள். தங்கள் திட்டம் பற்றிதான் இவன் சீஸரிடம் சொல்ல நினைக்கிறானோ… என்று பயந்தவர்கள், அவரை அப்படியே அலாக்காக தூக்கி ஓரம் கட்டினர். சீஸரும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

சீஸர் செனட் சபைக்குள் செல்ல படிக்கட்டுகளில் காலை வைத்தார். அப்போது, அவரை சூழ்ந்து வந்த சதிகாரர்கள் சிறிது இடைவெளிவிட்டு பிரிந்து நின்று, தங்களது காதுகளுக்குள் ரகசியங்களை வேகமாக பரிமாறிக் கொண்டனர். தங்கள் சதித்திட்டத்தில் சீஸரைச் சேர்ந்தவர்கள் நெருங்காமல் பார்த்துக்கொண்டனர். அனைவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் வாளை அவ்வபோது தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டனர்.

அப்போதுதான் சீஸரை நெருங்கி ஆண்டனி வருவது பற்றி யோசித்தனர். அவனும் ஒரு மாவீரன் என்பதால், தங்கள் சதித்திட்டத்தில் இடையூறு ஏற்பட்டலாம் என்று பயந்தவர்கள், அவனை முதலில் அப்புறப்படுத்தும் செயலில் ஈடுபட்டனர். டிரேபோனியஸ் என்பவன் ஆண்டனியுடன் பேச்சுக் கொடுத்து, அவனை சீஸரிடம் இருந்து விலக்கினான்.

இப்போது புரூட்டஸ், காஷியஸ், காஸ்கா உள்ளிட்ட சதிகாரர்கள் மட்டுமே சீஸரை சுற்றி வந்து கொண்டிருந்தனர். தான் அடுத்த சில நிமிடங்களில் கொலை செய்யப்படப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் சிரித்தவாறும், வணக்கம் தெரிவித்தவாறும் செனட் சபையின் முகப்பு படிக்கட்டுகளைக் கடந்து, சபைக்குள் நுழைந்தார் சீஸர். தனக்கான சிம்மாசனத்தில் அமர முன்னேறினார்.

அப்போது சீஸரை நெருங்கிய காஸ்கா, மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுத்து, ஆவேசமாக சீஸரின் கழுத்தில் குத்தினான். என்ன நடக்கிறது என்று தெரியாமல் சீஸர் நிலை தடுமாற… அடுத்தடுத்த நொடிகளில் மற்ற சதிகாரர்கள் ஓநாய்கள் போன்று சூழ்ந்துகொண்டு அவரை கத்தியாலும், வாளாலும் குத்தினர்.

உயிருக்குப் போராடிய சீஸர், புரூட்டஸ் பக்கம் திரும்பி, அவன் மீது உதவி கேட்பதுபோல் சாய்ந்து விழுந்தார். அப்போது அவனும் தனது வாளை சீஸரின் உடலுக்குள் நுழைத்தான். அவனும் இப்படிச் செய்வான் என்று சீஸர் எதிர்பார்க்கவில்லை.
"நீயுமா புரூட்டஸ்? அப்படியானால்…" (கடைசியாக சீஸர் உதிர்த்த இந்த வார்த்தை இன்றும் பிரபலமாக பேசப்படுகிறது) என்று கேட்டபடியே தரையில் சாய்ந்தார் சீஸர். அவரது உயிர் பிரிய ஒருசில நொடிகளே இருந்தன.

நடந்த சம்பவத்தால் செனட் சபை கலவரமானது. சபைக்கு வந்த பொதுமக்களும் மற்ற செனட்டர்களும் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சீஸரோ தனக்கு அருகில் உள்ள ஒரு சிலையை நோக்கி மெல்ல நகர்ந்தார். அந்தச் சிலையின் காலை தனது கையால் தொட்டபடி உயிரையும் விட்டார். அந்த சிலை அவரது முன்னாள் எதிரியான பாம்பேவின் சிலை.

அப்படியென்றால், ஏன் அவர் சாகும் நேரத்தில் அப்படிச் செய்ய வேண்டும்? ஒரு சின்ன ஃளாஷ்பேக் :
சீஸருக்கு முன்பு ரோமாபுரியின் அதிபதியாக இருந்தவன்தான் இந்த பாம்பே. சீஸரை மாபெரும் வீரன் ஆக்கியதில் இவனுக்கு பெரும் பங்கு உண்டு. அதோடு நின்றுவிடாமல், தனது படைத்தளபதிகளுள் ஒருவராகவும் சீஸரை நியமித்தான்.
அதிகார போதையில் பல நாடுகள் மீது படையெடுத்த சீஸர் வெற்றிமேல் வெற்றி கொண்டார். அந்த வெற்றிகள் சீஸரின் மனதை மாற்றியது. பாம்பேவை விரட்டிவிட்டு ரோமாபுரியின் அதிபதி ஆக கனவு கண்டார். அதற்காக தனக்கு விசுவாசமான பெரும்படையை திரட்டினார்.

இதுபற்றி பாம்பேயிடம் அவனது ஆதரவாளர்கள் சொன்னபோது அவன் நம்பவே இல்லை. "நான் வளர்த்துவிட்டவன் அவன். எனக்கு எதிராக எந்த சூழ்நிலையிலும் செயல்பட மாட்டான்" என்று நம்பினான் பாம்பே. தனக்கு எதிராக சீஸர் பெரும்படையுடன் போரிட வந்தபோதுதான் அவன் அதை உண்மை என்று நம்பினான்.

சீஸரின் பெரும்படைக்கு முன்னால் பாம்பேவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தோல்வியைத்தான் தழுவ முடிந்தது. ரோமாபுரியின் அதிபதியாக தன்னை அறிவித்துக்கொண்ட சீஸர், பாம்பேவைக் கொல்லவும் உத்தரவிட்டார். உயிருக்கு பயந்த பாம்பே அடைக்கலம் கேட்டு பல நாடுகளுக்கு ஓடினான். சீஸருக்கு பயந்து யாருமே அடைக்கலம் தர முன்வரவில்லை.
அந்தநேரத்தில்தான் எகிப்தில் இருந்து, கிளியோபாட்ராவின் மாஜி கணவனாகிய சிறுவன் 13ஆம் டாலமியின் ஆதரவாளர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதுபோல் நீட்டினர். அதை நம்பி அங்கு வந்தான் பாம்பே. ஆனால், அவனைக் கொன்று, அவனது தலையைத் துண்டித்து சீஸருக்கே பரிசாக கொடுத்துவிட்டனர்.

தனக்குக் குருவாக இருந்த பாம்பேவை சீஸர் விரட்டியது பற்றியும், பாம்பே எகிப்தில் கொலை செய்யப்பட்டது பற்றியும் செனட் சபையில் பேச்சுக்கள் எழ… அது எதிர்பாராமல் நடந்த முடிவு என்று சமாளித்த சீஸர், அவர்களை சரிக்கட்டும்விதமாக செனட் சபையிலேயே பாம்பேவுக்கு சிலையும் வைத்தார்.

அந்த சிலையின் காலடியில்தான் இப்போது சீஸர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறார். செனட் சபையில் சீஸர் சதி செய்து கொலை செய்யப்பட்டது அவரது ரோமானியச் சக்கரவர்த்தி கனவை மட்டும் சிதைக்கவில்லை. நம் கதாநாயகி பேரழகி கிளியோபாட்ராவின் கனவையும் சேர்த்தே சிதைத்துவிட்டது.

(இன்னும் வருவாள்…)

=

About The Author

1 Comment

Comments are closed.