கிளியோபாட்ரா (25)

காலை 8 மணி இருக்கும். சதிகாரர்களுள் ஒருவனும், செனட்டருமான டெசியஸ், ஜூலியஸ் சீஸரின் அரண்மனைக்குள் வேகமாக நுழைந்தான். நேராக சீஸரை சந்தித்தவன், அவரை வணங்கி நின்றான்.

"என்ன டெசியஸ்? இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாக வந்திருக்கிறாய்?"

"அப்படியொன்றும் இல்லை தலைமை தளபதியாரே! காலை 10 மணிக்கு செனட் சபை கூட இருக்கிறது. அதுபற்றி தங்களிடம் நினைவூட்டிவிடலாம் என்பதற்காக வந்தேன். அவ்வளவுதான்!"

"இல்லை டெசியஸ். நான் இன்று செனட் சபைக்கு வருவதாக இல்லை. நான் சபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று எல்லோருக்கும் தெரிவித்துவிடு".

"தளபதியாரே! அதற்கான காரணத்தை நான் அறிந்துகொள்ள முடியுமா?"

"இன்று அதிகாலை என் மனைவி கல்பூர்னியா, கெட்ட கனவு ஒன்று கண்டாளாம். அதனால், நான் இன்று அவளுடனேயே இருக்க வேண்டும்; வேறு எங்கும் செல்லக்கூடாது என்று கூறுகிறாள். அதுதான் காரணம்".

"எனது இன்னொரு கேள்விக்கும் தாங்கள் விடையளிக்க முடியுமா?"

"தாராளமாகக் கேள்…"

"தங்கள் மதிப்பிற்குரிய மனைவி அப்படியென்ன கனவு கண்டாராம்?"

"உன்னிடம் அதுபற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், உன் பணிவான அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன். எனது உருவச்சிலையில் பல இடங்களில் இருந்து ரத்தம் சிந்தியதாம். நமது ரோமானியர்கள் அந்த ரத்தத்தில் தங்களது கைகளை நனைத்து மகிழ்ந்தார்களாம். அதனால்… எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்று இவள் கருதுகிறாள்…" என்று சீஸர் சொன்னபோது, டெசியசால் பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சில நொடிகள் மவுனங்களில் கரைந்தவன், திடீரென்று முகம் மலரப் பேசினான்.

"தளபதியாரே! அந்தக் கனவுக்கு நீங்கள் ஏன் அவ்வாறு பொருள் எடுத்துக் கொள்கிறீர்கள்? உங்கள் சிலையில் இருந்து ரத்தம் வடிவதும், அதில் ரோமானியர்கள் கைகளை நனைத்து கொண்டாடுவதும் நல்ல விஷயத்தைதான் சொல்கிறது. அதாவது, புத்துணர்ச்சி ஊட்டும் புது ரத்தத்தை உங்களிடம் இருந்து இந்த ரோமாபுரி மக்கள் பெற இருக்கிறார்கள் என்பதை அல்லவா அது காட்டுகிறது" என்றான் டெசியஸ்.

அவனது இந்தக் கருத்து சீஸரையும் மனமாற்றம் கொள்ளச் செய்தது. அந்தக் கனவுக்கான பொருள் இதுவாகவும் இருக்கலாம் அல்லவா என்று யோசித்தார். அதை கவனித்துவிட்ட டெசியஸ், அந்த நிலைபாட்டில் இருந்து சீஸர் மீண்டும் மனம் மாறிவிடாமல் இருக்க மேலும் உற்சாகமாக சில வார்த்தைகளை உதிர்த்தான்.

"தளபதியாரே! இன்னொன்றையும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன்…"

"தாராளமாகச் சொல்…"

"இன்று உங்களுக்கு மணிமுடி சூட்ட, அதாவது ரோமானிய சக்கரவர்த்தியாக தங்களை ஏற்றுக்கொள்ள செனட் சபை முடிவு எடுத்து இருக்கிறது அல்லவா?"

"ஆமாம்…"

"இந்த நேரத்தில் நீங்கள் நல்ல முடிவு எடுத்தாக வேண்டும். மணிமுடி சூட்டிக்கொள்வதற்கான இந்த வாய்ப்பைத் தவற விட்டுவிடக்கூடாது. மீறி தவற விட்டுவிட்டால் செனட்டர்கள் மனம் மாற்றம் கொள்ளலாம். ஒருவேளை… அந்த வாய்ப்பு கிடைக்காமல்கூட போய்விடலாம். அதனால், தாங்கள் இன்று கண்டிப்பாக செனட் சபைக்கு வரவேண்டும் என்பது எனது பணிவான கருத்து".

டெசியஸ் இப்படி முடித்தபோது, பவுர்ணமி நிலவின் பிரகாசம் சீஸர் முகத்தில் பளிச்சிட்டது.

"மனைவி வேண்டாம் என்கிறாள் என்பதற்காக இன்று செனட் சபைக்கு நான் வராமல் இருந்தால் எனது ரோமானிய சக்கரவர்த்தி கனவு கனவாகவே போய்விட வாய்ப்பு உள்ளது. அதனால், இன்று கண்டிப்பாக செனட் சபைக்கு நான் வருவேன் என்று எல்லோரிடமும் தகவல் சொல்லிவிடு…" என்று சீஸர் சொல்லி முடிக்கவும், யாரோ சிலர் வரும் சப்தம் தெளிவாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தார் சீஸர்.

அங்கே சதிகாரர்களான புரூட்டஸ், காஸ்கா, பப்ளியஸ், சின்னா, டிரபோனியஸ், மெட்டலஸ் கிம்பர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். இன்று காலை சீஸரை கண்டிப்பாக செனட் சபைக்கு அழைத்து வந்து திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவு அவர்களது மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவர்களது முகம் மாத்திரமே தற்காலிக சந்தோஷத்தை வரவழைத்திருந்தது.

அவர்களை முகம் மலர வரவேற்றார் சீஸர்.

"இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே… என்ன விஷயம்?" சீஸரே கேட்டார்.

"மணி எட்டு கடந்துவிட்டது அல்லவா? இன்று தாங்கள் மணிமுடி சூட்டிக்கொள்ளப் போகிறீர்கள். அதனால்தான் தங்களை அழைத்துப் போகலாம் என்று வந்தோம்…" என்று இனிப்பாக பேசினான் புரூட்டஸ்.

அப்போது சீஸரின் நண்பன் ஆண்டனியும் அங்கு வந்து சேர்ந்தான். அவன் சீஸரின் காதில் எதையோ கிசுகிசுக்க… "நண்பர்களே! சிறிதுநேரம் காத்திருங்கள். நான் அதற்குள் உடை மாற்றிக்கொண்டு, செனட் சபைக்குச் செல்ல தயாராக வந்து விடுகிறேன்…" என்று புரூட்டஸ் உள்ளிட்ட செனட்டர்களிடம் கூறிவிட்டு, ஆண்டனியோடு தனியறைக்குச் சென்றார் சீஸர்.

"ஆமாம்… நம் டைபர் நதிக்கரை அரண்மனையில் உள்ள கிளியோபாட்ரா எப்படி இருக்கிறாள்? நான் இன்று மணிமுடி சூட்டிக்கொள்ளும் தகவல் அவளுக்கு தெரியும்தானே?"

"நிச்சயமாக தெரியும் நண்பா… நீங்களே அவளிடம் அதுபற்றி பலமுறை கூறி இருக்கிறீர்களே…"

"ஆமாம்… ஆமாம்… சந்தோஷத்தில் மறந்துவிட்டேன்…" என்ற சீஸர், ஆண்டனியை அங்கு சிறிதுநேரம் காத்திருக்க வைத்துவிட்டு, உடை மாற்ற புறப்பட்டார்.

சிறிதுநேரத்தில் நறுமணம் முன்னே கமழ்ந்துவர… ராஜநடையோடு வந்து கொண்டிருந்தார் சீஸர். அவருக்கு பக்கத்தில் வந்த கல்பூர்னியா கண்களில் மட்டும்தான் லேசாக கலவரம் ஒட்டிக்கொண்டிருந்தது.

சீஸரை எப்போதும் இல்லாத கம்பீரத்தில் பார்த்த ஆண்டனியின் கண்களில் திடீர் வியப்பு. அதை வார்த்தைகளாகவே வெளிப்படுத்தினான்.

"நண்பா! செனட் சபை தங்களுக்கு இன்னும் மணிமுடி சூட்டி அழகு பார்க்கவில்லை. ஆனாலும் என் கண்களுக்கு ரோமானியச் சக்கரவர்த்தியாகவே தெரிகிறீர்கள். உங்களது கம்பீர நடையும், மிடுக்கான பார்வையுமே அதற்கு சாட்சி…" என்று ஆண்டனி சொல்ல மெய்சிலிர்த்துப் போனார் சீஸர்.

அருகில் நின்ற கல்பூர்னியா பக்கம் திரும்பியவர், "எனது நண்பன் சொல்வதை கேட்டாயா? இப்போதே நான் இந்த நாட்டுக்கு பேரரசர் ஆகிவிட்டேனாம். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா? இன்னும் இரண்டு மணி நேரத்தில் அந்த நல்ல செய்தி உன்னையும் தேடி வரும். எனக்கு மகிழ்ச்சியாக விடைகொடுத்து அனுப்பு. தலைமை தளபதியாக செனட் சபைக்குச் சென்று, ரோமானியச் சக்கரவர்த்தியாக திரும்பி வருகிறேன்…" என்றார்.

சீஸர் இப்படிச் சொன்ன மாத்திரத்தில் கலகலப்பான கல்பூர்னியா, "நீங்கள் வெற்றி வேந்தராக திரும்பி வருவீர்கள்…" என்று வாழ்த்தினாள்.

செனட் சபையில் பெண்கள் பங்கேற்க முடியாது என்பதால் கல்பூர்னியாவிடம் விடைபெற்று ஆண்டனியோடு வெளியே வந்தார் சீஸர். பிரம்மாண்ட வரவேற்பு அறையில் புரூட்டஸ் உள்ளிட்ட செனட்டர்கள் காத்திருந்தனர்.

சீஸரின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்தவர்கள், "இதுதான் உனது கடைசி மகிழ்ச்சி" என்று மனதிற்குள் குமுறிக் கொண்டனர்.

(இன்னும் வருவாள்…)

About The Author