விடிந்தால் மார்ச் 15-ம் தேதி –
அந்த நாளின் விடியலைத் தேடி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது இரவுப் பொழுது.
நள்ளிரவு நேரம், வழக்கமாக அமைதியாக காணப்படும் ரோம் நகரில் உள்ள புரூட்டசின் தோட்டத்து வீட்டில் இரவு விளக்கு வெகுநேரமாக எரிந்து கொண்டிருந்தது. படுக்கையில் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான் புரூட்டஸ்.
ஜூலியஸ் சீஸரை ரோமானிய சக்கரவர்த்தியாக மணிமுடி சூட்டவிடாமல் எப்படித் தடுக்கலாம் என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தான்.
இப்போதே ஏக அதிகாரத்துடன் இருக்கும் சீஸருக்கு மணிமுடியையும் கொடுத்துவிட்டால், அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாமே… நாட்டின் ஒட்டு மொத்த அதிகாரமும் அவரிடம் போய் குவிந்துவிட்டால் செனட்டில் நமக்கு என்ன வேலை? அப்படியென்றால், ரோமானிய குடியாட்சி முறை என்னாவது? என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தான் புரூட்டஸ்.
மனைவி போர்ஷியாவைப் பார்த்தான். அவள் களைப்பில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
தூக்கம் வராமல் தவித்த புருட்டஸ், தோட்டத்திற்குள் உலவ வந்தான். ஆதரவின்றி கிடந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான்.
பவுர்ணமியை நோக்கி பருவச் செழிப்புடன் வளர்ந்து கொண்டிருந்தது அழகான பெண் நிலவு. அதை சைட் அடிக்கும் நோக்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள். அவற்றை வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் புரூட்டஸ்.
அப்போது யாரோ வீட்டின் முன் வாயிலைத் திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினான்.
அங்கே சக செனட்டர்களான காஷியஸ், சின்னா, காஸ்கா, டெஷியஸ், மெட்டலஸ்கிம்பர், டிரபோனியஸ் ஆகிய 6 பேர் வந்து கொண்டிருந்தனர்.
"என்ன புரூட்டஸ்… இந்த நள்ளிரவு நேரத்தில் தூங்கி இருப்பாய் என்றுதான் நினைத்து வந்தோம். ஆனால் நீயோ வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாய். திருடர்கள் பயமா?" – காஷியஸ் சிரித்துக் கொண்டே கேட்டான்.
"எப்போதுதான் ஜோக் அடிக்க வேண்டும் என்று வரைமுறையே உன்னிடம் இல்லாமல் போய்விட்டது…" என்று, பதிலுக்கு சிரிப்போடு அவர்களை வரவேற்ற புரூட்டஸ். "ஆமாம்… இந்த அர்த்த ராத்திரியில் இங்கே மொத்தமாக வந்திருக்கிறீர்களே… அப்படி என்ன முக்கியமான விஷயம்?" என்று கேட்டு காஷியசை ஏறிட்டுப் பார்த்தான்.
ரோமாபுரியின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போவதாக சீஸர் அறிவித்து இருக்கிறாரே…"அதுபற்றி பேசத் தான் இங்கே வந்திருக்கிறோம்…"
சீஸரை சக்கரவர்த்தியாக விடாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று பேசும் முன், இந்தக் கருத்தில் அனைத்து செனட்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று அறிய விரும்பினான் காஷியஸ். அவன் அந்தக் கருத்தைக் கூறியபோது, அங்கிருந்த அனைத்து செனட்டர்களும் சபதம் ஒன்றையும் எடுத்துக்கொண்டனர்.
அந்த சபதம் பற்றி புரூட்டஸ் பேசும்போது, உணர்ச்சி வசப்பட்டவனாகவே காணப்பட்டான். அதை, தனது ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் உணர்வுப் பூர்வமாக அழகாக கையாண்டுள்ளார் ஷேக்ஸ்பியர். அவரது நாடகத்தில் அப்போது புரூட்டஸ் பேசுவதாக இடம்பெறும் வீர வசனம் இது:
"வேண்டாம்! நாம் இந்த சபதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் முகங்களில் உள்ள சஞ்சலமும், உங்கள் உள்ளங்களில் உள்ள நெடிய துயரமும், நிகழ்காலத்தில் உள்ள அலங்கோலங்களும் நம்மை ஒன்றாக இணைக்க முடியாவிட்டால், அதை சபதம் செய்துதான் நாம் இணைக்க வேண்டும் என்றால், நான் ஒன்றைச் சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள். உடனே நாம் இங்கிருந்து பிரிந்து சென்று விடுவோம். காலியாக கிடக்கும் நம் கட்டிலுக்குச் செல்வோம்.
விசுவரூபம் எடுத்திருக்கும் கொடுங்கோன்மைக்கு ஒவ்வொருவராக பலியாவோம். அவ்வாறு இல்லாமல், இன்றுள்ள காரணங்களே கோழைகளை வீரனாகவும், உருகும் பெண்களை உருக்காகவும் மாற்றப் போதுமானவை என்ற என் கருத்து சரியானதுதான் என்றால், நண்பர்களே… நம் நாட்டின் துயர் களைய நம்மைத் தூண்டுவதற்கு சபதமா தேவை?வாக்கு தவறாத ரோமானியர்களுக்கு சபதம் எதற்கு? சத்தியத்தைவிட சிறந்த சபதம் உண்டா? … செய்ய வேண்டும்; அல்லது செத்து மடிய வேண்டும். கோழைகள், சூழ்ச்சிக்காரர்கள், உயிர் தளர்ந்த கிழவர்கள்தான் தீமையையும் வரவேற்றுக் கொண்டு, சபத உரையும் சாற்றிக் கொண்டிருப்பார்கள். மக்கள் அவர்களை நம்பாததால் அவர்களுக்கு சபதம் தேவை. ஆனால், நம்மைப் பொறுத்தவரை சபதம் தேவை என்று எண்ணி, நமது குற்றமற்ற காரியத்தைக் களங்கப்படுத்திவிடக் கூடாது. அழிக்க முடியாத நமது உணர்ச்சிகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. சொன்ன சொல்லை அணுவளவும் மீறுபவன் ரோமானியனாக இருக்க மாட்டான். அவனது ஒவ்வொருசொட்டு ரத்தமும் குற்றமுடையதாக இருக்கும்…" என்று புரூட்டஸ் கதாபாத்திரத்தில் கர்ஜிக்க வைக்கிறார் ஷேக்ஸ்பியர்.
புரூட்டஸின் வீர உரையைக் கேட்ட அங்கிருந்த செனட்டர்கள் கொட்டும் இரவுப் பனியிலும் சிலிர்த்தெழுந்தனர். அவர்களது அவசர ஆலோசனை தொடர்ந்து கொண்டே போனது. ஆலோசனையின் நிறைவில் சீஸரைக் கொலை செய்வது என்று எல்லோரும் உறுதியான முடிவினை எடுத்தனர்.
அப்போது, டெஷியஸ் அப்படியொரு கேள்வி கேட்டான்:
"சீஸரை மட்டும்தான் கொல்ல வேண்டுமா? வேறு யாரையும் கொல்ல வேண்டாமா?"
அதற்கு பதிளிக்க அவசரமாக திரும்பினான் காஷியஸ்.
"நல்லவேளை… நினைவுபடுத்திவிட்டாய், டெஷியஸ். சீஸரை மட்டுமின்றி, அவனது இன்னொரு கரமாக வலம் வரும் ஆண்டனியையும் கொலை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அவன் ஓர் உல்லாசப் பிரியன் மட்டுமல்ல; தந்திரக்காரனும் கூட! அவன் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டால் நமக்குத்தான் ஆபத்து. அதனால், சீஸருடன் ஆண்டனியும் சேர்ந்தே கொலை செய்யப்படட்டும்…" என்று வேகமாகவே சொன்னான் அவன்.
காஷியசின் அந்த கருத்து புரூட்டசுக்குப் பிடிக்கவில்லை. அதற்கான எதிர்ப்பு கருத்தை அப்போதே பதிய வைத்தான்.
"சீஸருடன் ஆண்டனியையும் சேர்த்து கொல்வது என்பது காட்டுமிராண்டித் தனமான செயல். தலையை வெட்டி ஒருவனைக் கொலை செய்த பிறகு, அவனது கை, கால்களை வெட்டுவது என்பது ரத்தவெறியையே காட்டும். இப்போதைய நமது போராட்டம், இந்த ரோமாபுரிக்கானது, ரோம் மக்களுக்கானது. முடியாட்சி கூடாது என்பதுதான் நமது கொள்கை. நமது போராட்டத்தில் ராஜதந்திரம் இருக்கலாமே தவிர, தீவிரவாதம் இருக்கக்கூடாது. நமது போராட்டத்தால் சீஸரின் தலை உருண்ட பிறகு, அவரது கையாக உள்ள ஆண்டனியால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், ஆண்டனியைக் கொல்வதா? வேண்டாமா? என்ற விவாதமே நமக்குத் தேவையில்லாதது…" என்று கூறி, அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் புரூட்டஸ்.
சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது. அதுவரை தொடர்ச்சியாக விவாதம் செய்து களைத்துப் போனவர்கள் மணியைப் பார்த்தார்கள். நேரம், நள்ளிரவைக் கடந்து மார்ச் 15-ம் தேதிக்கான விடியல் ஆரம்பித்து இருந்தது.
"சரி… சரி… பொழுது விடிந்துவிட்டது. ஓரிரு மணி நேரமாவது எல்லோரும் ஓய்வெடுங்கள். இன்று காலை செனட் சபைக்குள் சீஸர் நுழையும்போது அவனது கதையை முடித்துவிட வேண்டும். எல்லோரும் அதற்கான ஆயுதங்களுடன் வாருங்கள். யாருக்கும் நம் மீது எந்தச் சூழ்நிலையிலும் சந்தேகம் வந்துவிடக்கூடாது. சீஸரைக் கொன்ற பிறகு பிரச்சினை வந்தால் எளிதில் சமாளித்துவிடலாம். அதற்கு முன்பே பிரச்சினை வருவதுதான் நமக்கு நல்லதல்ல. நாம் இன்று காலை சீஸரை கொல்லப்போகும் செய்தி என் அன்பு மனைவி போர்ஷியாவுக்குக் கூடத் தெரியாது. நீங்களும் உங்கள் துணையிடம் இதுபற்றி மூச்சகூட விட்டுவிடாதீர்கள். காரியம் வெற்றிகரமாக முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம்…" என்று கூறி எல்லோரையும் தன் இல்லத்தில் இருந்து அனுப்பி வைத்தான் புரூட்டஸ்.
எல்லா செனட்டர்களும் சென்ற பிறகு படுக்கையறைக்கு வரத் திரும்பினான் புரூட்டஸ். அவன் எதிரே அவனது மனைவி போர்ஷியா நின்று கொண்டிருந்தாள்.
==
(இன்னும் வருவாள்…)