பேரரசராக வேண்டும் என்ற ஜூலியஸ் சீஸரின் ஆசை வலுத்து வந்த அதேநேரத்தில், அவர் எந்தச் சூழ்நிலையிலும் பேரரசர்
ஆகிவிடக்கூடாது என்ற கருத்தில் புரூட்டஸ், காஷியஸ் உள்ளிட்ட செனட்டர்கள் பலர் உறுதியாக இருந்தனர். தங்களது கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் ஆதரவாளர்களையும் மறைமுகமாக திரட்டினர்.
மார்ச் 15ஆம் தேதி நெருங்கியது. அதற்கு முந்தைய நாளான 14ஆம் தேதி ரோமில் அமைந்திருந்த சீஸரின் அரண்மனை பரபரப்பாக காணப்பட்டது.
ரோமாபுரிக்கு பேரரசர் ஆகவேண்டும் என்ற கருத்தை சீஸர் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்த புரூட்டசும், காஷியசும் அவரது அரண்மனைக்குப் பிற செனட்டர்கள் சகிதமாக வந்தனர்., சீஸரின் ஆத்ம நண்பன் ஆண்டனியும் உடன் இருந்தான்..
சீஸரின் அரண்மனைக்குள் நுழைந்த செனட்டர்களின் பார்வையில் சீஸரும், அவரது காதல் மனைவி கிளியோபாட்ராவும் தெரிந்தனர். சீஸரை நெருங்கிய அனைவரும் ரோமானிய பாரம்பரிய முறைப்படி கைகுவித்து, தலைகுனிந்து மரியாதை செய்தனர். ஆனால், கிளியோபாட்ராவுக்கு அந்த மரியாதை குறைவாகவே கிடைத்தது.திடீரென்று கோபத்தில் சிவந்த அவளது மூக்கே அதைக் காட்டிக்கொடுத்தது.
அப்போது ஆண்டனியே மெல்ல வாய் திறந்தான்.
“மாண்புமிகு தலைமை தளபதி அவர்களே! நாளைய ரோமானியப் பேரரசரே! தாங்கள் ரோமாபுரிக்குப் பேரரசர் ஆவது குறித்து செனட்டர் சபை முக்கிய முடிவெடுத்து இருக்கிறது. அதைச் சொல்வதற்காக இங்கே இவர்கள் வந்திருக்கிறார்கள்…“
“என்னது… முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார்களா? நான் பேரரசர் ஆவதை இவர்கள் ஆதரித்து முடிவு எடுத்து இருக்கிறார்களா? இல்லை… குடியாட்சி நடக்கும் இடத்தில் முடியாட்சிக்கு இடமில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்களா? இவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், நாளை இந்த ரோமாபுரிக்கு நான் பேரரசராக முடிசூட்டிக் கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ரோமாபுரிக்காக வெற்றிகளை மலைபோல் குவித்த எனக்கு பேரரசர் என்கிற இந்த மணிமுடி உரிய பரிசுதான் உகந்த பரிசுதான் என்பதையும் செனட்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்…“ என்றார் சீஸர்.
அப்போது புரூட்டஸ் குறுக்கிட்டுப் பேசினான்.
“முதன்மை தளபதியாரே! செனட் சபை என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை முதலில் கூர்ந்து கவனியுங்கள். அதன்பின் உங்கள் கருத்தை தெரிவிப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்…“
“என்ன சொல்கிறாய் புரூட்டஸ்? செனட் முடிவுக்காக இந்த மாவீரன் காத்திருக்க வேண்டுமா?“
“அப்படிச் சொல்லவில்லை, என் அன்பு நண்பரே! என்ன இருந்தாலும் செனட் ஒப்புதலைப் பெறுவது அவசியம் இல்லையா?“
“அதற்காக என்னை ஒதுங்கிப் போகச் சொல்கிறாயா புரூட்டஸ்? இந்த பேரரசின் வெற்றிவீரனுக்கு கவுரவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் செனட் சபையினருக்கு வரவில்லையா?“ என்று கர்ஜித்த சீஸரின் கண்கள் கோபத்தில் சிவந்தன.
அதுவரை அமைதியாக இருந்த காஷியஸ் அப்போது வேகமாகவே வாய் திறந்தான்.
“மதிப்பிற்குரிய தளபதியார், எதை எதிர்பார்த்து இப்படிப் பேசுகிறார் என்பது நன்றாகவே புரிகிறது. குடியாட்சி நடைபெறும் ரோமில் மன்னாட்சி தேவையா? என்பதுதான் செனட் சபையின் கேள்வி. இதை தளபதியார் புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன்…“ என்ற காஷியஸ் சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டான்.
காஷியசின் இந்த செயல் சீஸரை ஆத்திரமூட்டியது.
“வெற்றிகள் பல குவித்து உலகத்தையே நடுங்க வைக்கும் இந்த சீஸர், செனட் சபையினரிடம் அடிமைப்பட்டுப் போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மாவீரனுக்கு இது அழகும் அல்ல. நாளை இந்த சீஸர் ரோமானிய வேந்தராக – ஏக சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொள்ளப் போவது நிச்சயம். அதற்கு செனட்டர்கள் தயாராக இருக்கட்டும்…“ என்று ஆணித்தரமாக பேசினார் சீஸர்.
காஷியசின் கருத்துக்குக் கடுமையாக பதில் அளித்த சீஸரிடம் அடுத்து என்ன பேசலாம் என்பதை அவசரம் அவசரமாக யோசித்த புரூட்டஸ், பணிவாகவே கேட்டான்.
“தளபதியாரே! தங்கள் முடிவை செனட் சபை ஏற்றுக்கொள்ள சிறிது கால அவகாசம் வேண்டும். இதே அரண்மனையில் பக்கத்து அறையில் நாங்கள் கூடிப் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவை சொல்கிறோம். அதுவரை தாங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் அமைதியாக இருக்க வேண்டும்“.
“சபாஷ் புரூட்டஸ்! நீ ஒருவன்தான் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். மற்ற செனட்டர்களிடம் எனது நியாயமான விருப்பத்தை எடுத்துச் சொல். நான் இந்த பேரரசுக்கு பேரரசர் ஆவதில் துணையாய் இரு“.
“தங்கள் விருப்பப்படியே நாங்கள் செய்கிறோம்…“ என்ற புரூட்டஸ், உடன் வந்த மற்ற செனட்டர்களை அழைத்துக் கொண்டு சீஸரின் அறையில் இருந்து வெளியேறினான்.
பக்கத்து அறையில் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூடி விவாதித்தனர்.
இதற்கிடையில், சீஸரிடம் காட்டமாகவே பேசிக்கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா.
“உங்கள் செனட்டர்கள் எதை வைத்து இப்படி முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்? மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த ஒரே மாவீரர் நீங்கள்தான். உங்களுக்கு கவுரவம் செய்வதில் இவர்கள் ஏன் தயக்கம் காண்பிக்க வேண்டும்? இதே சம்பவம் எனது எகிப்தில் நடந்திருந்தால், அவர்கள் அனைவரையும் அடுத்த நொடியே சிரச்சேதம் செய்திருப்பேன்…“ என்று கொதித்தெழுந்த கிளியோபாட்ராவுக்கு மூச்சு வாங்கியது. அருகில், கோப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து தேனான உதட்டில் சப்பிக்கொண்டாள்.
“அவசரப்படாதே… எனது பேரரசியே! இந்த ரோமாபுரி வேறு; உனது எகிப்து வேறு. இந்த செனட்டர்களைப் பொறுத்தவரை நான் ரோமாபுரியின் முதன்மை படைத் தளபதி,அவ்வளவுதான். இங்கே குடியாட்சி நடைபெறுவதால் செனட்டர்களின் ஒப்புதலையும் பெற வேண்டி இருக்கிறது. இவர்கள் எல்லோரையும் ஒரேயடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது. இல்லையென்றால், இவர்களை இந்த இடத்திலேயே கொலை செய்திருப்பேன்…“ – சீஸரின் இந்த கருத்தால் சற்று அமைதியானாள்
கிளியோபாட்ரா.
பக்கத்து அறையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட செனட்டர்கள் சீஸரைப் பார்க்க திரும்பி வந்தனர். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்.
முதலில் புரூட்டசே எழுந்து பேசினான்.
“மதிப்பிற்குரிய தளபதியாரே! நாங்கள் உறுதியான முடிவு எடுத்துவிட்டோம்.அதன்படி, தாங்கள் இந்த ரோமாபுரிக்கு எப்போதும்போல் முதன்மை தளபதி. ரோமாபுரிக்கு வெளியே தாங்கள் வேந்தர், அதாவது ரோமாபுரியின் ஏக சக்கரவர்த்தி! செனட்டர்களின் இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நாளைய செனட் கூட்டத்தில் இதைத்தான் நாங்கள்
அறிவிக்கப்போகிறோம். அதை இதை ஏற்றுதான் ஆக வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. எல்லா செனட்டர்களும் சேர்ந்து எடுத்த உறுதியான முடிவு“.
“என்ன சொல்கிறாய் புரூட்டஸ்? உங்களது இந்த முடிவு என்னை அவமானப்படுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது? உள்நாட்டில் நான் பொம்மை ராஜா,பிற நாடுகளில்தான் நான் உண்மையான ராஜா என்று அல்லவா சொல்லாமல் சொல்கிறீர்கள்?“
“அவசரப்பட வேண்டாம் தளபதியாரே! செனட் எடுத்த முடிவுக்கு தலைவணங்குவது என்பது இந்த ரோமாபுரியின் மரபுதானே?“
“இதுவரைக்கும் வேண்டுமானால் அந்த மரபு பின்பற்றப்பட்டு இருக்கலாம். இந்த ரோமாபுரிக்காக பல வெற்றிகளைக் குவித்த இந்த சீஸரிடம் அந்த மரபு இனி செல்லுபடியாகாது…“ என்ற சீஸர் கோபத்தில் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டார்.
வேறு வழி தெரியாத புரூட்டஸ், காஷியஸ் உள்ளிட்ட செனட்டர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர்.
நாளை காலையில் ஜெயிக்கப்போவது இந்த செனட்டர்களா? இல்லை… சீஸரா என்று பார்த்துவிடுவோம்… என்று சொல்வதுபோல் இருந்தது, அவர்களது கம்பீர நடை.
(இன்னும் வருவாள்…)