கிளியோபாட்ரா-19

ரோமில் தங்கியிருந்த கிளியோபாட்ராவின் நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன. ஜூலியஸ் சீஸரும் அவளை அடிக்கடி பார்த்துவிட்டுச் சென்றார். அப்போது, தனக்கும், கிளியோபாட்ராவுக்கும் பிறந்த டாலமி சீஸரையும் கொஞ்சி ஒரு தந்தைக்குரிய மகிழ்ச்சியில் நெகிழ்ந்தார்.

நாட்கள் மாதங்களாக உருண்டன. கிளியோபாட்ரா எகிப்தை மறந்தாள். சீஸர், கிளியோபாட்ராவின் அன்பில் லயித்து இருந்து, ரோமின் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொண்டார். நாட்டில் பல சீர்திருத்தங்களை செய்தார்.

லஞ்சம், கொலை போன்ற குற்றச் செயல்கள் மலிந்திருந்த ரோமில், அதை அடக்கும் பொருட்டு சில கடுமையான சட்டங்களை செனட் சபை ஒப்புதலுடன் நிறைவேற்றினார்.

மாவீரன் அலெக்ஸாண்டர் வெற்றியின் நினைவாக உருவானதும், எகிப்தின் தலைநகருமான அலெக்ஸாண்டிரியாவில் இருந்த நகரமைப்புத் திட்டங்களை ரோமில் மேற்கொண்டார்.

இத்துடன் அவர் நின்றுவிடவில்லை. வரலாறு தன்னை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். அதற்காக, அப்போது நடைமுறையில் இருந்து வந்த ரோமன் காலண்டர் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். ரோமன் காலண்டர் முறைக்குப் பதிலாக புதிய ஜூலியன் காலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்பட்டு லீப் வருடம் புகுத்தப்பட்டது.

மேலும், தனது பெயரிலும் ஒரு மாதத்தை கொண்டு வந்தார் சீஸர். சூரியஸ் என்று அவர் பெயரில் அன்று அழைக்கப்பட்ட மாதம்தான் இப்போது ஜூலை என்று அழைக்கப்படுகிறது. அன்றே 31 நாட்களைக் கொண்டதாக சூரியஸ் மாதம் அமைந்தது.

இந்த மாற்றங்களுக்கு மத்தியில் ஒருநாள் கிளியோபாட்ராவை சந்தித்த சீஸர், "நீ இதுவரை எதிர்பார்க்காத பரிசு ஒன்றை நான் நாளை உனக்குத் தரப்போகிறேன்" என்றார்.

கிளியோபாட்ராவுக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. "அது என்ன பரிசு?" என்று கேட்டாள். அதைச் சொல்ல சீஸர் மறுத்துவிட்டார்.

"கடந்த பல மாதங்களாக என்னவளாக என்னுடன் தங்கியிருக்கிறாய். உனக்காகப் பார்த்துப் பார்த்து நான் வடித்த பரிசு அது. நேரில் பார்த்தால்தான் அந்த பரிசின் மகிமையை புரிந்துகொள்ள முடியும். அதனால் நாளைவரை காத்திரு. நானே உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்…" என்று கூறி, அந்த சஸ்பென்ஸ் பரிசு பற்றிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீஸர்.

அத்துடன், "அந்த பரிசைப் பார்க்கும்போது, நீ இந்த ஆடையைத்தான் அணிந்திருக்க வேண்டும்" என்று கூறிய சீஸர், ரோமானிய ராஜவம்ச பெண்கள் மாத்திரமே அணியும் அந்த விலை உயர்ந்த ஆடையைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

மறுநாளும் வந்தது.

கிளியோபாட்ராவை அழைத்துச் செல்ல டைபர் நதிக்கரையில் அமைந்திருந்த தனது பிரம்மாண்ட அரண்மனைக்கு வந்தார் சீஸர். அவர் அரண்மனைக்குள் நுழையவும், கிளியோபாட்ரா தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

அந்த அழகிய ஆடையில் கிளியோபாட்ராவை பார்த்த சீஸர், அப்படியே ஒருகணம் அதிசயித்துப்போய் நின்றார்.
.

"இந்த ஆடையில் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? நான் உனக்கு இன்று தரப்போகும் அந்த மாபெரும் பரிசே இப்போது உன் அழகில் தோற்றுப்போய்விட்டதே…" என்று கூறிச் சிலிர்த்தார்.

தொடர்ந்து, குதிரை வண்டியில் கிளியோபாட்ராவை அழைத்துக்கொண்டு பயணமானார் சீஸர். சிறிதுநேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு ஆலயத்தின் முன்பு நின்றது வண்டி. ரோமானிய காதல் தெய்வமான வீனஸின் ஆலயம் அது.

குதிரை வண்டியில் இருந்து முதலில் இறங்கிய சீஸர், தனது இரும்புக் கரத்தை நீட்டி கிளியோபாட்ரா இறங்க உதவினார். இறங்கியதும், அவரது கரத்தைப் பற்றிக்கொண்டு ஆலயத்திற்குள் நடந்தாள் கிளியோபாட்ரா.

"ஆமாம்… எனக்காக மாபெரும் பரிசு ஒன்று தரப்போவதாக கூறினீர்கள். ஆனால், ஆலயத்திற்கு அழைத்து வருகிறீர்கள். இந்த ஆலயத்தையா எனக்கு பரிசாகத் தரப்போகிறீர்கள்?" – கிளியோபாட்ரா கேட்டாள்.

"இது, எங்களது காதல் தெய்வம் குடிகொண்டுள்ள கோவில். நீயும் ஒரு காதல் தேவதைதானே.அதனால்தான் உனக்கான பரிசை இந்த காதல் கோவிலில் உருவாக்கி வைத்திருக்கிறேன்".

"என்னது… பரிசை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா?"

"அடடா… உண்மையைச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறதே…"

"நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை. என்னை குழப்பத்திற்குள் மேலும் மேலும் ஆழ்த்துகிறீர்கள்".

"நீ ஒன்றும் குழம்ப வேண்டாம். உனக்கான பரிசு இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டோம்…" என்ற சீஸர், கிளியோபாட்ராவின் கேள்விக் கணைகளைத் தடுத்து நிறுத்தினார்.

இருவரும் அப்போது போய் நின்ற இடம், ஒரு அழகான சிலை முன்பு.

"எனது பேரழகியே! இந்தச் சிலைதான் நான் உனக்காக இந்தக் காதல் கோவிலில் வடித்த பரிசு. அதை நன்றாக உற்றுப் பார்…"

சீஸர் இப்படிச் சொன்னதும், தனது வேல் விழிகளை கூர்மையாக்கி அந்த சிலையை நோக்கினாள். உச்சி முதல் பாதம்வரை அப்படியே அவளைப் போலவே இருந்தது.

உடனே பரவசம் ஆன அவள், சீஸரைப் பார்த்தாள்.

"ஆமாம்… இந்த சிலை என்னைப் போலவே இருக்கிறதே…"

"உன்னைப்போல் அல்ல; அந்த சிலை சாட்சாத் எனது பேரழகியான நீயேதான்!"

வீனஸ் கோவிலில் தனது சிலையை பார்த்த கிளியோபாட்ரா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன்மீது சீஸர் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து நெகிழ்ந்தாள்.

தனது சிலையைப் பார்த்து பரவசமாகிக்கொண்டிருந்த கிளியோபாட்ராவுக்குள் திடீர் வெட்கம். அந்த வெட்கத்தில் அவளது முகம் சிவந்தே போனது.

"இது எனது சிலை ஓ.கே. ஏன் ஆடையின்றி இதை உருவாக்கி இருக்கிறீர்கள்? எனக்கு அதைப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது…" – சீஸரைப் பார்த்துக் கேட்டாள் கிளியோபாட்ரா.

"சிலை என்றால் நிர்வாணமாக இருந்தால்தான் அழகு. பெண்மைக்கு அழகு நாணம். சிலைக்கு அழகு நிர்வாணம்" என்று விளக்கம் கொடுத்துச் சமாளித்தார் சீஸர்.

காதல் கடவுள் வீனஸ் கோவிலில் கிளியோபாட்ராவுக்கு சீஸர் சிலை வடித்த தகவல் ரோமாபுரி முழுவதும் பரவியது.

சிலர், தங்களது வேந்தரின் ஆசை நாயகி எப்படி இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ள அந்த கோவிலை நோக்கி படையெடுத்தனர். பலரோ சீஸர் மீது கோபம் கொண்டனர். கிளியோபாட்ராவை அவர் ரோமாபுரிக்கு மகாராணி ஆக்கிவிடுவார் என்று எண்ணினார்கள்.

தங்களது நாட்டுக்கு அயல்நாட்டைச் சேர்ந்த ஒருத்தி மகாராணி ஆவதை ஏற்க அவர்களது மனநிலை தயாராக இல்லை.

மேலும், கிளியோபாட்ரா ரோமாபுரிக்கு பேரரசி ஆகிவிட்டால், அவளுக்கும், சீஸருக்கும் பிறந்த டாலமி சீஸருக்கு ரோமாபுரியின் அரசாளும் உரிமை வழங்கப்பட்டுவிடலாம் என்றும், எகிப்து போன்று ரோமிலும் குடியாட்சி மறைந்து மன்னராட்சி வந்துவிடலாம் என்றும் கருதினர்.

இதையொட்டி பல வதந்திகள் ரோம் மக்களிடையே பரப்பப்பட்டன. ரோம் குடியரசு கோட்பாட்டாளர்களான செனட் உறுப்பினர்கள் இந்தத் தகவல்களால் அதிர்ந்தனர். ரோம் நாட்டுக்காக சீஸரை ஆட்சியில் இருந்து அகற்றவும், தேவைப்பட்டால் கொலை செய்யவும் தயாரானார்கள், சில செனட் உறுப்பினர்கள்.

(இன்னும் வருவாள்…)

About The Author