கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா அழகில் மயங்கிக் கிடக்கிறான் ஆண்டனி என்கிற தகவல் எகிப்து மக்களுக்கு மட்டுமின்றி, ரோமாபுரி வரைக்கும் பரவிவிட்டது.

ரோம் நகரில் வசித்து வந்த ஆண்டனியின் மனைவி புல்வியா இதை அறிந்து சற்று அதிர்ச்சியானாள். ஆனாலும், ஒரு அரசன் இன்னொரு அரசனின் மனைவியைத் தூக்கி வருவதும், அழகான பெண்கள் மீது ஆசைப்படுவதும் காலம் காலமாக தொடர்வது என்பதால் அதை மிகப்பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை அவள்.

இதற்கிடையில், ரோமாபுரி மூவர் கூட்டணியில் முதன்மையானவனான ஆக்டேவியன், ரோமாபுரி முழுமையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்று வந்தான். அதையொட்டி, ஆண்டனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைத் தனக்குக் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்தான்.

இதையறிந்த ஆண்டனியின் மனைவி புல்வியா கொதித்தெழுந்தாள். அவள், ஆண்டனியின் சகோதரன் லூசியசுடன் சேர்ந்து ஆக்டேவியனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாள். இருவரும் படைகளைத் திரட்டி ஆக்டேவியனைப் போர்க்களத்தில் எதிர்கொண்டனர்.

ஆனால், எப்போதும் தந்திரமாக காய்களை நகர்த்தும் ஆக்டேவியன் படைகள் முன்பு எளிதில் தோற்றுப்போயினர். இருவரும் நாட்டைவிட்டே விரட்டப்பட்டனர். சிசியான் என்ற இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த புல்வியா, அங்கேயே நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தாள்.

அவள் இறந்த செய்தி தாமதமாகத்தான் ஆண்டனியை வந்தடைந்தது. தனது அதிகாரப்பூர்வ மனைவி என்பதால் ஓரிரு துளிகள் கண்ணீர் சிந்தினான். அத்துடன், ஆக்டேவியனின் கை வேகமாக ஓங்குவதால், தான் ரோமாபுரிக்கு உடனே புறப்பட்டுச் செல்வது அவசியம் என்றும் உணர்ந்தான். அதற்கான ஏற்பாடுகள் அதிவேகமாக நடைபெற்றன. அவன் ரோம் புறப்படும் நாளும் வந்தது.
ஆண்டனி ரோமாபுரிக்கு செல்வது கிளியோபாட்ராவுக்குப் பிடிக்கவில்லை. அவன், தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.. அதனால், தனக்கு என்னவென்றே தெரியாத நோய் வந்தது போல் அழகாக நடித்தாள்..

இதை, தனது நாடகத்தில் உயிரோட்டத்துடன் வர்ணிக்கிறார் ஷேக்ஸ்பியர்.

"ஆண்டனி… ரோமுக்கு கண்டிப்பாக போய்த்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டு, அதற்காக பொய் காரணங்களை என்னிடம் கூற வேண்டாம். போகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்லுங்கள். அந்த சொர்க்கமே எனது இதழிலும், விழியிலும் இருக்கிறது என்று நீங்கள் முன்பு பேசியது உண்மையாக இருந்தால், என்னைவிட்டுப் போகமாட்டேன் என்றல்லவா முடிவெடுத்து இருக்க வேண்டும்? என்னைவிட்டு நீங்கள் சென்றாலும், உங்களுக்காக எகிப்தில் ஒரு இதயம் இருக்கிறது என்பதை உணர்ந்தால் மட்டும் போதும்…" என்ற கிளியோபாட்ராவின் மீன் விழிகளில் கண்ணீர் இழையோடிக் கொண்டிருந்தது.

"என்னை மறுபடியும் மறுபடியும் போகாதே… என்று சொல்லாதே, கிளியோபாட்ரா. நான் அங்கே செல்வது காலத்தின் கட்டளை. நீ நினைப்பதுபோல் நான் உன்னைப் பிரிந்து அங்கே செல்லவில்லை. உனக்காக எனது இதயத்தை இங்கே விட்டுவிட்டுதான் போகப்போகிறேன்".

"எனக்காக உங்கள் இதயத்தையே இங்கே விட்டுவிட்டு போகப்போவதாகச் சொல்கிறீர்கள்? அப்படியென்றால், இங்கேயே இருந்துவிடலாமே…"

"இல்லை, கிளியோபாட்ரா! ரோமாபுரியில் உள்நாட்டு குழப்பம் உருவாகி இருக்கிறது. முன்பு வெறுக்கப்பட்டவர்கள் பலம் பெறுகிறபோது, புதிதாய் நேசிக்கப்படுகிறார்கள். ஆம்… ரோம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட செக்ஸ்டஸ் பாம்பேயஸ் மீண்டும் தலையெடுக்கத் துவங்கியுள்ளான். அவனுக்குக் கிடைத்துள்ள இந்த ஆதரவு, நம்மை அஞ்ச வைக்கிறது. அத்துடன், இன்னொரு காரணமும் இருக்கிறது…" என்ற, ஆண்டனி அதற்கு மேல் பேச முடியாமல் திடீரென்று விக்கித்தான்.

"என்ன காரணம்? ..?" பதற்றம் கலந்த ஆர்வத்தோடு கேட்டாள் கிளியோபாட்ரா.

"எனது மனைவி புல்வியா இறந்துவிட்டாள் அல்லவா?"

"ஆமாம்… இப்போது அதற்கு என்ன?"

"அவள் எனது மனைவி மட்டுமல்ல; மிகச்சிறந்த போர் வீராங்கனையும்கூட! அவளது மறைவு என்னவென்றே புரியாமல் என்னை ஏங்கச் செய்கிறது…" என்ற ஆண்டனியின் வீரக் கண்களில் கண்ணீர் துளிகள் அரும்பி பளிச்சிட்டன. அதை கவனித்துவிட்டாள் கிளியோபாட்ரா.

"புல்வியாவுக்காக நீங்கள் விடும் கண்ணீர் உண்மையானதா அல்லது நடிப்பா என்று என்னால் அறிய முடியவில்லை. ஆனாலும், உங்களை நம்புகிறேன். நிச்சயமாக உங்களது இந்தச் செயல் நடிப்பாக இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லா கடவுள்களும் உங்களுக்குத் துணை வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்களது வீர வாளில் எல்லாம் வெற்றியாகட்டும்…"

"மிகவும் மகிழ்ச்சி அன்பே! உனது பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். வெற்றிவீரனாக மீண்டும் எகிப்து திரும்புகிறேன். நான் இங்கிருந்து தற்காலிகமாக உன்னைப் பிரிந்து சென்றாலும், உன்னுடன் இருப்பதாகவே எண்ணுவேன்…" என்ற ஆண்டனி, கிளியோபாட்ராவிடம் விடைபெற்று, படைவீரர்களுடன் ரோம் புறப்பட்டான்.

இதற்கிடையில் எகிப்தில் ஆண்டனி போட்ட காமக்களியாட்டங்கள் குறித்து விசாரணை நடத்தினர், ரோமாபுரியின் மூவர் குழுவின் ஆக்டேவியனும் லெப்பிடசும்!

"லெப்பிடஸ்… ஆண்டனியின் மீது புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆட்சிப் பரப்பை விரிவுப்படுத்த எகிப்துக்குச் சென்றவர், கிளியோபாட்ரா விரித்த மோக வலையில் விழுந்துவிட்டாரே… ரோமாபுரியின் மூவர் குழுவில் தானும் ஒருவர் என்பதை மறந்துதான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரா?"

"அவசரப்பட வேண்டாம், இளைய சீஸர். ஆண்டனியின் குணங்கள்தான் நம்மை இப்படி பேச வைத்திருக்கின்றன. நிச்சயம் அவர் ரோம் திரும்புவார். அவரோடு நட்புறவு பாராட்டுவதுதான் நல்லது".

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"தங்கள் தந்தை சீஸரைக் கண்டு அஞ்சியவர்கள், இப்போது தலையெடுக்கத் துவங்கிவிட்டார்கள். செக்ஸ்டஸ் பாம்பேயஸ் கடல் பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டான். அவனது ஆதிக்கம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது".

"சரி… என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள்?"

"அவசரப்பட்டு ஆண்டனியை ஒதுக்கிவிடாமல், அனைவரும் சேர்ந்து, எதிரிகள் மீது போர் தொடுக்க வேண்டும். அப்போதுதான் பாம்பேயஸ் போன்ற திடீர் எதிரிகளை விரட்ட முடியும். இல்லையென்றால், ரோமப் பேரரசு மீது ஒரு பயம் இல்லாமல் போய்விடும்".

"நீங்கள் சொல்வதும் சரிதான். ஆண்டனி மீண்டும் ரோம் வரட்டும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்கிறேன்…" என்ற ஆக்டேவியன், "நாம் எல்லாம் ஒரே அணியில் இருந்தால், நான் எப்போது இந்த ரோமாபுரிக்குத் தனிப்பெரும் பேரரசன் ஆவது?’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.

(இன்னும் வருவாள்…)

About The Author