இருளான வீட்டுக்கு இரவு பதினோரு மணியளவில் தட்சிணாமூர்த்தி வீடு திரும்புவார். கடை மூடியபின்னும் வேலை இருக்கும். விரித்துக் காட்டப்பட்ட புடவைகளை ஒழுங்காகச் சீராக்கி மடித்துப் பழையபடி அடுக்கிவிட்டு வரவேண்டியிருக்கும். விற்பனைச் சிப்பந்திகள் செய்தாலுங் கூட அவசரம் என்றால், நிறையத் துணி இருந்தால் கூட வேலை செய்யாமல் முடியாது. மூக்களவு கீழிறக்கிய கண்ணாடி வழியே முதலாளி ஒருபார்வை பார்த்தாலே நடுங்கி விடுகிறது. இந்த வேலைக்கு நிறைய ஆட்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள், என்பது மறைபொருள்! எப்பவுமே பெரிய வேலைகளுக்கு டிமாண்ட் இராது, முறைவாசல் போல சின்ன வேலைதான் சட்டுச் சட்டென்று நிரம்பி விடுகிறது.
ஆனால் எப்படியோ இந்த இராத்திரி சைக்கிள் பயணம் இதமாக இருந்தது. தெருவின் மேடு பள்ளங்களில் சைக்கிள் ஏறி யிறங்கும் குலுக்கல்களில் சீட் கிரீச்சிட்டது. மனுசாளைப் போல சைக்கிளும் சொடக்கு போட்டது. ஊக்குபோல் கொண்டை வைத்த சீட் கழுதையாய் மேலும் கீழும் முகத்தை அசைத்தது. அது குனியாமல் அப்படியே உட்கார்ந்த வாக்கில் வண்டியோட்டிப் போக வேண்டும். வந்த நாள் முதல் இந்த நாள் வரை… என்று சிவாஜி அதில் பாட்டு பாடிப் போகிறார். வாடிக்கை மறந்ததும் ஏனோ… என்று ஜெமினி பாட்டும் உண்டு. காதலியைப் போயி வாடிக்கை கீடிக்கை என்கிறான், ஆபாசமாய் இருக்கிறது. சரோஜாதேவி சாவித்ரி இணையாகப் பாடிக்கொண்டே போகிறதாக ஒரு காட்சி ஞாபகம் இருக்கிறது. என்ன பாட்டு ஞாபகம் இல்லை.
அந்நேரம் வீடு திரும்ப பஸ் எதுவுங் கிடையாது என்பதால் சைக்கிள் எடுக்க ஆரம்பித்தவர், நள்ளில்லிரவின் குளிர்ச்சியும், சப்தம் உறங்கிய சூழலும் தனிமையும் மிக்க ஆசுவாசம் தருவதாய் உணர்ந்தார். வீடு திரும்ப அவருக்கு எந்த அவசரமுங் கிடையாது. காலையில் வீட்டில் யாருக்கும் சாப்பிட எதும் கிடையாது. பதினோரு பதினொண்ணரை மணிவாக்கில் வடித்த சாதம். இராத்திரி விரைத்துக் கிடக்கும். மோர் ஊற்றி, தொட்டுக்கொள்ள ஊறுகாய். வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. இந்த குளிர்ந்த சோறு, இதுவும் மாறவில்லை, என நினைத்துக் கொள்வார்.
என்றாலும் தன்னையே கேலி செய்துகொள்ள ரசிக்க இலக்கியம் கற்றுத் தந்திருந்தது. வாழ்க்கை சுகமானதுதான். சைக்கிளில் ஏறிக்கொண்டு, குஞ்சாமணி அமுங்க அமுங்க மிதித்துப் போய், வழியில் மரம் பார்த்தவுடன் நாய்போல உணர்ந்து, இறங்கி அண்டிராயர் ஒதுக்கிய கணம் ஆகாவென்றிருந்தது. உலகில் துட்டு கிட்டு எல்லாம் சுகமில்லை, இதுவே சுகம் என்றிருந்தது.
சில சமயம் இருக்கிற அசதிக்கு வண்டியை ஓட்டாமல் நடத்திக் கூட்டி வருவார். எதும் பாட ஆசையாயும் வெட்கமாயும் இருக்கும். ஞாயிறு போல விடுமுறைநாளில் வேலைக்குப் போகாமல் திகைப்பாகி விடுகிறது. வீட்டில் இருந்து என்ன செய்ய? வீட்டின் இருள் பூதாகரமாகப் பெருகி விடுகிறது அப்போது. அதில்லை இதில்லை என்று பெண்டாட்டி ‘இல்லை பாட்டு’ பாட ஆரம்பித்து விடுகிறாள். பூங்கா தாண்டி நூலகம் போய் சாண்டில்யனின் மகா அழகுப் பெண்களைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்பா இல்லாத நேரம் மகளும் பிள்ளையும் சற்று ஆசுவாசமாய் சுதந்திரமாய் உணர்ந்தார்கள்.
அவனுக்கு எதும் வேலை கிடைத்துவிட்டால் நல்லது. எங்கேயும் வேலை என்று தேடிப் போகிறானில்லை. எங்க போனாலும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கிறார்கள் என்று சலித்துக் கொள்கிறான். ‘வேலையில்லாமல் இருப்பதில்’ நிறைய எக்ஸ்பீரியன்ஸ் ஆகியிருந்தது அவனுக்கு. s s o. சிம்ப்ளி சிட்டிங் ஆபிசர். ரொம்ப அழுத்திச் சொன்னால் அப்பாவையே திட்டினான். இல்லாவிட்டால் வேலைக்குப்போட எனப் பணம் வாங்கிக் கொண்டுபோய் லாகிரி வஸ்துகளை அனுபவித்தான். தெருவுக்குத் தெரு இப்பல்லாம் மதுக்கடைகள் வந்துவிட்டன. பாசானா பாஸ் மார்க், ஃபெயிலானா டாஸ்மாக். அவசரத்துக்கு ஐந்நூறு ரூபாய்க்குச் சில்லரை வேணுமானால் அங்கேதான் கிடைக்கிறது. அவர் போக மாட்டார். அவர் அவசரம் என்று பத்து ரூபாய்க்குச் சில்லரை தேடி அலைகிறவர்.
பெண்ணை நினைக்க மனம் சுருண்டது. இவனுக்காவது வெளியே என ஆசுவாசப்பட ஓர் உலகம் இருக்கிறது. இருண்ட அறைகளில் அவளுக்கு என்ன கனவுகள் கிளைத்து விடும். கண்முழித்தால் மேலே உட்கார்ந்திருக்கும் கரப்பான் பூச்சியைப் பார்த்து அலறுவாள். சினிமாவில் கனவுக்காட்சிகள் எல்லாம் வெளிச்சமான அறைகளிலேயே நடக்கின்றன. தொபு தொபுவென்று கொட்டும் அருவியில் குளித்தபடியே டூயட் பாடுகிறார்கள். நாம அவ்ள நேரம் குளித்தால் ஜலதோஷம் பிடித்துவிடும். தொண்டை கட்டிய குரலில் டூயட் பாடணும், அதுவே ரியலிசம்!
வயிற்றுப்பாட்டுக்கே இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலை. சைக்கிள் பஞ்ச்சர் ஆனாலே கட்டுப்படியாகவில்லை. வாழ்க்கையே பஞ்ச்சரானாப் போல திகைத்து விடுகிறது. எப்படித் துட்டு சம்பாதிக்க தெரியவில்லை. எவ்வளவு கொண்டுவந்தாலும் காணாது என்றிருந்தது. எதும் காசு வரும், போனஸ், ஒவர்டைம் என்று பார்த்தால் அந்நாட்களில் தீபாவளி பொங்கல் என்று பண்டிகை வந்து புதுத்துணி, விசேஷச் சாப்பாடு எனச் செலவுகள் வைத்துவிடுகிறது லவ்டகபால் ஐதிகம். வரும் பணத்தை எதிர்பார்த்து முன்னமே கடன் வாங்கிவிட வேண்டியதாகி விடுகிறது. அந்தமட்டுக்கு மருத்துவச் செலவு வைக்காமல் நாள் ஓடுகிறதே புண்ணியம்.
இதில் வேலுச்சாமி கடையில் பழைய புத்தகம், இலக்கியம்., வாங்கி வந்தால் சம்சாரம் திட்டத்தான் செய்யும். அம்பது ரூபாய்ப் புத்தகம். அஞ்சு ஏழு என்று பேரம் பேசி வாங்க நான் பட்ட பாடு அவளுக்குத் தெரிவதில்லை. இதுல என்ன விசேஷம்னா இந்த இலக்கியம்… இதை எழுதும் எழுத்தாளர்கள் அவர்களும் பூவாக்கு சிரமதசையில்தான் இருக்கிறார்கள். பெண்டாட்டியின் புலம்பல்களைக் கேட்டுக் கொண்டு…
இதுல இன்னொரு வேடிக்கை. இலக்கியம்தான், அம்பது ரூபாய்ப் புத்தகம் அஞ்சு ரூபாய் என்று சல்லிசாகக் கிடைக்கிறது. ஒரு கிலோ அரிசி நாற்பது ரூபாய்ன்னு வெய்யி, போயி நாலு ரூபாய்க்குக் கேட்க முடியுதா?
மாப்பிள்ளை என்று அவளுக்கும் ஒருத்தனைப் பார்த்து கையைப் பிடித்துக் கொடுத்தால் நன்றாய்த்தான் இருக்கும். எட்டாவது வகுப்போடு நின்றுகொண்டாள். வயசுக்கு வந்த நாள் முதல் அவள் மனசில் கல்யாண நினைப்புகள் திரும்பித் திரும்பி அலைமோத ஆரம்பித்திருக்கும். ரமணி வாங்கி ஒளித்து வைத்திருக்கும் வாலிப லீலை புத்தகங்களை ஒருவேளை அவன் அறியாமல் எடுத்துப் படிக்கவும் செய்யலாம்… சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு வந்தார். மரம்.
வர வர ராத்திரி இந்தப் பக்கம் வந்ததும் இந்த மரத்தைப் பார்த்ததும் அவர் நிறுத்தா விட்டால் கூட சைக்கிளே நின்று விடும் போலிருந்தது.
தன் அக்கம் பக்கத்தில் கங்காவுக்கு எதும் நல்ல மாப்பிள்ளை, பெரிசா எதிர்பார்க்காத, கோவில்கல்யாண மாப்பிள்ளை தேறுகிறதா என்று அவர் தேடாமல் இல்லை. கனவுகள் அற்ற கங்கா. பெரிய ராஜகுமாரன் வரப்போவதில்லை என அறிந்தவள்தான் என்று தோன்றியது. அவர் காட்டிய பையனுக்குத் தலையை நீட்டுவாள் என்றுதான் தோன்றியது. எப்படியும் இனி பொறந்து வரப் போவதில்லை மாப்பிள்ளை, இருக்கறதில்தான் தேடணும், அல்லவா?
கடையில் வேலை பார்க்கும் சக ஊழியர் பையன்களைப் பார்த்தால், எல்லாருக்கும் எதாவது முகஞ் சுளிக்கிறாப்போல கெட்ட பழக்கம் இருந்தது. அவன் அப்பாவுக்கே பிடிக்காத கெட்ட பழக்கங்கள். ஏற்கனவே யாராவது லவ்வர் கிடைப்பாளா என அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
ரமணி எப்படி தெரியவில்லை.
லவ்வரும் கிடைக்கணும். அது நல்ல லவ்வராக, ஏமாத்தாததாக இருக்க வேண்டும். ஏன்னா நாமளே ஏப்ப சாப்பை, எனத் தேடித் திரியும் காலம் இது. கங்கா பயந்த பெண்தான். கோவில் குளம் என்று போய்வந்தாலும், கூட அம்மா போகிறாள். கூட்டமாய் வயசுப்பெண்கள் சாமி கும்பிடும்போது இளைஞரின் சாய்ஸ் அவள் அல்ல, என அறிந்து வருத்தப்படுவாளாய் இருக்கும். நல்ல உடைகளும், சிறு சிரிப்பும், விலுக்கென நிலத்தில் யார்க்கும் அஞ்சா பாவனைகளும்… கவர இதெல்லாம் வேண்டியிருக்கிறது.
மரத்தடியில் யாரோ உட்கார்ந்திருந்தான். பீடியை விசிறிவிட்டு "அண்ணாச்சி மணியென்ன?" என்று கேட்டான். இந்த ராத்திரியில் மணி பார்த்து என்ன செய்யப் போகிறான் தெரியவில்லை. எத்தனை மணிக்குப் பீடியை வீசினேன் என்று தெரிந்து கொள்ளப் போகிறானோ?… சற்று தள்ளிப்போய் ஒண்ணுக்கடித்தார். அவர் கையில் கடிகாரங் கிடையாது. அவனிடம் சொல்ல வெட்கமாய் இருந்தது. அவனைச் சுற்றி நிறையக் கூண்டுகள் இருந்தன. கிளிக் கூண்டுகள். அவர் பார்க்கிறதைப் பார்த்ததும் "கூண்டு வேணுங்களா?" என்று கேட்டான். பதினோரு மணிக்கும் வியாபார கவனத்தில் இருந்தான்.
பதில் பேசாமல் திரும்ப வண்டியேறினார். பெரும் கனவுகள் அற்ற கங்கா. வரும் மாப்பிள்ளையும் அவளைப் பூவாய் வைத்துத் தாங்குவான் என்றெல்லாம் நினைக்க எதும் இல்லை. வாழ்க்கை தன் நியதிகளோடு கட்டியிழுத்துப் போகிறதாக இருக்கிறது.
எல்லாத்துக்கும் துட்டு வேண்டியிருக்கிற உலகம். கனவுகளுக்கும் துட்டு வேண்டியிருக்கிறது. தோன்றிற் துட்டொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று.
நன்றுதான். நாம எங்க தோணினோம்? அப்பாம்மா இல்ல தோண வெச்சார்கள்!
அவளுக்குக் கல்யாணம் என்று ஆனாலும் என்னைப்போல ஒரு இருட்டான வீட்டில்தான் என்னைப் போல ஒரு சுமாரான ஆம்பிளையுடன்தான்… என நினைக்க வருத்தமாய் இருந்தது. கல்யாணம் என்று நான் கிளி போன்ற என் பெண்ணுக்கு புதிய கிளிக்கூண்டு தருகிறேன், என நினைத்துக் கொண்டார்.
துக்கமாகவெல்லாம் இல்லை. தூக்கமாக இருந்தது. ஓஹ் என்று கொட்டாவி வந்தது.
தெரு திரும்ப வீடு… தெரியவில்லை. இருட்டாய் இருந்தது அந்தப் பக்கம்.
(நன்றி – வடக்கு வாசல் இலக்கிய மலர் செப். 2008)