கிரீடத்தைக் கழட்டி வை (1)

பரமக்குடி.

காரைக்குடிக்கு அடுத்தபடியாய், செட்டிநாட்டுக் கொடி உயரப் பறக்கிற பரமக்குடி.

ஊருக்கு நடுவிலே, மெய்ன் ரோடிலே, ஜெய்ஹிந்த் த்யேட்டர் நிமிர்ந்து நின்ற பரமக்குடி.

ரேவதி, ரவி என்கிற ரெண்டு டூரிங் டாக்கீஸ்கள் ஆற்றுக்கு அந்தப்புறம் ஆறுமாசத்துக்கொருதரம் வந்து வந்து போன பரமக்குடி.

இளையாங்குடி மீன் சைக்கிள்கள் சர்ர் சர்ர்ரென்று கடந்து போகிற பரமக்குடி.

அய்யாச்சாமிச் செட்டியார் ஆயிர வைஸ்ய ஹைஸ்கூலைக் கேம்ப்ரிஜ்ஜாய்க் கொண்ட பரமக்குடி.

அந்தப் பரமக்குடிக்குத்தான் நம்ம கதாநாயகன் குடிவந்தான், 1950களின் ஆரம்பத்தில்.

பரமக்குடி – மதுரை சாலையில், ஊரிலிருந்து ரெண்டரை மைல் மாட்டு வண்டியிலோ, சைக்கிளிலோ அல்லது மின்சார இலாக்கா ஜீப்பிலோ வந்தால் காட்டுப் பரமக்குடியை அடையலாம்.

அந்தக் காட்டுப் பரமக்குடிக்குப் பெருமை சேர்க்கிற புண்ணியஸ்தலம், சென்னை மாகாண மின்சார இலாகாவின் ஸப் ஸ்டேஷன். ஸப் ஸ்டேஷனுக்கு இந்தப் பக்கம் மதுரை தனுஷ் கோடி நெடுஞ்சாலை, அந்தப்பக்கம் ரயில் தண்டவாளம்.

போட் மெய்ல் போகிற தண்டவாளம். தனுஷ்கோடிக்குப் போகிற போட் மெய்ல்.

இப்போது போட் மெய்லுமில்லை, தனுஷ்கோடியு மில்லை.

காட்டுப் பரமக்குடி ஸப் ஸ்டேஷன் வளாகத்தில், மின்சார இலாகா அஸிஸ்ட்டன்ட் இஞ்சினியருக்கும் அவருக்குக் கீழே பணியாற்றுகிற சூப்பர்வைசர், எல்.ஐ., வயர்மேன், லயன்மேன், பிரமாண்டமான பென்ஸ் லாரி ஓட்டுகிற டிரைவர் கன்னையா நாயுடு – எல்லோருக்கும் வீடுகள் உண்டு.

ஸெயின்ட் ஜோஸப்ஸ் காலேஜுக்குப் படிக்கப் போன அப்துல் கலாம், ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பி, பாம்பன், மண்டபம், ராம்நாட், பரமக்குடி, காட்டுப் பரமக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர், மானாமதுரை, மதுரை, மேலூர், விராலிமலை, துவரங்குறிச்சி வழியாய்த்தான் திருச்சி போய்ச் சேர்ந்திருப்பார்.

பாம்பன் பாலத்தில் ரயில், மதுரை வரைக்கும் வாஹித் பஸ், மதுரையிலிருந்து திருச்சிக்கு ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ் பஸ் (நாகர் கோவில் ட்டு திருச்சி, தடம் எண் 511).

ராமேஸ்வரம் – திருச்சி ரூட்டிலிருக்கிற காட்டுப் பரமக்குடி ஸப் ஸ்டேஷனில் அஸிஸ்டன்ட் இஞ்சினியருக்கு மகனாய் நம்ப கதாநாயகன் குடி வந்தான்.

பதினோரு வயசுப் பையன். பெயர் இப்போது தேவையில்லை. எக்ஸ் என்று குறிப்பிடுவோம்.

நிற்க.

இப்போது களம், செட்டியார் ஸ்கூல் என்று அறியப்பட்ட அய்யாச்சாமிச் செட்டியார் ஆயிரவைஸ்ய உயர்நிலைப் பள்ளியின் ஆண் ஆசிரியர்களின் ஸ்டாப் ரூம்.

கணக்கு ஆசிரியர் பாண்டியன் கடுகடுவென்றிருந்தார். அவருடைய கடுகடுப்பைப் புரிந்து கொள்ள அல்லது மேலும் கடுப்பேற்ற சக ஆசிரியர்கள் குணசீலன், ராஜமாணிக்கம், மற்றும் இளங்கண்ணன்.

இளங்கண்ணனின் பெயர் அவர் தமிழ்ப்பற்று மிக்கத் தமிழாசிரியர் என்று பறை சாற்றும். தன்னுடைய அதீத தாய்மொழிப் பற்றினால், பாலகிருஷ்ணன் என்கிற தன்னுடைய இயற்பெயரை இளங்கண்ணன் என்று தமிழ்ப்படுத்திக் கொண்டவர்.

"நமக்கெல்லாம் வில்லனா வந்து வாச்சிருக்காம்ப்பு இந்தச் சின்னப் பயல். நம்மள வீட்டுக்கு அனுப்பிச்சிட்டுத் தான் மறு வேல பாப்பம் போல" என்று பாண்டியன் பொருமியதற்குத் தூபம் போட்டார் ராஜமாணிக்கம்.

"அந்த ஸ்டெல்லா டீச்சர் அவனத் தலையில தூக்கி வச்சுக்கிட்டு கூத்தாடற அசிங்கம் இருக்கே, ஐயோ கன்றாவிப்பு."

"அத விடுங்கப்பு. இன்னிக்கி இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த ஸ்கூல் இன்ஸ்பெக்டர்ட்டல்ல இந்தப் பய நம்மள மாட்டி விட்டுட்டான்! இன்ஸ்பெக்டர் பதிமூணாம் வாய்ப்பாடு கேட்டார். ஒரு பயலுக்கும் சொல்லத் தெரியல. இந்தப்பய எந்திரிச்சி பதிமூணாம் வாய்ப்பாடு மள மளன்னு ஒப்பிக்கிறான், அதுவும் இங்லீஷ்ல. நீ மட்டும் எங்கப்பா படிச்சன்னு இன்ஸ்பெக்டர் கேட்டதுக்கு இந்தப் பயல் சொல்றான், இந்த வாத்தியார் சொல்லித் தரல, நா பழைய ஸ்கூல்ல படிச்சதுங்கறான்."

"எந்த ஸ்கூல்ல படிச்சானாம்?"

"ஊட்டியில படிச்சானாம், என்னமோ ப்ரீக்ஸ் ஸ்கூலாம். அவங்கப்பா ஈபில ஏஇயாம், ஊட்டியிலயிருந்து ட்ரான்ஸ்பர் ஆகி இங்க வந்திருக்கார். இந்தப் பய, தர்ட் டர்ம்ல வந்து சேந்துக்கிட்டு நம்மக் கழுத்த அறுக்க வந்திருக்கான். "

"திருக்கட்டும். நீர் ஏம்ப்பு பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லித்தரல?"

"ட எனக்கே தெரியாதேப்பு. நா படிக்கிற காலத்துல பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லித் தந்த அன்னிக்கி நா பள்ளிக்கூடத்துக்குப் போகலல்ல!"

இளங்கண்ணன் ‘குபுக்’ கென்று சிரித்தது பாண்டியனுக்கு மேலும் கடுப்பு.

"கண்ணா, சிரி. நாளக்கி மதியத்துல சோத்துக்கு வெஞ்சனம் இல்லன்னுட்டு நீ திரும்ப எங்கிட்டதான் வருவ. அப்பப் பேசிக்கிறோம்ப்பு."

பாண்டியன் இளங்கண்ணனைக் கருவிக் கொண்டிருந்த போது, சோர்ந்து போய் உள்ளே பிரவேசித்தார் ஆங்கில ஆசிரியர் அம்புரோஸ். எக்ஸ் குறித்து அவரிடமும் ஒரு பிராது இருந்தது.

"பயல், இன்ஸ்பெக்டர் முன்னால என்னத் தலகுனிய வச்சுட்டானே. செகண்ட் பார்ம் படிக்கிற பயலுக்கு ஷேக்ஸ்பியர் எதுக்குப்பு? பய டெம்பஸ்ட்லயிருந்து ஏரியல்ஸ் ஸாங் எடுத்து வுடறான். இன்ஸ்பெக்டர் மெய்ம்மறந்து கேட்டுட்டு இருந்துட்டு, போகும்போது, ஒங்களவிட இந்தப் பையன் நல்லாக் க்லாஸ் எடுப்பாம் போல இருக்கே சார்ன்னுட்டுப் போறார்."

பாண்டியனுக்குத் துணைக்கு ஆள் கிடைத்ததும் அவர் துள்ளினார்.

"அப்பு, இத நாம சும்மா விடக் கூடாது. ஹெட்மாஸ்டர்ட்ட போய் சொல்லுவோம். இந்தப் பயலுக்கு ட்டி ஸி குடுத்து அனுப்பச் சொல்லுவோம். அவங்க அப்பா வசதியானவர் தான். மதுர கிதுரயில போய் படிக்கப்போடட்டும். நம்ம பள்ளிக்கூடத்துக்கு இந்த மாதிரி பிஞ்சுல பழுத்ததெல்லாம் லாயக்குப்படாதுப்பு."

ஹெட்மாஸ்டரிடம் போனார்கள்.

‘இந்த மாதிரி ஒரு அதிகப்பிரசங்கிப் பையன் இந்த ஸ்கூலில் இருப்பது மற்ற மாணவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும், அது அவ்வளவு நல்லதல்ல’ என்று தங்களுடைய வாதத்தை முன் வைத்தார்கள். "தாழ்வு மனப்பான்மை மற்ற மாணவர்களுக்கா இல்லை ஆசிரியர்களுக்கா" என்று ஹெட்மாஸ்டர் சங்கர நாராயணன் எதிர்க்கேள்வி கேட்டார். "இந்தப் பையன் ஒரு ஜீனியஸ் சார், ஒரு ப்ராடிஜி சார்" என்று அகமகிழ்ந்து சொன்னார் தலைமையாசிரியர்.

"இந்த மாதிரி ஒரு பையன் நம்ம ஸ்கூல்ல வந்து சேந்தது நமக்கெல்லாம் பெருமை சார். நீங்க சொல்றீங்கங்கறதுக்காக நா அவனுக்கு ட்டி ஸி குடுத்து அனுப்பப் போறதில்ல" என்று ஆணித்தரமாய்ச் சொன்ன ஹெட்மாஸ்டர், அடுத்த படியாய் ஓர் அணுகுண்டைத் தூக்கி டமாலென்று போட்டார்.

"இப்பத்தான் ஸ்டெல்லா டீச்சர் வந்துட்டுப் போறாங்க. இந்தப் பையனுக்கு ஸெகண்ட் பாம்லயிருந்து போர்த் பாமுக்கு டபுள் ப்ரமோஷன் குடுக்கணும்னு கேட்டுட்டுப்போறாங்க. இதப்பத்தி நா கரஸ்பாண்டன்ட் கிட்டப் பேசலாம்னு இருக்கேன்."

இது ஏதுடா முதலுக்கே மோசமாப் போச்சே என்று அம்புரோகம் பாண்டியனும் ஒரே குரலில் "நோ நோ" என்றார்கள்.

"சார் நீங்க அவனுக்கு ட்டி ஸி குடுக்காட்டிப் பரவாயில்ல, ஆனா, டபுள் பிரமோஷன் மட்டும் குடுத்துராதீங்க" என்று மன்றாடினார் பாண்டியன்.

"நீங்க நெனக்கிற மாதிரி அவன் ப்ராடிஜியெல்லாம் ஒண்ணுமில்ல சார். ஊட்டியில அவன் ஒரு இங்லீஷ் ஸ்கூல்ல படிச்சிருக்கான். ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சக்கரன்னு இங்க வந்து அவனோட மேதாவித்தனத்தக் காட்டிட்டிருக்கான், அவ்ளோதான் சார்."

பாண்டியன் சொன்னதற்கு பலம்மாய் மண்டையை ஆட்டி ஆமோதிப்பைத் தெரிவித்தார் அம்புரோஸ்.

ஹெட்மாஸ்டர் அவர்களை சமாதானப்படுத்தினார். "இந்தப் பையன் டபுள் ப்ரமோஷன்க்குத் தகுதியுள்ளவனா இல்லியாங்கறதுதான் இப்ப கேள்வி, இல்லியா? அதுக்கு ஒரு டெஸ்ட் வச்சுப் பாப்போம். நீங்க ஒரு ஸப்ஜெட் குடுங்க. அத அவன்ட்ட சொல்லி அந்த ஸப்ஜெக்ட்ல டீச்சர்ஸ்க்கு க்லாஸ் எடுக்கச் சொல்வோம். அவன் வெற்றிகரமா க்லாஸ் எடுத்துட்டான்னா. அவன் உண்மையிலயே மேதைதான், அவனுக்கு டபுள் ப்ரமோஷன்தான். அவன் இந்த டெஸ்ட்ல ஜெயிக்கலன்னா டபுள் ப்ரமோஷன் இல்ல. என்ன ஸப்ஜெக்ட் சொல்லுங்க."

இளங்கண்ணன் ‘ஷேக்ஸ்ப்பியர்’ என்றார். குணசீலன் ‘பதிமூணாம் வாய்ப்பாடு’ என்றார். "நீங்க ரெண்டு பேரும் சித்த சும்மாயிருக்கப்பு" என்று அடக்கிவிட்டுப் பாண்டியன் ‘ஜியாக்ரபி’ என்றார். "அது வேண்டாம்பு. ஜியாலஜி" என்றார் அம்புரோஸ்.

ஒப்புக் கொள்ளப்பட்டது.

போகிற போக்கில் பாண்டியன் ஹெட்மாஸ்டரைப் பார்த்துச் சொன்னார்: "சார் இந்த ஸ்கூல்ல ட்டை கட்டிட்டு வர்றதுக்கு ஒங்களுக்கு மட்டுந்தான் ரைட் இருக்கு. இந்தச் சின்னப்பய டெய்லி ஒங்களுக்குப் போட்டியா ட்டை கட்டிட்டு வர்றான் சார்."

"இந்தச் சின்னப்பையன் எனக்குப் போட்டியில்ல பாண்டியன், நீங்க ட்டை கட்டிட்டு வந்தாத்தான் எனக்குப் போட்டி. சரி நீங்க கௌம்புங்க" என்று ஹெட்மாஸ்டர், பாண்டியனை மட்டந்தட்டி வழியனுப்பி வைத்தார்.

(அடுத்த இதழில் முடியும்)

About The Author