எங்கும் வேகம் எதிலும் வேகம் எனப் போகிறது இன்றைய உலகம். ஆற அமரத் தலைவாழை இலை போட்டுச் சாப்பிட்டது போய் துரித உணவு (Fast Food) பெரிதாக விரும்பப்படுகின்றது. சாண்டில்யன், அகிலன் போன்றவர்களின் பெரிய புதினங்களை வாசித்த காலம் மலையேறிப் போய் ஒரு பக்கக் கதைகளைச் சுவைக்கும் காலம் வந்து சேர்ந்திருக்கின்றது. 3 மணி நேரத் திரைப்படங்களைக் குறும்படங்கள் ஓரங்கட்ட முயல்கின்றன. இந்நிலையில் விளையாட்டை மட்டும் விட்டு வைப்பார்களா? ஐந்து நாள் டெஸ்ட் பந்தயங்கள் மதிப்பிழந்து, 50 ஓவர்கள் கொண்ட மோதல் பிறந்தது. அதுவும் போய், இப்பொழுது 20 ஓவர்களில் ஆட்டத்தை முடித்துப் பார்க்கும் வேகம், மோகம் வந்து விட்டது.
கிரிக்கெட் உலகின் அண்மைய அறிமுகமான 20 ஓவர் மோதல்கள், ஆரம்பத்தில் மாநிலரீதியாக இங்கிலாந்திலும், வேல்ஸ் நாட்டிலும் ஆடப்பட்டன. விறுவிறுப்பான இந்த வேக விளையாட்டு, இப்பொழுது ஐ.பி.எல் மூலம் கிரிக்கெட் விசிறிகளின் டார்லிங்காக மாறியுள்ளது!
இன்டியன் பிரீமியர் லீக் எனும் பெயரில் 20 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகின்றது. உலக நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கும் துடுப்பாட்டக்காரர்களையும் (Batsmen), பந்து வீச்சாளர்களையும் இந்தியாவின் பல்வேறு மாநிலக் கிரிக்கெட் கழகங்கள் விலைக்கு வாங்கி, தங்களுக்கென ஓர் அணியை உருவாக்கி, ஆளுக்கு ஆள் மோதி, தங்களுக்குள் ஒரு வாகையரைத் (champion) தெரிவு செய்துகொள்கின்றன. 2008இல் முதல் தடவையாகத் தொடங்கப்பட்ட இந்தக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி, ஆண்டுதோறும் ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்து வருகின்றது. இவை, உலகிலேயே மிக அதிகமானவர்களால் விரும்பப்படும் போட்டிகளாக மாறியிருக்கின்றன. வணிகரீதியாகவும் ஏற்பாட்டாளர்களுக்குக் கொள்ளை இலாபம்.
2013இல் வணிக உலகில் இதன் சந்தைப் பெறுமானம் 3.3 பில்லியன் டாலர்கள். யுரியூப்பில் (YouTube) நேரடியாக ஒளிபரப்பாகும் முதல் விளையாட்டுச் சுற்றுப்போட்டி எனும் பெருமையும் இதற்கு உண்டு. கோலாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டு தன் விற்பனையைத் தொடர்ந்து வரும் பெப்சி நிறுவனந்தான் இந்தப் போட்டிகளின் வழங்குநர் (sponser) என்பதால் ‘பெப்சி இன்டியன் பிரீமியர்லீக்’ என்றே இதை அழைத்து வருகின்றார்கள்.
முதன்முதலில் 11 கழகங்கள் பங்கேற்புடன் தொடங்கியது ஐ.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரையில் சென்னை அணி இரண்டு தடவைகளும், ராஜஸ்தான் அணி, டெக்கான் அணி, கல்கத்தா அணி, மும்பாய் அணி ஆகியவை ஒரு தடவையும் வென்றிருக்கின்றன. 2013இல் மும்பாய் இந்தியன் அணிதான் சாம்பியனாகியது. ஆரம்பத்திலிருந்து மிக அதிகமான விக்கட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனை சிறீலங்காவின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் கையில். இந்த ஆண்டு 8 அணிகள்தான் பங்கேற்றுள்ளன. 2014இல் பஞ்சாப் அணி வெற்றிக் கிண்ணத்தை எட்டுமா? ஜூன் மாதம் பிறக்கும்போது முடிவு தெரிந்துவிடும்.
16ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகக் கருதப்படும் கிரிக்கெட் விளையாட்டு உலகெங்கும் உள்ள விளையாட்டுக்களில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகின்றது. அலுவல்ரீதியாக (officially) எந்தப் பதிவும் இல்லை என்பதால், இதன் ஆரம்பக்காலம் இன்று வரையில் குழப்பத்திற்குரியதாகவே இருக்கின்றது. முதலில், பிள்ளைகளின் விளையாட்டாக இருந்த கிரிக்கெட், 17ஆம் நூற்றாண்டில் பெரியவர்கள் விளையாட்டாக மாறியது என்று சொல்கின்றன சில குறிப்புகள். Bowls, Lawn Bowling என்று அழைக்கப்பட்ட விளையாட்டே கிரிக்கெட்டாக மாறியது என்றும் சொல்கிறார்கள். முன்பெல்லாம் செம்மறியாட்டின் உரோமத்தைச் சுருட்டிப் பந்தாகவும், சிறிய கழிகளைத் துடுப்பாகவும் பயனபடுத்தியிருக்கிறார்கள்.
என்ன கோலத்திலோ, இந்த விளையாட்டின் பிறந்த இடம் இங்கிலாந்து என்பதில் எந்தச் சந்தேகமுமே இல்லை. இங்கிலாந்தில் வெடித்த உள்நாட்டுப் போரால் கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை ஆடத் தடை பிறப்பிக்கப்பட்டிருந்த காலம் ஒன்றும் உண்டு. 1660இல் பந்தயம் கட்டுவோரை இந்த விளையாட்டு பெரிதும் ஈர்த்ததால், பலரிடையே பிரபல்யம் பெற ஆரம்பித்தது. 1664இல் 100 பவுண்ட் தொகைக்கு அதிகமாகப் பந்தயம் கட்ட முடியாது என்று ஒரு கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படியும், 17ஆம் நூற்றாண்டின் முடிவில், இந்த விளையாட்டுப் போட்டிகளுக்குப் பந்தயம் கட்டாத நாளே இல்லை என்ற நிலை வந்துவிட்டது.
17ஆம் நூற்றாண்டில் வடஅமெரிக்க மண்ணுக்கும் இந்த விளையாட்டு அறிமுகமாயிற்று. 18ஆம் நூற்றாண்டளவில் உலகநாடுகளெங்கும் கிரிக்கெட் போய்ச் சேர்ந்துவிட்டது. பிறகு, உலக அரங்கில் ஒரு முக்கிய விளையாட்டாகி விட்டதால் ஐ.சி.சி எனப்படும் அகில உலகக் கிரிக்கெட் கவுன்சில் இதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
வழமையான 5 நாள் டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து, 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் 2002 ஒக்டோபரில் அறிமுகமாக்கப்பட்டது.
5 நாள் ஆட்டத்தில் வேகமாக ஓட்டங்கள் குவிக்கும் கட்டாயம் இல்லை. எனவே, துடுப்பாட்டக்காரர் நிதானமாக ஆடுவார். சில ஓட்டங்களுக்காக அரைமணி நேரத்திற்கு மேலாக ஆடுவார்கள். பார்வையாளர்களுக்கோ, குறிப்பாக இதன் விதிமுறைகளைத் தெரியாதவர்களுக்குக் கொட்டாவி மேல் கொட்டாவியாக வரும். வர்ணனையாளர் நிறையப் பேசிக்கொண்டே இருப்பார். வெள்ளை உடை உடுத்திய கனவான்களின் சோம்பேறித்தனமான விளையாட்டு என்ற முத்திரையும் இதனால்தான் குத்தப்பட்டது. No Ball, Seamer, Maiden Over, Googly, Yorker , Leg Cutter , Duck, Hat-trick என்ற பெயர்களையெல்லாம் பயன்படுத்தி வர்ணனையாளர் பேசப் பேச, பார்வையாளருக்கு அலுப்புத் தட்டத் தொடங்கிவிடும்.
இதனால் அறிமுகமானவைதான் 50 ஓவர், 20 ஓவர் போட்டிகள். இவற்றில் சில மணி நேரங்களில் வெற்றி தோல்வி தெரிந்து விடுகிறது. பார்வையாளர்களையும் இவை நன்கு உற்சாகமூட்டுகின்றன.
ஆனால், டெஸ்ட் போட்டிகள் தரத்தில் குறைந்தவை அல்ல. பல நுணுக்கங்களைக் கொண்டது இந்த விளையாட்டு. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்தை எதிர்கொண்டு ஆட்டங்கள் எடுப்பது என்பது சாதாரணமல்ல. பந்து வீச்சாளரின் கை அசைவை நுணுக்கமாகக் கவனித்து, மிக இலாவகமாகப் பந்தை விளாசி ஓட்டங்கள் எடுப்பது எல்லோராலும் முடிகிற காரியமா? விரல்களால் பந்தைச் சுழற்றி, சுழல் பந்து வீசுவது ஒரு தனிப்பட்ட திறமை. இந்த நுணுக்கங்களை அதிகமாக டெஸ்ட் போட்டிகளில்தான் பார்க்க முடியும்.
இங்கிலாந்து (1877), அவுஸ்திரேலியா (1877), தென் ஆப்பிரிக்கா(1889), மேற்கிந்தியத் தீவுகள் (1928), நியூசிலாந்து (1930), இந்தியா (1932), பாகிஸ்தான் (1952), இலங்கை (1982), சிம்பாவே (1992), பங்களாதேஷ் (2000) ஆகிய நாடுகள்தான் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தரத்தைப் பெற்றிருக்கின்றன. பங்களாதேஷ்தான் டெஸ்ட் உலகின் கடைசிப் பிள்ளை. நெதர்லாந்து, கனடா போன்ற நாடுகளும் சொற்ப அளவில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன.
பெண்களும் கிரிக்கெட் விளையாடி வருகின்றார்கள் என்பது பரவலாக அறியப்படாத ஒன்று. 1887இல் முதன்முதலாக ஒரு கிரிக்கெட் கழகம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டு பெண்களால் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இந்தக் கழகம் 1957 வரை நீடித்தது. 1926இல் பெண்கள் கிரிக்கெட்டுக்கான அமைப்பை ஆரம்பித்திருக்கின்றார்கள். 1958இல்தான் அகில உலகரீதியாகப் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்கள். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பல மேற்கிந்தியத் தீவுகளிலும் பெண்கள் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது.
கனவான்களின் விளையாட்டு, சிக்கலான பல விதிமுறைகள், மட்டைகள் (Pads), துடுப்பு (Bat), பந்து, தலைக்கவசம் (Helmet) என்று பற்பல தேவைகள் கொண்ட இந்த விளையாட்டைச் சிறு வயதில் எப்படி விளையாடினோம் என்பது இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது. தென்னை மரத்தடியில் கரித்துண்டினால் மூன்று கோடுகள் இழுத்துவிடுவோம். ஸ்டம்பு ரெடி! தோப்பில் தென்னை மட்டைகளுக்குப் பஞ்சமில்லை. அளவாக வெட்டி எடுத்துக் கொள்வோம். மட்டை தயார்! விக்கட்டை வீழ்த்த முடியாது. கரிக்கோட்டில் பந்து விழுந்தது என்பதை எந்த நடுவர் உறுதிப்படுத்துவது? ‘அவுட்’ என்று குரல்கள் பலமாக ஒலித்தால் அவுட்தான்!
பக்கத்து வீட்டு யன்னல் கண்ணாடிகளைப் பந்து உடைத்தபோது கிடைத்தது சிக்ஸர் அல்ல. நல்ல பிரம்படி. விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இன்னோர் இடத்தில் விளையாடுவோம். அங்கும் இதே கதை தொடரும். ஆனால், விளையாடுவதை விட்டதாக நினைவில் இல்லை.
துள்ளித் திரிந்த பள்ளிக்காலக் கிரிக்கெட் அது… சாதனைகளும் வேதனைகளும் ஏராளம். பதிவுகள்தான் இல்லை. டான் பிராட்மேனுக்குப் போல் சர் பட்டம் தரவும் எவருமே இல்லை…