அன்றிரவு அப்பா ஹாலில் விளக்கெரித்துக் கொண்டு, கைவசம் இருந்த சீட்டுக்கட்டைப் பிரித்து, தனக்குத்தானே ஆடிக் கொண்டிருந்தார். சாப்பிடவும் வரவில்லை.
அம்மா ,உமா இருவரும் சாப்பிடவில்லை. காலையில் பார்த்தபோது இனிப்பில் எறும்புகள் மொய்த்திருந்தன.
"வேஸ்ட்டாப் போச்சேடி"
அம்மா எதைச் சொன்னாள் என்று புரிந்தது.
"எறும்பாவது சாப்பிடட்டும்மா.. தட்டி விட்டுராதே.. பின் பக்கமா வெளியே வச்சுரு."
"நீயே வச்சுட்டு வா"
உமா எறும்புகளின் அணிவகுப்பினைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தாள்.
"இன்னிக்கு லீவு போடட்டுமாம்மா"
"உன் இஷ்டம்"
"நீயும் வாம்மா. எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம்."
"நான் வரலே"
"உனக்கு அலுப்பு வரலியாம்மா"
"எதையும் மனசுக்குக் கொண்டு போனாத்தான் அலுப்பும் இனிப்பும். எட்ட வச்சு வேடிக்கை பார்த்தா ஒரு நாள் ஓடறது ஒரு நிமிஷத்துல"
அம்மா! பெண் தினகர்! ஏன் இந்த கோணத்தில் அம்மாவை இதுவரை யோசிக்கவே இல்லை. அப்பாவின் ஆக்கிரமிப்பில் சுயம் தொலைத்த பெண்மணி என்றே பட்டியல் போட்டு வைத்தது தன் தவறுதானா?
"அம்மா"
"வலிக்கிறதாடி?"
கன்னம் தொட்டுக் கேட்டாள். இரு விரல்களின் தடம் பதிந்த இடம். லேசாய்..
"இல்லம்மா"
"கஞ்சி போடட்டுமா"
"அம்மா எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு தோணுதும்மா"
"ம்"
"ஏதோ விரக்தியில் சொல்லலே. நல்லா யோசிச்சுத்தான் சொல்றேன்"
அம்மா மெளனமாய் இருந்தது யோசித்ததாலா.. அல்லது யோசிக்க விரும்பாததாலா.. என்று புரியவில்லை.
"தினகர் மேல எனக்குப் பிரியம் உண்டும்மா. ஆனா அது கல்யாணம் வரைக்கும் போகுமான்னு புரியலே. அவனுக்கும் சில அபிப்பிராயங்கள், யோசனைகள், தெளிவுகள், தீர்மானங்கள் எல்லாம் இருக்கு. அது எப்பவும் எனக்கு சந்தோஷம் அல்லது நிம்மதி தருமான்னு தெரியலே. ரெண்டு பேரும் பிரியமான முறையில முரண்படறோம்"
அம்மா இப்போது உமாவைக் கூர்ந்து கவனித்தாள்.
"அவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கற ஆசை இருக்கான்னு கூட எனக்குத் தெரியாது. கேட்டுத் தெரிஞ்சுக்கிற விருப்பமும் இப்ப எனக்கு இல்லே. நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கறதால என்ன மாற்றம் வரும்னு புரியலே"
"என்னடி சொல்றே"
"அம்மா அப்பாவை விட்டுட்டு நீ என்னோட வரியான்னு கேட்க நினைச்சேன். வேணாம்மா.. அதுவும் அவசியம் இல்லே.. நாம இப்படியே இருக்கலாம்"
"எங்க காலத்துக்குப் பிறகு நீ தனியா.."
"இல்லம்மா.. நான் தனி இல்லே.. இப்ப தினகர்.. அப்ப யாராவது என் சுயம் புரிஞ்சு.. என்னோட நல்ல நட்பு பாராட்டி.."
"இது வெறும் கனவுடி.. யதார்த்தம் இல்லே"
"அப்பாவோட வாழ்க்கை சீட்டுக் கட்டுல அடங்கற மாதிரி.. உன்னோட வாழ்க்கை சமையல்கட்டுல முடியற மாதிரி.. என்னோட வாழ்க்கையும் நினைவுக் கூட்டுல இருக்கட்டுமே"
"தினகரே வந்து கேட்டா?"
"அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவா எடுக்க.. நம்ம மனசுல ஒரு தெளிவு வேணும் இல்லியா.. அதைத்தாம்மா இப்ப வளர்த்துக்கறேன்"
எழுந்து நின்ற மகளிடம் வயதுக்கு மீறிய முதிர்ச்சி இருப்பதாய் புலப்பட்டது அம்மாவுக்கு. தன்னையும் அறியாமல் பெருமூச்சு விட்டாள். அதில் கொஞ்சம் பெருமிதமும் குழைந்திருந்தது.
(முடிந்தது)
very touching story