அத்தை ஊரிலிருந்து வந்திருந்தாள். பெண்ணுக்குக் கல்யாணமாம். பத்திரிகை வைத்து நேரடி அழைப்பு.
"உமாவுக்கும் இவளுக்கும் ஆறு மாசந்தான் வித்தியாசம்"
அம்மா அதைக் காதில் வாங்காத மாதிரி நின்றதால், அத்தை இன்னொரு தரம் சொன்னாள்.
"அவனை நம்பாதே. கட்டு இருந்தாப் போதும். சோறு, தண்ணி வேண்டாம்"
அம்மாவின் முகம் இப்போதெல்லாம் என்ன நினைப்பு ஓடுகிறது என்று புலப்படுத்துவதில்லை.
"அவனை நீயாச்சும் திருத்தி வழிக்குக் கொண்டு வருவேன்னு பார்த்தோம். ம்ஹூம்.. உனக்கும் சாமர்த்தியம் இல்லே"
உறவுகளோடு எந்தவிதப் போக்குவரத்தும் ஏன் அம்மா வைத்துக் கொள்வதில்லை என்று உமாவுக்கு இப்போது புரிந்தது.
"ஏன் அத்தை.. இப்ப நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டீங்களா?"
உமா இயல்பான குரலில்தான் கேட்டாள். அம்மாவுக்கு ஏதோ புரிய, பின்னாலிருந்து ‘வேண்டாம்டி’ என்பது போல் சைகை செய்தாள்.
"நல்லா விசாரிச்சாச்சு.. ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அவ்வளவு ஏன்.. அவரே மனசு விட்டு பேசினார்.. என்னைப் பத்தி நானே சர்டிபிகேட் தரக் கூடாது. ஆனாலும் சொல்றேன். ஆபீஸ்ல எப்பவும் ஏதாவது பெரிய மனுஷா வந்தா, என்னைத்தான் அனுப்புவாங்க. கம்பெனி கொடுக்கணும். வர்றவனுக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருந்தா ஹோட்டல் ரூமுக்கு வரவழைச்சு தரணும். முதல்ல ஒரு மரியாதைக்கு ‘சிப்’ பண்ணேன். அப்புறம் இதுவே பழக்கம் ஆயிரும்னு விட்டுட்டேன்னார்"
"ஓஹோ" என்றாள் உமா.
"பாரேன்.. என்ன வெளிப்படையா பேசறார்னு" அத்தையின் முகம் பூரித்திருந்தது.
"குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது."
உமா பட்டென்று சொல்லி விட்டாள்.
அத்தையின் முகம் செத்துப் போனது. பிறகு சுள்ளென்று கோபம் கொப்பளித்தது. "என்னடி பேசறே"
"நீ விடு.. ஏய் உமா.. உள்ளே போடி" அம்மா விரட்டினாள்.
"சும்மா இரும்மா. இத்தனை வருஷம் நாம எப்படி இருக்கோம்னு கவலைப்படாதவங்க இப்ப வந்து புத்தி சொல்றாங்க"
"உங்களை மதிச்சு உறவு விட்டுரக் கூடாதுன்னு வந்தேன் பாரு.. எனக்கு வேணும்" அத்தை எழுந்து போய் விட்டாள்.
தினகர் சிரித்தான்.
"ம்ம்.. அப்புறம்"
"அப்புறம் என்ன.. அம்மாவுக்கு என் மேல பயங்கரக் கோபம். என்னாலதான் அத்தை உறவு போச்சுன்னு"
"உனக்கு ஏன் அப்படி ஒரு கோபம் வந்தது?"
"தெரியலே தினகர். ஒரு வேளை அம்மாவை அத்தை இன்ஸல்ட் பண்ணது எனக்குப் பிடிக்காம அப்படி பேசிட்டேனா!"
"ஊஹூம். அதை விடவும் வேற காரணம் இருக்கணும்"
உமா யோசித்தாள். கோபத்துக்கான காரணத்தை அறிய மூன்றாம் மனுஷி போல, நிகழ்ந்ததை மனத் திரையில் ஓட்டிப் பார்த்தாள்.
"உனக்கு உங்கம்மா மேலேயே கோபம் இருக்கு, இப்படி அநியாயமா ஏமாந்திருக்கக் கூடாதுன்னு"
தினகர் நிதானமாய்த்தான் சொன்னான். உமாவின் முகம் அப்படியே வாடிப்போனது.
தினகர் எப்போது நகர்ந்தான் என்று புரியவில்லை. உமாவால் மேலே பேச இயலாத மெளனம். உள்ளே குமுறல்களுடன் வெளியே அமைதி.
(தொடரும்)