அம்மாவுக்கு அப்பா, அவரது சீட்டாட்ட மற்றும் பிற வெறிகள் பழகிப் போய் விட்டன.
பழைய பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தில் அம்மாவின் புஷ்டியான தோற்றம் இப்போதும் பிரமிப்பு தரும். அப்பாவைப் பின்னுக்குத் தள்ளி ராணி போல கம்பீரம் காட்டிய புகைப்படம்.
இப்போது எடுத்த புகைப்படம் ஏதோ ‘திருஷ்டி’ போலத் தெரிகிறது. அந்த அம்மாவா இப்படி ஆனாள்?
‘உன்னால தடுக்க முடியலியாம்மா’ உமா ஆற்றமாட்டாமல் ஒருதரம் கேட்டிருக்கிறாள்.
அம்மா சிரித்தாள். வெற்றுச் சிரிப்பு.
"இல்லம்மா.. அப்ப நீ என்ன சொன்னாலும் அப்பா கேட்டிருப்பார். அந்த மாதிரி இருந்திருக்கே"
அம்மாவின் புன்முறுவலில் இன்னமும்கூட தேயாத பிரபை.
"ஆம்பிளையை நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான். அவன் என்ன தீர்மமானிக்கிறானோ அதுதான்.. சில சமயம் அந்தத் தீர்மானம் நம்மாலன்னு பொய்யா கெளரவப்படுத்துவான்"
"என்னம்மா.. நம்ம திரிவேணி அத்தை.. ஙேன்னு இருந்துகிட்டு.. மாமாவை எப்படி கையில வச்சிருக்கா"
"திரிவேணி அத்தை பேர்ல எவ்வளவு சொத்து இருக்குன்னு தெரியுமா.. மாமா அடங்கிப் போனது சுயநலத்துல.. அவருக்குப் பணத்தாசை.. உங்க அப்பாவுக்கு வேற"
உமாவுக்கு இது மாதிரியான உரையாடல்கள் அலுத்துப் போனதால்தான் வீட்டில் பேச்சைச் சுருக்கியது.
அப்பா எப்போதாவது குடும்பத் தலைவர் வேஷமும் போட்டிருக்கிறார். உமாவைக் கையைப் பிடித்து ஆற்றங்கரைக்கு அழைத்துப் போன சிறு வயசு ஞாபகங்கள்.
"ஏம்பா.. தண்ணியே இல்ல"
"மழை பேஞ்சாதானே"
"மழை ஏன் பெய்யலே"
"மரமே இல்லியே. எல்லாத்தையும் வெட்டிட்டா"
"ஏம்பா.. மரத்தை வெட்டறா?"
சங்கிலித் தொடர் போலக் கேள்விகள். அலுக்காமல் பதில் சொல்லிய அப்பா.
இருட்டிய பின்னும், எதிர் உருவம் சரிவரப் புலப்படாத நிலையிலும் மணல் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கொடி ஏற்றும் வரை பொறுமையாய்க் காத்திருப்பார்.
"அம்மாவும் நம்ம கூட வரலாம்ல"
"அவளுக்கு சமையலறை போதும். வான்னா வரமாட்டா"
"அம்மாவுக்கு ரசனையே இல்லைப்பா"
அப்பா பதில் சொல்ல மாட்டார். எப்படிச் சொல்வார். அவரால் சிறகு முறிக்கப்பட்ட பறவையைப் பற்றி என்ன சமாதானம் தர இயலும்?
உமாவுக்கு அப்போது அப்பாவைப் பிடித்துப் போனது. அருகே இருக்கிற நேரங்களில் தோழனாய் நிற்கிற அப்பா, சிடுசிடுக்கிற அம்மாவை விட கூடுதலாய்ப் பிரியம் சம்பாதிக்கிறார்.
பத்து வயசுக்கு மேல்தான் அம்மாவைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதுவும் சீட்டாட பணம் கிடைக்காத ரெளத்திரத்தில் அம்மாவின் தலையைத் தாக்கிய டம்ளர். மூன்று தையல்கள். ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அம்மா.
அப்பாவின் பிம்பம் அன்று முதல் முறையாகத் தகர்ந்தது. இவர் தகப்பன் இல்லை. தகப்பனுக்குரிய குணங்கள் இல்லை.
"அப்பா வேணாம்மா"
"போடி பைத்தியம்"
அம்மா ஏன் அப்பாவைத் தாங்கிப் பிடிக்கிறால்ள் என்று புரியவில்லை., இந்த நிமிஷங்கூட. பி.காம். படித்து வேலைக்கு அமர்ந்த பின்னும், சுயமாய் முயற்சித்து அலுவகத் தேர்வு எழுதித் தேறி, இன்று கெளரவமாய் இருக்க முடிந்தபோதும், அம்மா அப்பாவின் நிழலில் நிற்பதுபோல ஏன் காட்டிக் கொள்கிறாள்?
"சாப்பிட வரியா" அம்மாவின் குரல் கேட்டது. வேளை தவறாமல் நிகழ்கிற ஒரே வேலை.
"அம்மா"
"ம்"
"கையில் போடறியா.. பிசைஞ்சு"
அம்மா எதுவும் பேசவில்லை. உள்ளே போனாள். ஒரு ஏனத்தில் கலந்து கொண்டு திரும்பியவளின் இன்னொரு கையில் அப்பளத்தட்டு.
உருட்டிப் போட்ட கவளம் இதமாய் தொண்டைக் குழியில் இறங்கியது. எதிரே அப்பாவும் இதே போலக் கை நீட்டி அமர்ந்தால்..
கொடுப்பினை இல்லை. இயற்கை தன் போக்கில் நிர்ணயிக்கிறது.
"கீழே வழியறது பாரு."
"துடைச்சிரலாம். இப்பவும் சாம்பார்ல நீதான் எக்ஸ்பர்ட்.. அதே டேஸ்ட்"
"ஒரே புழுக்கமா இருக்குடி"
"போம்மா ஐஸ் வைக்கிறேன்னு கிண்டல் பண்றியா"
மீண்டும் உருண்டையைக் கையில் போட்ட அம்மாவிடம் சொன்னாள்.
"உன்கிட்டே நல்ல புடைவையே இல்லியே. ஏம்மா பிடிவாதமா பழசையே கட்டிக்கறே"
"யாருடி தினகர்?"
அம்மா பதில் கேள்வி கேட்டதும் உமாவுக்குப் புரையேறியது. தும்மியதில் சாதம் சிதறியது.
"அம்மா.."
"யாரு தினகர்.. சொல்லு"
(தொடரும்)
“