அப்பாவின் குரல் உரத்துக் கேட்கிறது என்றால், இரண்டே காரணங்கள்தான். ஒன்று அப்பா வீட்டில் இருக்கிறார். இரண்டாவது, அப்பா அம்மாவிடம் பனம் கேட்கிறார்.
உமா புரண்டு படுத்தாள். எழுந்து போய்ப் பார்க்க மனசில்லை. அப்பாவின் இப்போதைய தோற்றம் ஏற்கெனவே பலமுறை பார்த்துச் சங்கடப்பட்டது.
"என்ன சொல்றே. உங்கையில ஒரு பைசா கூட இல்லியா?"
அம்மாவின் முகம் நசுங்கிப் போய் பல மாதங்களாகி விட்டன. ஆறு கஜம் புடைவை தன் வர்ணம் இழந்து அம்மாவின் மெலிந்த தேகத்தை அவஸ்தையாய் சுற்றிக் கொண்டிருந்தது.
"பதில் சொல்லுடி"
"இல்லே"
"ஒரே ஒரு ரூபா"
"இல்லே"
"தெருவுல நிமிஷத்துல நூறு ரூபா பார்த்துருவேன். வீட்டுலேர்ந்து ஒரு பைசாவாவது எடுத்துக்கிட்டுப் போகணும். அதான் கேட்கிறேன்"
அம்மாவின் குரல் கேட்கவில்லை. இதே சால்ஜாப்பை அப்பா நிறைய தடவைகள் உபயோகித்து இருக்கிறார்.
"கொடுடி.. எனக்கு நேரமாச்சு"
முள் நகர நகர அப்பாவின் தீவிரம் வலுப்பெற்று ஏதேனும் காசு பார்க்காமல் விட மாட்டார் என்று புரிந்தது உமாவுக்கு.
இதன் அடுத்த கட்டமாய் அம்மாவின் மீது ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ நிகழக்கூடும். அம்மாவாவது கொடுத்து தொலைக்கலாம். வெட்டி வீம்பினால் இந்த மனிதனைத் திருத்த முடியப் போவதில்லை.
"என்னடி.. தருவியா.. மாட்டியா?"
குரல் நிதானமானது. உமா சட்டென்று எழுந்து வந்துவிட்டாள். "அம்மா"
கண்ணீர் துளிக்கூட புலப்படாத இறுக்கமான முகத்துடன் அம்மா திரும்பினாள். ஆறு கால பூஜை தவறிய அம்மன் போல சோகை அப்பிய முகம்.
"இதை அப்பாகிட்டே கொடும்மா"
அம்மாவின் பிடிவாதம் உமா நீட்டிய ரூபாய் நோட்டை வாங்க மறுத்தது.
"பிளீஸ்மா"
அருகில் வந்து கையில் திணிக்க, பிடி அகன்று கீழே தவறிய தாளை அப்பா லாகவமாய் ஏந்திக் கொண்டார். முகம் பிரகாசித்தது.
"இனி ஜெயம்தாண்டி. இதை முதல்லேயே செஞ்சிருக்கலாம்ல"
செருப்பு சப்திக்க தெருவில் இறங்கிப் போனார். இனி எப்போது வீடு திரும்புவாரோ அவருக்கே வெளிச்சம். ஐம்பத்திரண்டு கார்டுகள். ஏஸ்.. கிங்.. க்வீன்..ஜாக்.. என உபரியாய் ஜோக்கர்களுடன் கடை வீதியின் ஒரு கட்டட முதல் மாடி அறைக்குள் வேறு ஒரு உலகத்தில் பிரவேசித்து நிற்பார்.
உமா மனசுக்குள் தேம்பினாள்.
மெளனமாய் நகர்ந்தது அன்றைய விடுமுறை தினம். நாளையிலிருந்து ஆறு நாட்களுக்கு அலுவலகம் சொர்க்க வாசலைத் திறந்து வைத்திருக்கும். இரவில் தூங்கும் நேரம் கூட அலுவலகம் சம்பந்தப்பட்ட கனாக்கள். அம்மாவும் அவளுங்கூட சம்பிரதாயப் பேச்சு மட்டும் பேசிக் கொண்டு.
உமாவால் முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அம்மா புதுப் புது சோகம் வைத்திருப்பாள். பேசப் போனால் பாரம் தலை மாறி ஏறிக் கொண்டு அழுத்தும்.
அப்பாவின் சீட்டாட்டப் பைத்தியம் ஒன்றும் புதிதில்லை. அம்மாவைப் பெண் பார்த்துத் திரும்பிப் போன தினத்திலேயே தெரியும். அதே ஊரில் அப்பா மட்டும் தங்கி விட்டார்.
‘கச்சேரிக்குப் பெயர் போன ஊர்’
‘நம்ம ஜானாவைப் பார்க்க வந்தானே.. குப்புசாமி வீட்டுத் திண்ணையில.. சீட்டு விளையாடிண்டிருக்கான்’
இத்தனை வெறியாய் இருப்பார் என்று தோன்றவில்லையாம். பெண் பிடித்துப் போனதால், இன்னொரு தரம் பார்க்க வசதியாய் பொய்க் காரணத்தோடு திண்ணையில் இடம் பிடித்ததாக நினைத்தார்களாம்.
மாப்பிள்ளை அழைப்பன்று இரவும் இடை விடாத கச்சேரி. ‘முகூர்த்தத்துக்கு நேரமாச்சு.. வாடா’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறை.
உமா பிறந்த நாள் அன்று அப்பா அதிக சந்தோஷத்தில் இருந்தாராம். ஆயிரம் ரூபாய் வரவு.
‘இவ பிறந்த வேளை’
(தொடரும்)
“