ஜே ஜே என்று கூட்டம் அலைமோதியது அந்தத் தெருவில். ஞாயிற்றுக்கிழமையன்று காலை பத்து மணிக்கும் சென்னையில் ஒரு தெருமுனையில் இப்படியொரு கூட்டமா!? அந்தத் தெருவில் திரையரங்கம் ஏதுமில்லை. ஆடித்தள்ளுபடி என்ற பெயரில் புடவைக் கடையோ அல்லது ‘செய்கூலி சேதாரம் எதுவுமில்லை’ என்று விளம்பரப்படுத்தும் ‘நகைமேளா’வோ இல்லை. பின் எப்படி இவ்வளவு கூட்டம்..? தியாகராயநகர் கிருஷ்ணகானசபாவில் ‘நாம சங்கீர்த்தனம்’ முடிந்து வெளியே வந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்தான் அது.
அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் பக்தி, தியானம், யோகம், கூட்டுப் பிரார்த்தனை. கீதா உபன்யாசம், இராமாயண பிரவசனம், நாம சங்கீர்த்தனம் போன்ற புதிய அலைகள் வீசத்தொடங்கியுள்ளன. மக்களிடையே ஆன்மீக சிந்தனை அதிகரித்து வருகிறது. காவேரியும் அவள் பக்கத்து வீட்டுப் பங்கஜம் மாமியும் அந்த நாம சங்கீர்த்தனத்தைத்தான் ரசித்துவிட்டு, கூட்டத்தின்ஊடே வேகவேகமாக நடந்து வந்துகொண்டிருந்தனர்.
காவேரியின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாத மாமி, "அம்மா காவேரி, உனக்கு சமமா எட்டிப்போட்டு நடக்க எனக்கு உடம்பிலே திராணியில்லே. ஏன் இப்படி ஓடறே?" என்றபடி மூச்சிரைக்க பின்னால் வந்துகொண்டே கேட்டாள். "என் அவசரம் எனக்கு, நான் போய்த்தான் எங்கம்மாவுக்கு சாதம் போடணும். தானே போட்டுண்டு சாப்பிடமாட்டாள். யாராவது பரிமாறணும். எங்கம்மாகிட்ட இருக்கிற பிடிவாத குணங்கள்ள இதுவும் ஒண்ணு. நாலு மணிக்கு சூடா காப்பி, இராத்திரி 8 மணிக்கு சுடச்சுட பலகாரம். இதெல்லாம் உங்களுக்கும் தெரிஞ்சதுதானே மாமி." என்றபடியே இன்னும் கொஞ்சம் நடையைக் கூட்டினாள் காவேரி.
சபாக்களுக்குப் போய் நல்ல கச்சேரிகளைக் கேட்பதில் ஒரு தனி ஆனந்தம் காவேரிக்கு. தியாகய்யர், புரந்தரதாசர், அருணகிரி, வள்ளலார் போன்ற மகான்களின் பக்திபூர்வமான சங்கீதத்தை காது குளிரக் கேட்கும்போது இந்த உலகத்தையே மறந்து விடுவாள். மனம் அப்படியே இசையில் லயித்துவிடும். கச்சேரி முடிந்ததும் வீட்டில் தனக்காகக் காத்திருக்கும் அம்மாவின் ஞாபகம் வந்து அவளது உற்சாகமெல்லாம் காத்துப் போன பலூன்போல் சப்பென்றாகி விடும்.
"என்ன காவேரி உம்முனு ஆயிட்டே?" மாமியின் கேள்விக்கு வெடித்துக் கொண்டு வந்தது காவேரியின் பதில். "பாகவதரின் கானாம்ருதம் இத்தனை நாழி தேனாய் இனிச்சிண்டிருந்தது. இப்போ வீட்டு நெனப்பு வந்து வேம்பாக் கசக்கறது.."
"காவேரி, இப்பத்தான் சத்தான விஷயங்களையும், தேன் மாதிரி சங்கீதத்தையும் காது குளிரக் கேட்டுட்டு வந்திருக்கே. மனசப்போட்டு இப்படி அலட்டிக்கலாமா?" மாமியின் வாய்தான் ஆறுதலாய்ப் பேசியதே தவிர, மனசு காவேரிக்காக இரக்கப்பட்டது. மாமி தொடர்ந்தாள். "இதப்பாரு. நீ இப்படி சலிச்சுக்கவேகூடாது. என்ன குறைச்சல் உனக்கு? மணிமணியா ரெண்டு குழந்தைகள். அவர் வெளியூர்லே வேலை பண்ணினாலும் அம்மாக்கு அம்மாவா, அப்பாக்கு அப்பாவா குழந்தைகளை வளர்த்து நன்னாப் படிக்க வச்சுட்டே. இப்போ பெங்களூரு, பம்பாய்னு அவா வேலைக்கும் போயாச்சு. இருக்கிற ஒரே பொறுப்பு உன் அம்மாதானே. இதிலே சலிச்சுக்க என்ன இருக்கு?" ஆறுதலாகச் சொல்கிறாள் மாமி.
"மாமி, என் குழந்தைகளாலே எனக்கு என்னிக்குமே பிரச்சினை இல்லே. பிரச்சினையே என் அம்மாதான். சின்ன வயசிலேயே எங்கப்பா போய்ட்டார். எனக்குக் கல்யாணம் ஆகிறவரைக்கும் என் மாமாகூடதான் இருந்தோம். அவரும் தங்கச்சி வாழ்க்கை இப்படி ஆயிருச்சேன்னு ரொம்பவே பரிதாபப்பட்டுட்டார். ஒரே பொண்ணுங்கிறதாலே நானும் அம்மாவை என்கூடவே வெச்சுண்டுட்டேன். அதுகூட தப்பில்லை. அம்மாமேல அளவுக்கதிகமா பாவப்பட்டுட்டேன். அதுதான் தப்பாய்ட்டது.." ஆற்றாமையுடன் பேசுகிறாள் காவேரி.
"காவேரி, உங்கம்மா ஒரு குழந்தை மாதிரி. உலகமே தெரியாத ஒரு வெகுளி. மனசிலே எந்தக் கோணலும் இல்லே. நான் ஒரு ஐடியா சொல்றேன். உனக்குப் பிடிச்சிருந்தா செஞ்சு பாரு." என்றுகூறிய மாமி தனது யோசனையை காவேரியுடன் பகிர்ந்து கொண்டாள்.
இதோ ஒரு மாதம் நொடிப் பொழுதில் ஓடிப்போய் விட்டது.
காவேரி தன் வீட்டின் உள்ளே நுழையும்போதே அமர்க்களமாக வரவேற்கிறாள் அவளது அம்மா.
"வா காவேரி! ஊர்லே மாமனார் உடம்பு இப்போ பரவாயில்லியா? மாமியார்தான் பாத்துக்கறாளா?" கேட்டுக் கொண்டே உள்ளே போய்க் கையில் காபியுடன் வருகிறாள் அம்மா.
"இந்தா காபி.. சூடு ஆர்றதுக்குள்ளே குடி. இன்னிக்கு தை வெள்ளிக்கிழமையில்ல.. தலையிலே ஒரு கை எண்ணை வைச்சுண்டு குளிச்சுட்டு வா. இப்பத்தான் ஹீட்டர் போட்டிருக்கேன். நீ குளிச்சுட்டு வரத்துக்குள்ளே ஒரு சாம்பாரும் கறியும் ஆயிடும். ஒரு வாய் சாப்பிட்டுட்டு ரயில்ல வந்த அசதி தீர கொஞ்சம் படுத்து எழுந்திரு. சாயங்காலமா கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய் கற்பகாம்பாளைத் தரிசனம் பண்ணிட்டு, உன் மாமனார் பேர்ல அர்ச்சனையும் பண்ணிட்டு வரலாம். நானும் வரேன்…"
கடகடவென்று மூச்சு விடாமல் நிகழ்ச்சி நிரல் வாசிக்கும் அம்மாவைத் திகைப்புடன் பார்க்கிறாள் காவேரி.
"நன்னு பாலிம்ப நடச்சி ஒச்சிதிவோ ராமா" என்ற தியாகய்யர் உருகி உருகிப் பாடிய பாடலைக் கேட்கும்போது நெகிழ்ந்து போனதைவிட இப்போது அம்மாவின் வார்த்தைகளில் அதிகமாகவே நெகிழ்ந்து போகிறாள் காவேரி.
மாமியின் யோசனை எதிர்பார்த்ததற்கும் மேலாகவே பலன் கொடுத்திருக்கிறது. அவசர அவசரமாகக் குளித்துச் சாப்பிட்டுவிட்டு மாமியைத் தேடிப் போகிறாள் காவேரி.
ஓடிப்போய் மாமியை அப்படியே இறுகத் தழுவிக் கொண்ட காவேரிக்கு கண்கள் குளமாயின. "எப்படி மாமி இப்படி..!?" பேச முடியாமல் நெஞ்சடைத்தது காவேரிக்கு. மாமி நிதானமாக ஆரம்பித்தாள்.
"இதுதாண்டி பொண்ணே குடும்பம்! அவசியம்னு வந்தால் எல்லாம் தானா சரியாயிடும். என்னையே எடுத்துக்கோ. கல்யாணமாகி தனிக்குடித்தனம் வந்தப்போ எனக்கு சமைக்கவே தெரியாது. இப்போ சமையல்ல என் வீட்ல என்னை மிஞ்ச ஆளில்லைன்னு சொல்ற அளவுக்கு தேறிட்டேன். மாமனாருக்கு உடம்பு சரியில்லே. உன்னை வரச் சொன்னான்னு சொல்லிட்டு நீ ஊருக்குப் போன. நீ ஏற்பாடு பண்ணின மெஸ்ல இருந்து உங்கம்மாவுக்கு சாப்பாடு வரும். ஆனா சொன்ன நேரத்துக்கு கரெக்டா வராது. வர்ற சாப்பாடும் ஆறி அவலாப் போயிருக்கும். மத்தியானம் காபிய தானே போட்டுக்கணும். வேற வழியில்லை.. வேலைக்காரியும் அப்பப்போ மட்டம் போட்டுடுவா. உன்னை மாதிரி பொறுமையா அத்தனை வேலையையும் அவளாலே செய்ய முடியலே. அப்பத்தான் உன் அருமை கொஞ்சங்கொஞ்சமா உங்கம்மாவுக்குப் புரிய ஆரம்பிச்சுது. ‘மாமி.. காவேரி பாவம் மாமி’ என்று வாய்க்கு வாய் சொல்ல ஆரம்பிச்சுட்டா. அப்புறம் எப்படி மாறாம இருக்க முடியும்…?"
சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரிக்கும் மாமியின் சிரிப்பில், காவேரியும் கரைகிறாள்..