கன்னடத் திரைப்பட உலகில் பிரபலம் அடைந்துவிட்ட பெயர் ரமேஷ். இவர் இயக்கிய ‘சயனைட்’ என்ற திரைப்படம் அங்கு சக்கைப் போடு போட்டது. தமிழில் கூட ‘குப்பி’ என்ற பெயரில் அந்தப் படம் எடுக்கப்பட்டது. அந்த ரமேஷ், இம்முறை ’காவலர் குடியிருப்பு’ என்ற படத்தோடு மீண்டும் வருகிறார்.
இதுவும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கதையாம். "போலீஸ் க்வார்டர்ஸ்" என்ற பெயரில் கன்னடத்திலும் தயாராகின்றது இத்திரைப்படம். அனுஷ், சோனு, சரண்யா, ஷரண், அவினாஷ் மற்றும் பலர் நடிக்கும் காவலர் குடியிருப்பை இந்துமதி தயாரிக்கின்றார்.
ஸயனைட் படத்தில் பாடலே கிடையாது, ஆனால் இப்படத்திலோ ஐந்து பாடல்கள்! ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. "ஜேம்ஸ் பாடல்கள் எல்லாம் மென்மையாக இருக்கும்" என்று எல்லோரும் மெச்சப் பெயர் எடுத்துவிட்டார் மனிதர். நிறைய வாய்ப்புகளும் வருகின்றன இப்படத்தின் பாடல்கள் அவர் பெயர் சொல்லும்படி உள்ளனவா என்று அறிந்து கொள்வோம்.
அப்பன் போலீஸ்டா
சுனந்தன், பரணி, பிரசன்னா, ஸ்ரீனிவாசன், பத்மனாபன் என்று ஒரு பட்டாளமே சேர்ந்து பாடும் முதல் பாடல். காலனியில் வாழும் இளைஞர்கள் சேர்ந்து கூத்தடிப்பது போல அமைந்திருக்கின்றது. அழகான கிடாரில் ஆரம்பித்து, அதனுடன் மேளத்தைச் சேர்த்து, ரசிக்க வைக்கும் ஒரு பாடலைத் தருகின்றார் ஜேம்ஸ். ஆங்காங்கு வாயால் அடிக்கும் சீட்டி (அதாங்க விசிலு!) வேறு. ஜாலியான பாடலுக்கு அமர்க்களமான வரிகள் எழுதியிருப்பது நா.முத்துகுமார்.
உயிரே என் உயிரில்
சின்மயியின் அழகான ஹம்மிங்கில் ஆரம்பிக்கிறது "உயிரே என் உயிரே". பாடலின் இரண்டாவது வரியிலேயே கார்ட்ஸை ஒரு விதமாக மாற்றி, அட போட வைக்கிறார் ஜேம்ஸ். புல்லாங்குழல், கிடார், கீஸ் எல்லாம் சேர்ந்து தேவாமிருதம் போல இனிக்கின்றது. கர்னாடக சங்கீதம், மேற்கத்திய இசை இரண்டிலும் பட்டம் பெற்றுள்ளார் ஜேம்ஸ் – சும்மாவா வரும்! அதனால்தான் இது போன்ற அருமையான மெலடிகளை அள்ளித் தருகின்றார் மனிதர். சின்மயின் குரலில் முத்துகுமாரின் காதல் வரிகள் உயிர் பெறுகின்றன!
கங்கை நதி
புல்லாங்குழலையும் கிராமத்திய மேளத்தையும் கலந்து, நட்பின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே ஆரம்பிக்கின்றது இந்தப் பாடல். ரொம்பவும் அழகான வரிகள் – மீண்டும் நா.முத்துகுமார். பெல்லிராஜும், பத்மனாபனும் இரு நண்பர்களுக்கு குரல் கொடுத்திருக்கின்றார்கள் – நன்றாகவே பாடியுள்ளார்கள். சரணங்களுக்கு முன் வரும் ஹம்மிங் கிராமிய மணத்தை இன்னும் அதிகரிக்கின்றது. சரணம் முழுதும் வரும் கார்ட்ஸ் மாற்றங்கள் எல்லாமே அற்புதம். மெட்டைத்தான் வேறெங்கோ இதற்கு முன் கேட்டது போன்ற உணர்வு! தாளம் போட்டவாறே அனுபவிக்கலாம்!
கோடி கோடி ஆசைகள்
அதெப்படி ஒரு காதல் டூயட் கூட இல்லாமல் போகும்! இதோ, வந்துவிட்டது.. யுகபாரதியின் வரிகளில், ஷரத், ப்ரியா ஹெமெஷின் குரல்களில், இன்னும் ஒரு மெலடி. ப்ரியா கலக்கியிருக்கின்றார். ஷரத்தான் ஆங்காங்கே சிரமப்படுவது போலத் தெரிகின்றது! கீஸ், கிடார், வயலின் மற்றும் அசத்தல் பீட்ஸின் சங்கமம். பாடலின் மெட்டைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். "முல்லை மலர் மேலே", "பூமாலை வாங்கி வந்தார்" போன்ற பாடல்கள் அமைந்த ராகத்தை எடுத்துக் கொண்டு, அதனை மிக மிக ஜனரஞ்சகமாகவும், சிம்பிளாகவும் தந்திருக்கிறார் ஜேம்ஸ். இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் புல்லாங்குழலும், சரணம் முழுதுவதும் வரும் வயலின் கார்ட்ஸும் பாராட்ட வைக்கின்றன.
தாயே தாயே
தாயை இழந்து தவிக்கும் நாயகன், மனம் நொந்து பாடும் பாடல். பாடலுக்கு ஸ்ரீனிவாசன் குரல் கொடுத்திருக்கிறார். அதிகம் வாத்தியங்கள் இல்லாமல், வெறும் கார்ட்ஸ், கொஞ்சம் வயலின் மட்டுமே கொண்டு முழுப் பாட்டிற்கு இசையமைத்து விட்டார் ஜேம்ஸ். சின்னப் பாடல்தான் – இரண்டே நிமிடங்களில் முடிந்தாலும் கேட்டவர் மனதில் நிற்கும்.
மீண்டும் ஜேம்ஸ் வசந்தன் ஒரு நல்ல ஆல்பத்தைத் தந்திருக்கிறார். எல்லாம் மனதை மயக்கும் மெலடிகள், காதிரைச்சல் இல்லாத இசை. ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் மனிதர். இத்தனை வருடங்களாக எங்கேதான் இருந்தாரோ! டி.வியில் மைக் பிடித்துக் கொண்டு பேசிய சமயங்களில் இன்னும் நிறைய இசையமைத்திருக்கலாம்! இவரின் திறமையைத் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
“