காளித்தம்பியின் கதை (9)

பழனியின் வேதனை விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது. பொறுமை இழந்த பழனி, பள்ளிக்கே போய்ப் பார்க்கக் கிளம்பினான். அப்போதுதான் காளி வந்து சேர்ந்தான்.

"காளி, காளி, எனக்குப் பள்ளியில் இடம் கிடைத்ததா?" என்று அச்சமும் அவசரமும் போட்டியிடக் கேட்டான்.

காளி அறையில் உட்கார்ந்தான்.

"பழனி, இப்படி வா! எங்கே உன் வாயைத் திற, பார்க்கலாம்!"

பழனி காளியின் அருகே சென்றான். "உம்! சீக்கிரம் வாயைத் திற" என்றான் காளி. பழனி வாய் திறந்தான். காளி தன்னிடம் இருந்த கற்கண்டை அவன் வாயில் போட்டான். பழனியின் வாய் இனித்தது. மனம் இனிக்கவில்லையே?

"காளி, இதெல்லாம் என்ன? நீ போன காரியம் என்ன ஆனது? எனக்கு இடம் கிடைத்து விட்டதா?" என்று கேட்டான்.

காளி, "ஆமாம் பழனி! உனக்கு இடம் கிடைத்து விட்டது. நீ எவ்வளவு மார்க்கு வாங்கியிருக்கிறாய் தெரியுமா? ஆங்கிலத்தில் எழுபத்தைந்து. பொதுஅறிவில் எண்பது. கணக்கில் நூறு மார்க்கு. நீதான் பரீட்சையில் முதல் மார்க்கு வாங்கியிருக்கிறாய்" என்றான்.

முன்பு வேதனையால் பழனியின் இதயம் வெடிப்பதைப் போல் இருந்தது. இப்போதோ மகிழ்ச்சியால் அவன் இதயம் பூரித்து வெடித்துவிடும் போலிருந்தது.

"உண்மையாகவா காளி?!" என்று கேட்டான் பழனி.

"ஆமாம்; நூற்றுக்கு நூறு உண்மை!" என்றான் காளி.

"காளி!" என்று உணர்ச்சியுடன் அழைத்துக் கொண்டே அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான் பழனி.

பழனியின் கவலை மறைந்தது. இனி பள்ளியில் சேருவது பற்றிக் கவலையில்லை. ஆனால், படித்து முதல் மார்க்கு வாங்க வேண்டும். அதுதானே அவன் இலட்சியம்!

மகிழ்ச்சியின் ஆரவாரமெல்லாம் அடங்கியது. பிறகு. "காளி, நொடியில் வருவதாகச் சொன்னாயே, ஏன் இவ்வளவு நேரம் "என்று கேட்டான் பழனி.

"நான் நேரே பள்ளிக்குப் போனேன். அங்கு ஹெட்மாஸ்டர் இல்லை. அப்போதுதான் வீட்டுக்குப் போனதாகச் சொன்னார்கள். போன காரியம் முடியாமல் திரும்பிவர விருப்பமில்லை. எனக்குத்தான் ஹெட்மாஸ்டர் வீடு தெரியுமே. அதனால் நேரே அவர் வீட்டுக்குச் சென்றேன். உன் பரீட்சையின் முடிவைக் கேட்டேன். அவர் நீ முதல் மார்க்கு வாங்கியிருப்பதைச் சொன்னார். உடனே விட்டாரா? அதுதான் இல்லை. உன்னைப் பாராட்டினார். அவரிடமிருந்து விடைபெற்றதும் ஓட்டமாக ஓடிவந்தேன். அதனால் இவ்வளவு நேரமாயிற்று" என்றான் காளி.
 
பழனி அன்றெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளினான். பேப்பர் போடும் வேலை முடியக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். பழனி மகிழ்ச்சி மிகுதியால் சைக்கிளைக் காரைப் போலச் செலுத்தினான். வேலை மிக விரைவில் முடிந்துவிட்டது.

மறுநாள் திருவொற்றீஸ்வரர் இலவச உயர்நிலைப் பள்ளியில் – ஆம், அதுதான் அந்தப் பள்ளியின் பெயர் – கோடீஸ்வரனின் மகன் பழனி தானும் ஓர் ஏழையாகச் சேர்ந்துவிட்டான். அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.ஸி வரை படிக்க வசதியிருந்தது. ஆனால் சம்பளமாக, ஸ்பெஷல் பீசாக ஒரு பைசா கூடக் கேட்கமாட்டார்கள். அரசு இலவசக் கல்வித் திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்பே, 1947ஆம் ஆண்டு முதலே அது முற்றிலும் ஓர் இலவசப் பள்ளியாக இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியால் எத்தனையோ ஏழை மாணவர்கள் கல்வியறிவு பெற்றனர்.

பள்ளியில் சேர்ந்த அன்றே பழனி தன் வகுப்புக்குச் சென்றான். வகுப்பு ஆசிரியர் பழனியைக் கடைசி பெஞ்சியில் உட்கார வைத்தார்.

"இந்தப் பள்ளியில் நீங்கள் வாங்கும் மார்க்குக்குத் தகுந்தபடிதான் உட்கார வைப்போம். ஆண்டுத்தேர்வில் முதல் மார்க்கு வாங்கியவன் முதலில், இரண்டாவது மார்க்கு வாங்கியவன் இரண்டாவது என்று உட்கார்ந்திருக்கிறார்கள். புதிதாகச் சேர்ந்த மூவரும் கடைசி பெஞ்சியில் உட்காருங்கள். மாதப் பரீட்சைக்குப் பிறகு உங்கள் தகுதிக்குத் தகுந்த இடத்தில் உட்காரலாம் " என்றார் ஆசிரியர். பழனி இதற்கு முன் கடைசி பெஞ்சியில் உட்கார்ந்ததில்லை. பாடத்தைக் கவனிக்க விரும்பாமல் அரட்டை அடிப்பவர்கள்தான் கடைசி பெஞ்சியில் உட்காருவார்கள். பழனி முதல் பெஞ்சியில் உட்காருவான். அது இங்கே இல்லை. அவனுக்குப் பக்கத்தில் எப்போதும் அழகன் உட்காருவான். அவனும் இங்கே இல்லை. பழனிக்கு இரண்டும் பெரிய குறைகளாகத் தோன்றின.

பழனி தனக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கினான். அவ்வளவும் பழைய புத்தகங்கள். மூர்மார்க்கெட்டில் உள்ள கடைகளையெல்லாம் அலசிக் குறைந்த விலையில் புத்தகங்கள் வாங்கினான். முக்கியமான சில நோட்டுப் புத்தகங்களை மட்டும் கடைசியில் வாங்கிக் கொண்டான். போஸ்டர் காகிதங்கள் ஒரு பக்கம் அச்சில்லாமல் வெள்ளையாக இருக்குமல்லவா? அவற்றையெல்லாம் காளியின் கடையிலிருந்தும், அவன் வேலை செய்யும் ஏஜென்ஸியிலிருந்தும் பெற்றான். அவற்றையே நோட்டுப் புத்தகங்களாகத் தைத்துக் கொண்டான்.

புத்தகம், நோட்டுக்கள் இவற்றோடு ஒரு பலகையும் வாங்கினான். காளி அதைக் கண்டு சிரித்தான். “என்ன பழனி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிற நீ பலகை வாங்குகிறாயே” என்று கேட்டான். “காளி, இந்தப் பலகை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல அல்ல; வீட்டில் எழுதிப் பார்க்க. கணக்குகளையெல்லாம் இதில் போட்டுப் பார்க்கலாம். எனக்கு இது பழக்கம். எங்கள் வீட்டில் நோட்டுக்கா குறைச்சல்? ஆனாலும் நான் பலகை வைத்திருந்தேன். அதில் தினமும் எழுதிப் பார்ப்பேன்!”

சொல்லிக்கொண்டே வந்த பழனி ‘டக்’கென்று நிறுத்தினான். அவன் தன்னைப் பற்றிய விவரங்களையல்லவா சொல்லி வருகிறான்? பழனி நாக்கைக் கடித்துக்கொண்டான்.

காளி இதைக் கவனிக்கத் தவறவில்லை. "நீ சொல்லாவிட்டால் என்ன? உன்னை முதலில் பார்த்தபோதே நீ செல்வத்தில் மிதந்தவன் என்பதைத் தெரிந்துகொண்டேன் தம்பி" என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டான். வாய்விட்டுச் சொல்லவில்லை.

காளி தினமும் காலையில் எழுந்துவிடுவான். ‘பம்ப்’ அடிக்கச் செல்லும்போதே அவன் பழனியை எழுப்பி விடுவான். பழனி எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பான். குளித்த பிறகு படிப்பான். காளி வந்ததும் அவனுடன் போய்ச் சிற்றுண்டி சாப்பிடுவான். அதன் பிறகு புத்தகங்களை எடுத்துக்கொண்டு, காளி வேலை செய்யும் கடைக்குப் போவான். அங்கே புத்தகங்களை வைத்து விட்டுப் பக்கத்திலிருக்கும் ஓட்டலுக்குப் போவான். வெளியே இருக்கும் சைக்கிளைத் துடைத்து, கிடைக்கும் காசைப் பெறுவான். மணி ஒன்பதரை ஆனதும் கடைக்குப் போவான். புத்தகங்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போவான்.

மாலை நான்கு மணிக்கு வகுப்பு முடியும். பழனி படிப்போடு திரும்பமாட்டான். விளையாட்டு மைதானத்தில் சளைக்க விளையாடுவான். சுமார் ஐந்து மணிக்கு அறைக்குப் போவான். அரை மணி நேர ஓய்வு. அதன் பின் ஏஜென்ஸிக்குப் போய்விடுவான். எட்டுக்குத் திரும்புவான். இரவு காளியோடு சேர்ந்து சாப்பிடுவான். பின் விரைவில் தூங்கமாட்டான். குறைந்தது பதினோரு மணி வரையாவது பள்ளிப் பாடங்களைப் படிப்பான். இத்தனைக்கும் நடுவில் தினமும் ஏதாவது எழுதுவான். ஆம், அவனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை, சென்னையிலே தோன்றி வளர்ந்து ஆலமரமாகத் தழைத்து நின்றது. எழுத்தாளர்கள் ஏழ்மையில்தான் தோன்றுவார்கள் என்று சொல்லுவார்களே, அது உண்மைதான் போலிருக்கிறது. மதுரையில் செல்வத்தில் மிதந்தபோது தோன்றாத ஆசை சென்னையில் ஏழ்மையில் அழுந்திக் கிடந்தபோது அவனைப் பிடித்துக்கொண்டது. அவன் எழுதினான். எழுதியவற்றை உடனுக்குடன் ‘மல்லிகை’ வார இதழுக்கு அனுப்பி வைத்தான். அவையெல்லாம் கிணற்றில் விழுந்த கல்லாக இருந்தன. புதிய அனுபவங்கள் தந்த கதைகளும் பாடல்களும் பத்திரிகையில் இடம் பெறுமா? பழனி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ‘வெற்றி நிச்சயம். இன்று இல்லாவிட்டாலும், நாளை வெற்றிபெறலாம்’ என்ற நம்பிக்கையோடு அத்தனை வேலைகளுக்கும் இடையில் எழுதி வந்தான்.

பள்ளியில் பத்துப் பதினைந்து நாட்களிலேயே பழனி நல்ல பெயர் எடுத்துவிட்டான். ஆசிரியர்கள் அவன் திறமையை உணர்ந்து கொண்டார்கள். மாணவர்கள் அவன் நல்ல பண்பை அறிந்து கொண்டார்கள். பழனிக்குப் பலர் நண்பர்களாயினர். ஆனால், அவன் ஓட்டலுக்கு முன் சைக்கிள் துடைப்பதைக் கண்டு சிலர் வியப்படைந்தனர். சிலர் கிண்டல் செய்தனர்.

ஒருநாள் பழனி, பள்ளியிலிருந்த அசோக மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தான். அவன் வகுப்பில் படிக்கும் குருசாமி வந்தான்.

“பழனி! இதோ பார், இது எனக்குப் புரியவில்லை. ஆசிரியர் இன்று இதில் கேள்வி கேட்பாரல்லவா? கொஞ்சம் எனக்குச் சொல்லித் தருகிறாயா?” என்று கேட்ட குருசாமி தன் ஆங்கிலப் புத்தகத்தை அவனிடம் நீட்டினான். குருசாமிக்கு ஆசிரியர் நேற்று நடத்திய ஆங்கிலச் செய்யுள்தான் புரியவில்லையாம்.

"உட்கார் குருசாமி, எனக்குத் தெரிந்தவரை சொல்லித் தருகிறேன்" என்றான் பழனி. குருசாமி அவனருகே உட்கார்ந்தான். பழனி அந்த ஆங்கிலச் செய்யுளைப் படித்து, சொல்லுக்குச் சொல் சுவையாகப் பொருள் சொன்னான். பக்கத்திலிருந்த அவனுடைய வகுப்பு நண்பர்கள் பழனி சொல்வதைக் கேட்டார்கள். அவர்களும் நெருங்கி வந்து பழனி சொல்வதைக் கேட்டு மகிழ்ந்தனர்.

பழனி சொல்லி முடித்தான். "குருசாமி, உனக்குப் புரிகிறதா? இல்லையென்றால் சொல். இன்னொருமுறை சொல்கிறேன்" என்றான்.

"வேண்டாம் பழனி! எனக்கு நன்றாகப் புரிகிறது. நானே இப்போது இன்னொருவனுக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவு புரிகிறது. அடடா, எவ்வளவு அழகாகச் சொல்லிக் கொடுத்தாய்! நம்ம ஆசிரியரைக் காட்டிலும் நீ மிக நன்றா…" குருசாமி முடிக்கவில்லை. பழனி அவனுடைய வாயைத் தன் கையால் பொத்தினான்.

"சே… சே… இதென்ன பேச்சு! ஆசிரியர் எங்கே? நான் எங்கே? குருசாமி! நம் ஆசிரியரைப் பற்றி நாமே இப்படிப் பேசலாமா? இப்படி நினைக்கலாமா? அவர் சொல்லித் தந்ததைத்தானே கிளிப்பிள்ளை போல உன்னிடம் திருப்பிச் சொன்னேன்? ஆசிரியர் நமக்கு தெய்வம்! இனி மறந்தும் இப்படிப் பேச நினைக்காதே" என்றான் பழனி.

குருசாமி வெட்கித் தலைகுனிந்தான். "என்னை மன்னித்துவிடு பழனி! இனி இந்தத் தவறை எப்பவும் செய்யமாட்டேன்" என்றான்.

அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் நாவுக்கரசு. "குருசாமி, உன்னிடம் ஒன்று பேசவேண்டும். இங்கே வா!" என்றான்.

குருசாமி, "என்ன பேசவேண்டும்? அதை இங்கேயே பேசலாமே? இவன் என் நண்பன்… பழனி! புதிதாக நம் பள்ளியில் சேர்ந்திருக்கிறான். உனக்குத் தெரியுமா? ரொம்பக் கெட்டிக்காரன். மகா புத்திசாலி!" என்று பழனியை அறிமுகப்படுத்திவிட்டு. ‘பழனி, இவன் நாவுக்கரசு. பத்தாம் வகுப்பு படிக்கிறான்” என்றான்.

பழனி நாவுக்கரசுவுக்கு வணக்கம் தெரிவித்தான். நாவுக்கரசு, "ஓ, நீயா! அந்த ஓட்டல் முன்னே பிச்சை எடுக்கிற பையனில்லே நீ" என்று கேட்டான்.

பழனியின் முகம் மாறியது.

"ஓட்டலுக்கு முன்னே நான் பிச்சையெடுக்கவில்லை. சைக்கிளைத் துடைக்கிறேன். அந்த உழைப்புக்காகத்தான் பணத்தைப் பெறுகிறேன். நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டாய்" என்றான் பழனி.

"சைக்கிள் துடைப்பது மட்டும் என்ன பெரிய கலெக்டர் வேலையா? சே… சே… நம் பள்ளி மாணவன் கூலிக்காரன் போலச் சைக்கிள் துடைப்பதும், பிச்சைக்காரனைப்போலக் காசு வாங்குவதும் மகா கேவலம். உன்னால் பள்ளிக்கூடத்து மானமே போகிறது" என்றான் நாவுக்கரசு.

"நம் பள்ளிக்கூடம் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம்தானே? நீயும் சம்பளம் கட்டிப் படிக்க முடியாத ஏழை என்று சொல்லித்தானே இங்கே சேர்ந்திருப்பாய்? உனக்குச் சாப்பாடு போடப் பெற்றோர்கள் இருக்கிறார்கள். எனக்குச் சாப்பாடு போடப் பெற்றோர்கள் இந்த ஊரில் இல்லை. அதனால் நான் வேலை செய்கிறேன். இதில் என்ன இழிவு? நான் திருடவில்லை! பிச்சை எடுக்கவில்லை" என்றான் பழனி.

"பிச்சைதான் எடுக்கிறாய்! வருகிறவர்களிடம் கையேந்துவது பிச்சை அல்லாமல் பெரிய வள்ளல் தன்மை என்ற நினைப்போ? உன்னுடன் பேசுவதே எனக்கு அவமானம். குருசாமி, ஒரு விஷயம் பேசவேண்டும். வரப்போகிறாயா இல்லையா?" என்று அதிகாரத்துடன் கேட்டான் நாவுக்கரசு.

"நாவுக்கரசு, பேசவேண்டியதை இங்கே பேசுவதானால் பேசு. இல்லையென்றால் போ" என்றான் குருசாமி.

நாவுக்கரசு ஒரு முறை முறைத்துவிட்டு அங்கிருந்து போனான்.

"பழனி! இவனுக்குப் பள்ளிக்கூடத்தில் நிறைய செல்வாக்கு இருக்கிறது என்ற திமிர். இவன் சாரணர் குழுவின் தலைவன். சென்ற ஆண்டு உதவி மாணவர் தலைவனாக இருந்தான். ஆசிரியர்களிடமெல்லாம் நன்றாகப் பழகுவான். ஒவ்வொருவர் வீட்டுக்கும் போய் வருவான். பள்ளிக்கூடத்தில் இவனைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதனால் மண்டைக்கனம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விட்டது. அதைக் குறைக்கவேண்டும்" என்று சொன்ன குருசாமி, "பழனி! சைக்கிள் துடைப்பது, பேப்பர் போடுவது போன்ற வேலைகளையெல்லாம் செய்வது எவ்வளவு சிரமம்? அந்தச் சிரமத்திலும் இப்படி நன்றாகப் படிப்பது எவ்வளவு கஷ்டம்! இத்தனை கஷ்டங்களையும் எப்படிப் பொறுத்துக் கொள்கிறாய்?" என்று கேட்டான்.

"குருசாமி, இந்த நகரத்தில் – அதுவும் குறிப்பாக இந்தச் சூளைப் பகுதியில் எத்தனை ஏழைகள் ஒருவேளை சோற்றுக்கும் வழியற்றுக் கஷ்டப்படுகிறார்கள்! எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு தாய், தன் நான்கு குழந்தைகளை, வீட்டு வேலை செய்வதனால் வரும் நூறே நூறு ரூபாயை வைத்துக்கொண்டு காப்பாற்றி வருகிறாள். அந்தக் குழந்தைகள் வயிறு நிறைய ஒரு வேளையும் சாப்பிட முடியாமல், பிறர் சாப்பிடும்போது எத்தனை ஏக்கத்தோடு பார்த்து நிற்கிறார்கள் தெரியுமா? அவர்களையெல்லாம் பார்க்கும்போது நான் படுவது ஒரு கஷ்டமா?" என்று கேட்டான் பழனி.

பழனி சொன்னதைக் கவனத்தோடு கேட்ட குருசாமி, "எவ்வளவு நல்ல பண்பு! நம் கஷ்டத்தை நினைத்துக் கஷ்டப்படாமல் நம்மைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள், நாம் அவர்களைக் காட்டிலும் அதிர்ஷ்டசாலிகள் என்று திருப்தியடையும் உன் உயர்ந்த குணத்தைப் பாராட்டுகிறேன். பழனி உன்னுடன் பேசப் பேச என் அறிவு வளர்வதைப் போல் இருக்கிறது" என்றான். அதற்குள் மணி அடித்தது. பழனியும் குருசாமியும் வகுப்பிற்குச் சென்றனர்.

மறுநாள், பழனி முன்நாளைப் போல மணி அடிக்கும் வரை மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். குருசாமி வேறு சில நண்பர்களுடன் வந்தான். குருசாமியுடன் வந்தவர்களில் சிலரை இதற்கு முன் பள்ளியில் பார்த்த நினைவு வந்தது. பழனி அவர்களையும் குருசாமியையும் மாறி மாறிப் பார்த்தான்.

"பழனி! இவன் சங்கரன். பத்தாம் வகுப்பு. இவன் செந்தில். எட்டாம் வகுப்பு. இவன் முருகன். ஏழாம் வகுப்பு…" என்று அவனுடன் வந்திருந்த மாணவ நண்பர்களை அறிமுகப்படுத்தினான். பழனி அனைவருக்கும் கை கூப்பினான். இத்தனை பேரும் தன்னை ஏன் தேடி வந்தனர் என்பது தெரியவில்லை.

குருசாமி பேசினான்:

"பழனி, நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்! எனக்கு மட்டுமல்ல, இதோ இங்கிருக்கும் அனைவருக்கும் செய்ய வேண்டும். இவர்களும் உன்னிடம் அதே உதவியைக் கேட்கத்தான் வந்திருக்கிறார்கள்."

பழனிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை. "நான் என்ன உதவி செய்யவேண்டும்? சொல் குருசாமி! முடிந்தால் நிச்சயம் செய்கிறேன்" என்றான்.

"சொல்கிறேன். ஆனால், முதலில் உதவி செய்வதாக வாக்களி. அது உன்னால் செய்ய முடிந்த உதவி என்பதை மட்டும் இப்போதே சொல்கிறேன். வாக்களித்ததும் உதவியைக் கூறுகிறேன்."

"அப்படி என்ன உதவியை நான் செய்யமுடியும்? என்னால் முடிந்த உதவியாக இருந்தால் நிச்சயம் செய்கிறேன்" என்றான் பழனி.

உடனே குருசாமி தன் சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்துப் பழனியிடம் நீட்டினான். "பழனி, நீ இதில் கையெழுத்திட வேண்டும், அவ்வளவுதான். இந்தச் சிறிய உதவி செய்தால் போதும்" என்றான்.

பழனி அதை வாங்கிப் படித்தான். அவன் ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை. அதில் என்ன இருந்தது தெரியுமா?

திருவொற்றீஸ்வரர் இலவச உயர்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவன் ஒருவனை மாணவர்களே தேர்ந்தெடுக்கும் பழக்கம் இருந்தது. அந்தப் பள்ளியில் தினமும் காலையில் இறை வழிபாடு நடக்கும். அங்கே மாணவர்களை அணிவகுக்கச் செய்வதும், வழிபாட்டை நடத்துவதும், பின்னர் மாணவர்கள் கலைந்து வகுப்பிற்குச் செல்ல உத்தரவு அளிப்பதும் மாணவர் தலைவன் கடமைகள். மாணவர் சார்பாகத் தலைமை ஆசிரியரிடமும் வாதிடும் சலுகையும் அவனுக்கு உண்டு. வகுப்புத் தலைவர்கள் அனைவரும் அவனுக்குட்பட்டவர்கள். அவர்கள் துணையுடன், வகுப்பு நடக்காதபோது மாணவர்களிடையே ஒழுங்கும் அமைதியும் நிலவ அவன் உதவி செய்வான். மாணவர் தலைவன் சொல்லுக்கு அடங்காத மாணவனுக்குத் தலைமை ஆசிரியர் தண்டனை தருவார். அதனால் மாணவர் தலைவன் பதவி மிகச் சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த ஆண்டு மாணவர் தலைவனைத் தேர்ந்தெடுக்க மறுவாரம் தேர்தல் நடக்கவிருந்தது.

அந்தத் தேர்தலில் மாணவர் தலைவனாகப் போட்டியிடப் பழனியின் பெயரை முன்மொழிந்த கடிதம்தான் குருசாமி கொடுத்தது. பழனியின் பெயரைப் பத்தாம் வகுப்பு மாணவன் சங்கரன் முன்மொழிந்திருந்தான். அதைக் குருசாமியும், ஏழாம் வகுப்பு மாணவன் முருகனும் வழிமொழிந்தனர். அதற்குக் கீழே, ‘மாணவர் தலைவன் பதவிக்குப் போட்டியிட நான் சம்மதிக்கிறேன்’ என்று எழுதியிருந்தது. அதன் கீழ்தான் பழனியைக் கையெழுத்திடுமாறு குருசாமி கேட்டுக் கொண்டான்.

"மாணவர் தலைவன் பதவிக்குப் போட்டியிடுவதா? படித்து முதல் மார்க்கு பெறுவதுதானே நம் இலட்சியம்? போட்டியிடுவதிலும், பிறகு, தலைவனுக்குரிய கடமைகளைச் செய்வதிலும் நேரம் போனால் எப்படி முதல் மார்க்கு வாங்கும் அளவு படிப்பது" என்று எண்ணினான் பழனி.

அதனால், "குருசாமி! நீயும் உன் நண்பர்களும் என்னிடம் இத்தனை அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன். நானோ பள்ளிக்குப் புதியவன். எனக்கு இந்தப் போட்டியும் பொறுப்பும் வேண்டாம்! என்னை மன்னித்துவிடுங்கள்" என்றான் பழனி.

குருசாமி விடுவானா? வற்புறுத்தினான். வற்புறுத்துவதற்காகவே அவன் அழைத்து வந்த மற்றவர்களும் அவனை வற்புறுத்தினர்.

“பழனி! இதில் கையெழுத்துப் போடுகிற ஒரு வேலையை மட்டும் நீ செய். மற்ற வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெற்றால், மாணவர் தலைவனின் கடமையை மிகச் சிறப்பாகச் செய்வாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதனால் இதில் கையெழுத்திடு. எங்களுடைய திருப்திக்காக மாணவர்களின் நன்மைக்காக இதில் கையெழுத்திடு. உன்னால் மாணவர் தலைவன் பதவியே பெருமை பெறும்” என்றான் குருசாமி. மற்றவர்களும் அதற்கு மேல் பேசினார்கள்.

தன்னை நன்கு அறியா மற்றவர்களிடம் குருசாமி எவ்வளவு அதிகமாகத் தன்னைப் புகழ்ந்து பேசியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியைத்தானா, மலையையேகூட நகர்த்தலாமே! பழனி கடைசியில் கையெழுத்திட்டுவிட்டான்.

அன்று பகலுக்குள் புதிய மாணவன் பழனி மாணவர் தலைவனுக்குப் போட்டியிடுவது பரவிவிட்டது. குருசாமியும் பிறரும் பழனிக்காகப் பிரசாரம் செய்தனர். பழனி இதைப் பற்றிக் கவலைப்படாதவன் போலத் தன் வேலைகளைக் கவனித்து வந்தான்.

மொத்தம் நான்கு பேர் போட்டியிட்டனர். குருசாமியின் வேண்டுகோளால் இருவர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். முடிவாகப் போட்டியிட்டது ஒன்பதாம் வகுப்பு மாணவன் பழனியும் பத்தாம் வகுப்பு மாணவன் நாவுக்கரசும்தான்.

நாவுக்கரசு செல்வாக்கு உள்ளவன். தனக்கு ஆதரவு தேட, அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டான். குருசாமியோ தன் நண்பர்களுடன் சேர்ந்து காகிதத்தில் கையால் எழுதிய அறிக்கைகளைத் தயார் செய்தான். நாவுக்கரசு அதே பள்ளியில் படிப்பவன், முன்னரே துணை மாணவர் தலைவனாக இருந்தவன், சாரணர் தலைவன் என்ற தகுதிகளையும் பெற்றிருந்தான். அவனே தனக்கு ஆதரவு தேடி மாணவர்களிடம் பேசினான்.

தேர்தலுக்கு முன்நாள். இறைவழிபாட்டுக் கூட்டத்தில், போட்டியிடுகின்றவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் ஐந்தைந்து நிமிடம் பேச அனுமதி கொடுத்தனர். முதலில் நாவுக்கரசு பேசினான். பேச்சின் இடையில், "ஓட்டலுக்கு முன்பு நின்று பிச்சையெடுத்து நம் பள்ளிக்கே அவமானம் தேடித் தருகிற ஒரு புதுமுகத்திற்கா நீங்கள் ஆதரவு தரப்போகிறீர்கள்" என்று கேட்டுவைத்தான்.

பழனி அடுத்துப் பேசினான். அன்றுதான் அவன் முதல் முதலாகத் தேர்தலுக்காகப் பேசினான். பேச்சில் நாவுக்கரசு தன்னைப் பற்றிச் சொன்னவற்றிற்குப் பதில் தரவில்லை. மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றால் என்ன என்ன வேலைகள் அவன் செய்யப் போகிறான் என்பதை எடுத்துச் சொன்னான். அவன் பேச்சு, கச்சிதமாக இருந்தது. நல்ல தமிழிலே சுவையாகப் பேசினான்.
"பழனி இவ்வளவு நல்ல பேச்சாளனா?" என்று ஆசிரியர்களே வியந்தனர்.

மறுநாள் தேர்தல் நடந்தது. அன்று மாலை ஓட்டுகளை எண்ணினர். ஓட்டு எண்ணும் இடத்திற்கும் குருசாமிதான் போனான். பழனி வழக்கமாக உட்காரும் மரத்தடியில் அமர்ந்திருந்தான். எண்ணிக்கை முடிந்தது.

வெற்றி பழனிக்குத்தான். அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் மிக அதிக அளவு ஓட்டு வாங்கி வெற்றி பெற்றான். மாணவர்கள் பழனியை அப்படியே தோளில் தூக்கிக்கொண்டு ஆரவாரம் செய்தனர்.

பழனியின் கண்களில் நீர் துளிர்த்தது. அது ஆனந்தக் கண்ணீர்! புதிய ஊர், புதிய பள்ளி, புதிய மாணவர்கள். அவர்கள் மத்தியில் அவன் மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறான். சுந்தரேசர் மகன் என்பதற்காக அவனுக்கு அதிக ஓட்டு கிடைத்தது என்று யாரேனும் சொல்ல முடியுமா?

அவன் உள்ளம் மகிழ்ச்சியால் கனத்தது. "இது சுந்தரேசரின் மகன் பெற்ற வெற்றி அல்ல; பழனி பெற்ற வெற்றி" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

பழனி மாணவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு நாவுக்கரசிடம் ஓடினான். “உன்னிடம் போட்டியிட நேர்ந்ததற்காக வருந்துகிறேன்! என் கடமைகளைச் செய்ய நீயும் உதவ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று உள்ளன்போடு சொன்னான்.

தோல்வியைத் தாங்காது துடித்துக்கொண்டிருந்த நாவுக்கரசு பழனியின் பண்பை உணரவில்லை. பழனிக்குப் பதில் சொல்லாமல், அவன் நீட்டிய கரத்தை ஒதுக்கிவிட்டுப் போய்விட்டான். அதுதான் பழனிக்குத் துன்பம் தந்தது.

தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும் பழனியைப் பாராட்டினர். பழனி குருசாமிக்கும் அவனுடன் உழைத்த நண்பர்களுக்கும் நன்றி சொன்னான். மணி அதற்குள் ஐந்தாகிவிட்டது. இன்னும் அரைமணிக்குள் ஏஜென்ஸிக்குப் போகவேண்டும். அதனால் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்கு ஓடினான்.

"அறையில் காளி இருந்தால் நன்றாக இருக்கும். அவனிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லலாம்" என்று நினைத்துக்கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

அறையில் அவன் விரும்பியவாறு காளி இருந்தான். காளிக்குச் சொல்லப் பழனி ஒரு மகிழ்ச்சியான செய்தியை வைத்திருந்தான். ஆனால் அவனுக்குச் சொல்ல அதைக்காட்டிலும் மகிழ்ச்சியான மற்றொரு செய்தியை வைத்துக் கொண்டிருந்தான் காளி.

–தொடரும்…

About The Author