"ஏன் பழனி அழுகிறாய்? எவனோ திருடிவிட்டுப் போனால் நீ எதற்காக அழவேண்டும்" என்று கேட்டான் காளி.
பழனி பதில் சொல்லாமல் பத்திரிகையை மீண்டும் பிரித்துப் பார்த்தான். பழனியின் பார்வை திருட்டைப் பற்றிய செய்தியில் பதியவில்லை. அதற்குப் பக்கத்தில் இருந்த விளம்பரத்தில் பதிந்திருந்தது. காளி அதைக் கவனித்தான். அவனும் அந்த விளம்பரத்தைப் படித்தான்.
"அன்பு மகனே!
உன் விருப்பப்படி செல்வதற்கு அனுமதித்தோம். ஆனால், எங்களிடம் சொன்னபடி கோயமுத்தூருக்குப் போகாமல் எங்கே சென்றாய் என்பது புரியவில்லை. நீ எங்கு வேண்டுமானாலும் இரு. ஆனால், ஒரு கடிதம் எழுது. இல்லையென்றால் உன் தாயின் உள்ளம் என்ன பாடுபடும் என்பதை நான் சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்? மறக்காதே! ஒரு கடிதம் போடு!
உன் அன்புத் தந்தை."
இதுதான் அந்த விளம்பரம். அதில் எந்தப் பேரும் ஊரும் இல்லை. சுந்தரேசர்தான் இந்த விளம்பரம் கொடுத்தார். பழனி கோவைக்கு வரவில்லை என்ற தந்தியைப் பார்த்ததும் திகைத்தார். பழனி எங்கே போனான் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவின்படிதான் மேலே பார்த்த விளம்பரத்தை எல்லாச் செய்தித்தாள்களிலும் வெளியிட்டார். அது, மதுரையில் நடந்த திருட்டைப் பற்றிய செய்தி இருந்த பக்கத்தில் இருந்தது. அந்த விளம்பரத்தைக் கண்டுதான் பழனி கண்கலங்கினான்.
காளி புத்திசாலி. பழனியின் கண் சென்ற இடத்தைக் கண்டு கொண்டான். விளம்பரத்தையும் படித்தான். அந்த விளம்பரம் சொல்லும் மகன் ஒருவேளை பழனியாகவும் இருக்கலாமல்லவா? இல்லையென்றால் அவன் ஏன் அழ வேண்டும்? சந்தேகமில்லை. விளம்பரத்திற்கும் பழனிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது.
காளி இப்படி முடிவு செய்தான். பழனியை ஒன்றும் கேட்காமல் சற்று நேரம் இருந்தான். பழனி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். "காளி ஏன் அழுகிறாய் என்று கேட்டானே, என்ன பதில் சொல்வது? உண்மையைச் சொல்வதா, வேண்டாமா?" பழனி யோசித்தான்.
"பழனி! எனக்குத் திடீரென்று ஒரு சின்னக் கதை ஞாபகம் வருகிறது. சொல்லட்டுமா?" என்று கேட்டான்.
"சொல்லேன்" என்றான் பழனி.
காளி கதை சொன்னான்.
"ஒரு ஊரில் ஒரு தாய் இருந்தாள். அவளுக்கு ஒரே ஒரு மகன். தாய்க்கு மகன் என்றால் உயிர். அவனுக்காகத் தன் உயிரையும் தரத் தயங்கமாட்டாள். மகனோ நேர்மாறானவன். தாயிடம் அவனுக்கு அன்பே இல்லை.
மகன் ஒருநாள் நண்பர்களுடன் பேசிப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். மகன் பேச்சின் நடுவே "என்னால் செய்ய முடியாத செயலே இல்லை" என்று சொன்னான். நண்பர்களில் ஒருவன், "எதைச் சொன்னாலும் செய்வாயா? சரி! போய் உன்னுடைய தாயின் மார்பைப் பிளந்து அவளுடைய இதயத்தைக் கொண்டுவா, பார்ப்போம்" என்றான்.
மகன் சற்றும் யோசிக்காமல் கிளம்பினான். நேரே வீட்டுக்குப் போனான். மகனைக் கண்ட தாய் மகிழ்ச்சி அடைந்தாள். மகனோ "இவளை எப்படிக் கொன்று இதயத்தை எடுப்பது?" என்று கவலைப்பட்டான். மகனின் முகத்தைப் பார்த்த தாய், "ஏன் உன் முகத்தில் வாட்டம்?" என்று கேட்டாள். மகன் ஒளிக்காமல் தன் கவலையின் காரணத்தைக் கூறினான்.
தாய் கோபப்படவில்லை. "இதற்காகவா கவலைப்படுகிறாய்! உன் வருத்தத்தைப் போக்க என் இதயம் பயன்படுமானால் எனக்கு மகிழ்ச்சிதான். மகனே, உனக்கு வேண்டிய இதயத்தை எடுத்துச் செல்!" என்றாள்.
அந்த மகன் தாயைக் கொன்று அவள் இதயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நண்பரைத் தேடி வெற்றி வீரனாக ஓடினான்.
காளி கதையை நிறுத்தவில்லை. ஆனால், பழனி கண்ணில் நீர் துளிர்க்க, "என்னது! தாயின் இதயத்தையா கொண்டு சென்றான்?" என்று குரல் தழுதழுக்கக் கேட்டான்.
"ஆமாம். மீதிக் கதையையும் கேள்" என்று சொல்லிக் கதையைத் தொடர்ந்தான்.
"நண்பன் சொன்ன காரியத்தைச் செய்தோம் என்று மகிழ்ச்சியில் ஓடினான் மகன். வழியில் இருந்த வாழைப்பழத்தோல் ஒன்றின் மீது கால் வைத்தான். உடனே சறுக்கி விழுந்தான். அவன் கையில் தாமரை மொட்டுப்போல இருந்த இதயம் தரையில் மோதிச் சிதறிவிட்டது. கீழே விழுந்த மகன், நண்பனுக்குக் காட்டுமுன் இதயம் உடைந்துவிட்டதே என்று நினைத்தான். அப்போது தாயின் இதயம் அவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டது. என்ன கேட்டது தெரியுமா?"
காளி இப்படிக் கேட்டான். பழனி, "என்ன கேட்டது? சொல் காளி சொல்" என்று துடித்துக் கேட்டான்.
காளி சொன்னான்.
"பழனி, அந்தத் தாயின் இதயம் மகனைப் பார்த்து ‘மகனே கீழே விழுந்தாயே, ஏதாவது அடிபட்டதா’ என்று கேட்டது."
காளி சொல்லி முடித்தான். பழனி குலுங்கி அழுதுவிட்டான்.
"பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு. இல்லையா பழனி?" என்று கேட்டான் காளி.
பழனி கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். "ஒப்புயர்வற்ற இந்தத் தெய்வத்தாயின் கதையை என்னிடம் எதற்காகச் சொன்னாய் காளி" என்று கேட்டான்.
"இதைக் கேட்ட பிறகாவது உன் கல் மனம் கரைந்து உங்கள் வீட்டுக்குக் கடிதம் எழுதமாட்டாயா? அதற்காகத்தான் சொன்னேன்" என்றான் காளி.
பழனி காளியைப் பார்த்தான். தான் அழுத காரணம் அவனுக்குத் தெரிந்து விட்டதோ என்று நினைத்தான். அதற்குள் காளி, "பழனி நீ பத்திரிகையில் நான் சொன்ன விஷயத்தைப் பார்க்கவில்லை. மகனுக்கு அப்பா எழுதிய கடிதத்தைப் படித்துக் கண்ணீர் விட்டாய். இதை நான் புரிந்துகொண்டேன். உடனே உன் வீட்டுக்கு ஒரு கடிதம் எழுது" என்று சொன்னான்.
பழனி ‘சரி’ என்று தலையசைத்தான்.
காளி ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக் கொடுத்தான். பழனி தன் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து பேனாவை எடுத்தான். கடிதம் எழுத முற்பட்டான். ஆனால் எழுதவில்லை.
"ஏன் பழனி தயங்குகிறாய்? கடிதத்தின் கவரில் நீ எழுதும் முகவரியைப் பார்த்து உன் ஊரையும் பெற்றோரையும் தெரிந்து கொள்வேன் என்றா? அந்தச் சந்தேகம் உனக்கு வேண்டாம். நான் இப்போதே வெளியே போகிறேன். நீ கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிடு" என்று சொல்லிக் கொண்டே காளி எழுவதற்கு முயன்றான்.
பழனி அவனைத் தடுத்தான். "இல்லை காளி, அதனால் நான் தயங்கவில்லை. நான் எந்த ஊரில் இருக்கிறேன் என்பதே என் அப்பாவுக்குத் தெரியக்கூடாது. இந்தக் கடிதத்தில் நான் ஊர் பெயர் எழுதாமல் விட்டுவிடலாம். ஆனால், தபால் முத்திரையில் ஊர் பேர் இருக்குமே என்று யோசிக்கிறேன். நான் இருக்கும் ஊர் தெரிந்தால், ஊரில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அப்புறம் என்ன நடக்குமோ? அதனால்தான் காளி கடிதம் எழுதத் தயங்குகிறேன்" என்றான் பழனி.
"பழனி, உன் கடிதத்தைப் பார்த்து நீ சென்னையில் இருக்கிறாய் என்பதை உன் அப்பா தெரிந்து கொள்ளக் கூடாது. அவ்வளவுதானே! அதற்கு நான் வழி செய்கிறேன்" என்றான் காளி.
"எப்படி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்" என்று கேட்டான் பழனி.
"என் முதலாளி, அதுதான் பத்திரிகைக் கடைக்கும் பழைய பேப்பர் கடைக்கும் இந்த வீட்டுக்கும் சொந்தக்காரர், இன்றிரவு திருச்சிக்குப் போகிறார். அவரிடம் உன் கடிதத்தைக் கொடுத்து அனுப்புகிறேன். அவர் அதைத் திருச்சியில் தபாலில் சேர்ப்பார். உன் அப்பா, நீ திருச்சியில் இருப்பதாக நினைப்பார். எப்படி என் யோசனை?" காளி கேட்டான்.
பழனி "பிரமாதம்" என்றான். உடனே பழனி, "அன்புள்ள அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வணக்கம்" என்று ஆரம்பித்துக் கடிதம் எழுதினான். தான் சுகமாக இருப்பதாகவும் தன்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் அடுத்த மே மாதம் உறுதியாகத் திரும்பி வருவதாகவும் விளக்கமாக எழுதினான்.
அவன் எழுதிக் கொண்டிருந்தபோதே வெளியே சென்ற காளி, ஒரு கவருடன் திரும்பினான். கவரில் முகவரி எழுதவேண்டும். பழனி யோசித்தான்.
"காளியின் முதலாளி திருச்சிக்காரர் போலிருக்கிறது. அவர் சுந்தரேசர் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால், என் கவரைப் பார்த்ததும் நான் பெரிய பணக்காரனின் மகன் என்பது தெரிந்துவிடுமே! அப்புறம் அவர், அப்பாவுக்கே உண்மையை எழுதிவிடலாம் அல்லது எனக்குச் சலுகை தரக்கூடும். அப்படியெல்லாம் நேரவிடக்கூடாது."
பழனி இந்த முடிவுக்கு வந்ததும் வேறொரு வெள்ளைத்தாள் எடுத்தான். அதில் "அன்புள்ள நண்பன் அழகனுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நாகனுடன் எந்தக் காரணத்திற்காவும் சண்டை போடாதே! நான் ஏன் மதுரையை விட்டுச் சென்றேன் என்பதை மற்றவரிடம் சொல்லமாட்டாய் என்று நம்புகிறேன். எனக்காக ஒரு சிறிய வேலை செய்கிறாயா? இத்துடன் உள்ள கடிதத்தை அப்பாவிடம் சேர்த்துவிடு. பிற பின்னர். அன்புள்ள பழனி" என்று எழுதினான். பிறகு இரண்டு கடிதங்களையும் கவரில் வைத்தான். மேலே அழகனின் முகவரியை எழுதினான். அதைக் காளியிடம் கொடுத்தான்.
காளி கவரில் இருந்த முகவரியைப் படித்தான். ‘பழனி மதுரையைச் சேர்ந்தவனா’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். "சரி பழனி. இப்போதே போய் இதை என் முதலாளியிடம் கொடுத்துத் திருச்சியில் தபாலில் சேர்க்கச் சொல்கிறேன். அப்படியே பழைய பேப்பர் வாங்கும் வேலைக்குப் போகிறேன்" என்று சொல்லிப் புறப்பட்டான் காளி.
அவன் புறப்பட்ட பிறகு பழனியும் புறப்பட்டான். அறையை மூடிப் பூட்டிவிட்டு வெளியே சென்றான். அறைக்கு இரண்டு சாவிகள். ஒன்று தான் வைத்துக் கொண்டு, மற்றொன்றைப் பழனியிடம் கொடுத்திருந்தான் காளி. அதனால் பழனி விரும்பியபோது வரவும் போகவும் வசதியிருந்தது. பழனி வேலை தேடுவதற்காகச் சென்றான்.
வேலை அவன் நினைத்ததுபோல் எளிதில் கிடைக்கவில்லை. காளியிடம் கடன் வாங்கித்தான் மூன்று நாளாகச் சாப்பிட்டு வந்தான். பணம் அதிகம் செலவாகக் கூடாதல்லவா? அதனால் காலையிலும் மாலையிலும் சிற்றுண்டி சாப்பிடுவதை அன்று முதல் நிறுத்திவிட்டான். கடன் ஏறிக் கொண்டே போனால் தீர்க்க முடியுமா?
மேலும் இரண்டு நாட்கள் கழிந்தன. அன்றிரவு, பழனி சாப்பாடு சாப்பிடவில்லை. அதற்கு இரண்டு ரூபாய் அல்லவா செலவாகிறது? சூளையில் ஒரு வீட்டில், இரவில் இட்டலி சுட்டு விற்கிறார்கள். பழனி ஒரு ரூபாய்க்கு நான்கு இட்டலிகள் சாப்பிட்டு விட்டு அறையில் படுத்துக்கொண்டிருந்தான். சற்று நேரம் பொறுத்துக் காளி வந்தான்.
"பழனி, இன்று முதல் இரவில் சாப்பாடு வேண்டாம் என்று பாட்டியிடம் சொல்லி விட்டாயாமே, ஏன்? ஏதாவது சாப்பிட்டாயா, இல்லை பட்டினிதானா?" காளி கேட்டான்.
"காளி, சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே வந்தால் என்ன பயன்? அதனால் இரவு சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டேன். ஒரு ரூபாய்க்கு இட்டலி சாப்பிட்டேன். அதுவே போதும்" என்றான் பழனி.
காளி வருந்தினான். "இன்றைக்கும் உனக்கு வேலை கிடைக்கவில்லையா" என்று கேட்டான்.
"கிடைக்கவில்லை, காளி! ஐந்து நாளாக அலைகிறேன். எனக்கு வேலையே கிடைக்கவில்லையே. உனக்கு எப்படி இத்தனை வேலைகள் கிடைத்தன!"
"உம்… எனக்கு எடுத்தவுடனே இத்தனை வேலைகள் கிடைத்து விட்டன என்று நினைக்கிறாயா? அதுதான் இல்லை. நான் பல மாதங்கள் சிரமப்பட்டேன்! பசியோடு பல நாட்கள் கழித்தேன். பிறகுதான் ஒவ்வொரு வேலையாகக் கிடைத்தது."
"காளி, என்னைப் பற்றிதான் நான் ஒன்றும் சொல்ல முடியாமல் இருக்கிறேன். உன்னைப் பற்றி நீயாவது சொல்லக்கூடாதா?" பழனி கேட்டான்.
காளி நீண்ட பெருமூச்சு விட்டான்.
"பழனி! என் கதை வெறும் சோகக்கதை. எதையோ நினைத்து இந்தப் பட்டணத்துக்கு வந்தேன். நினைத்தது நடக்கவில்லை. என் கதையைக் கேள்" என்று சொல்லிக் காளி தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
"என் அப்பாவின் முகம்கூட எனக்குத் தெரியாது. அம்மாதான் என்னை வளர்த்தாள். அம்மாவும் நானும் மீஞ்சூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தோம். என் அம்மா திடீரென்று இறந்துவிட்டாள். அம்மா ஒரு ஆசிரியர் வீட்டில் வேலை பார்த்து வந்தாள். அந்த ஆசிரியர் நல்லவர். அவர் தம் வீட்டில் என்னை வைத்துக் கொண்டார். நான் அவர் இருந்த பள்ளியில் படித்தேன். அவர் வீட்டு வேலைகளையும் செய்து வந்தேன்.
ஆறு வருடங்களுக்கு முன்பு அவர் வேலையிலிருந்து ரிடையர்ட் ஆனார். உடனே தஞ்சாவூரில் வாழ்ந்த பெண்ணுடன் இருப்பதற்குக் கிளம்பிப் போய்விட்டார்.
அப்போது எனக்கு வயது பத்து. ஐந்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆசிரியர், ‘காளி, உன்னையும் என்னோடு அழைத்துச் செல்ல முடியாது. என்னுடைய நிலை அப்படி. நீ நன்றாகப் படிக்கிறாய். உன் படிப்பை நிறுத்தாதே! இந்த ஊரில் உனக்கு யார் சோறு போடுவார்கள்? பேசாமல் சென்னைக்குப் போ! எங்காவது காலையிலும் மாலையிலும் வேலை செய். மற்ற நேரத்தில் படி! பட்டணத்தில் வேலை கிடைக்கும். வேலைக்கு நல்ல சம்பளமும் கிடைக்கும்’ என்று சொன்னார்.
அந்த ஆசிரியர் பெயர் முத்தையா! அவர்தான் எனக்கு அறிவு கொடுத்தார். அவர் எத்தனையோ விஷயங்களைச் சொல்லித் தந்தார். எத்தனையோ பேருடைய வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லி என்னை மகிழ்வித்தார். அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு இந்தச் சென்னைக்கு வந்தேன். பள்ளியில் சம்பளம் இல்லாமல் கற்றுத் தருவார்கள் என்பது தெரிந்தது. ஆனால் எங்கே தங்குவது? எப்படிச் சாப்பிடுவது?
படிக்கவேண்டும் என்ற ஆசையைப் பலரிடம் சொன்னேன். பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரத்தில் செய்ய வேலை கேட்டேன். கிடைக்கவில்லை. முழுநேர வேலையே கிடைக்காதபோது ஓய்வு நேரத்தில் செய்ய வேலை கிடைக்குமா? படிப்பு ஒருபுறம் இருக்கட்டும். உயிரோடு இருக்க உணவு? அதுவே கிடைக்கவில்லை. சில நாள் பட்டினி இருந்தேன். கடைசியில் பிச்சை எடுத்தேன்.
பழனி, பிச்சை எடுப்பது எவ்வளவு இழிவு தெரியுமா? அது அனுபவித்தவனுக்குத்தான் தெரியும். ஒரு நாள் பிச்சை கேட்ட என்னை ஒருவன் ‘சீ குறுக்கே நிற்காதே’ என்று பிடித்துத் தள்ளினான். பட்டினியோடு இருந்த நான் அருகே இருந்த சாக்கடையில விழுந்தேன். அந்தச் சாக்கடையில்தான் என் முதல் லட்சியம் தோன்றியது. உயிரே போனாலும் சரி, இனிப் பிச்சை எடுக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். பிச்சை எடுப்பதில்லை என்று சபதம் செய்தேன். பிச்சை புகினும் கற்றல் நன்று என்கிறார்கள். பழனி, கற்பதற்காகக்கூடப் பிச்சை எடுக்கக்கூடாது என்பது என் எண்ணம்.
பெரிய வீரனைப்போலச் சபதம் செய்துவிட்டுச் சாக்கடையிலிருந்து எழுந்துவிட்டேன். ஆனால், பசியைப் போக்க என்ன செய்வது? ஒன்றும் புரியாமல் ஒரு ஓட்டலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன். எனக்குப் பக்கத்தில் வரிசை வரிசையாக சைக்கிள்கள் இருந்தன. அவை ஓட்டலுக்குள் சென்றவர்கள் விட்டுவிட்டுப் போன சைக்கிள்கள். அவற்றில் பல புழுதி படிந்திருப்பதைப் பார்த்தேன்.
புத்தருக்கு ஞானோதயம் வந்ததைப்போல அப்போதுதான் எனக்கு ஒரு வழி தோன்றியது. உடனே எழுந்தேன். நான் வைத்துக் கொண்டிருந்த கிழிந்த துண்டினால் அங்கே இருந்த சைக்கிள்களை மடமடவென்று துடைக்க ஆரம்பித்தேன்.
ஓட்டலிலிருந்து வந்தவர்கள் நான் சைக்கிளைத் துடைப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
‘சார்! சைக்கிளைத் துடைத்து வைத்திருக்கிறேன். உங்களால் முடிந்தால் ஏதாவது கொடுங்கள்’ என்று சொன்னேன்.
‘உன்னை யார் துடைக்கச் சொன்னது? நீயே துடைத்துவிட்டுக் காசு கேட்டால் கொடுப்போமோ?’ என்றார் ஒருவர்.
‘சார், நானாகத்தான் துடைத்தேன். நீங்கள் விரும்பினால் ஏதாவது கொடுங்கள். இல்லையென்றால் வேண்டாம்’ என்று பணிவாகச் சொன்னேன்.
பழனி, பணிவுக்கும் உழைப்புக்கும் என்றும் மதிப்பு உண்டு. முதலில் கோபமாகப் பேசியவர் எனக்கு இருபது காசு கொடுத்துவிட்டுச் சென்றார். மற்றவர்களும் பத்துக் காசு இருபது காசு என்று கொடுத்தார்கள். அந்த முதல் நாளே ஒருவர், “தம்பீ, சோம்பேறியாகப் பிச்சை எடுக்காமல் உழைக்கிறாய். உன்னைப் பாராட்டுகிறேன். நீ நிச்சயம் முன்னுக்கு வருவாய்” என்று சொல்லி முழு ஒரு ரூபாயை எனக்குக் கொடுத்தார்.
என் உள்ளம் குளிர்ந்தது. அன்று முதல் சைக்கிள் துடைக்கும் வேலையைச் செய்து வந்தேன். பிறகு, பேப்பர் விற்கும் வேலை. இப்படி ஒன்றின்பின் ஒன்றாகப் பல வேலைகள் கிடைத்தன. சைக்கிள் துடைப்பதை நிறுத்திவிட்டேன். முன் போல் பட்டினி கிடக்கவில்லை. வயிறு நிறைய உணவு. முன்போல் பிளாட்பாரத்தில் இருக்கவில்லை. இதோ எனக்கு என்று சொல்ல ஒரு அறை இருக்கிறது. முன்போல் ஒன்றுமில்லாதவனல்ல! அதோ அந்தச் சிறிய பெட்டியிலே கொஞ்சம் பணம் இருக்கிறது.
பழனி, இந்த நிலை அடைய எனக்கு ஆறு வருடங்கள் பிடித்தன. ஆனாலும் படிக்கவில்லையே என்ற குறை மட்டும் போகவில்லை. படித்த படிப்பும் போய்விடக் கூடாதே என்ற பயம் இருக்கிறது. அதனால் எந்தப் பத்திரிகை கிடைத்தாலும் படிக்கிறேன்.
பழனி, எனது இரண்டாவது இலட்சியம் என்ன தெரியுமா? சிறுகச் சிறுகப் பாடுபட்டு எப்படியாவது நான் பணக்காரனாக வேண்டும். அந்தப் பணத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும். அதில் யாருக்கு வேலை தெரியுமா? படிக்கும் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு மட்டும் வேலை தரவேண்டும். படித்த நேரம் தவிர ஓய்வு நேரத்தில் – மாலை ஐந்து முதல் எட்டு மணி வரை வேலை செய்யவேண்டும். அதனால் கிடைக்கும் பணத்தால் ஏழைகளும் படிக்கவேண்டும்; பட்டம் பெறவேண்டும். இதுதான் என் கனவு. இதுதான் என் லட்சியம்."
காளி சொல்லி நிறுத்தினான். பழனி வியப்பில் ஆழ்ந்தான். "காளி! உன் கதை எவ்வளவு சிறந்தது! அது மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. உன் கதையைக் கேட்ட பிறகே எனக்கே என்னிடத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. காளி, யாரோ ஒருவர் சொன்னதுபோல நீ நிச்சயம் முன்னுக்கு வருவாய்" என்றான் பழனி.
அதன் பிறகு இருவரும் பேசவில்லை. காளி தூங்கிவிட்டான். பழனிக்குத் தூக்கம் வரவில்லை. காளி சொன்ன கதையையே நினைத்துக் கொண்டிருந்தான். காளியின் வாழ்க்கையை வைத்துக் கதை எழுதினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. பழனி பள்ளியில் நடந்த கையெழுத்துப் பத்திரிகையில் கதை எழுதியிருந்தான். அதனால் கதை எழுதும் ஆசை அவன் மனத்தில் எழுந்து மெல்ல வளர்ந்தது. அந்த எண்ணத்தோடே அவனும் தூங்கிவிட்டான்.
மறுநாள் காலை சரியாக மணி ஐந்து. சேவல் கூவவில்லை. காகம் கரையவில்லை. அலாரம் அலறவில்லை.
இந்தச் சப்தம் எதுவும் இல்லாமல் காளி எழுந்துவிட்டான்! பழக்கம்தான் அதற்குக் காரணம்.
காளி பம்பு அடிக்கும் வேலை செய்கிறான் அல்லவா? அங்கே போய்விட்டான். வேலை முடிந்ததும் திரும்பி வந்தான். அவன் அறை பூட்டியிருந்தது. காளிக்கு அது அதிசயமாக இருந்தது. வழக்கமாகப் பழனி அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருப்பான். காளி வந்துதான் எழுப்புவான். இன்று அவன் எங்கே? குளிப்பதற்காக வீட்டிற்குள் போயிருக்கிறானோ என்று நினைத்தான். வீட்டுக்குள்ளும் தேடினான். அவனைக் காணோம்.
பழனி இன்றைக்கு எங்கே போனான்? காளிக்குத் தேடிக்கொண்டிருக்க நேரமில்லை. பேப்பர் விற்கப் போக வேண்டாமா? காளி கடைக்கு ஓடினான். பேப்பர் வாங்கிக் கொண்டான். வழக்கமாகப் பேப்பர் போடும் வீடுகளில் பேப்பர் போட்டுவிட்டு ஓடித் திரிந்து பேப்பர் விற்றான். ஆனால் அவன் மனம் மட்டும் பழனியையே நினைத்துக் கொண்டிருந்தது.
பேப்பர் விற்பதைச் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு திரும்பினான். சூளை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தான். வந்தவனின் கண்கள் பழனியைப் பார்த்து விட்டன. பழனி செய்துகொண்டிருந்த செயலையும் பார்த்தன. காளி அப்படியே அசந்து நின்று விட்டான்.
(தொடரும்…)