சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியின் முன்னால் அன்று மாணவர்கள் கூடிக் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். எல்லோரும் பத்து மணி எப்போது ஆகும் என்று காத்துக் கிடந்தனர். மணி பத்தடித்தால்தான் ரிசல்ட் போர்டை மாணவர்கள் பார்வைக்கு வைப்பார்கள்.
மாணவர்கள் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கூட்டத்தின் மத்தியில் நாகமாணிக்கம், ஏதோ பெரிய பேச்சாளனைப் போலக் கைகளை ஆட்டித் தலையை அசைத்துப் பேசிக்கொண்டிருந்தான். சற்றுத் தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அழகன். நாகன் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால் பேச்சில், பழனியின் பெயர் அடிபடுவதை அறிந்தான். உடனே, இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் நகர்ந்தான்.
நாகன் பேசுவது இப்போது அழகனுக்கு நன்றாகக் கேட்டது.
"ரிசல்ட்டா? உம்… அதைப் போட்டுத்தான் தெரிந்து கொள்ளணுமா? இப்பவே கேள்! என் ரிசல்ட் எனக்குத் தெரியும். நான் பாஸ்! அதிலே சந்தேகமே இல்லை. வகுப்பிலும் ரெண்டாவது ராங்க் எனக்குத்தான். அதிலும் சந்தேகமில்லை" என்றான் நாகன்.
உடனே ஒரு மாணவன், "அதென்ன, இப்படிச் சொல்லுகிறாய்? இந்த வருடமாவது உனக்கு முதல் ராங்க் கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என்றான்.
நாகன் அலட்சியமாகச் சிரித்தான். "பழனி இருக்கும் வரை முதல் ராங்க் அவனுக்குத்தான். நான் என்னதான் படித்தாலும் எப்படித்தான் எழுதிக் கிழித்தாலும் எனக்கு ரெண்டாவது மார்க்குத்தான். இந்தத் தடவையும் நான் மிக நன்றாக எழுதியிருக்கிறேன். என்ன பயன்? பழனி, சுந்தரேசர் மகனல்லவா" என்றான்.
அழகனின் மனம் இதைக் கேட்டதும் புண்பட்டது. அதற்குள் ரிசல்ட் போர்டைக் கொண்டு வந்து பள்ளியின் முன்னே ஒரு மரத்தில் சாய்த்து வைத்தார்கள். மாணவர்கள் அனைவரும் அங்கே ஓடினர். நாகனும் சென்றான். அழகனும் போனான்.
நாகன் தன் பெயரைப் பார்த்தான். அவன் பாஸ். ஆனால், முதல் மார்க்கு பழனிக்குத்தான். உடனே மற்றவர்களிடம், "பார்த்தீர்களா? திருவாளர் சுந்தரேசரின் மகன் பழனிக்குத்தான் முதல் மார்க்கு. உம், எங்கப்பாவும் ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் நானும் வருஷம் தவறாமல் முதல் மார்க்கு வாங்குவேன்" என்றான்.
அழகனால் இதைப் பொறுக்க முடியவில்லை. அவன் "நாகா! போகிற போக்கைப் பார்த்தால் சீக்கிரம் அந்த நிலை வந்தாலும் வரும். உன் அப்பா வெறும் கிளார்க்காக இருந்தாலும், லஞ்சம் வாங்கியே ஒரு பள்ளிக்கூடம் கட்டினாலும் கட்டுவார். அப்போது நீயே முதல் மார்க்கு வாங்கலாம்" என்றான்.
"ஏய் அழகா! எங்கப்பாவைப் பற்றி மேலே பேசினால் பல்லை உடைச்சிடுவேன்" என்று கத்தினான் நாகன். அழகன் அதைப் பொருட்படுத்தவில்லை.
"உங்கப்பா வைக்கிற பள்ளிக்கூடத்திற்கு லஞ்சப் பள்ளி என்று பெயர் வைக்கலாம். அப்படி ஒரு பள்ளி வந்தாலும் உனக்கு முதல் மார்க்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். உங்கப்பா நிறைய லஞ்சம் தருபவனுக்கு முதல் மார்க்கு தரச் சொல்வார். பாவம்! உனக்கு அப்போதும் ஏமாற்றம்தான்!"
அழகன் சொன்னான். நாகன் சீறினான்.
"ஏய் அழகா! மரியாதையா வாயை மூடு. இல்லே…" என்று இழுத்தான்.
"இல்லை என்றால் என்ன செய்வாய்? என்னிடம் சண்டைக்கு வருவாயா? வருவதானால் அந்த சில்க் ஷர்ட்டைக் கழற்றி வைத்துவிட்டு வா. பாவம்! எந்த லாரிக்காரன் வாங்கிக் கொடுத்ததோ?" என்றான் அழகன்.
"அழகா! என் பொறுமைக்கும் எல்லையுண்டு. இனி என்னைப் பற்றியோ எங்கப்பாவைப் பற்றியோ ஒரே ஒரு சொல் சொன்னாலும் நான் சும்மா இருக்கமாட்டேன்" என்று கர்ஜித்தான் நாகன்.
அழகன் மீண்டும் சிரித்தான்.
"நாகா! நீ பழனியைப் பற்றிப் பேசலாம். மற்றவர்கள் மட்டும் உன்னைப் பற்றியோ உங்கப்பாவைப் பற்றியோ பேசக்கூடாது. அதுவும் உண்மையைச் சொல்லிவிடக்கூடாது. அப்படித்தானே! மதுரையில் எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் சுந்தரேசர் பெரிய பணக்காரர் இல்லையா? வகுப்பில் கெட்டிக்காரர்கள் பலர். அவர்களில் தலைசிறந்தவன் பழனி. முதல் மார்க்கு ஒருவன்தானே வாங்க முடியும்? அதைப் பழனி வாங்குகிறான். நீ உன் அப்பாவிடம் உதவி கேட்கும் லாரிக்காரர்களிடம் ஷர்ட்டும் பேண்டும் சைக்கிளும் பணமும் லஞ்சமும் வாங்கப் பயன்படுத்தும் நேரத்தையும் படிப்பதற்குப் பயன்படுத்து. அதற்குப் பின்னே ஒருவேளை நீயும் முதல் மார்க்கு வாங்கலாம்!" என்று அமைதியாக, ஆனால் கிண்டலோடு சொன்னான் அழகன்.
அவ்வளவுதான்! நாகன் "என்ன சொன்னே!" என்று கேட்டுக்கொண்டே அழகனின் மீது பாய்ந்து அவனை அறைந்தான். அழகன் பயந்துவிடவில்லை. பாய்ந்து நாகனின் சட்டையைப் பிடித்துக் கொண்டான். கண்மூடித் திறக்கும் நேரத்தில் ‘தரதர’வென்று இழுத்துக்கொண்டே பள்ளிக்கு வெளியே வந்தான். அதே வேகத்தில் நாகனைக் கீழே தள்ளினான். நாகன் தரையிலே உருண்டான்.
"ஏய் நாகப்பாம்பே! பள்ளிக்கு வெளியே சண்டைபோடு. உன் நச்சுப் பல்லைக் கழட்டி விடுகிறேன். மிருகத்தனம் பெற்ற உனக்குப் பழனி இந்த முறையில் பதில் சொல்லாததால் நாக்கு நீண்டு விட்டது. உம் எழுந்து வா!" என்றான் பழனி.
அழகன் நல்ல பலசாலிதான். ஆனால், இவ்வளவு துணிவும் திறமையும் அவனுக்கு இருக்கும் என்று நாகன் நினைக்கவில்லை. நிலத்திலிருந்து எழுந்தான். மாணவர் கூட்டம் உள்ளே இருந்து வெளியே வந்து நின்றிருந்தது. நாகன் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்துக்கொள்ள அழகன் மீது பாய்ந்தான். இருவரும் கட்டிப் புரண்டனர். அழகனுக்கும் அடிகள் கிடைத்தன. அழகன் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்தான். ‘அழகனின் கை… சே… சே அது கையல்ல… இரும்பு இரும்பு’ என்று நாகனின் மனம் முணுமுணுத்தது. நாகனின் பல் கல்லில் மோதி ரத்தமாகக் கொட்டியது. மேலும் போரிட அவன் விரும்பவில்லை. நாகன் பரிதாபமாக, கூடியிருந்த மாணவர்களைப் பார்த்தான். ‘முட்டாள்கள்! வந்து சண்டையை விலக்கக்கூடாதோ’ என்று மனத்துக்குள்ளே திட்டினான். பிறகு, அழகனைப் பார்த்தான். அவனுக்கு நெற்றியில் அடி! ரத்தம் கசிந்தது. ஆனாலும் அவன் தளராமல் நாகனைத் தாக்க மலைபோல நின்றான்.
நாகன், அழகனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான். அழகன் கைகளைத் தேய்த்துக்கொண்டு நாகனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான். அவ்வளவுதான்! நாகன் திடீரென்று திரும்பி வேறு திசையில் ஓடினான். பாவம், வேகமாக ஓடக்கூட முடியவில்லை. தள்ளாடித் தள்ளாடி ஓடினான். மாணவர்கள் உரக்கச் சிரித்தனர். அழகனைப் பாராட்ட வந்தனர்.
பழனியை இகழும்போது அதைப் பொறுமையுடன் கேட்டவர்களின் பாராட்டைப் பெற விரும்பவில்லை அழகன். எவருடனும் பேசாமல் தன் வீட்டை நோக்கிச் சென்றான். நாகனின் போக்கை நினைத்தவாறு சென்றதால் எதிரே வந்த பழனியின் சைக்கிளைக் கவனிக்கவில்லை.
சண்டை போட்டதனால் கிழிந்த சட்டையையும், தரையில் மோதியதால் நெற்றியில் கசியும் ரத்தத்தையும் பார்த்துதான் பழனி துடித்தான். "என்ன நடந்தது?" என்று பழனி கேட்டபோதுதான் எதிரே பழனி இருப்பதை அறிந்தான் அழகன்.
"பழனி! ஒன்றும் பிரமாதமாக நடந்துவிடவில்லை. எதற்காக நீ இப்படிக் கலங்குகிறாய்?" என்று சாதாரணமாகக் கேட்டான் அழகன்.
"நெற்றியிலிருந்து ரத்தம் வடிகிறதே!"
"ஓ, ரத்தமா!" என்று சொல்லிக்கொண்டே கால் சட்டையிலிருந்த கைக்குட்டையை எடுத்த அழகன், அதனால் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டான்.
"அழகா! என்ன விஷயம்? யாரிடமாவது சண்டை போட்டாயா?"
"ஆமாம்! ஆஹா, அந்தக் காட்சியை நீ பார்க்காமல் போய்விட்டாயே பழனி!"
"எதை? நீ சண்டை போட்டதையா?"
"ஆமாம்! அந்தச் சண்டையில் நம் நல்லபாம்பு – அதுதான் நாகமாணிக்கம் அடிபட்டு ஓடிய அழகே அழகு! பழனி! அவன் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓடிவிட்டான்" என்று சொல்லிச் சிரித்தான் அழகன்.
பழனிக்கு ஒன்றும் புரியவில்லை. "நாகனுடனா நீ சண்டை போட்டாய்? ஏன்? எதற்காக? அவன் சண்டைக்கெல்லாம் அஞ்சமாட்டானே? அவன் எப்படி ஓடினான்?" என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான்.
"நடந்ததையெல்லாம் சொல்கிறேன். உன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வா! பேசிக்கொண்டே உன் வீட்டுக்குப் போவோம்" என்றான் அழகன்.
பழனி, அழகனின் கைக்குட்டையை வாங்கி முதலில் அவன் முகத்தை நன்றாகத் துடைத்தான். பிறகு, சைக்கிளை எடுத்துக் கொண்டான். அழகன் அருகே வர, தன் வீட்டை நோக்கி நடந்தான். அழகன் அன்று பள்ளியில் நடந்ததைச் சொன்னான். நாகன் பேசிய பேச்சையும், அழகன் சொன்ன பதிலையும் சொன்னான். நாகன் சண்டைக்கு வந்ததும் பின், திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போனதும் சொன்னான்.
அழகன் சொல்லி முடிக்கவும் பழனியின் வீடு வரவும் சரியாக இருந்தது. இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். பழனியின் அறையில் அமர்ந்தனர். அழகனைப் பழனியின் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். பழனியின் வீடு அவன் வீடு போல! அழகன் தன் உடையைக் கழற்றிவிட்டுப் பழனி கொடுத்த உடையைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான். பழனி, வேலைக்காரனை அழைத்து மோர் கொண்டுவரச் சொன்னான். இரு தம்ளரில் மோர் வந்தது. இருவரும் குடித்தனர்.
"பழனி! உனக்கு என் பாராட்டு! இன்று போல என்றும் முதல்வனாக நீ வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்று அழகன் உண்மையான அன்போடு சொன்னான்.
பழனி பெருமூச்சுவிட்டான்.
"அழகா! நீ சொன்னதை நாகன் கேட்டிருந்தால், பணக்காரனின் மகன் என்பதற்காக நீ என்னைக் காக்காய் பிடிக்கிறாய் என்று சொல்வான். இப்போது கூட யாரிடமாவது, பழனி ஆளை வைத்து அடித்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடும். யார் கண்டது?" என்றான் பழனி.
சற்று நேரம் ஏதோ யோசித்தான். பிறகு, "அழகா! ஒரு பையனைப் பார்த்து இவன் கலெக்டரின் மகன், மந்திரியின் மகன், மில் சொந்தக்காரரின் மகன் என்று சொல்வது அவனுக்குப் புகழல்ல! அது அவனுடைய தந்தையின் புகழ். மாறாக, ஒரு தந்தையைப் பார்த்து இவர்தான் பள்ளியில் முதல்வனாக வரும் பையனின் தந்தை, இவர்தான் விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெறும் பையனின் தந்தை, இவர்தான் சமூகச் சேவை செய்து புகழ்பெறும் சாரணனின் தந்தை என்று சொல்ல வேண்டும். அதுதான் உண்மையில் அவன் புகழ் – அந்த மகன் புகழ்!" என்று சொன்னான். அழகன் அதை ஏற்றுக் கொள்கிறான் என்பதை அவன் முகத்திலிருந்தே தெரிந்துகொண்ட பழனி மேலே பேசினான்.
"எனக்குத் தெரிந்த வரை, என்னை அறிமுகப்படுத்துபவர்கள் எல்லோரும் சுந்தரேசரின் மகன் என்று அறிமுகப்படுத்துகிறார்கள். உடனே எனக்குத் தனி மரியாதை! மதிப்பு! மதிப்பும் மரியாதையும் உண்மையில் எனக்கா? இல்லை. அவை என் அப்பாவின் புகழுக்கு; அவருடைய பொருளுக்கு! என் அப்பாவை அறிமுகப்படுத்தும் எவரும் ‘இவர் படிப்பில் கெட்டிக்காரனான பழனியின் தந்தை’ என்று சொல்லவில்லை."
பழனி சோர்வோடு சொன்னான். சற்றுப் பொறுத்து, "அழகா! என் ஆசை என்ன தெரியுமா? என் இலட்சியம் என்ன தெரியுமா? என் அப்பாவைக் காட்டி, ‘இவர் பழனியின் தந்தை’ என்று சொல்ல வேண்டும். கேட்பவர்கள் "பழனியின் தந்தையா!" என்று வியந்து அதனால் அவருக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று சொன்னான்.
"பழனி! அந்த நிலை நிச்சயம் வரும்! உன் புகழால் உன் தந்தை புகழடையும் காலம் நிச்சயம் வரும்" என்று சொன்னான் அழகன்.
"ஆனால், நாகனைப் போன்றவர்கள் என் புகழை அப்பாவின் புகழால் வந்தது என்று சொல்கிறார்கள். அதையும் போக்கப் போகிறேன். எப்படித் தெரியுமா" என்று கேட்டுவிட்டுச் சொன்னான். "அப்பாவின் புகழ் பரவாத ஒரு ஊருக்குச் செல்லப் போகிறேன். அங்கே ஏதாவது ஒரு பள்ளியில் சேர்ந்து படித்து முதல் மார்க்கு வாங்கப் போகிறேன். பாசு ஆலை உரிமையாளர் சுந்தரேசரின் மகன் என்று சொல்லிக் கொள்ளாமல் படித்துப் புகழ் பெறப் போகிறேன். இந்த வாரத்திற்குள் அந்த இலட்சியத்தை நிறைவேற்ற இந்த ஊரைவிட்டே போகப்போகிறேன். இது உண்மை – உறுதி – சத்தியம்."
பழனி உறுதியான குரலில் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். அதற்குப் பதில் சொல்ல அழகன் வாயைத் திறக்கும் முன் "பழனி! இதென்ன விபரீத முடிவு?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் சுந்தரேசர்.
சுந்தரேசரைக் கண்டதும் அழகன் எழுந்து வணங்கினான். "உட்கார் தம்பி" என்று அழகனை உட்காரச் சொல்லி அவரும் உட்கார்ந்தார்.
"பரீட்சையின் முடிவைக் கேட்கலாம் என்று வந்தேன். நீ ஏதோ பெரிய சபதம் செய்ததைக் கேட்க நேர்ந்தது. என்ன இதெல்லாம்?" என்று கேட்டார் சுந்தரேசர்.
"அப்பா! நான் முதல் மார்க்கு வாங்குவது உங்கள் மகன் என்பதால்தான் என்று நாகமாணிக்கம் அனைவரிடமும் கூறி வருகிறான். அதை எப்படி மாற்றுவது? அது பொய் என்று சொன்னால் மட்டும் போதுமா? அப்பா! இந்த ஆண்டு நான் வேண்டுமென்றே சில கேள்விகளுக்குப் பதில் எழுதவில்லை. அப்படி இருந்தும் முதல் மார்க்கு எனக்குக் கிடைத்துள்ளது. அதனால், நாகன் பேசிய பேச்சைப் பொறுக்கமுடியாமல் அழகன் அவனோடு சண்டை போட்டிருக்கிறான். அவன் நெற்றியைப் பாருங்கள்!" என்றான் பழனி.
சுந்தரேசர் அழகனின் நெற்றியைப் பார்த்தார். பிறகு, பழனியைப் பார்த்தார்.
"அடுத்த ஆண்டு என்ன செய்வேன் தெரியுமா? நாகன் முதல் மார்க்கு வாங்கட்டும் என்று பரீட்சைக்குப் போய் எல்லாக் கேள்விகளுக்கும் தவறான பதிலை எழுதினாலும் எழுதுவேன். இது உங்களுக்குச் சம்மதமா? அப்பா! எனக்கும் திறமை இருக்கிறது, அறிவு இருக்கிறது என்பதை உலகத்துக்கு நிரூபிக்க வேண்டும். அதற்காக ஒரு வருடம் என்னை என் இஷ்டப்படிப் போகவிடுங்கள். நான் எங்காவது படித்து என் புகழை நிலைநாட்டுகிறேன். தயவுசெய்து, நான் எங்காவது செல்ல அனுமதியுங்கள்! நாளை மே மாதம் பிறக்கிறது. அடுத்த வருடம் மே மாதத்திற்குள் நான் திரும்பி வருகிறேன்" என்றான் பழனி.
"பழனி! நீ என்ன பேசுகிறாய்? நம் பள்ளியில் படிப்பதால்தானே நாகன் இப்படிச் சொல்கிறான்? மதுரையில் எத்தனையோ பள்ளிகள் இருக்கின்றன. வேண்டுமானால் நீ வேறு ஒரு பள்ளியில் சேர்ந்துபடி!" என்றார் சுந்தரேசர்.
"அதனால் என் இலட்சியம் நிறைவேறிவிடாது. அங்கும் நான் பணத்தைக் கொடுத்து முதல் மார்க்கு வாங்கியதாக நாகனே சொன்னாலும் சொல்லுவான். அப்பா! இளங்கோ இலக்கிய மன்றத் தலைவர் அன்று என்னைப் புகழ்ந்தாரே, நினைவிருக்கிறதா? அப்படிப்பட்ட பொய்ப்புகழைக் கண்டு, கேட்டு நான் அலுத்துவிட்டேன். எனக்கு உண்மையான புகழ் வேண்டும். அதை நானே என் திறமையால் பெற வேண்டும். இந்த லட்சியம் நிறைவேற ஒரு வருடம் என்னை எங்காவது போக விடுங்கள். நீங்கள் மறுத்தால், நான் உங்கள் அனுமதி பெறாமலே போகுமாறு நேர்ந்தாலும் நேரலாம்" என்றான் பழனி.
அதுவரை பேசாமல் இருந்த அழகன் குறுக்கிட்டான். "பழனி! அப்பாவிடம் பேசும் பேச்சா இது? அனுமதி வேண்டுமானால் அதைச் சண்டை போட்டாவது பெறு. ஆனால், இப்படியெல்லாம் பேசாதே" என்றான்.
சுந்தரேசரின் கண்களில் நீர் துளிர்த்தது. "பழனி! இது உன் அம்மாவுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
"தெரியாது. அம்மாவைச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பையும் நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான் பழனி.
"அப்படியென்றால் நீ ஒரு வருடம் எங்களைப் பிரிந்திருக்க நான் அனுமதி அளித்துவிட்டேன் என்று முடிவு செய்துவிட்டாயா?" என்று ஏக்கத்தோடு கேட்டார், தந்தை.
"அனுமதி தருவீர்கள் என்று நம்புகிறேன். என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டான் பழனி.
சுந்தரேசர் சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது பொறுத்து, "சரி பழனி! உன் விருப்பப்படியே போய் வா! சரியாக ஒரே வருடம்! அடுத்த மே மாதத்தில் இங்கே வந்துவிட வேண்டும். பழனி! நீ எந்த ஊருக்குப் போவதாகத் திட்டம் போட்டிருக்கிறாய்?" என்று கேட்டார் அப்பா.
"எந்த ஊரைப் பற்றியும் இன்னும் நான் நினைக்கவில்லை. பள்ளிக்கூடங்கள் நிறைய இருக்கும் ஏதாவது ஒரு ஊருக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்" என்றான் பழனி.
"கோயமுத்தூருக்குப் போனால் என்ன? அங்குப் பள்ளிகள் நிறைய இருக்கின்றன. அந்த ஊருக்குப் போய் உன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்கிறாயா?" என்று கேட்டார் தந்தை.
பழனி "சரி" என்று சம்மதித்தான். இது நடந்த ஐந்தாம் நாள் மதுரையை விட்டுக் கோவைக்குச் செல்லத் தயாரானான்.
முதலில் பழனியின் அம்மா இதற்குச் சம்மதிக்கவில்லை. "யாரோ எதுவோ சொன்னால் அதற்காக என் மகன் என்னை விட்டுச் செல்வதா?" என்று கூறி மறுத்துவிட்டாள்.
சுந்தரேசர் தனியாக மனைவியிடம் பேசினார். "பழனி ஒன்றை நினைத்தால் அதை எப்படியும் முடித்தே தீருவான். நீயும் நானும் அனுமதி தராவிட்டால் அவன் நம்மிடம் சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது போனாலும் போவான். நீ அதை விரும்புகிறாயா?" என்று கேட்டார்.
பழனியின் அம்மா அப்படி நடப்பதை விரும்பவில்லை. "கோயமுத்தூர் அவனுக்குப் புது இடம். அவன் எங்கே தங்குவான்? யார் அவனுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து உணவு அளிப்பார்கள்?" என்று கூறிக் கண் கலங்கினாள்.
"பைத்தியம். அழாதே! அதற்கு நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று கூறிய சுந்தரேசர் மேலும் குரலைத் தாழ்த்திக் கூறினார்.
"கோயமுத்தூரில் என் நண்பர் ஒருவர் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவருக்குப் பழனியைப் பற்றி எழுதி, அவனுடைய புகைப்படத்தையும் அனுப்பி இருக்கிறேன். பழனி எந்த வண்டியில் புறப்படுகிறான் என்பதையும் அவருக்குத் தெரிவிப்பேன். கோவையில் பழனி இறங்கியதும், யாரோ முன்பின் தெரியாதவரைப் போல என் நண்பர் பழனியிடம் பழகுவார். பழனியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார். பழனிக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படாது. எப்படி என் ஏற்பாடு?" என்று கேட்டார் சுந்தரேசர்.
தாயின் முகம் மலர்ந்தது.
"பழனியை மகிழ்ச்சியோடு அனுப்ப இப்போது தடையில்லையே?" என்று கேட்டார் தந்தை. "இல்லை" என்றாள் தாய். "இந்த விஷயம் பழனிக்குத் தெரியக்கூடாது. ஜாக்கிரதை!" என்று சுந்தரேசர் எச்சரித்தார். அதனால்தான் பழனியின் தாயும் மகன் கோவைக்குச் செல்லச் சம்மதித்தாள்.
சுந்தரேசர், மகனின் பள்ளி சர்ட்டிபிகேட்டை வாங்கிக் கொடுத்தார். பழனி அதை எடுத்துக்கொண்டான். ஒரு சிறிய பெட்டியில், சாதாரணமான உடைகள் நான்கைந்தை எடுத்துக் கொண்டான். அப்பா வற்புறுத்திக்கொடுத்த ஐந்நூறு ரூபாயையும் எடுத்துக்கொண்டான். பழனி கோவைக்குச் செல்லத் தயாராகிவிட்டான்.
பழனி கோவைக்குச் செல்வது அழகனைத் தவிர யாருக்கும் தெரியாது. அவனுடைய தலைமை ஆசிரியருக்கு மட்டும் ஓரளவு தெரியும்!
மதுரையில், ரயில் நிலையத்தில் கோவை செல்லும் வண்டி நின்றது. பழனி அந்த வண்டியில் ஏறிக்கொண்டான். தந்தையிடமும் தன்னை வழியனுப்ப வந்த அழகனிடமும் விடை பெற்றுக் கொண்டான். வண்டி நகர்ந்தது. பழனியை மதுரையிலிருந்து பிரித்து எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றது.
சுந்தரேசர் நிம்மதியுடன் வீட்டுக்கு வந்தார். ஆம், அவர் பழனி புறப்படுகிறான் என்பதை அன்று மாலையே தந்தி மூலம் தன் கோவை நண்பருக்குத் தெரிவித்திருந்தார். பழனி வந்து சேர்ந்ததும் தந்தி மூலம் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்.
மறுநாள்.
சுந்தரேசர் தன் நண்பரின் தந்தியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிற்பகலில் தந்தி வந்தது. சுந்தரேசர் புன்னகையோடு அதைப் பிரித்தார். படித்தார்.
"நீங்கள் சொன்ன வண்டியில் பழனி வரவில்லை. நன்றாகத் தேடிப் பார்த்தேன். பழனியைக் காணோம். ஒருவேளை அவன் அந்த வண்டியில் புறப்படவில்லையோ?
—
கிருஷ்ணன்."
இதைப் படித்ததும் சுந்தரேசருக்கு அந்த அறையே சுழல்வதுபோல் இருந்தது. பழனி கோவைக்குப் போகவில்லையா? அப்படியானால் அவன் எங்கே? எங்கே போனான்?
ஒன்றும் புரியாது திணறினார் சுந்தரேசர்.
(தொடரும்…)