பழனி தன்னை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்திய கடிதத்தை மீண்டும் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது காளி அங்கே வந்தான்.
"என்ன பழனி, உன் முகத்தில் இத்தனை பூரிப்பு? அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது? மீண்டும் ஏதாவது போட்டியில் பரிசு கிடைத்திருக்கிறதா?" என்று கேட்டான் காளி.
"பரிசுதான் கிடைத்திருக்கிறது. ஆனால் கதைப் போட்டியில்லை! கதைப்போட்டிப் பரிசைக் காட்டிலும் சிறந்த பரிசு இது. இத்தகைய கடிதம் ஒன்று வரும் என்று நான் நினைக்கவே இல்லை. காளி, யாரிடமிருந்து வந்த கடிதம் தெரியுமா? கடிதத்தையே படிக்கிறேன் கேள்" என்று கூறிப் பழனி மகிழ்ச்சிப் பெருக்கில் மிதந்தவாறு கையிலிருந்த கடிதத்தைப் படித்தான்.
சுந்தரேசர் உயர்நிலைப்பள்ளி மாணவர் இலக்கிய மன்றம் – மதுரை.
பேரன்புள்ள திரு.காளித்தம்பி அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் தங்கள் கதைகளாலும் பாடல்களாலும் குழந்தை இலக்கியத்தில் புரட்சி செய்வதைக் கண்டு மகிழ்ந்தோம். உங்கள் எழுத்தைப் படித்துப் படித்து இன்பம் அடைந்தோம். அண்மையில் நீங்கள் ‘மல்லிகை’ தொடர்கதைப் போட்டியில் பரிசு பெற்றமை அறிந்து மகிழ்ந்தோம். தொடர்கதையை ஆவலோடு படித்து வருகிறோம். எழுத்தின் மூலம் தங்களை அறிந்த நாங்கள் தங்களை நேரில் காண விரும்புகிறோம்.
எனவே, வரும் வெள்ளியன்று நடைபெறும் எங்கள் இலக்கிய மன்ற ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுமாறு கோருகிறோம். தாங்கள் எங்கள் வேண்டுகோளைத் தட்டாமல் ஏற்கவேண்டுகிறோம்.
மதுரைக்கு வந்து செல்வதற்கான செலவுத் தொகையைப் பள்ளி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறது. தங்கள் ஒப்புதலை மறு தபாலில் தெரிவித்து எங்களைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
அன்புள்ள,
நாகமாணிக்கம், மாணவச் செயலாளர்.
சங்கரலிங்கம்,தலைவர்,தலைமை ஆசிரியர்.
பழனி கடிதத்தைப் படித்து முடித்தான். அந்தக் கடிதம் அவன் படித்த பள்ளியிலிருந்து வந்ததுதான். பழனியின் சிறப்பெல்லாம் தந்தையால் வந்தவை எனத் தூற்றித் திரிந்த நாகமாணிக்கம், பழனிதான் காளித்தம்பி என்பதை அறியாமல் எழுதிய கடிதந்தான் அது.
பழனி சொன்னான்.
"காளி, இது நான் எதிர்பார்க்காத ஒன்று. இந்தச் சுந்தரேசர் பள்ளியின் மாணவனாகிய என்னைப் பேச அழைக்கிறார்கள். அதுவும், சுந்தரேசர் மகன் என்பதால் பழனிக்குப் பேரும் புகழும் மார்க்கும் கிடைப்பதாகக் கூறிய நாகமாணிக்கம் எழுதியிருக்கிறான். என்னை விஷத்தைப் போல, வியாதியைப்போல வெறுத்த அதே நாகமாணிக்கம் எழுதியிருக்கிறான். எனக்கென எந்தத் திறமையும் இல்லை என இகழ்ந்த நாகமாணிக்கம் எழுதியிருக்கிறான் ",சொல்லிக்கொண்டே வந்த பழனி சட்டென்று நிறுத்தினான். "காளியிடம் மறைத்த உண்மைகளையல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறோம்" என்று நினைத்தான்.
"மன்னிக்கவேண்டும் காளி! உனக்குப் புரியாததைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். காளி, உன்னிடம் நான் யார் என்பதைச் சொல்லவில்லை. நீ எங்கே அடிக்கடி ‘நான் யார்’ என்பதைக் கேட்டுத் தொல்லைபடுத்துவாயோ என்று பயந்தேன். ஆனால் நீ மறந்தும் கூட என்னைக் கேட்கவில்லை. நன்றி காளி நன்றி!" என்றான் பழனி.
காளி அமைதியாக அவன் சொன்னதைக் கேட்டான். பிறகு, "பழனி! நீ ஒரு பெரிய பணக்காரனின் மகன் என்பதை உன்னைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன். பண்புள்ளவரின் மகன் என்பதைப் பழகியபோது தெரிந்துகொண்டேன். இப்போது உன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லத் துணிந்ததைப் பார்த்தால் நீ என்னை விட்டுப் போகப் போகிறாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்" என்றான்.
பழனி என்ன சொல்ல முடியும்? காளி எவ்வளவு புத்திசாலி என வியந்தான்.
"காளி நீ சொல்வது உண்மைதான். நான் மதுரைக்குப் போகப் போகிறேன். அதைப் பற்றி உன்னிடம் கூற இருந்தேன். இப்போது கூறும்படி ஆகிவிட்டது. கடிதம் அனுப்பிய சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியில்தான் நான் படித்தேன். அந்தப் பள்ளியை ஏற்படுத்தியவரும், பாசு ஆலையின் உரிமையாளருமான சுந்தரேசர் மகன் நான். நான் வகுப்பில் முதல் மார்க்கு பெற்றபோது, அது பள்ளி நிர்வாகியின் மகன் என்பதால் கிடைத்தது என்றான் நாகமாணிக்கம். பள்ளிக்கு வெளியில் எனக்குக் கிடைத்த புகழை என் தந்தையின் புகழால் – பொருளால் கிடைத்தது என்றான் நாகமாணிக்கம். எனக்கே என்னிடம் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. நாகமாணிக்கம் சொன்னது மெய்தானோ? சுந்தரேசர் மகன் என்பதைத் தவிர வேறு தகுதி எனக்கில்லையோ? இதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் யார் என்பது தெரியாத இடத்தில் படித்து முதல் மார்க்கு பெற வேண்டும். வெளியிடத்திலும் புகழ் பெறவேண்டும். இந்த லட்சியத்தோடு பெற்றோரின் அனுமதியுடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டேன். பள்ளியில் முதல் மார்க்கு வாங்குவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. வெளியிடத்தில் காளித்தம்பியாகப் புகழ்பெற்றேன். என்னைச் சுய திறமையற்றவன் என்று இகழ்ந்த நாகமாணிக்கமே என்னைப் புகழ்ந்து, பள்ளியில் பேச அழைக்கிறான். காளி! என் லட்சியம் நிறைவேறியதாகத்தான் கருதுகிறேன். ஆனால் அதற்கு நீதான் முக்கியக் காரணம். உனக்கு என் நன்றி" என்றான்.
"அது இருக்கட்டும். இந்த கடிதத்திற்கு என்ன பதில் எழுதப் போகிறாய்?" என்று கேட்டான் காளி.
"வருவதாக எழுதப் போகிறேன்" என்று பதில் சொன்னான் பழனி.
"மதுரைக்குச் செல்கிறாய். பிறகு சென்னைக்கு வரமாட்டாயல்லவா?"
காளி கேட்டபோது அவன் கண்கள் கலங்கின. பழனியின் கண்களும் கலங்கின.
"காளி, மதுரையில் என் பெற்றோருடன் தங்கிவிடுவேன். காளி! தயவுசெய்து நீ என்னுடன் வந்துவிடு. நீ என்னுடனேயே தங்கிவிடலாம்."
"இல்லை பழனி. அது முடியாது. எனக்கு என் வேலைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்து வாழ்கிறேன். உன்னைப் பிரிவதைத் தவிர வேறு குறை எனக்கில்லை. நான் வாழ்க்கை முழுவதும் உன்னுடன் தங்குவது சரியல்ல!"
"காளி, என்னுடன் தங்குவது தங்காதது பற்றிப் பிறகு யோசிக்கலாம். குறைந்தது ஒரு வாரம் உன் வேலையில் லீவு எடுத்துக்கொண்டு என்னுடன் வா! உன்னை என் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தவேண்டும். பிறகு நீ விரும்பினால் என்னுடன் இரு. இல்லையென்றால் சென்னைக்குத் திரும்பி விடு. தயவுசெய்து இதை மட்டும் மறுக்காதே!"
பழனி வேண்டிக் கேட்டான். காளி ஒரு வாரம் மதுரையில் தங்க ஒப்புக்கொண்டான். பழனி உடனே சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளிக்குத் தான் ஆண்டு நிறைவு விழாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டு கடிதம் எழுதினான்.
மறுநாள் கடைசித்தேர்வு எழுதினான். பிறகு ஊருக்குப் போவதற்கான ஏற்பாடுகள் செய்தான். பழனி அவன் வேலை செய்த பேப்பர் ஏஜென்ஸியில் தான் வேலையிலிருந்து நின்றுவிடுவதாகக் கூறிவிட்டான். முதலாளி மிகவும் வருத்தப்பட்டார். தனது பழைய சைக்கிளை செல்வமணிக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டான். தனக்குப் பரிசாகக் கிடைத்த ஆயிரம் ரூபாயைத் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தான்.
"சார்! நம் பள்ளியை நிறுவியவரின் படத்தை மாணவர்கள் தரும் பணத்தைக் கொண்டு தயாரித்துப் பள்ளியில் வைக்கவேண்டும் என்று சொன்னீர்களே, இந்தப் பணத்தை அதற்குப் பயன்படுத்துங்கள். நான் ஊருக்குப் போகிறேன் சார். மேற்கொண்டு மதுரையிலேயே படிக்கப் போகிறேன். தேர்வு முடிந்ததும் முதல் மார்க்கு யார் வாங்கியது என்பதை மட்டும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று சொல்லி அழகனின் முகவரியை அவரிடம் கொடுத்தான். தலைமை ஆசிரியர் தியாகராஜர் அடைந்த துன்பத்திற்கு எல்லையே இல்லை. பழனி திருநிலையிடமும் சொல்லிக் கொண்டான்.
பிறகு, காளி வேலை செய்யும் பத்திரிகைக் கடை முதலாளியிடமும் அவன் சைக்கிள் துடைத்த ஓட்டல் முதலாளியிடமும் விடைபெற்றுக் கொண்டான்.
சுந்தரேசர் பள்ளியின் மாணவர் இலக்கிய மன்ற ஆண்டு நிறைவு விழாவுக்கு முன் நாள், பழனி தன்னை ஆதரித்துப் புகழ்கொடுத்த சென்னைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் காளியுடன் மதுரைக்குப் புறப்பட்டான்.
சுந்தரேசர் பள்ளியில் ஒரு வழக்கம் இருந்தது. ஆண்டுத்தேர்வை முடித்த பிறகு இலக்கிய மன்ற விழாவை நடத்துவார்கள். அதனால் தேர்வு பயம் இல்லாமல் மாணவர்கள் உற்சாகமாய் விழாவில் கலந்து கொள்வார்கள்.
அன்று காலையிலிருந்தே மாணவர்கள் பள்ளியை அலங்கரிக்கத் தொடங்கினர். நேரம் ஆக ஆகப் பள்ளியின் அழகு அதிகமாகிக் கொண்டே இருந்தது. மாலை மணி நான்காயிற்று.
மாணவர்கள் மாப்பிள்ளைகளைப்போலத் தங்களைச் சிங்காரித்துக்கொண்டு பள்ளியின் முன்னே இருந்த திறந்தவெளி அரங்கின் முன் அமர்ந்தனர். நாகமாணிக்கம் இங்கும் அங்கும் ஓடி, "இதைச் செய்… அதைச் செய்" என்று கட்டளையிட்டு, தான்தான் இலக்கிய மன்றச் செயலாளன் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
ஆசிரியர்களும் பிற உள்ளூர்ப் பெரிய மனிதர்களும் பெற்றோர்களும் வந்தனர். பத்திரிகை நிருபர்கள் வந்தனர். ‘காளித்தம்பி’யைக் காண எல்லோரும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், காளித்தம்பி மட்டும் வரவில்லை.
நாகமாணிக்கம் துடித்தான். காளித்தம்பி வராமல் ஏமாற்றி விடுவாரோ என்று கலங்கினான். மணி ஐந்தாயிற்று. அதுதான் விழா ஆரம்பமாக வேண்டிய நேரம். பள்ளி நிர்வாகி சுந்தரேசர் சரியாக அந்த நேரத்தில் வந்துவிட்டார். தலைமை ஆசிரியர் சங்கரலிங்கம் விழாவைத் தொடங்கினார். அவர் வரவேற்பு உரை நிகழ்த்தினார். நாகமாணிக்கம் மேடை அருகே நிலை கொள்ளாமல் நின்றான்.
சங்கரலிங்கம் வரவேற்றார்:
"பெரியோர்களே! தாய்மார்களே! மாணவர்களே! விழாவில் சிறப்புரை ஆற்றவிருக்கும் பிரபல குழந்தை எழுத்தாளர் காளித்தம்பி இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு இக்கூட்டத்தை ஆரம்பிக்கிறேன்" என்றார்.
உடனே கூட்டத்தில் கசமுச என்று சப்தம். மாணவர்களும் பிறரும் திரும்பிப் பார்த்தனர். தலைமை ஆசிரியர் ஒன்றும் புரியாமல் வாயிலைப் பார்த்தார். அங்கே அவரது மாணவன் பழனியும், அவனுடன் மாமல்லபுரத்தில் பார்த்தாரே அந்தச் சிறுவனும் கூட்டத்தின் மத்தியில் இருந்த வழியில் நடந்து மேடை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மாணவர்கள் "பழனி – பழனி" என்று கூச்சலிட்டார்கள். அழகன் "பழனி!… பழனி!" என்று துள்ளினான். சுந்தரேசர் திரும்பிப் பார்த்தார். சந்தேகமேயில்லை, பழனிதான். அவர் கண்கள் மகனைப் பார்த்த பரவசத்தால் நீர் சொரிந்தன.
நாகமாணிக்கம், பைத்தியக்காரனைப் போலப் பழனியைப் பார்த்தான்.
பழனியும் காளியும் மேடையை அடைந்தனர். பழனி தன்னிடமிருந்து காகிதத் துண்டை நாகமாணிக்கத்திடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்த்தான். பழனி (காளித்தம்பி) என்று எழுதியிருந்தது. நாகமாணிக்கத்திற்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. பழனி கொடுத்த காகிதத்தைத் தலைமை ஆசிரியரிடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த சங்கரலிங்கம் பெருமகிழ்ச்சி கொண்டார். உடனே பழனியை வரவேற்றார். மேடையில் மூன்று நாற்காலிகள் இருந்தன. ஒன்றில் உள்ளூர் தமிழ்ப் புலவர் விழாத்தலைவராக அமர்ந்திருந்தார். அவருக்கருகே பழனியை உட்கார வைத்தார். காளி கீழே மற்றவர்களுடன் அமர்ந்தான். சங்கரலிங்கம் புதிய உணர்ச்சியோடு, உவகையோடு பேசினார்.
"சபையோர்களே! பிரபல எழுத்தாளர் காளித்தம்பி வந்துவிட்டார். இங்கே அமர்ந்திருக்கும் இந்தப் பள்ளியின் மாணவனான பழனிதான் காளித்தம்பி" என்றபோது கூடியிருந்தோர் கைகொட்டி ஆரவாரம் செய்தனர்.
நாகமாணிக்கம் நிற்க முடியாமல் உட்கார்ந்து விட்டான். சுந்தரேசர் மகிழ்ச்சியால் நிலை கொள்ளாமல் தவித்தார். அழகன் துள்ளிக் குதித்தான்.
தலைமை ஆசிரியர் காளித்தம்பியை மாணவன் என்ற முறையிலும், எழுத்தாளர் என்ற முறையிலும் வரவேற்றார். தலைமை வகித்த தமிழ்ப் புலவர் காளித்தம்பியாகிய பழனியைப் போற்றினார். பிறகு பழனி, காளித்தம்பி என்ற தகுதியில் எழுந்தான். உடனே, கடல் கொந்தளித்ததைப்போல ஆரவாரம். மலைகள் பொடி பட்டதைப் போலக் கைதட்டல். பழனி வசந்த காலத்து இளந்தென்றலைப் போலக் குளிரக் குளிரப் பேசினான்:
"பெரியோர்களே! நண்பர்களே! என்னை உருவாக்கிய பள்ளியில் நான் பேச நிற்கிறேன். பள்ளிக்கும், இங்கு என்னை அழைத்த உங்கள் செயலாளர் நாகமாணிக்கத்திற்கும் நன்றி!
நான் எதைப் பற்றிப் பேசவேண்டும் என்று கூறவில்லை. நானாக ஒரு பொருள் எடுத்துக்கொண்டேன். அது ‘அழியாச் செல்வம்’. இந்த உலகம் அழியக் கூடியதாம். அழியப்போகும் உலகத்தில் அழியாமல் இருக்க விரும்பியவர்கள் தங்கள் புகழை வைத்து விட்டுத் தாங்கள் இறந்து விட்டனராம். இப்படி தொல்காப்பியர் கூறுகிறார். புகழே அழியாத செல்வம்!
எனவே ஒவ்வொருவரும் புகழ்பெற வேண்டும். ஆனால், அது தன்னுடைய சுய திறமையால் வந்ததாக இருக்கவேண்டும். இவன் மந்திரி மகன், ஆலை முதலாளியின் மகன், கலெக்டர் மகன் என்ற முறையில் கிடைக்கும் புகழ் புகழல்ல; அது இகழ்! அவனே முயன்று புகழ் பெற வேண்டும். அதனால் அவனைப் பெற்றவர்கள் புகழடைய வேண்டும். இவர் யார் தெரியுமா? வகுப்பில் முதல்வனாக வரும் முத்துவின் தந்தை! அவர் யார் தெரியுமா? பேச்சுப் போட்டியில், முதற் பரிசுபெற்ற பரமனின் அப்பா என்று பிறர் சொல்ல வேண்டும். அது அவன் புகழ்; அந்த மகன் புகழ். மாணவ நண்பர்களே, நீங்கள் பெறும் புகழ் தந்தையின் புகழாக இருக்கக்கூடாது. அது மகன் புகழாகவே அமையவேண்டும். எனவே, அழியாத செல்வமாம் புகழைப் பெறுங்கள். அதனால் உங்களைப் பெற்றவர்கள் சிறப்படையட்டும்!
நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் புகழ் என்னும் செல்வத்தைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். நாளை நற்புகழ் அடையப்போகும் உங்களுக்கு இன்று முன்கூட்டியே என் தலை வணங்குகிறது" என்று குனிந்து கரம் குவித்து வணங்கித் தன் பேச்சை முடித்தான் பழனி.
வையகம் எங்கும் மோதி எதிரொலிக்கக் கூட்டம் கைதட்டியது. பின்னே பேசிய தலைவர் பழனியின் பேச்சைப் புகழ்ந்தார். "பழனி பேசியபோது நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தனே மற்றொரு முறை மதுரைக்கு வந்து விட்டானோ என்ற ஐயம் எழுந்தது" என்று சொன்னார்.
நன்றி கூறுவது நாகமாணிக்கத்தின் கடமை. குன்றிய உடலோடு நாகன் மேடை ஏறினான். நா எழும்பவில்லை. சிரமப்பட்டுப் பேசினான்.
"பழனியை எனக்குப் பிடிக்காது. அவன் என் புகழைக் குறைப்பவன் என்று கருதினேன். அதனால் பழனியின் புகழ் தந்தையின் புகழ் என்று நான்தான் இகழ்ந்தேன். பலமுறை இகழ்ந்தேன். பலரிடம் இகழ்ந்தேன். பழனி அது மகன் புகழ் என்பதை இன்று நிரூபித்துவிட்டான்.
காளித்தம்பி பழனிதான் என்பது எனக்குத் தெரியாது. காளித்தம்பியின் எழுத்தில் மயங்கி அவரை அழைக்குமாறு தலைமை ஆசிரியரிடம் நான்தான் வற்புறுத்திச் சொன்னேன். மல்லிகை இதழுக்கு எழுதி, காளித்தம்பியின் முகவரியை அறிந்து கடிதம் எழுதினேன். பழனி காளித்தம்பியாக வந்துள்ளான்.
பழனி நீ திறமைமிக்கவன்; நீ தகுதி பெற்றவன்; நீ பெற்ற புகழ் உன் புகழே! உன் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன். நின் அறிவைக் கண்டு நான் வியக்கிறேன். பொறாமையால் ஏதேதோ சொல்லித் திரிந்த என்னை மன்னித்துவிடு! வைரம் குப்பையிலிருந்தாலும் சிறக்கும். நீ உண்மையான வைரம்! தானே ஒளிரும் ரேடியம்! உன்னால் இந்தப் பள்ளி – இந்த ஊர் புகழ் பெறுகிறது. ஏன், நான் உன்னை நண்பனாகப் பெற்றதால் பெருமை அடைகிறேன்" எனப் பலவாறு கூறினான். மன்னிப்பு கேட்டபின் நன்றி செலுத்தினான்.
கூட்டம் இனிது முடிந்தது. பிறகே தந்தையிடம் சென்றான். அவர் காலில் விழுந்து வணங்கினான். சுந்தரேசர் பாசவெள்ளம் அணை கடந்து பாய, தன் மகனை வாரி எடுத்து அணைத்துக்கொண்டார்.
"அப்பா, நான் முன்பின் தெரியாத சென்னையில் இந்த நிலை அடையக் காரணம் இதோ இந்தக் காளியப்பன்தான். அந்த நன்றி மறவாமல், ‘காளித்தம்பி’ என்ற புனைபெயரை வைத்துக்கொண்டேன்” என்று காளியை அறிமுகப்படுத்தினான். சுந்தரேசர் காளியையும் தழுவிக்கொண்டார். பழனி அழகனிடம் ஓடினான். அவனுக்குக் காளியை அறிமுகப்படுத்தினான். நாகன் அருகேயே இருந்தான். "நாகா, வகுப்பில் முதல் மார்க்கு வாங்குவது நீதானே" என்று கேட்டான் பழனி.
நாகன் முகம் வாடியது. தலை கவிழ்ந்தது. அவன் "இல்லை பழனி. என் திமிரை உன் நண்பர்கள் நன்றாக அடக்கி விட்டார்கள். நான் ஒரு முறைகூட முதல் மார்க்கு எடுக்கவில்லை. அது மட்டுமல்ல. முன்பு இரண்டாவது மார்க்கு எடுத்தேன். இப்போது ஐந்தாவது, ஆறாவது ராங்க்தான் எடுக்கிறேன். உன் நண்பர்கள் என்னை அடக்கவே நன்றாகப் படித்து நல்ல மார்க்கு எடுத்தார்கள்" என்றான்.
இது பழனி எதிர்பார்க்காதது. "வகுப்பில் முதல் மார்க்கு எடுப்பது யார்?" என்று கேட்டான்.
நாகன் "உன் நண்பன் அழகன்" என்று சொன்னான்.
பழனி அழகனை மகிழ்ச்சியோடு பார்த்தான். அழகன் வெற்றியோடு புன்னகை செய்தான். ஆம், அழகன் நாகனைக் காட்டிலும் நன்கு உழைத்து முதல் மார்க் வாங்கவேண்டும் என்ற உறுதியோடு படித்தான். பழனியின் நண்பர்களோடு சேர்ந்து ஒன்றாக உழைத்துப் படித்தான். அவனும் பிறரும் வெற்றி பெற்றனர்.
சுந்தரேசர் மகனையும் காளியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். பழனியின் தாய் மகனைப் பார்த்து மகிழ்ந்ததைக் காட்டிலும், மகன் புகழைக் கேட்டு அதிக மகிழ்ச்சி அடைந்தாள்.
பள்ளி விழாவிற்கு வந்த நிருபர்கள் வீட்டுக்கு வந்தனர். பழனியையும் காளியையும் பேட்டி கண்டனர். பெரிய பணக்காரர் பாசுவின் மகன் சைக்கிள் துடைத்துச் சம்பாதித்துப் படித்து, எழுதிப் புகழ்பெற்ற சுவையான கதை அவர்களைக் கவர்ந்தது. மறுநாள் பத்திரிகையில் பள்ளி விழாச் செய்தியோடு, காளி, பழனியின் படங்களோடு, அவர்களுடைய சுவையான கதையையும் முதல் பக்கத்திலே வெளியிட்டனர்.
அதைச் சென்னையிலே கண்ட தலைமையாசிரியர் தியாகராஜரும், அவர் மகள் திருநிலையும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். சாமி ஏஜென்ஸி உரிமையாளர் "என்னது, கோடீஸ்வரனின் மகனா என்னிடம் வேலை பார்த்தான்" என்று நினைக்கும்போதே நடுங்கினார். காளியின் முதலாளி, வந்துபோனவர்களிடமெல்லாம் செய்தித்தாளைக்காட்டி "நம்மகிட்டே இருந்தவன் சார் காளி. பழனியைக்கூட இங்கே பார்த்திருப்பீர்களே. அவனுக்கு என்னிடம் ரொம்ப மரியாதை சார்" என்று வாய் நோவதையும் பொருட்படுத்தாமல் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். மல்லிகை இதழோ "காளித்தம்பியின் கதை" என்று பழனியின் கதையைப் படத்தோடு வெளியிட்டது.
நாடெங்கும் பழனியின் கதை பரவியது. அவனை அறியாதோரெல்லாம் பாராட்டிக் கடிதம் எழுதினர். நாட்டின் புகழ்பெற்ற தலைவர்கள்கூடப் பாராட்டுக்கடிதம் எழுதினர். புகழுக்கும், நல்ல மகனுக்கும், முயற்சிக்கும் எடுத்துக்காட்டாகப் பல மேடைகளில் பழனியின் கதையைப் பலர் கூறிப் புகழ்பெற்றனர்.
காளி இதையெல்லாம் கண்டு மகிழ்ந்தான். மகிழ்ச்சி நீடிக்குமா? அவன் பழனியை விட்டுப் பிரிந்து சென்னைக்குச் செல்ல வேண்டுமே? ஒருநாள் பழனியிடம் தான் ஊருக்குப் போகவேண்டும் என்பதைச் சொன்னான். பழனி, "சரி, அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போ" என்றான். பழனியின் பதில் காளியை வருத்தியது. "என்ன இருந்தாலும் பெரிய இடத்துப் பிள்ளை" என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
அன்று இரவு ஹாலில் சுந்தரேசர், பழனி, பழனியின் அம்மா, காளி நால்வரும் உட்கார்ந்திருந்தனர்.
"நான் சென்னைக்குப் போகவேண்டுங்க! உங்களிடம் சொல்லிக்கொண்டு நாளைக்குப் புறப்படலாம் என்று இருக்கிறேன்" என்றான் காளி.
"சென்னைக்கா? என்ன காளி இப்படிச் சொல்கிறாய்? பழனி உன் லட்சியத்தைப் பற்றிச் சொன்னான். அதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேனே" என்றார் சுந்தரேசர். காளி விழித்தான்.
"காளி, நீ பெரியவனாகி நிறையப் பொருள் சேர்த்தால் படிக்கும் ஏழை மாணவர்கள் காலையிலும் மாலையிலும் வேலை செய்து சம்பாதிக்க ஒரு தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினாயாமே! பழனி என்னிடம் இதைச் சொன்னான். பழனிக்கு உன்னைப் பிரிய மனமே இல்லை. அதையும் சொன்னான். அதனால் நீ கனவு கண்டதைப்போல ஒரு தொழிற்சாலை நிறுவ எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். அடுத்த மாதம் அதைத் திறந்துவிடலாம். அதில், படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மட்டும் வேலை தரலாம். பண வசதி இல்லாத ஏழைகளும் பட்டம் பெறலாம். காளி, இந்தப் புதிய தொழிற்சாலைக்குப் ‘பழனி தொழிற்கூடம்’ என்று பெயர் வைக்கப் போகிறேன். அதன் நிர்வாகி யார் தெரியுமா? நீதான்” என்றார் சுந்தரேசர்.
காளி நன்றியுடன் பழனியைப் பார்த்தான். இந்த விவரத்தைத் தந்தை மூலமே சொல்லித் தன்னைத் திணற வைக்கத்தான் காலை அலட்சியமாகப் பழனி பேசினான் என்பதைப் புரிந்துகொண்டான்.
"என்ன காளி! உன் சம்மதத்தைச் சொல்லவில்லையே" என்றான் பழனி.
காளி சம்மதத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்தான். மறுநாளே சென்னையில் தான் வேலை செய்யும் இடங்களுக்குத் தன் ராஜினாமா கடிதங்களை நன்றியுரையோடு அனுப்பினான். ஒரு மாதம் சென்றது. பழனி தொழிற்கூடம் திறந்தது. காளி அதன் நிர்வாகியானான். படிக்க வசதியற்ற மாணவர்களுக்குப் பழனி தொழிற்கூடம் வேலை தந்தது. அவர்கள் கல்விக்கு உதவி செய்தது.
பழனி, திருவொற்றீஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில் முதல் மார்க்கு வாங்கியதாகத் தியாகராஜர் தெரிவித்தார். பழனி மீண்டும் சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் சேர்ந்தான். பழனிக்கு நாகனும் நெருங்கிய நண்பனாகிவிட்டான். நாட்கள் பறந்தன.
ஒருநாள், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரும் ஏராளமான பரிசுகள் பெற்றவருமான அமிழ்தன் மதுரைக்கு வந்திருந்தார். அவர் மற்றோர் ஆலை உரிமையாளரான சங்கரின் வீட்டில் தங்கியிருந்தார். இதை அறிந்தான் பழனி. பள்ளி விட்டதும் பழனி தொழிற்கூடத்துக்குப் பறந்தான். காளியை அழைத்துக் கொண்டான். அமிழ்தன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றான்.
காளியும் பழனியும் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர். முன்னே இருந்த அறைக்குள் அப்போதுதான் சுந்தரேசரும் சங்கரும் நுழைந்தனர். இருவரும் காளி – பழனியைப் பார்க்காமல் நுழைந்துவிட்டனர். காளியும் பழனியும் அந்த அறையை நெருங்கினர். அறையின் முன்னே தொங்கிய திரையை விலக்கி உள்ளே நுழையத் தயங்கினர். அப்போது உள்ளே பேசும் குரல் அவர்கள் செவியில் விழுந்தது. உள்ளே நடப்பதும் மெல்லிய துணி வழியே ஓரளவு தெரிந்தது.
உள்ளே எழுத்தாளர் அமிழ்தன் சோபாவில் உட்கார்ந்திருந்தார். சங்கர் உள்ளே வந்ததும் "அமிழ்தன், இவர் பாசு ஆலை உரிமையாளர் சுந்தரேசர். பெரிய பணக்காரர். தொழில் விஷயமாக என்னைப் பார்க்க வந்தார். நீங்கள் இங்கே இருப்பதை அறிந்து உங்களைப் பார்க்க விரும்பினார். அழைத்து வந்தேன்” என்று சுந்தரேசரை அறிமுகப்படுத்தினார்.
சுந்தரேசர் அமிழ்தனுக்கு வணக்கம் செலுத்தினார். அமிழ்தன் கடமைக்காகப் பதில் வணக்கம் செய்தாரே தவிர சுந்தரேசரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பணக்காரர் என்றால் உடனே பல்லிளித்துப் பேசும் பழக்கம் அமிழ்தனுக்குப் பிடிக்காது. சங்கர் அவருக்கு நெருங்கிய நண்பர். அதனால்தான் அவர் மாளிகையில் தங்கினார். என்றாலும் அவர் பணத்தைப் பெரிதுபடுத்திப் புகழும் பழக்கம் அமிழ்தனுக்கு இல்லை.
அமிழ்தன் அலட்சியமாக இருந்தது சுந்தரேசரின் முகத்தை வாடச் செய்தது. சங்கர் அறிமுகத்தைத் தொடர்ந்தார். "அமிழ்தன், இவருக்குப் பழனி என்ற புத்திசாலியான மகன் இருக்கிறான். அவன் காளித்தம்பி என்ற பெயரில் கதைகூட எழுதுகிறான். நீங்கள் எழுத்தாளராயிற்றே தெரிந்திருக்கலாம் என்றுதான் இதைச் சொன்னேன்" என்றார் சங்கர்.
உட்கார்ந்திருந்த அமிழ்தன் திடுக்கிட்டு எழுந்தார். "என்ன! நீங்கள் குழந்தை எழுத்தாளர் காளித்தம்பியின் தந்தையா? வணக்கம், ஐயா வணக்கம்’ என்று அகமும் முகமும் மலர வணங்கினார்.
சுந்தரேசரின் முகம் மலர்ந்தது. "வணக்கம். உட்காருங்கள்" என்றார். அமிழ்தன் உட்கார்ந்தார்.
"என்னைப் பெரிய எழுத்தாளன் என்று புகழ்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு எழுதும் எழுத்தாளர்கள்தான் உண்மையில் புகழப்படவேண்டும். அவர்கள்தான் வருங்காலச் சமுதாயத்தை உருவாக்குகிறார்கள். குழந்தை எழுத்தாளர்களில் காளித்தம்பி சிறந்தவர். அவர் தொடர்கதையைப் படித்தேன். அரிய கருத்துக்கள் நிறைந்த அற்புதமான கதை. படித்தால் மனத்தில் நிற்கிறது" என்று அமிழ்தன் புகழ்ந்தார்.
"பணக்காரக் குடும்பத்தில் இத்தகைய அறிவுச் சுடர் அவதரிப்பது அரிது. நீங்கள் பாக்கியசாலி" என்று சுந்தரேசரையும் புகழ்ந்தார் அமிழ்தன்.
மகன் புகழ் கேட்டுப் பூரித்தார் தந்தை.
இதை வெளியே நின்று கேட்ட பழனியின் உடல் புல்லரித்தது. தன் இலட்சியம் அந்த நிமிடம்தான் முழுமை பெற்றதாகக் கருதினான். பழனியின் எழுத்தை அமிழ்தன் புகழ்ந்தார். சுந்தரேசரைப் பழனியின் தந்தை என்ற முறையில் போற்றினார். பழனி, தானே புகழ் பெற்றான். அந்தப் புகழால் தந்தை புகழ்பெறுவதையும் கண்டான். இலட்சியம் வெற்றிபெற்ற களிப்பில் பழனி தன்னை மறந்து நின்றான்.
அவனல்லவா மகன்!
அவன் பெற்ற புகழல்லவா உண்மையான புகழ்! உயர்ந்த புகழ்!!
(நிறைந்தது)