காளித்தம்பியின் கதை (10)

"காளி! பள்ளியில் என்னை மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே அறைக்குள் சென்றான் பழனி.

பழனி சொல்வதைக் கேட்கும் முன்னரே காளியின் முகத்தில் களிப்பு துள்ளிக் கொண்டிருந்தது. அவன் பழனி சொன்னதைப் பொருட்படுத்தவில்லை.

"பழனி! உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வைத்திருக்கிறேன். அது என்ன தெரியுமா?" என்று புதிர் போட்டான்.

"மகிழ்ச்சியான செய்தியா? அது என்னவாக இருக்கும்?" பழனிக்குப் புரியவில்லை. "காளி! நீயே சொல்லேன். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி என்ன?" என்று ஆவலோடு கேட்டான்.

காளி, மாடத்திலிருந்த ஒரு பத்திரிகையை எடுத்துக் கொடுத்தான். அது ‘மல்லிகை’ வார இதழ். அதைக் கண்டதும் பழனி ஆவலோடு வாங்கி அவசர, அவசரமாகப் பிரித்தான். திடீரென்று, "காளி! காளி! என் கதை வந்திருக்கிறது. காளி, நான் எழுத்தாளனாகி விட்டேன்" என்று உரக்கச் சொன்னான்.

ஆம். அவனுடைய ‘பிச்சைக்காசு’ கதை ‘காளித்தம்பி’ எழுதியது என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

பழனியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் ஆயிரமடங்கு அதிக மகிழ்ச்சியடைந்தான். முதல் முதல் தன் கதையைப் பத்திரிகையில் பார்த்த எழுத்தாளனின் மகிழ்ச்சிக்குக் கடலை உவமையாகச் சொன்னாலும் பொருந்தாது. உலகிலுள்ள எல்லாக் கடல்களையும் ஒன்றாக்கி உவமைப்படுத்தினால் ஒருவேளை பொருந்தக்கூடும். பழனி அத்தகைய மகிழ்ச்சிக் கடலில் இறங்கினான். துள்ளினான். நீந்தி நீந்தி மகிழ்ந்தான்.
காளி, பழனியின் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தான். பிறகு எழுந்தான். அதே மாடத்திலிருந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் கொடுத்தான். "பழனி! எழுத்தாளனாகிவிட்டாய். உனக்கு என் பாராட்டுக்கள். உன் பெயருக்கு மல்லிகை வரவே, அதைப் பிரித்துப் பார்த்து மகிழ்ந்தேன். இதோ பார், இந்தக் கவரும் வந்தது; கிழித்துப் பார்" என்று கொடுத்தான்.

கவரைப் பார்த்ததும் அதுவும் மல்லிகை அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டான் பழனி. அதைக் கிழித்தான். உள்ளே ஒரு கடிதம், செக்கோடு இணைக்கப்பட்டிருந்தது. அது மல்லிகை ஆசிரியர் எழுதிய கடிதம். பழனி படித்தான்.

"அன்புள்ள திரு.காளித்தம்பி அவர்களுக்கு

வணக்கம்!

இந்த இதழில் ‘பிச்சைக்காசு’ கதையை வெளியிட்டுள்ளோம். அதை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அரிய கருத்து நிறைந்த சுவையான கதை. உங்கள் எழுத்து இளம் உள்ளங்களுக்கு ஏற்ற எழுத்து. மிக விரைவில் நீங்கள் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்வீர்கள் என்று நம்புகிறோம். இத்துடன் கதைக்கான சன்மானத் தொகை (செக். ரூபாய் 50-க்கு) அனுப்பியிருக்கிறோம். பெற்றுக் கொண்டமைக்கு எழுதவும்.

நீங்கள் அனுப்பிய பிற கதைகளும் பாடல்களும் எங்களிடம் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து பிரசுரிப்போம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் இன்னும் நிறைய எழுதி அனுப்புங்கள். குழந்தை இலக்கியம் உங்களால் புகழ் பெறட்டும்.

அன்புள்ள,
மல்லிகை அண்ணன்.

கடிதத்தைப் படித்த பழனி மகிழ்ச்சிக் கடலில் நீந்த முடியாமல் மூழ்கிப் போனான். தமிழ்நாட்டில் வெளிவரும் சிறுவர் பத்திரிகைகளில் மிகச் சிறந்தது ‘மல்லிகை’ வார இதழ். அதில் ஒரு கதை வெளிவந்தாலே பெரும்புகழ். அப்படிப்பட்ட பத்திரிகையில் கதை வெளிவந்துள்ளது. பாராட்டுக் கடிதம் வந்திருக்கிறது. ஐம்பது ரூபாய் பரிசும் கிடைத்திருக்கிறது. இத்தனை மகிழ்ச்சியையும் பழனியின் இளம் உள்ளம் எப்படித் தாங்கிக் கொள்ளும்?

மே மாதம் கதை அனுப்பினான். ஜுலையில் அது வெளிவந்துவிட்டது. அது மட்டுமா? இன்னும் பல வெளிவரப் போகின்றன. "அத்தோடு நாமும் நிறைய எழுத வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பிக்கொண்டேயிருக்க வேண்டும்" என்று முடிவு செய்தான் பழனி.

பழனி கடிதத்தைக் காளியிடம் கொடுத்தான். காளி, தானே எழுத்தாளனானதைப் போல, தனக்கே அந்தக் கடிதம் வந்தததைப் போல மகிழ்ந்தான்.

"பழனி! உன்னைப் பாராட்டுகிறேன். மல்லிகை அண்ணன் எழுதியிருப்பதைப் போல நீ புகழ்பெற்ற எழுத்தாளனாக வேண்டும். அதோடு எப்போதும் என்னை மறக்காமலிருக்க வேண்டும்" என்றான் காளி.

"காளி! அப்படிச் சொல்லாதே; நான் எந்தப் புகழை அடைந்தாலும் சரி, எவ்வளவு பெரிய செல்வத்தைப் பெற்றாலும் சரி, உன்னை மறக்கமாட்டேன். நீ செய்த உதவிகளை மறக்கமாட்டேன். காளி! என் பெயரைப் பார்த்தாயா? ‘காளித்தம்பி’. ஆம்! நான் என்றும் காளித்தம்பியாகவே இருப்பேன். அரசர் ஒருவர்  ‘என்னை மறந்து விடுவீரோ’ என்று ஒரு புலவரைக் கேட்டாராம். அதற்குப் புலவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? ‘என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என் நெஞ்சத்தைத் திறப்பவர்கள் அங்கே உன்னைக் காண்பார்கள்” என்றான் பழனி. இதைச் சொல்லும்போதே அவன் கண்களில் நீர் துளித்தது.

காளி, பிறந்ததன் பயனை முழுவதும் அடைந்து விட்டவனைப் போல ஆனந்தம் அடைந்தான்.

"பழனி! மல்லிகை ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுது" என்றான் காளி.

"இப்போதே எழுதுகிறேன் காளி. இது செக்காக இருக்கிறதே! எப்படி மாற்றுவது? உங்கள் முதலாளியிடம் கொடுத்து, அவர் கணக்கில் போட்டு மாற்றித்தரச் சொல்கிறாயா?" என்று கேட்டான்.

"ஓ… அப்படியே செய்கிறேன். எங்கள் முதலாளி உனக்கென்றால், எதுவும் செய்வார். நான் அவரிடம் நான்கு வருடங்களாக வேலை செய்கிறேன். ஆனாலும் அவருக்கு உன் மேல் ரொம்பப் பிரியம். உம்… எல்லாம் உன் முகராசி" என்று சொல்லிச் சிரித்தான் காளி.

மறுநாள் பழனி பள்ளிக்கூடம் போனான். அன்று அவன் மாணவர் தலைவன் பதவியை ஏற்றுக்கொள்ளும் நாள். இறைவழிபாடு முடிந்தது. அதற்கு முன்னிருந்த மாணவர் தலைவன், பழனி நின்றிருந்த இடத்திற்குச் சென்றான். அவனை அழைத்துக்கொண்டு தலைமையாசிரியர் இருக்கும் இடத்திற்குச் சென்றான். மாணவர்கள் வகுப்புவாரியாகப் ‘ப’ வடிவில் நின்றிருந்தார்கள். அதன் நடுவில் இரு வட்டங்கள் ஒன்றில்தான் தலைமையாசிரியர் நின்றிருந்தார். அவருக்குப் பழனி ‘சல்யூட்’ செய்தான். பிறகு, பழைய மாணவர் தலைவன் பழனியை அழைத்துக்கொண்டு போய் மற்றொரு வட்டத்தில் நிறுத்தினான். அவனுடன் கைகுலுக்கி விட்டு அவன் தன் வகுப்பு மாணவர்களுடன் நின்று கொண்டான்.

தலைமையாசிரியர் பேசினார்:

"மாணவர்களே! ஒன்பதாம் வகுப்பு மாணவன் பழனி இன்று முதல் மாணவர் தலைவனாகிறான்.பழனி முதல் நாளே நம் பள்ளிக்குப் புகழ் தேடித் தந்திருக்கிறான். மல்லிகை வார இதழில், ‘காளித்தம்பி’ என்ற புனைபெயரில் அவன் எழுதிய கதையைப் படித்துப் பார்த்தேன். ஒரு நல்ல எழுத்தாளன் நமது பள்ளியின் மாணவன் என்றால் நமக்குப் பெருமைதானே! பழனி தான் வகிக்கும் பதவிக்கும், பயிலும் பள்ளிக்கும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் புகழ் தேடித் தரவேண்டும்" என்று சொன்னார். காலையில் பத்திரிகை போடச் சென்ற காளி, தலைமை ஆசிரியரிடம் பழனியின் கதை வந்ததைச் சொல்லியிருந்தான். அவர் உடனே அதைப் படித்து மகிழ்ந்தார். அத்துடன் நில்லாமல் மாணவர்களிடமும் அதைக் கூறிப் பாராட்டினார்.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டினர். பழனி நன்றி தெரிவித்தான். அதன்பின் மாணவர் தலைவனாக நின்று, மாணவர்களைக் கலைந்து செல்ல மிடுக்கோடு கட்டளையிட்டான். பழனி மாணவர் தலைவனாக மாறினதும் பல மாறுதல்கள் நடந்தன.
பள்ளியின் முன்னே பெரிய கரும்பலகையில் அன்றாடச் செய்திச்சுருக்கத்தை அவனே தயார் செய்து எழுதினான். தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று ஓர் அறையில் வாசகசாலை அமைத்தான். அங்கே சிறந்த பத்திரிகைகள் மாணவர்கள் படிக்க வரவழைக்கப்பட்டன. அதற்கு ஒரு மாணவனைப் பொறுப்பாக்கினான். பள்ளியின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கச் சிலரை நியமித்தான். அவர்கள் குப்பைக் காகிதங்களை எங்கே கண்டாலும் அதை எடுத்து அதற்கான இடத்தில் போடுவார்கள். காலை இரண்டு பீரியட்களுக்குப் பின் இன்டர்வெல் வருகிறதல்லவா? அந்த நேரத்தில் தண்ணீர்ப் பானையருகே மாணவர்கள் மோதிக்கொள்வதைக் கண்டான். அவர்களை ஒழுங்காக வரிசையில் நிற்கச் செய்து நீர் வழங்கச் சிலரை நியமித்தான். அத்தோடு தானும் அவர்கள் வேலையில் பங்கு கொண்டான்.

பள்ளியில் பழனியின் புகழ் வளர்ந்தது. அனைவரும் அவனை விரும்பினர். ஆனால் ஒருவன் மட்டும் அவனை வெறுத்தான். அடியோடு வெறுத்தான். அவன் பழனியிடம் தோல்வி கண்ட நாவுக்கரசு.

அது ஆகஸ்டு மாதம். முதல் வாரம்! கடந்த மாதம் வைத்த தேர்வில் மாணவர்கள் வாங்கிய மார்க்கின்படி அவர்களை வரிசையாக உட்கார வைத்தனர். முன்பு கடைசியில் உட்கார்ந்த பழனி, முதல் வரிசையில், முதல் பெஞ்சியில் முதல்வனாக உட்கார்ந்திருந்தான். பழனி முதல் மார்க்கு வாங்கினான். யாரும் அப்பாவால் மார்க்கு வாங்கினான் என்று சொல்லவில்லை. பழனி அதை எண்ணிப் பூரித்தான்.

பள்ளியைப் பொறுத்தவரை அவனுக்குக் குறை ஒன்றும் இல்லை. நாவுக்கரசு மட்டும்தான் அவனைப் பகைவனைப் போலக் கருதி வந்தான். அடிக்கடி சைக்கிள் துடைக்கும் ஓட்டல் அருகே சைக்கிளுடன் வருவான்.

"டேய்… இங்கே வா!… இந்த சைக்கிளைக் கண்ணாடிபோலத் துடைத்து வை" என்று உத்தரவு போடுவான். "சீ… இந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியவில்லையே" என்று திட்டுவான். சில சமயம் தன் நண்பர்களுடன் வந்து நின்றுகொண்டு பழனியைக் கிண்டல் செய்வான்.

இதைத்தான் பழனியால் பொறுக்க முடியவில்லை. "மதுரையில் ஒரு நாகமாணிக்கம் என்றால் சென்னையில் ஒரு நாவுக்கரசா?" என்று வருந்தினான். பொல்லாதவர்களும் பொறாமைக்காரர்களும் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் என்ற உண்மை பாவம், பழனிக்குத் தெரியாது. ஓட்டலருகே சைக்கிள் துடைப்பதை விட்டுவிடலாம் என்று நினைத்தான். அதன் மூலம் மாதம் ஒரு கணிசமான தொகை கிடைக்கிறதே. அந்தப் பணம் இல்லையென்றால் என்ன செய்வது? அதனால் பல்லைக் கடித்துக்கொண்டு நாவுக்கரசின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டான்.

வழக்கமாகக் காலையில் காளி எழுந்து பழனியை எழுப்பிவிடுவான். அன்று பழனி தானே விழித்துக் கொண்டான். அருகே காளி படுத்துக்கொண்டிருந்தான். "பொழுது நன்றாக விடிந்துவிட்டதே! காளி இன்னும் தண்ணீர் அடிக்கும் வேலைக்குப் போகவில்லையே" என்று நினைத்துக்கொண்டே காளியை எழுப்புவதற்காக அவனைத் தொட்டான். நெருப்பைத் தொட்டதைப்போல உடனே தன் கையை எடுத்துக்கொண்டான். காளியின் உடம்பு உண்மையில் நெருப்பாகத்தான் கொதித்துக் கொண்டிருந்தது.

"காளி… காளி…" என்று அழைத்தான் பழனி. காளி கண்களைத் திறந்தான். பழனி காளியின் நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்தான். அவனுக்குக் கடும் காய்ச்சல்.

"காளி! என்ன உடம்பு இப்படிச் சுடுகிறதே" என்று கேட்டான். காளி இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? காய்ச்சல் ஏன் வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. இரவு படுக்கும்போது உடம்பெல்லாம் வலிப்பதுபோல் இருந்தது. இரவில் விழித்துப் பார்த்தபோது உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது.

"பழனி! நான் பம்ப் அடிக்கும் வீடு தெரியுமே, அங்கே போய் இன்று என்னால் வேலைக்கு வரமுடியவில்லை என்று சொல்லிவிட்டு வா" என்றான் காளி. பழனி, காளி சொன்னபடிச் செய்தான். அதற்குள் மணி ஏழு இருக்கும். ஒரு ரிக்ஷா அழைத்து அதில் காளியை ஏற்றிக்கொண்டான். திருவொற்றீஸ்வரர் பள்ளியைச் சார்ந்த இலவச மருத்துவமனை ஒன்று பள்ளியை அடுத்து இருந்தது. அங்கே அழைத்துச் சென்றான். டாக்டர், "இது வெறும் காய்ச்சல்தான். விரைவில் குணமாகும்" என்று சொன்னபோது பழனி ஓரளவு தைரியமடைந்தான். டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிக்கொண்டு, காளியுடன் வீட்டுக்குத் திரும்பினான். காளிக்கு மருந்து கொடுத்தான்.

மருந்து சாப்பிட்டதும் காளி, "பழனி, காலையில் பல வீடுகளுக்குப் பத்திரிகைகள் போடவேண்டும். இன்று வெள்ளிக்கிழமை. வார இதழ்களையும் இன்றே போட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வெளியே வாங்கி விடுவார்கள். பிறகு, முதலாளிக்கு நஷ்டம் வரும். முதலாளியைக் கேட்டு அவற்றை அந்தந்த வீடுகளில் கொடுத்துவிட்டு வருகிறாயா?" என்று கேட்டான்.
"அதற்கென்ன, இப்போதே போய் அந்த வேலையைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் பழனி.
"பழனி! உனக்கு எவ்வளவு சிரமம் கொடுக்கிறேன்" என்றான் காளி. "இதெல்லாம் சிரமமா? அப்படிப் பார்த்தால் நான் உனக்கு எவ்வளவு சிரமம் கொடுத்திருக்கிறேன். காளி! உனக்கு இந்த உதவிகள் செய்யும்போது என் மனம் திருப்தி அடைகிறது. என் கடமையைச் செய்வதைப்போலக் களிப்படைகிறேன். அதனால் நீ சிரமம் தரவில்லை; நான் மகிழ்ச்சியடைய ஒரு வாய்ப்புத்தான் தருகிறாய். நான் முதலில் வேலையைக் கவனித்துவிட்டு வருகிறேன். நீ தூங்கு" என்று கூறிய பழனி, வெளியே சென்றான்.
காளியின் முதலாளி எந்தெந்த வீட்டுக்கு என்னென்ன பத்திரிகைகள் கொடுக்க வேண்டுமென்று ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் வீட்டு முகவரிகளும் இருந்தன. அதைப் பழனி வாங்கிக் கொண்டான். பத்திரிகைகளை எடுத்துக் கொண்டான். தன் சைக்கிளில் புறப்பட்டான். மடமடவென்று ஒவ்வொரு வீடாகப் பத்திரிகைகளைக் கொடுத்துக்கொண்டே வந்தான். கடைசியாக இரண்டு வாரப் பத்திரிகைகளும், ஒரு ஆங்கிலச் செய்தித்தாளும் இருந்தன. அவதானம் பாப்பையர் சாலையின் மறுகோடியில் இருந்த வீட்டில் போடவேண்டும். பட்டியலைப் பார்த்தான் பழனி. "அடடா, இது நம் தலைமையாசிரியர் வீடல்லவா? சரி, அங்கேயும் போட்டுவிட்டுப் போவோம்" என்று சைக்கிளை மிதித்தான்.

தலைமை ஆசிரியர் வீடு அவனுக்குத் தெரியும். பள்ளியில் சேருமுன் ஒருநாள் காளியுடன் போனான். அவ்வளவுதான். அதற்கப்புறம் அந்த வீட்டிற்குச் சென்றதில்லை. பழனி சைக்கிளை வெளியே நிறுத்தினான். பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு தலைமை ஆசிரியரின் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டின் முன்பக்கம் ஓர் அறை இருந்தது. அங்கே தலைமை ஆசிரியர் இருப்பார் என்று நினைத்தான். அந்த அறையின் முன் நின்றான். ‘சார்’ என்று அழைக்க நினைத்தான். அதற்குள் வீட்டுக்குள் யாரோ பேசுவது கேட்டது.

"சே… சே… ஒரு கணக்கு போடுவதற்குள் உயிரே போகிறது! சீ, இது ஒரு பாடமா! இதை வைத்து வாட்டுகிறார்கள். முதல்லே இந்தக் கணக்குப் புத்தகத்தையும் கணக்கு நோட்டையும் தூக்கியெறிந்தால்தான் திருப்தி வரும்" என்ற குரல் கேட்டது. மறு நிமிடம் ஒரு புத்தகமும் நோட்டும் பழனியை நோக்கிப் பறந்து வந்தன. இதைச் சற்றும் எதிர்பார்க்காத பழனியின் முகத்தில் இரண்டும் மோதிக் கீழே விழுந்தன. கனத்த கணக்கு நோட்டு பழனியின் மூக்கைப் பதம் பார்த்ததால் அவன் ‘ஆ’ என்று அலறினான்.
பழனியின் குரல் கேட்டதும் உள்ளேயிருந்து ஒரு சிறுமி எட்டிப் பார்த்தாள். பழனி மூக்கைத் தடவிக்கொண்டு முகம் சுளிப்பதையும் கீழே விழுந்து கிடந்த புத்தகங்களையும் பார்த்ததும் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டாள்.

"அடடா! புத்தகங்கள் உன்மேல் பட்டுவிட்டனவா? எக்ஸ்க்யூஸ்மீ" என்று சொன்னாள்.

"நீதான் இவற்றை வீசியெறிந்தாயா?" என்று கேட்டுக்கொண்டே பழனி கீழே கிடந்த புத்தகங்களை எடுத்தான்.
அவள், "ஆமாம்" என்றாள்.

பழனி, எடுத்த புத்தகங்களை, "இந்தா உன் புத்தகங்கள்" என்று கொடுத்தான்.

"இதோ பாரு, அந்தப் புத்தகங்களை என்னிடம் கொடுத்தே, எனக்குக் கோபமா வரும். அந்தச் சனியனைக் கொண்டுபோய், ஆழமாக ஒரு குழி தோண்டி அதிலே புதை" என்றாள் அந்தச் சிறுமி.

பழனிக்குச் சிரிப்பு வந்தது.

"உனக்கு ஏன் இந்தப் புத்தகங்கள்மேல் இவ்வளவு கோபம்?"

"பின்னே என்ன, ஒரு கணக்கைப் போட்டால் ஒரு விடை வருகிறது. புத்தகத்திலே இருக்கிற விடையைப் பார்த்தால் வேறு விடை வருகிறது. சரின்னு திரும்பப் போட்டால் இன்னொரு விடை வருகிறது. நான் காலையில் எழுந்து ஆறுதரம் ஒரே கணக்கைப் போட்டேன். ஆறுதரமும் ஆறு விடை வருகிறது. ஆனால் ஒன்றாவது புத்தகத்துக் கடைசியிலே போட்டிருக்கிறதே, அந்த விடையோடு ஒத்து வரவில்லை. ஒரு கணக்கே இப்படி உயிரை எடுத்தால் கோபம் வராதா? நீ கணக்குப் போட்டால் தெரியும். நீ படிக்கிற மாணவனா”என்று கேட்டவள், "ஆமாம், நீ யாரு? உனக்கென்ன வேண்டும்?" என்று கேட்டாள்.

"நான் பழனி. உங்கள் வீட்டுக்குப் பத்திரிகை போடும் காளியின் நண்பன். இன்றைக்கு அவனுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவனுக்குப் பதில் பத்திரிகைபோட வந்தேன். இதோ பத்திரிகைகள்" என்று பத்திரிகைகளை நீட்டினான் பழனி

கணக்குப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளாத சிறுமி, பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு, "ஓஹோ, நீதான் மாணவர் தலைவன் பழனியா? வா, வா, உள்ளே வா" என்றாள்.

பழனி தயங்கித் தயங்கி உள்ளே சென்றான். உள்ளே சோபாக்கள் இருந்தன.

அந்தச் சிறுமி, “பழனி, உட்கார்! உன்னைப் பற்றி அப்பா அடிக்கடி சொல்வார். நீ மகா கெட்டிக்காரனாமே” என்று கேட்டாள்.
பழனி உட்கார்ந்தான். அந்தப் பெண் அவனை உண்மையிலேயே புகழ்கிறாளா அல்லது கிண்டல் செய்கிறாளா என்பதே புரியவில்லை.

"நீ தலைமையாசிரியர் மகளா?" என்று கேட்டான் பழனி.

"ஆமாம். என் பெயர் திருநிலைநாயகி. திருநிலை, திரு என்று சுருக்கமாகக் கூப்பிடுவார்கள். ஏழாவது படிக்கிறேன்."

பழனியின் கையில் இன்னமும் திருநிலை எறிந்த கணக்குப் புத்தகமும், கணக்கு நோட்டும் இருந்தன. பழனி அவற்றை மீண்டும் அவளிடம் நீட்டினான்.

"இதோ பார், அந்தப் புத்தகங்களை என்னிடம் கொடுத்தால் எனக்குக் கோபம்தான் வரும். ஆமாம்! அப்புறம் உன்னோடு பேசக்கூட மாட்டேன்" என்றாள் திருநிலை.

"திருநிலை! கணக்கு அப்படி ஒன்றும் பொல்லாத பாடம் அல்ல. உனக்கு ஏனோ அதன்மீது ஒரு வெறுப்பு. அந்த வெறுப்போடு கணக்குப் போடுவதால்தான் தப்பு வருகிறது" என்றான் பழனி.

"கணக்கை விருப்பமாகக்கூடப் போட முடியுமா? அப்பப்பா! அதை நினைத்தாலே எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா?" என்றாள் திருநிலை.

"திருநிலை! கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக்கொள். ஆறுமுறை போட்டாலும் ஆறு விடை வந்தது என்று சொன்னாயே, அது எந்தக் கணக்கு என்று சொல்கிறாயா?" என்று கேட்டான்.

"பயிற்சி பத்து. முதல் கணக்கு. எங்கள் டீச்சர் பத்தாம் பயிற்சியில் இருக்கிற முதல் மூன்று கணக்கைப் போட்டுவரச் சொன்னாங்க. உன்னால் அந்தக் கணக்கைப் போட முடியுமா என்று பாரேன் "என்றாள் திருநிலை.

பழனி புத்தகத்தைப் பார்த்தான். பிறகு, "திருநிலை, இந்தக் கணக்கை நான் போடுவேன். இது அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லையே" என்றான். திருநிலைநாயகியின் அழகு முகம் மலர்ந்தது. “இந்தக் கணக்கைப் போடுவாயா? இதோ, இந்தக் காகிதத்தில் அந்த மூன்று கணக்கையும் போட்டுக் கொடு. அதை அப்படியே நோட்டில் எழுதி எடுத்துக் கொண்டு போய் டீச்சரிடம் காட்டிவிடுகிறேன்.

" உம்… உம்… அப்பா வெளியே போயிருக்கிறார். வருவதற்குள் போட்டுக்கொடு" என்று அவசரப்படுத்தினாள் திருநிலை.

"திருநிலை! நான் கணக்குப் போட்டுக்கொடுத்தால், அதைக் காப்பி எடுத்துக்கொள்வது தப்பு. வேண்டுமானால் அதை எப்படிப் போடுவது என்று சொல்லித் தருகிறேன். என்ன சொல்லித்தரட்டுமா?"

"சொல்லித் தருகிறாயா? சொல்லும்போது புரிவதைப் போல இருக்கும். அப்புறம் போட வராது. அதுதான் என் குணம்" என்று முகம் சுளித்தாள் திருநிலை.

"உன்னிடம் உனக்கே நம்பிக்கையில்லாமல் இருப்பது தவறு. திருநிலை, இப்படி வா! நான் சொல்வதைக் கவனி" என்று சொல்லிப் பழனி புத்தகத்தை எதிரே இருந்த வட்ட மேஜையில் விரித்து வைத்தான். திருநிலை தந்த காகிதத்தை எடுத்துக்கொண்டான். இவையெல்லாம் பார்த்த திருநிலை பென்சில் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
பழனி முதல் கணக்கை எப்படிப் போடவேண்டும் என்று சொல்லிவிட்டு அதைப் போட்டுக் காட்டினான். கணக்கைப் போடும்போது ஒவ்வொன்றையும் திருநிலைக்கு விளக்கினான். திருநிலைக்கே ஓர் ஆச்சரியம். அவளுக்கு அந்தக் கணக்கு புரிவதுபோல் இருந்தது. பழனி கணக்கைப் போட்டு முடித்து விடையை எழுதினான். உடனே திருநிலை, புத்தகத்தின் கடைசிப் பகுதியைப் புரட்டினாள். அங்கே விடைகள் இருந்தன. பழனி போட்ட விடை சரியாக இருந்தது.

பழனி இரண்டாவது கணக்கைத் திருநிலையைப் போடச் சொன்னான். திருநிலை தயங்கித் தயங்கிப் போட்டாள். சந்தேகம் வந்தபோது பழனி உதவி செய்தான். இரண்டாவது கணக்கு முடிந்தது. திருநிலை விடையைப் பார்த்தாள். சரியாக இருந்தது.
மூன்றாவது கணக்கை அவளே போட ஆரம்பித்தாள். ஓரிடத்தில் என்ன செய்வதென்று புரியவில்லை. பழனியைக் கேட்டாள். பழனியோ, "நீயே கொஞ்சம் அமைதியாக யோசித்துப்பார். என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்" என்று சொல்லிவிட்டான்.
திருநிலை தானே யோசித்தாள். கணக்கை மேற்கொண்டு போட்டு முடித்தாள். முடித்ததும் மிக வேகமாக ‘விடைகள்’ பகுதியைப் புரட்டிப் பார்த்தாள். அவள் கண்களையே நம்பமுடியவில்லை. அவளே போட்ட கணக்கு சரியாக இருந்தது.

உடனே துள்ளிக் குதித்தாள். "பழனி! என் கணக்கு ரைட். என் கணக்கு ரைட்" என்று மகிழ்ச்சியால் கத்தினாள்.

பழனி புன்னகை செய்தான். திருநிலை, "மீதிக் கணக்கையும் போடட்டுமா?" என்று கேட்டாள். ஆசிரியை போட்டுவரச் சொன்னது மூன்று கணக்குத்தான். ஆனால் திருநிலை மேலும் போட விரும்பினாள்.

"போட்டுப்பார் திருநிலை! உன்னால் போட முடியும். ஆனால் தப்பித்தவறி, சரியான விடை வரவில்லையென்றால், முன்போல் புத்தகத்தையும் நோட்டையும்…" என்று சொல்லி நிறுத்தினான் பழனி.

திருநிலைக்கு ஒரே வெட்கம்! "இல்லை, இனிமேல் அப்படி வீசியெறியமாட்டேன். விடை சரியாகவில்லை என்றால் திரும்பவும் அமைதியாகப் போட்டுப் பார்க்கிறேன். அப்போதும் வரவில்லையென்றால் உன்னைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்" என்றாள்.
பழனி வீட்டுக்குப் போனான்.

சற்று நேரம் கழித்து, தலைமை ஆசிரியர் தியாகராஜர் தன் வீட்டுக்குத் திரும்பிவந்தார். அறையில் திருநிலை மிகக்கண்ணும் கருத்துமாகக் கணக்குப் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தார்.

"என்னம்மா திரு, உனக்கு எப்போது இந்த வேப்பங்காய் இனிக்கத் தொடங்கியது?" என்று கேட்டார். திருநிலை கணக்கை வேப்பங்காய், பாகற்காய் என்று திட்டுவாள். அதைத்தான் அவர் குறிப்பிட்டார்.

"அப்பா, அப்பா, கணக்கு அப்படி ஒன்றும் கஷ்டமில்லைப்பா. இந்தக் கணக்கெல்லாம் நானே போட்டேன்!" என்று உற்சாகத்தோடு சொன்னாள்.

தியாகராஜர் தன் காதுகளையே நம்பவில்லை. திருநிலை அவரிடம் பழனி வந்தது, புத்தகத்தைத் தான் எறிந்தது, அவன் கணக்குக் கற்றுக்கொடுத்தது எல்லாவற்றையும் சொன்னாள்.

"அப்பா, அப்பா, பழனி மிக நன்றாகச் சொல்லித் தருகிறான். தினமும் கொஞ்ச நேரம் பழனி எனக்குச் சொல்லிக்கொடுத்தால் நான் கணக்கில் கெட்டிக்காரி ஆகிவிடுவேன்" என்று சொன்னாள்.

"சரி, திரு. பழனியையே உனக்கு டீயூஷன் வாத்தியாராக நியமிக்கிறேன்" என்றார் தியாகராஜர். திருநிலை பெருமகிழ்ச்சியடைந்தாள்.

அன்று பள்ளியில் தலைமை ஆசிரியர் பழனியை அழைத்தார். "பழனி! திருநிலைக்குக் கணக்கு என்றால் விளக்கெண்ணெய்தான். அவளுக்கே நீ கணக்கு கற்றுக் கொடுத்துவிட்டாயே. சபாஷ்! உம்… நாளையிலிருந்து தினமும் ஒருமணிநேரம் திருநிலைக்கு டியூஷன் சொல்லிக்கொடு" என்று சொன்னார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஏழாம் வகுப்புக்கு டியூஷன் சொல்லித் தருவதா? பழனி தயங்கினான். "என்ன யோசிக்கிறாய்? உன்னால் நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும். நாளையிலிருந்து வருகிறாயா?" என்று கேட்டார். பழனி, ‘சரி’ என்று சம்மதித்தான்.

காளியின் காய்ச்சல் இரண்டே நாளில் குணமடைந்தது. பழனி காலையில் சைக்கிள் துடைப்பதை விட்டு விட்டான். திருநிலைக்குக் காலை நேரத்தில் மட்டும் டியூஷன் சொல்லிக் கொடுத்தான். தலைமை ஆசிரியர் அவனுக்கு முதல் மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம் கொடுத்தார். பழனி அதை முதலில் மறுத்தான். தலைமை ஆசிரியர் விடவில்லை. "உன் உழைப்புக்கு இது ஊதியம். பெற்றுக்கொள்! உன்னால் திருநிலை கணக்கிலும் நல்ல மார்க் வாங்கத் தொடங்கி விட்டாள். அதற்கு ஐம்பது ரூபாய் என்ன, இன்னும் அதிகமாகவே கொடுக்கலாம்" என்றார். பழனி பணத்தைப் பெற்றுக்கொண்டான்.

நாட்கள் பறந்தன!

மல்லிகை இதழில் இப்போதெல்லாம் அடிக்கடி பழனியின் கதைகளும் பாடல்களும் இடம்பெற்றன. நவம்பரில் வந்த தீபாவளிமலரில் அவன் கதை வந்தது. அதற்கு நூறு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அந்தப் பணம் மாமல்லபுரம் பார்ப்பதற்காக என்று அப்போதே தனியாக எடுத்து வைத்திருந்தான் பழனி.

பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடந்து முடிந்தது. விடுமுறையில் ஒருநாள் பழனி காளியுடன் மாமல்லபுரத்துக்குச் சென்றான். அன்று ஒருநாள் மட்டும் காளியும் பழனியும் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் விடுமுறை பெற்றுக்கொண்டனர்.

மாமல்லபுரத்தின் சிற்பங்களை இருவரும் பார்த்து மகிழ்ந்தனர். மாமல்லபுரக் கடற்கரையில் ஒரு கோவில் இருக்கிறதல்லவா? அதற்கு நேரே கடல் அலைமோதும் பாறையில் காளியும் பழனியும் உட்கார்ந்து பல்லவர்களின் கலைச் செல்வத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பழனி கடற்கரைக் கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கோயிலின் வழியாகப் பலர் இறங்கிவந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த பழனி திடுக்கிட்டான். அவர்களுள் சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இருந்தார். அவர் மற்றவர்களுடன் பழனி இருந்த பாறையை நோக்கி வந்தார்.

பழனி தரையில் இட்ட மீன்போல் தவித்தான். தலைமை ஆசிரியர் கண்ணில் பட அவனுக்கு விருப்பம் இல்லை. அங்கிருந்து உடனே ஓடி மறையவும் முடியாது. தலைமை ஆசிரியர் அவனை மிகவும் நெருங்கி விட்டார்.

"கடவுளே! திடீரென்று மாயமாய் மறைந்துவிடும் மந்திர சக்தியை எனக்குக் கொடுக்கக்கூடாதா?" என்று தவித்தான். அவனுக்கு அந்த மந்திரசக்தி இல்லாததால், அவன் அதே இடத்தில் நின்றான். அதுவரை எங்கோ பார்த்தவாறு வந்த தலைமை ஆசிரியர் பழனியைப் பார்த்துவிட்டார். அவர் வியந்தார். பழனி துடித்தான்.

–தொடரும்

About The Author